மெட்டா, ட்விட்டர், அமேசான் எனப் பல நிறுவனங்கள் சமீபத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றன. அந்த வரிசையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதன் பணியாளர்களில் 5 சதவிகிதத்தினரை பணிநீக்கம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த நிறுவனம் கடந்த புதன்கிழமை சுமார் 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவுசெய்திருப்பதாக அறிவித்தது. ஏற்கெனவே கடந்த அக்டோபர், ஜூலை மாதங்களில் ஆட்குறைப்பை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 21 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்த இந்தியரான பிரசாந்த் கமானி என்ற ஊழியர் பணிநீக்கம் குறித்த செய்தியை LinkedIn-ல் பகிர்ந்திருக்கிறார். அதில்,``கல்லூரி முடித்த பிறகு முதன்முறையாக நான் மைக்ரோசாஃப்டில்தான் வேலைக்குச் சேர்ந்தேன். நான் பதற்றத்துடனும், உற்சாகத்துடனும் வெளிநாட்டுக்கு வந்ததை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். வாழ்க்கையில் எனக்காக என்ன இருக்கிறது என்று யோசித்திருக்கிறேன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 21 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியிருக்கிறேன், பல பொறுப்புகளை வகித்திருக்கிறேன். இது மிகவும் நிறைவாகவும், பலனளிப்பதாகவும் இருந்தது.
என்னுடைய தொழில் வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவத்தின் செல்வத்தை, வருடங்களில் அளவிட முடியாது. அதற்கெல்லாம், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என்னைச் சுற்றி மிகவும் திறமையான, புத்திசாலித்தனமான நபர்கள் இருக்கின்றனர். அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதால், அவர்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால், இந்தப் பணிநீக்கச் செய்தி என்னைக் கடுமையாக பாதித்திருக்கிறது.
அலுவலகத்தில் பெரும்பாலான ஊழியர்கள் பணிவாகவும், மற்றவர்களின் கருத்துகளைக் கேட்க ஆர்வமாகவும் இருந்தனர். என்னுடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள அனுமதித்தனர். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் என் திறன்களை விரிவுபடுத்த பல்வேறு வாய்ப்புகளை வழங்கியது. என்னாலும் அவற்றை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு உண்மையிலேயே நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 1999-ல் ஒரு மென்பொருள் வடிவமைப்பு பொறியாளராக தனது பணியைத் தொடங்கி, 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார். பின்னர், 2015-ல் அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேறி, அமேசானில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு மீண்டும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் முதன்மை மென்பொருள் மேம்பாட்டு மேலாளராகச் சேர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.