சினிமா
Published:Updated:

இரு நாடுகளிலும் இழுபடும் மீனவர் பிரச்னை!

மீனவர்
பிரீமியம் ஸ்டோரி
News
மீனவர்

கடல்வழிக் கடத்தல் அதிகம் நடப்பதாகப் புகார் கிளம்பியதால் இலங்கைக் கடற்படையின் பார்வை பாக் நீரிணைமீது விழுந்தது.

நாளுக்குநாள் பாக் நீரிணைக் கடற்பரப்பில் பதற்றம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவதும் தொடர்கிறது. ஞாயிற்றுக்கிழமையன்றுகூட 12 மீனவர்களைக் கைதுசெய்து இரண்டு விசைப்படகுகளைக் கைப்பற்றியிருக்கிறது இலங்கைக் கடற்படை.

இலங்கை - தமிழகத்துக்கு இடையிலான 50 கடல் நாட்டிக்கல் மைல் கடற்பரப்பு 38 நாட்டிக்கல் மைல் இந்தியாவுக்கும், 12 நாட்டிக்கல் மைல் இலங்கைக்கும் என ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பிரிக்கப்பட்டது. இது ஆவணங்களில் இருந்தாலும் இருநாட்டு மீனவர்களும் பரஸ்பரப் புரிதலோடு பாரம்பர்ய முறைப்படி இணக்கமாகவே தொழில்செய்து வந்தார்கள்.

1964-ல், இந்தியாவும் நார்வேயும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி இந்திய மீனவர்களுக்கு நவீன மீன்பிடி முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. விசைப்படகுகளும் இழுவை வலைகளும் மானிய விலையில் வழங்கப்பட்டன. இழுவை வலைகள், கடலுக்கு அடியில் சகதியில் வாழும் மீன்களையும் மொத்தமாக அள்ளிவந்துவிடும். அதோடு சேர்த்து மீன்குஞ்சுகள், இரைகள், கடலுயிரிகள் இனப்பெருக்கம் செய்ய உதவும் தாவரங்களையும் சேர்த்து அழித்துவிடும். இந்தவகை மீன்பிடிப்பில் பெரும் வருமானம் கிடைத்ததால் பெரும்பாலான மீனவர்கள் அதற்கு மாறினார்கள்.

இரு நாடுகளிலும் இழுபடும் மீனவர் பிரச்னை!

இழுவை வலையைப் பயன்படுத்த 20 நாட்டிக்கல் மைல் தூரத்துக்கும் மேலாக ஆழ்கடலுக்குப் பயணிக்கவேண்டும். ராமேஸ்வரத்தில் கிளம்பினால் நெடுந்தீவிலோ, மன்னாரிலோதான் வலை நிறைவுற்று நிற்கும்.

1974-ல் கச்சத்தீவு மற்றும் அதைச்சுற்றியுள்ள கடற்பரப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டது. ஆனாலும் தமிழக மீனவர்கள் அந்தப்பரப்பைப் பயன்படுத்துவதில் எந்தச் சிக்கலும் எழவில்லை. 1984-85-ல், ஈழப்போர் தீவிரமடைந்தது. தலைமன்னார் முதல் கிளிநொச்சி வரை இருந்த மீனவர்கள் போர்ச்சூழலால் வெளியேறினார்கள். அதனால், வெற்றிடமாக இருந்த இலங்கைக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எல்லைகளற்று மீன்பிடித்தார்கள். இதே காலகட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் ராமேஸ்வரத்தைக் குறிவைத்து பெரும் முதலீடுகளைச் செய்தன. வாழ்வாதாரமாக இருந்த மீன்பிடித்தொழில் பணம் கொழிக்கும் தொழிலாக மாறியது அந்த நேரத்தில்தான்.

இதே காலகட்டத்தில் கடல்வழிக் கடத்தல் அதிகம் நடப்பதாகப் புகார் கிளம்பியதால் இலங்கைக் கடற்படையின் பார்வை பாக் நீரிணைமீது விழுந்தது. தமிழர்கள் மீது இயல்பாகவே இருந்த எதிர்ப்புணர்வால் அவர்கள் வன்மத்தோடு நடக்கத் தொடங்கினார்கள். 1983-ல் மீனவர் முனியசாமி சுட்டுக்கொல்லப்பட்டது தொடங்கி இப்போதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான படகுகள் நாசமாக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் உடல் உறுப்புகளை இழந்திருக்கிறார்கள்.

இலங்கையில் யுத்தம் ஓய்ந்து சூழல் மாறியதும் புலம்பெயர்ந்த மீனவர்கள் மீண்டும் தொழிலுக்குத் திரும்பினார்கள். இலங்கைக் கடற்படைக்கு மட்டுமே அஞ்சிய தமிழக மீனவர்கள், இப்போது இலங்கை மீனவர்களுக்கும் அஞ்சவேண்டிய நிலை.

2016-ல் இழுவை மடித்தொழில் தடைச்சட்டம் இலங்கையில் கொண்டுவரப்பட்டது. மேலும் 1979-ல் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வலியுறுத்தித் தமிழர் கட்சிகள் இலங்கை நீதிமன்றத்தை அணுக, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசுக்கும் கடற்படைக்கும் உத்தரவிட்டது நீதிமன்றம். அதன்பிறகு, எல்லை தாண்டிவரும் தமிழகப் படகுகளைக் கைப்பற்றுவதும் மீனவர்கள் கைதுசெய்யப்படுவதும் தீவிரமடைந்தது.

இரு நாடுகளிலும் இழுபடும் மீனவர் பிரச்னை!

இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மீனவர்களுக்குள் பிரச்னையை உருவாக்கி மொத்தமாக சீனாவின் கைகளுக்கு இந்தக்கடற்பரப்பைத் தர நினைக்கிறார் என்று இலங்கையிலேயே புகார்கள் கிளம்பியிருக்கின்றன. வெளிப்படையாகவே தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்களைத் தூண்டுகிறார் தேவானந்தா. எல்லாப் பிரச்னைகளையும் கடந்து, ஈழத் தமிழர்களுக்குத் தமிழகத் தமிழர்கள் துணை நிற்கிறார்கள். அந்த உணர்வைத் தகர்த்து, இருநாட்டுத் தமிழர்களையும் எதிரிகளாக்கவே இலங்கை அரசும், இந்திய அரசும் பிரச்னைக்குத் தீர்வு காணாமல் வேடிக்கை பார்க்கின்றன என்ற குற்றச்சாட்டும் கிளம்பியிருக்கிறது.

‘‘இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை கடுமையாக நடந்துகொள்கிறது. கச்சத்தீவு ஒப்பந்தப்படி அந்தோணியார் ஆலயத் திருவிழாவிற்குச் செல்ல இந்தியர்கள் இலங்கை அரசிடம் அனுமதிகோரத் தேவையில்லை. ஆனால் இவ்வாண்டு செல்லமுடியவில்லை. பாரம்பர்ய கடற்பரப்பில் இருநாட்டு மீனவர்களும் மீன்பிடித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய-இலங்கை அரசுகள் இதைக் கண்டு கொள்ளவேயில்லை. இருநாட்டு அரசுகளும் கடலை கார்ப்பரேட் கைகளுக்குத் தரத் திட்டமிடுகின்றன” என்று குற்றம் சாட்டுகிறார், தேசிய பாரம்பர்ய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தங்கச்சிமடம் சின்னத்தம்பி.

இலங்கை வடமாகாண கடல் தொழிலாளர்கள் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம், “யுத்தத்தால் எல்லாம் இழந்து இப்போதுதான் வாழ்க்கையை மீட்டுருவாக்கம் செய்து வருகிறோம். அதை இழுவை வலை மூலம் மொத்தமாகத் தகர்த்தெறிகிறார்கள் தமிழகத்திலிருந்து வரும் மீனவர்கள். எங்கள் வலைகளையும் படகுகளையும் சேதப்படுத்துகிறார்கள்.

இரு நாடுகளிலும் இழுபடும் மீனவர் பிரச்னை!

இரண்டு வாரங்களுக்கு முன்பு வடமராச்சி கிழக்கில் இந்திய விசைப்படகு மோதி மீன்பிடித்துக்கொண்டிருந்த இரண்டு மீனவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம். தமிழகத்தில் 4 லட்சம் மீனவர்கள் இருக்கிறார்கள். இதில் வெறும் 3,000 விசைப்படகுகளில்தான் இழுவை மடி வலைகளைப் பயன்படுத்துகிறார்கள். இவர்களை நோக்கித்தான் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். மற்றபடி, நாங்கள் ஏழு கோடித் தமிழர்கள்மீது நேசத்துடன்தான் இருக்கிறோம்” என்கிறார் வி.என்.சுப்பிரமணியன்.

“இழுவை வலையால் கடல் வளம் அழிவதாகச் சொல்வது தவறு. இழுவை வலைக்கு நம் நாட்டில் தடையில்லை. இலங்கையிலும்கூட ஐந்நூறுக்கும் மேற்பட்ட படகுகள் இழுவை வலைகளைப் பயன்படுத்து கின்றன. நாங்கள் இலங்கை மீனவர்களிடம் கேட்பது, எங்களை வாரத்துக்கு 2 நாள்கள் மீன்பிடிக்க அனுமதியுங்கள். மற்ற நாள்களில் நீங்கள் தொழில் செய்யுங்கள் என்பதுதான். அதற்கு அவர்கள் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் கச்சத்தீவை மீட்டு நம் மீனவர்களின் பாரம்பர்ய மீன்பிடிக்கும் உரிமையை நிலைநாட்ட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்கிறார், ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் சேசு.

இந்த விவகாரம் மேலும் சிக்கலா வதற்குத் தமிழக மீன்வளத்துறையின் நடவடிக்கையும் முக்கியக் காரணம் என்கிறார்கள். ராமேஸ்வரம் கடற் பகுதியில் பதிவுபெற்ற விசைப் படகுகளின் எண்ணிக்கை 634. ஆனால் 1,000 படகுகளுக்கு மேல் தொழிலுக்குச் செல்வதாகச் சொல்கிறார்கள். பலர் மோசடி ஆவணங்களைப் பயன்படுத்து கிறார்கள். இவர்கள்தான் பிரமாண்ட இரட்டைமடி இழுவை வலைகளைப் பயன்படுத்தி ஆழ்கடலில் மீன்பிடிக்கிறார்கள்.

“பலமுறை இதுகுறித்து மீன் வளத்துறைக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதற்கு முன்பு ஒரு மீன்வளத்துறை உதவி இயக்குநர் இரட்டைமடி இழுவை வலைகளைப் பயன்படுத்திய 134 படகுகள் மீது வழக்கு பதிவு செய்தார். ஆனால் இப்போது அந்தப் படகுகளுக்கு மானிய விலை எரிபொருள் வழங்கப்படுகிறது. அந்தப் படகுகளும் மீன்பிடிக்கின்றன...” என்கிறார் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கத்தின் தலைவர் என்.ஜே.போஸ்.

இலங்கை நீதிமன்றத்தால் நாட்டுடமை யாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் பல்வேறு கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தன. அந்தப் படகுகளால் கடல் மாசுபடுகிறது, கொசு உற்பத்தியாகி டெங்கு பரவுகிறது என்று காரணம் கூறி, அவற்றை ஏலம் விட உத்தரவிட்டது இலங்கை மீன்வளத்துறை. 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள 135 படகுகளும் இந்திய மதிப்பில் வெறும் 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன.

போஸ், செந்தில் தொண்டமான், சேசு, சுப்பிரமணியன், சின்னத்தம்பி
போஸ், செந்தில் தொண்டமான், சேசு, சுப்பிரமணியன், சின்னத்தம்பி

இலங்கைப் பிரதமரின் இணைப்புச் செயலர் செந்தில் தொண்டமானிடம் இதுபற்றிக் கேட்டோம். “இப்படிச் செய்யக்கூடாது என்று தொடர்ந்து பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் வலியுறுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். தமிழகத்தோடு எங்களுக்கு இணக்கமான பந்தம் உண்டு. யுத்த நேரத்தில் ஒரு லட்சம் இலங்கையர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது தமிழகம். தமிழக முதல்வர் இலங்கைத் தமிழர்களுக்குப் பல்வேறு திட்டங்களை உருவாக்குகிறார். மீன்பிடி சிக்கல்கள் குறித்து இருநாட்டு மீனவர்களே பேசித்தீர்க்க வேண்டும். இதற்குள் அரசியல் நுழையக்கூடாது...” என்கிற செந்தில் தொண்டமான், “படகு செயலிழந்ததால் தமிழகத்தில் கரையொதுங்கி சிறையில் வாடும் 7 இலங்கை மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்ற கோரிக்கையையும் முன்வைக்கிறார்.

நம் அண்டை தேசம், தொழில்நாடிச் செல்லும் மீனவர்களைக் கைது செய்து குற்றவாளிகளைப் போல நடத்துவதும் அவர்களின் உடைமைகளைப் பறித்து ஏலம் விடுவதும் வன்மச் செயல். மிகச்சிறிய கடல் எல்லை கொண்ட இந்திய-இலங்கைக் கடற்பரப்பில் இருநாட்டு மீனவர்களும் பதற்றமில்லாமல் தொழில் செய்ய ஏற்பாடு செய்யவேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை.