இந்தியாவின் மிக உயரிய விருதுகளாகக் கருதப்படும் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ விருதுகளுக்கான பட்டியலை மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவித்திருந்தது. இந்த விருது பட்டியலில் 4 பேருக்கு பத்ம விபூஷன், 17 பேருக்கு பத்ம பூஷன், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 128 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பத்ம பூஷன் விருதை சுந்தர் பிச்சை பெற்று கொண்டார். இந்தியா சார்பில் சுந்தர் பிச்சைக்கு அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து இந்த விருதை வழங்கியுள்ளார்.
இந்த விருதைப் பெற்ற சுந்தர் பிச்சை இந்தியாவிற்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, "இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்துவுக்கு நன்றி. என் குடும்பத்தினர் முன்னிலையில் இந்த விருதை பெறுவது கௌவுரமாக உள்ளது. விருது வழங்கிய இந்திய மக்களுக்கும், அரசுக்கும் நன்றி.
என்னை உருவாக்கிய தேசத்திடம் இருந்து எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இந்தியா எனது ஓர் அங்கம். நான் எங்கு சென்றாலும் அந்த அடையாளத்தை எடுத்துச் செல்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.
மேலும் விருது வழங்கிய இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கூகுள் மற்றும் அல்பபெட் நிறுவனத்தின் CEO-வாக உள்ள சுந்தர் பிச்சையிடம் பத்ம பூஷன் விருதை ஒப்படைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மதுரையில் இருந்து மவுன்டெயின் வியூ வரை என சுந்தர் பிச்சையின் பயணம் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. இவரது இந்தப் பயணம் இந்தியா - அமெரிக்கா இடையேயான பொருளாதாரம், தொழில்நுட்பத்தை வலுப்படுத்துதுகிறது. இவரது செயல்பாடு என்பது உலகளாவிய புதுமை கண்டுபிடிப்புகளில் இந்தியர்களின் திறமையான பங்களிப்பை மீண்டும் உறுதி செய்கிறது" என்று தெரிவித்துள்ளார்.