அலட்சிய மருத்துவர்கள்... அவதிப்படும் மக்கள்... நம்பிக்கையை இழக்கின்றனவா அரசு மருத்துவமனைகள்?
கர்ப்பிணியான சந்தியாவுக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்த குழந்தை இறந்துபோனது.
“ஏழை மக்களின் நோய்களைத் தொடக்க நிலையிலையே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதே அரசின் நோக்கம். கல்வியும் மருத்துவமும் தமிழக அரசின் இரு கண்கள்” - சமீபத்தில் சென்னையில் நடந்த சுகாதார மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிப்பெருக்கோடு சொன்ன வார்த்தைகள் இவை. ஆனால் சமீபகாலமாக அரசு மருத்துவமனைகளில், மருத்துவப் பணியாளர்களின் கவனக்குறைவால் நடக்கும் நிகழ்வுகள் அதிர்ச்சியளிப்பவையாக இருக்கின்றன!
அண்மையில், சென்னையைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனையான பிரியாவுக்கு, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் மூட்டு சவ்வு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர்களின் அஜாக்கிரதையால் பிரியாவுக்கு காலில் வலி, வீக்கம் அதிகரிக்கவே உடனடியாக அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வலது காலை அகற்றும் நிலை ஏற்பட்டு, கடைசியில் கடந்த 15-11-2022 அன்று பரிதாபமாக உயிரிழந்தார் பிரியா.

அஜித்குமார் - கார்த்திகா தம்பதியின் குழந்தைக்கு, கடந்த 24-ம் தேதி மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ‘குழந்தையின் நாக்குப் பகுதியில் சிகிச்சையளிப்பதற்குப் பதிலாகப் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள் மருத்துவர்கள்’ என்று குழந்தையின் தந்தை அஜித்குமார் போலீஸில் புகார் அளித்தார். `Frenulum of tongue’-ஐ `Frenulum of Penis’ என்று புரிந்துகொண்டதால் ஏற்பட்ட குளறுபடி இது என்கிறார்கள்.
கர்ப்பிணியான சந்தியாவுக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்த குழந்தை இறந்துபோனது. பின்னர் உயர் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தியாவும், கடந்த 13-11-2022 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கும் அரசு மருத்துவர்களே குற்றம்சாட்டப்பட்டார்கள்.
கடலூர் மாவட்டம், சான்றோர் பாளையம் பகுதியைச் சேர்ந்த உமாவதிக்கு, கடந்த செப்டம்பரில் அரசு மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. ஆனால், சிகிச்சைக்குப் பிறகு உமாவதிக்கு கண் பார்வை பறிபோயிருக்கிறது. ‘காலப்போக்கில் பிரச்னை சரியாகிவிடும்’ என்று அரசு மருத்துவர்கள் உறுதியளித்து இரு மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால், இன்னும் பார்வை தெரியாததால், கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார் உமாவதி.
பண்ருட்டி அரசு மருத்துவமனையில், குப்பு என்ற நோயாளிக்கு வலது கையில் நரம்பு ஊசி செலுத்துவதற்காகத் துளைக் கருவி பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அதன் பிறகு குப்புவின் விரல்கள் அழுக ஆரம்பித்திருக்கின்றன. நாள்கள் செல்லச் செல்ல வலது கை முழுவதுமே அழுக ஆரம்பித்துவிட்டதால், தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் குப்பு.
கடந்த 23-11-2022 அன்று எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில், தாடை வளர்ச்சி குறைபாடு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விஜயகுமார் - செந்தாமரை தம்பதியின் மூன்றரை வயது மகன் ஜஸ்வந்த், சிகிச்சை பலனின்றி இறந்துபோனான். அதிக அளவிலான மயக்க மருந்து செலுத்தப்பட்டதே இறப்புக்கான காரணம் என்று கூறி போராட்டம் நடத்தினார்கள் பெற்றோர்.
28.11.2022 அன்று திருவாரூர் அரசு மருத்துவமனையில் ஒரு போராட்டம் நடந்திருக்கிறது. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட வினோதினிக்கு, மருத்துவர்கள் சிகிச்சையை தாமதப்படுத்தியதால் குழந்தைக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாகக் கூறி இந்தப் போராட்டம் நடந்தது.
இந்த அவலங்கள் குறித்து ‘சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்க’த்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத்திடம் பேசினோம். “அரசு மருத்துவமனைகள் சிலவற்றில், கவனக்குறைவு, தவறான சிகிச்சை நடக்கின்றனதான். அரசு மருத்துவர்கள் தனியாகத் தொழில் செய்வதும், தனியார் மருத்துவமனைகளுக்குப் பணிக்குச் செல்வதும் இந்தப் பிரச்னைக்கு ஒரு காரணம். அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சையை அவசர அவசரமாகச் செய்துவிட்டு, தனியார் மருத்துவமனைக்குப் பணிக்குச் செல்ல வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். இதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு 10,000 அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. ஆனால், போதிய எண்ணிக்கையிலான டாக்டர்கள், செவிலியர்கள் இல்லை. எனவே, இருக்கிற மருத்துவப் பணியாளர்களே கூடுதலாகப் பணியாற்ற வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். எனவே அவர்களுக்கு கவனக்குறைவும் ஏற்படுகிறது. இது தவிர மருந்து, மாத்திரை தட்டுப்பாடு, போதிய சிகிச்சை உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள், கட்டமைப்பு குறைபாடு போன்றவற்றிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
இது குறித்து சுகாதாரத்துறைச் செயலாளர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, “ஒவ்வோர் ஆண்டும் மருத்துவமனைகளுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கப்பட்டுவருகின்றன. இடையில் தேவைப்படும் உபகரணங்களும் உடனடியாக வாங்கிக் கொடுக்கப்படுகின்றன. டாக்டர்கள் பற்றாக்குறையை ஈடுசெய்ய, மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் தேர்வு நடத்தி டாக்டர்களைத் தேர்ந்தெடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.
இதையடுத்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் விளக்கம் கேட்டுப் பேசினோம். “தமிழகத்தில் எந்த அரசு மருத்துவமனையில் ஒரு சிறு தவறு நடந்தாலும், அது குறித்து உடனடியாகத் துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. தவறு நடந்திருப்பது உறுதியானால், நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு ஆறு லட்சம் மக்கள் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வருகிறார்கள். பெருவாரியான ஏழை மக்கள் பயன்பெறுகிறார்கள். ஏதாவது ஓர் இடத்தில் ஒரு சிறு தவறு நடந்தாலும் மொத்த அரசு மருத்துவமனைகளும் மோசமாகச் செயல்படுவதுபோலக் குற்றம் சுமத்துவது ஏற்புடையது அல்ல. இது தனியார் மருத்துவமனைகளுக்குச் சாதகமாக அமைந்துவிடும்” என்றார்.
தாங்கள் கையாள்வது விலைமதிப்பற்ற ஓர் உயிரை என்ற முழு அக்கறையுடன் மருத்துவர்கள் தங்கள் பணியைச் செய்ய வேண்டும். அதற்கேற்ற சூழலை அரசும் ஏற்படுத்தித் தர வேண்டும்!