
உண்மையில் என்ன நடந்தது? டெல்லியைச் சேர்ந்த மூத்த அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம்.
பொய்ச் செய்திகளைப் பரப்புவதில் அரசியல்வாதிகளை அடித்துக்கொள்ள முடியாது. சமீபத்திய உதாரணம், இந்திரா காந்தி விவகாரம். ‘எமர்ஜென்சியின் போது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக இருந்த சீதாராம் யெச்சூரியை, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி போலீஸைவைத்து அடித்ததாகச் செய்தி பரவியது. இது உண்மையா, பொய்யா என விசாரித்தோம்.

பா.ஜ.க தொண்டர்கள், `தேசபக்த்’, `பேட்ரியாட்’ உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் ஃபேஸ்புக் பக்கங்கள் வைத்துள்ளனர். பா.ஜ.க-வுக்கு எதிரானவர்களை, இந்த ஃபேஸ்புக் பக்கங்களில் கண்மூடித்தனமாக விமர்சிப்பார்கள். ‘முகமூடி அணிந்த நபர்களால் ஜே.என்.யு-வில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் காரணம் இந்துத்துவா மாணவர் அமைப்புகள்தான்’ என்று செய்திகள் வந்துகொண்டிருந்தபோது, ‘காங்கிரஸ் கட்சி மட்டும் என்ன யோக்கியமா..!’ என்ற தலைப்பில் ‘இந்திரா காந்தி, யெச்சூரியை அடித்தார்’ என்ற தகவலுடன் ஒரு புகைப்படத்தையும் பா.ஜ.க தொண்டர்கள் தங்களது ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்திருந்தார்கள்.
`எமர்ஜென்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதால், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்துக்குள் போலீஸ் படையுடன் சென்றார் இந்திரா. உள்ளே போராடிக்கொண்டிருந்த யெச்சூரியைத் தாக்க போலீஸாருக்கு இந்திரா உத்தரவிட்டதுடன், யெச்சூரியை மன்னிப்பு கேட்கவும்வைத்தார். மேலும், ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து யெச்சூரியை ராஜினாமா செய்யவும்வைத்தார்’ என்று பேட்ரியாட், தேசபக்த் ஃபேஸ்புக் பக்கங்ளில் செய்திகள் பரவின. மேலும், அதே பக்கங்களில் பரவிய செய்திகள், இந்திராவைவிட அமித் ஷா புனிதர் என்றும் வர்ணித்தன. பா.ஜ.க தொண்டர்கள் பலரும், அவற்றை தங்கள் பக்கங் களில் உற்சாகத்துடன் பகிர்ந்தனர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதித்துறை அதிகாரி மோகன்தாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் கூட, அந்தச் செய்தியைப் பகிர்ந்து ‘இது உண்மையா?’ எனக் கேட்டிருந்தனர். ‘இந்திரா காந்தி ஸ்டைலில், ஜே.என்.யு வளாகத்துக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களைத் துவைத்தெடுக்க வேண்டும்’ என்று பலரும் சமூக வலைதளங்களில் பொங்கினர்.
உண்மையில் என்ன நடந்தது? டெல்லியைச் சேர்ந்த மூத்த அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம்.
“1975-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி, இரு ஆண்டுகள் கழித்துதான் விலக்கிக் கொள்ளப்பட்டது. 1977-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி படுதோல்வி யடைந்தார். தேர்தலில் தோற்றுவிட் டபோதும் ஜே.என்.யு வேந்தராக இந்திரா காந்தியே தொடர்ந்தார். அந்தச் சமயத்தில் ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவராக இருந்த சீதாராம் யெச்சூரி தலைமை யில், ‘இந்திரா காந்தி வேந்தர் பதவியிலிருந்து விலக வேண்டும்’ என்று ஜே.என்.யு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழகத்திலிருந்து இந்திரா வீடு வரை ஊர்வலமாகச் சென்றனர். போராட்டம் வலுத்ததால் வீட்டைவிட்டு வெளியே வந்த இந்திரா, மாணவர்களிடம் சமாதானம் பேசினார். அப்போது, சீதாராம் யெச்சூரி எழுதிச் சென்றிருந்த கோரிக்கைகளை வாசித்தார். அந்தச் சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைத்தான் சிலர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக மார்க்சிஸ்ட் கட்சித் தரப்பில் விசாரித்தபோது, ``ஜே.என்.யு பல்கலைக் கழகத்தில் 1977-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில் சீதாராம் யெச்சூரி தலைவராக வெற்றிபெற்றார். தொடர்ந்து செப்டம்பர் 5-ம் தேதி மாணவர்களைத் திரட்டிக் கொண்டு `இந்திரா காந்தி, பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து விலக வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் குதித்தார். கோரிக்கையை ஏற்று பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து இந்திரா காந்தி அடுத்த நாளே விலகினார். அதற்குப் பிறகு, ஜே.என்.யு பல்கலைக் கழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப் படக் கூடாது என்று சட்டத்திருத்தம் கொண்டுவரப் பட்டது’’ என்ற தகவல் கிடைத்தது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சீதாராம் யெச்சூரி, “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஜே.என்.யு-வுக்குள் நுழையவுமில்லை; என்னை அடிக்க உத்தரவிடவுமில்லை; ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தவுமில்லை. உண்மையில், நான்தான் அவரை பல்கலைக்கழக வேந்தர் பதவி யிலிருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தினேன். வரலாற்றைத் திரித்துச் சொல்வது பா.ஜ.க-வினருக்கு கைவந்த கலை” என்றார்.