Published:Updated:

சிவப்பு, பச்சை முதல் கொடியின் தற்போதைய வடிவம் வரை... பிங்கலி வெங்கையாவும் இந்திய கொடி வரலாறும்!

கொடி வரலாறு
News
கொடி வரலாறு

வெங்கையாவின் ஆர்வதைக் கவனித்த காந்தி பெசவாடா என்ற இடத்தில் நடைப்பெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் அவரை கொடியை வடிவமைக்க சொல்லி கேட்டுக்கொண்டார்.

Published:Updated:

சிவப்பு, பச்சை முதல் கொடியின் தற்போதைய வடிவம் வரை... பிங்கலி வெங்கையாவும் இந்திய கொடி வரலாறும்!

வெங்கையாவின் ஆர்வதைக் கவனித்த காந்தி பெசவாடா என்ற இடத்தில் நடைப்பெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் அவரை கொடியை வடிவமைக்க சொல்லி கேட்டுக்கொண்டார்.

கொடி வரலாறு
News
கொடி வரலாறு

மனிதன் தன்னை எப்பொழுதும் ஒரு குழுவோடு அல்லது ஒரு சமூகத்தோடு ஒன்றுபடுத்தி அடையாளப் படுத்திக்கொள்ள விழைகிறான். மொழி சார்ந்து, இனம் சார்ந்து, நிலப்பரப்பு சார்ந்து என ஏதோ ஒரு வகையில் தன்னை ஒரு சமூகமாக கருதுகிறான். இப்படி அவன் சமூகத்துக்கு என்று ஒரு அடையாளத்தையும் உருவாக்குகிறான். இந்த அடையாளங்கள் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமைக்கும் பிற சமூகத்திலிருந்து தன்னை வேறுபடுத்தி முன்னிலை படுத்தவும் உதவுகிறது. அப்படி அடையாள படுத்திக்கொள்ள அவன் பயன்படுத்தியதில் முக்கியமானது கொடி.

கொடி இன்று நேற்று அல்ல, பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. சீனாவிலிருந்து பட்டு நூல் ஏற்றுமதி செய்யப்பட்ட காலம் தொடங்கி இந்த வழக்கம் மேலும் விரிந்தது. சேர, சோழ, பாண்டிய கொடிகளும் அவற்றில் இருக்கும் சின்னங்கள் குறித்தும் நாம் அறிவோம். ஆக இது நம் மரபிலும் உண்டு.

சரி பல பிராந்தியங்கள் பல ராஜ்ஜியங்கள் பல மொழி இனம் என பரந்து விரிந்து நிற்கும் இந்திய நாட்டிற்கு கொடி என்ற ஒற்றை அடையாளம் வந்தது எப்படி? இதை எப்படி வடிவமைத்திருப்பார்கள்?
பிங்கலி வெங்கையா
பிங்கலி வெங்கையா

இந்தியா ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்த காலம் அது. ஆங்கிலேயர் அடக்கு முறைக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று கொண்டிருந்தது. இந்த சூழலில் 1906 -ம் ஆண்டு அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் கொல்கத்தாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தாதாபாய் நேரோஜி ஆங்கிலேயரின் கொடியை ஏற்ற மறுத்துவிட்டார்.

நேரோஜி கருத்து கூட்டத்தில் இருந்த ஒருவரை மிகவும் ஈர்த்தது. அவர் பெயர் பிங்கலி வெங்கையா. இவர் தான் பின் நாளில் இந்தியாவின் தேசிய கொடியை வடிவமைத்தவர்.

பிங்கலி வெங்கையா தற்போதுள்ள ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் உள்ள பட்லபேணுமாறு என்ற சிறிய கிராமத்தில் ஆகஸ்டு 2, 1878 இல் பிறந்தார். இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இவர் ஒரு சுதந்திர போராளி மட்டும் அல்ல மண்ணியல் ஆர்வலர், ஆசிரியர், மொழியியல் அறிஞர் மற்றும் விவசாயியும் ஆவார். இவர் சரளமாக ஜப்பானிய மொழி பேசும் வல்லமையும் பெற்றவர்.

மேலும் இவர் ராணுவத்திலும் பணியாற்றினார். 1899 முதல் 1902 வரயிலான காலகட்டங்களில் தென்னாபிரிக்காவில் இரண்டாம் போயர்(Boer) போரில் பங்குபெற்றார். அந்த சமயத்தில் தான் மகாத்மா காந்தியை சந்தித்தார். அப்போது அவருக்கு வயது 20. வெங்கையாவுக்கு அப்போதிலிருந்தே நம் நாட்டுக்கென்று தனியாக கொடி வேண்டும் என்ற எண்ணம் உருவானது. பிறகு இந்தியா வந்த அவர் சுதந்திர போராட்டங்களில் பங்கு கொண்டார். இதற்கு நடுவே கொடி வடிவமைப்பிலும் கவனம் செலுத்தினார். 1916-ம் ஆண்டு இருபத்தைந்த்திற்கும் மேற்பட்ட கொடி வடிவங்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்டார். இதற்கு அவர் வைத்த பெயர் `பாரத தேஷானிகி ஒக்க ஜாதிய பதக்கம்’.

கொடியின் தற்போதைய வடிவம்

வெங்கையாவின் ஆர்வதைக் கவனித்த காந்தி, பெசவாடா என்ற இடத்தில் நடைப்பெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் அவரை கொடியை வடிவமைக்க சொல்லி கேட்டுக்கொண்டார். உடனே வெங்கையாவும் வடிவமைத்து கொடுத்தார். இதற்கு அவர் எடுத்துக்கொண்ட அவகாசம் வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே.

அந்த கொடியில் சிவப்பு வண்ணமும் பச்சை வண்ணமும் இருந்தது. காந்தி ஒற்றுமையை குறிக்கும் வகையில் வெள்ளை நிறத்தை சேர்த்தார். கொடியின் நடுவில் கைத்தறி சக்கரத்தை லாலா ஹன்ஸ்ராஜ் என்பவரும் காந்தியும் சேர்த்தனர். லாலா ஹன்ஸ்ராஜ் ஒரு கல்வியாளர். அது மட்டுமின்றி அவர் தான் டிஏவி கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர். கைத்தறி சக்கரம் நாட்டின் வளர்ச்சியை குறிக்கும் சின்னமாக விளங்கும் என அவர்கள் எண்ணினர்.

இந்தியக் கொடிகள்
இந்தியக் கொடிகள்

இது தான் இந்தியாவின் முதல் கொடி. இதற்கு பல வருடங்களுக்கு முன் சிரிஷ் சந்திர போஸ் லாகூரில் முதல் கொடியை வடிவமைத்தார். அவரை தொடர்ந்து சகோதரி நிவேதிதா, மேடம் பிகாஜி காமா உள்ளிட்டோரும் கொடி வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இறுதியில் வெங்கையா வடிவமைத்த கொடி தான் தேசிய கொடியாக பின் நாளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1921 முதல் எல்லா காங்கிரஸ் கூட்டங்களிலும் இந்த கொடி பயன் படுத்தப்பட்டது. ஒத்துழையாமை போராட்டங்களிலும் அதற்கு பின் வந்த நாள்களிலும் இந்த கொடி ஏற்றப்பட்டது. 1931 ஆம் ஆண்டு கொடியில் இருந்த சிவப்பு நிறம் தற்போதுள்ள காவி நிறமாக மாற்றப்பட்டது. பிறகு ஜூலை 22, 1947இல் தான் கொடி தற்போதுள்ள உருவம் பெற்றது.

இந்தியா சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்ட ஆகஸ்டு 15, 1947-ல் நடுவில் அசோக சக்கிரத்துடன் கம்பீரமான இந்திய தேசிய கொடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு வருடமும் விடுதலை அடைந்த திருநாளில் இந்த கொடியை வானுயர பறக்க விட்டு மகிழ்கிறோம்.

ஆனால், இந்திய கொடியை வடிவமைத்ததற்காக அவர் ஒரு பைசா கூட வாங்கவில்லை. மிகவும் வறுமையில் தன் நாள்களை கழித்தார் வெங்கய்யா. ராணுவத்தில் பணியாற்றியதற்காக அரசாங்கம் கொடுத்த நிலத்தில் சிறிய குடிசையில் வாழ்ந்தார். தன் மகனின் உடல் நிலை மோசமான போது சிகிச்சைக்குக்கூட பணம் இல்லாததால் மகனை இழந்தார். வாழ்நாளின் இறுதி நாள்களை வறுமையின் பிடியில் வாழ்ந்த வெங்கையா 1963-ல் இயற்கை எய்தினார். பல ஆண்டுகள் கழித்து 2009-ல் அவருக்கு தபால் தலை வெளியிட்டது அரசாங்கம். இது தான் அரசு அவருக்கு செய்த உயரிய கவுரவம் ஆகும். பாரத ரத்னா விருதுக்கும் அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தகவல் அறிவோம்!

ஏன் எல்லா கொடிகளும் நீள்சதுர வடிவில் உள்ளது?

நீள்சதுர வடிவம் காற்றை திறம்பட எதிர்கொள்ளும். அதனால் கப்பல்களிலும் ராஜ்ஜியங்களின் கோட்டைகளிலும் நீள்சதுர வடிவிலான கொடிகள் வடிவமைக்கப்பட்டது. ஆனால் சில தேசங்கள் இதற்கு விதிவிலக்கு .

நேபாள நாட்டு கொடி தான் நாற்கர வடிவம் இல்லாத உலகின் முதல் கோடி. இது முக்கோண வடிவில் இருக்கும். இதற்கு காரணம் பழங்கால தெற்காசியாவில் முக்கோண வடிவம் உயர்வான சின்னமாக கருதப்பட்டது. மேலும் சுவிர்சர்லாந்து, வாட்டிகன் உள்ளிட்ட நாடுகள் சதுர வடிவிலான கொடிகளை பயப்படுத்துகின்றனர்.