
‘இந்தியாவில் பத்திரிகைச் சுதந்திரம் இல்லை. பத்திரிகைச் சுதந்திரத்துக்கான தரவரிசையில் இந்தியா படுபாதாளத்தில் இருக்கிறது’ என்று குற்றம்சாட்டுகிறது ஆவணப்படம்.
‘கொல்வதற்கோ, கொல்லப்படுவதற்கோ தயாராகுங்கள். இரண்டைத் தவிர வேறு வழியில்லை. இங்கிருக்கும் காவலர்கள், தலைவர்கள், வீரர்கள் என்று தொடங்கி ஒவ்வோர் இந்துவும் தங்களை மாற்றிக்கொண்டு அழிப்புக்குத் தயாராக வேண்டும். இந்நாட்டை இந்து நாடாக மாற்றுவதற்கு நாம் போரிட வேண்டும். தேவைப்பட்டால் கொல்லவும் வேண்டும். பாரத் மாதா கி ஜே!’

நம் உடலையும் மனதையும் ஒருசேர சில்லிடச் செய்யும் இந்த முழக்கத்தோடு தொடங்குகிறது பிபிசி ஆவணப்படம். உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு அதன் சிறுபான்மை மக்களை, குறிப்பாக இஸ்லாமியர்களை எவ்வாறு நடத்துகிறது என்னும் அடிப்படையான கேள்வியை எழுப்பி, அதற்கான விடைகளைக் காட்சிகளாகவும் குரல்களாகவும் தொகுத்துக் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது `India : The Modi Question’ எனும் பிபிசி ஆவணப்படம். மொத்தம் இரண்டு பாகங்கள். தலா ஒரு மணி நேரம்.
எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான்; எல்லோரும் அமைதியாக மென்று விழுங்கிக்கொண்டிருக்கும் கசப்புதான்; மனசாட்சியுள்ள ஒவ்வொருவரின் நினைவிலும் உறைந்துகிடக்கும் பயம்தான் இந்த ஆவணப்படத்திலும் பதிவாகியிருக்கின்றன. பட்டவர்த்தனமாக வெட்ட வெளிச்சத்தில் நடந்தவற்றைத்தான் பிபிசி தொகுத்துக் கொடுத்திருக்கிறது. இருந்தும், அது நம் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது.
‘இந்தியாவில் பத்திரிகைச் சுதந்திரம் இல்லை. பத்திரிகைச் சுதந்திரத்துக்கான தரவரிசையில் இந்தியா படுபாதாளத்தில் இருக்கிறது’ என்று குற்றம்சாட்டுகிறது ஆவணப்படம்.
ஆம், அது உண்மைதான் என்று ஒப்புக்கொள்வதைப்போல் ஆவணப்படத்தைத் தடைசெய்திருக்கிறது இந்திய அரசு. யூடியூபில் யார் அதைப் பதிவிட்டாலும், அது மோப்பம் பிடிக்கப்பட்டு அழிக்கப்படுகிறது. ட்விட்டரில் யார் அதன் இணைப்பைப் பகிர்ந்தாலும், அவருடைய கணக்கு முடக்கப்பட்டுவிடும். இது அரசின் உத்தரவு.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆவணப்படத்தை ஜனவரி 25-ம் தேதி திரையிட முயன்றபோது, “நம் பிரதமரை விமர்சிக்கும் ஆவணப்படத்தை வெளியிடக் கூடாது” என்று பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதியளிக்க மறுத்துவிட்டது. மற்றொரு பக்கம், பா.ஜ.க மாணவர் இயக்கமான ஏ.பி.வி.பி-யிடமிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. அனைத்தையும் மீறி, பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பகுதியினர் இந்த ஆவணப்படத்தைத் திரையிட முயன்றபோது, அந்தப் பகுதி முழுக்க மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனாலும் பின்வாங்காமல் இருளில் லேப்டாப்பிலும் மொபைலிலும் மாணவர்கள் இந்த ஆவணப் படத்தைக் கண்டு முடித்தனர். ஆத்திரமடைந்த ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஆவணப்படம் பார்த்துவிட்டுத் திரும்பியவர்கள் மீது கல்லெறிந்து தாக்கியிருக்கின்றனர்.
ஜாமியா மில்லியா பல்கலைக்கழக வளாகத்திலும் மாணவர்கள் கிட்டத்தட்ட இதே வகையான எதிர்ப்புகளைச் சந்திக்கவேண்டியிருந்தது. பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இந்த எதிர்ப்புணர்வுதான் தீ போல் கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு எனப் பல பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்திருக்கிறது. தடைசெய்யப்பட்ட ஆவணப்படத்தைப் பார்த்ததற்காக சென்னையில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் பிரியதர்ஷினி உட்பட ஜனநாயக வாலிபர் சங்கத்தினரைச் சேர்ந்த இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

சட்டத்திலும் சரி, நம் அரசியலமைப்பிலும் சரி... இவ்வகையான ஏகோபித்த தடைக்கு அனுமதி இல்லை. இருந்தும் தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, கடந்த 20 ஜனவரி அன்று `India: The Modi Question’ எனும் பிபிசி ஆவணப்படத்தை இந்தியா முழுக்கத் தடைசெய்திருக்கிறது. ‘உள்நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம். நடுநிலையற்றது. காலனிய மனோபாவத்தை வெளிப்படுத்துகிறது’ என்பதுதான் தடைக்கு அரசுத் தரப்பு முன்வைக்கும் காரணம்.
`ஆம், இது இந்தியாவுக்கு எதிரான ஆவணப்படம்’ என்று சீறுகிறார்கள் மோடியின் ஆதரவாளர்கள். ‘தேவையற்ற நினைவுகளைக் கிளறிவிடுவதே இவர்களுடைய நோக்கம். முஸ்லிம்களே மறந்திருக்கும் நிலையில், எதற்காக வீணாக குஜராத் கலவரங்களை இப்போது நினைவுபடுத்த வேண்டும்... எப்போதோ நடந்த ஒரு சம்பவத்தை இப்போது எதற்காக பிபிசி தூசு தட்டி வெளியில் கொண்டுவர வேண்டும்... பிபிசி மட்டும் யோக்கியமா... வெள்ளைக்காரர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்கவேண்டும்... பிரிட்டனில் வெறுப்பு இல்லையா... இனவெறி இல்லையா... வன்முறை இல்லையா... அங்குள்ள சிறுபான்மையினருக்குச் சம உரிமை இருக்கிறதா... இந்தியா தொடங்கி ஆப்பிரிக்காவரை பல நாடுகளை அடிமைப்படுத்தி, ஒடுக்கிய ஒரு நாட்டுக்கு இந்தியாவின் பிரதமரை விமர்சிக்கும் உரிமை எங்கிருந்து வந்தது?’ ஆவேசத்தோடும் ஆற்றாமையோடும் வீசப்படும் இந்தக் கேள்விகளை நாம் ஒதுக்கவேண்டியதில்லை. அவற்றையும் ஆராயத்தான் வேண்டும். ஆனால், அதற்கெல்லாம் முன்னால் நாம் செய்யவேண்டியதொன்று இருக்கிறது. பிபிசி என்ன சொல்ல விரும்புகிறது என்பதை நாம் முதலில் காது கொடுத்துக் கேட்டாக வேண்டும்.
ஜார்க்கண்டைச் சேர்ந்த மரியம் அன்சாரி என்பவரின் சாட்சியம் இது. ‘என் கணவர் ஒரு டிரைவர். எல்லோரிடமும் சிரித்த முகத்தோடு பேசுபவர். ஒரு நாள் காலை 7 மணிக்கு வெளியில் புறப்பட்டார். வாசல்வரை சென்றேன். வெளியே இளைஞர்களைக்கொண்ட கும்பலொன்று திரண்டிருந்தது. எல்லோரும் மொபைலில் வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நானும் மொபைலைப் பார்த்தேன். மயங்கிச் சரிந்துவிட்டேன். (அவரது கணவர் அலிமுதீனை ஒரு கும்பல் இழுத்துப்போட்டுத் தாக்கும் காட்சி திரையில் விரிகிறது). ஏன் அவருக்கு மட்டும் இப்படி நடக்க வேண்டும்?’ என்கிறார் மரியம்.
‘போலீஸ் அவரை அழைத்துச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். நான் ஸ்டேஷனுக்குப் போனேன். அங்கிருந்த அதிகாரி என்னிடம், ‘நாங்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்’ என்றார்.’ கண நேர இடைவெளிக்குப் பிறகு அழுத்தம் திருத்தமாக வெளிப்படுகிறது மரியமின் குரல். ‘முஸ்லிம் என்பதால்தான் அவர்கள் கொல்கிறார்கள்.’
மோடி ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளுக்குப்பிறகு நடைபெற்ற இந்தப் பதைபதைக்கச் செய்யும் சம்பவம் பிபிசி ஆவணப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பதிவாகியிருக்கிறது. மரியமின் குரல் ஏன் தடை செய்யப்பட வேண்டும்... இவர் சொல்வது பொய்யா... அவர் கணவர் அலிமுதீன் கொல்லப்படவில்லையா... மாட்டிறைச்சியை வைத்திருக்கிறார் என்று சொல்லி இவரையும், இவரைப் போன்ற பிற இஸ்லாமியர்களையும் அடித்தே கொன்ற நிகழ்வுகளை நாம் நம் நினைவுகளிலிருந்து அறுத்து எறிந்துவிட வேண்டுமா... அந்த வலிகளை நாம் தடை செய்துவிட வேண்டுமா... அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொண்டு நம் இயல்பு வாழ்வைத் தொடர வேண்டுமா?
குஜராத்தில் 2002-ம் ஆண்டு எதுவுமே நடைபெறவில்லையா... அங்குள்ள வீதிகளில் ரத்தம் தெறிக்கவேயில்லையா... ஒரு கரிய நிழல்போல் வெறுப்பு அங்கே பரவவேயில்லையா... அது மனிதர்களைப் பற்றிக்கொள்ளவே யில்லையா... அந்த வெறுப்பை எடுத்துவைத்து, வளர்த்து, பெரிதாக்கி ஒருவருமே அரசியல் ஆதாயம் பெறவில்லையா... அந்த வெறுப்பின் தணல் நம் கண்முன்னால் எரிந்து கொண்டிருக்கும்போது நாம் கண்களை மூடிக்கொண்டு நகர்ந்துவிட வேண்டுமா?
இந்துப் பெரும்பான்மைவாதம் இஸ்லாமியச் சமூகத்தை என்ன செய்தது, என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது பிபிசி ஆவணப்படம். 2002 குஜராத் கலவரங்கள் எவ்வாறு நடைபெற்றன... அந்தக் கலவரங்களால் பலனடைந்தவர்கள் யார்... தூக்கி வீசப்பட்டவர்கள் யார்... என்பதை ஐயத்துக்கு இடமின்றி அடையாளம் காட்டுகிறது இந்த ஆவணப்படம்.
உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் தலைவரின் வளர்ச்சியை இஸ்லாமிய மக்களின் வலி மிகுந்த வாழ்வில் பொருத்திப் பார்த்து இந்த ஆவணப்படம் விவரிக்கும்போது, மனசாட்சியுள்ள ஒவ்வொருவரும் கலக்கத்துக்குள்ளாவது நிஜம். இந்தப் படம் நம் அடிப்படைகளை ஆட்டம் காணவைக்கிறது. நம் விழுமியங்களைக் கேள்விக்கு உட்படுத்துகிறது. அதனாலேயே இந்தப் படம் அரசுக்கும், அதன் ஆதரவாளர்களுக்கும் அச்சமூட்டக்கூடியதாக இருக்கிறது. தங்கள் மனசாட்சியை நோக்கிக் கேள்விகளை எழுப்பிக்கொள்வது கடினம் என்பதால் பிபிசி-யை நோக்கி அவர்கள் கேள்விகளை வீசிக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு கேள்விகள் எழுப்புவதுகூடத் தவறில்லை. பிபிசி ஆவணப்படத்தில் குறைகள் இருந்தால், பிரச்னைகள் இருந்தால் அவை விமர்சிக்கப்பட வேண்டும், விவாதிக்கப்பட வேண்டும். ஆனால், வெளிவர முடியாதபடிக்கு அதைத் தடைசெய்வது கடும் கண்டனத்துக்குரியது. நாம் எதைப் பார்க்க வேண்டும், பார்க்கக் கூடாது என்பதை அரசுதான் தீர்மானிக்கும் என்பது அபாயகரமான போக்கு.

பிரிட்டனில் என்ன நடக்கிறது?
`India: The Modi Question’ ஆவணப்படத்தை வெளியிட்ட தற்காக பிரிட்டன் வாழ் இந்திய சமூகத்திடமிருந்து, குறிப்பாக வணிகப் பிரிவினரிடமிருந்து பிபிசி-க்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பிபிசி-க்கு முன்பு நின்று பலர் பதாகைகளோடு எதிர் முழக்கங்கள் எழுப்பியிருக்கிறார்கள். `இது மோடிக்கு எதிரான பிரசாரம்’ என்றும், `இந்தியர்களை பிபிசி காயப்படுத்திவிட்டது’ என்றும் அவர்கள் கண்டித்திருக்கிறார்கள். ``பிரிட்டனுக்கும் இந்தியாவுக்குமான உறவில் இந்தப் படம் விரிசலை ஏற்படுத்துமா?’’ என்னும் கேள்வியை அரசியல் ஆய்வாளர்கள் எழுப்பியிருக்கின்றனர். தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இம்ரான் ஹுசேன் என்னும் எம்.பி கேள்வி நேரத்தின்போது, பிரதமர் ரிஷி சுனக்கிடம் பிபிசி படத்தைக் குறிப்பிட்டபோது, பிபிசி ஆவணப்படம் சொன்ன கருத்தை தான் ஏற்கவில்லை என்றிருக்கிறார் ரிஷி.