கட்டுரைகள்
Published:Updated:

பாகிஸ்தான் டிரோன்களை அழிக்குமா இந்தியப் பருந்துகள்?

பருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
பருந்து

வேட்டையாடிப் பறவையான பருந்தினைக் கொண்டு டிரோனை அழிக்கும் முயற்சி சாத்தியமா என்றால் சாத்தியம்தான். விலங்குகளைப் போலவே பறவைகளையும் மனிதர்கள் வேட்டைக்குப் பழக்கப்படுத்தியிருக்கின்றனர்.

அந்நிய நாட்டிலிருந்து கடத்தல் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் டிரோன்களை அழிக்க இந்திய ராணுவம் பருந்துகளைப் பயன்படுத்த இருக்கிறது...

காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானிலிருந்து போதைப்பொருள்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் போன்றவை டிரோன் மூலம் இந்தியாவுக்குக் கடத்தப்படுகின்றன. இவற்றை அழிக்கப் பருந்துகளுக்குப் பயிற்சி அளித்துப் பயன்படுத்தவிருப்பதாக சமீபத்தில் இந்திய ராணுவம் தெரிவித்திருக்கிறது.

ராணுவத்தில் கழுகுகளைக் பயன்படுத்துவது நடைமுறையில் இருக்கிறது. பருந்துகள் அதே அளவுக்குக் கழுகுகளைப்போலச் செயல்படுமா?

இதற்கான சாத்தியங்களை அலசுவதுடன், அடிப்படையில் பருந்தின் உயிரியல் தன்மை என்ன, கழுகுக்கும் பருந்துக்குமான வேறுபாடு என்ன என்று பறவைகள் ஆராய்ச்சியாளர் கோவை சதாசிவத்திடம் கேட்டோம்.

Iகோவை சதாசிவம்
Iகோவை சதாசிவம்

“பருந்து, கழுகு ஆகியவை மேலோட்டமாகப் பார்க்கையில் ஒன்றுபோலத் தெரிந்தாலும் அவற்றின் உடற்கூறு மற்றும் உணவுப் பழக்கங்கள் வேறுபட்டவை. கழுகிலும் பருந்திலும் பல வகையான இனங்களும் உள்ளினங்களும் இருக்கின்றன. கழுகுகளைப் பொறுத்தவரை அவை இறந்த உயிரினங்களைச் சாப்பிடுபவை. பிணந்தின்னிக் கழுகுகள் என்கிற பாருக் கழுகுகளை இதற்கு உதாரணமாகக் கூற முடியும். பருந்து வேட்டையாடிப் பறவை என்பதால் இறந்த உயிரினங்களைச் சாப்பிடாது. சிறு பறவைகள் மற்றும் விலங்குகளை வேட்டையாடிச் சாப்பிடும்.

பூச்சிகளைச் சாப்பிடுபவை, தானியங்களைச் சாப்பிடுபவை, தேன் போன்ற திரவ உணவுகளைச் சாப்பிடுபவை, வேட்டையாடுபவை எனப் பறவைகளைப் பொதுவாக வகைப்படுத்துகிறோம். ஊன் உண்ணிப் பறவைகளான கழுகு மற்றும் பருந்து ஆகியவை உணவு வளையத்தில் மிக முக்கியமான அங்கம் வகிக்கின்றன. இறந்த உடலைத் தின்பதன் மூலமும், வேட்டையாடுவதன் வழியாகவும் உயிர்ப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன.

இந்தியப் பறவையியலாளர்கள் பருந்தில் 12 வகைகளையும், கழுகில் 20 வகைகளையும், உள்ளினங்களான வல்லூறில் 6 வகைகளையும், வைரியில் 3 வகைகளையும், ராசாளியில் 6 வகைகளையும் பிரித்து அடையாளப்படுத்துகின்றனர்.

பாகிஸ்தான் டிரோன்களை அழிக்குமா இந்தியப் பருந்துகள்?

தமிழ்நாட்டில் நான்கு வகையான பாருக் கழுகுகள் இருக்கின்றன. பருந்துகளிலேயே லகிடு, சிக்காடா போன்ற, உருவத்தில் சிறிய பருந்து வகைகள் இருக்கின்றன. கழுகுகள் இறந்து கிடக்கும் விலங்குகளை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவை. ஆகவே, அவற்றுக்கு அலகுகள் மிகக்கூர்மையாக இருக்கும். இதுவே வேட்டையாடியான பருந்துகளுக்கு இரையைக் கவ்விப் பிடிப்பதற்காகவும், கிழித்து உண்பதற்காகவும், அதன் கால் நகங்கள் மிகக்கூர்மையாக இருக்கும்.

மனிதர்களுக்கும் பறவைகளுக்குமான உறவு பன்னெடுங்காலமாகத் தொடர்ந்து வருவது. நமது பழம் இலக்கியங்களில் இதற்கான தரவுகள் உண்டு. இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில்தான் கழுகு மற்றும் பருந்துகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கின்றன. வெப்பமண்டல நாடுகளில்தான் உயிரினப்பெருக்கம் அதிகமாக இருக்கும்.

பாகிஸ்தான் டிரோன்களை அழிக்குமா இந்தியப் பருந்துகள்?

வேட்டையாடிப் பறவையான பருந்தினைக் கொண்டு டிரோனை அழிக்கும் முயற்சி சாத்தியமா என்றால் சாத்தியம்தான். விலங்குகளைப் போலவே பறவைகளையும் மனிதர்கள் வேட்டைக்குப் பழக்கப்படுத்தியிருக்கின்றனர். பருந்துகளைக் கொண்டு சிறிய பறவைகள் மற்றும் முயல் போன்ற சிறிய விலங்குகளை வேட்டையாடி யிருக்கின்றனர். மீன்களை வேட்டையாட நீர்க்காங்களைப் பழக்கப்படுத்தியுள்ளனர். அதுபோல டிரோன்களை அழிக்கவும் பயன்படுத்த முடியும். மோப்ப நாய்களைப் பழக்கப்படுத்தியதைப் போல பருந்துகளைப் பழக்கப்படுத்துவது எளிதானதல்ல. அது மிகவும் சவாலானதும்கூட. நல்ல பயிற்சியின் வழியே இத்திட்டத்தினைச் சாத்தியப்படுத்த முடியும்” என்கிறார் கோவை சதாசிவம்.

பருந்துகளை அறிவோம்!