Published:Updated:

விண்ணை முட்டும் கேஸ் விலை, கவரும் நவீன விறகு அடுப்பு; வடிவமைத்து அசத்தும் நாமக்கல் விவசாயி!

நவீன விறகு அடுப்பு
News
நவீன விறகு அடுப்பு

``ஒரு மாசத்துக்கு சிலிண்டர் வாங்க ரூ. 1,200 செலவானா, இந்த அடுப்பை எரிக்க ரூ. 300 க்கு விறகு வாங்கினா போதும். இதில் முழு விறகா வைக்கக்கூடாது. அரை அடி துண்டுகளா வெட்டி, அடுப்புக்குள்ள வைக்கணும். ரெகுலேட்டர் மூலம் தேவையான அளவு வெப்பத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியும்.’’

Published:Updated:

விண்ணை முட்டும் கேஸ் விலை, கவரும் நவீன விறகு அடுப்பு; வடிவமைத்து அசத்தும் நாமக்கல் விவசாயி!

``ஒரு மாசத்துக்கு சிலிண்டர் வாங்க ரூ. 1,200 செலவானா, இந்த அடுப்பை எரிக்க ரூ. 300 க்கு விறகு வாங்கினா போதும். இதில் முழு விறகா வைக்கக்கூடாது. அரை அடி துண்டுகளா வெட்டி, அடுப்புக்குள்ள வைக்கணும். ரெகுலேட்டர் மூலம் தேவையான அளவு வெப்பத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியும்.’’

நவீன விறகு அடுப்பு
News
நவீன விறகு அடுப்பு

காலம்காலமாக சமையல் செய்ய விறகு அடுப்புகளை பயன்படுத்தி வந்தாலும், கடந்த பத்து வருடங்களாக எல்லோரும் கேஸ் அடுப்புக்கு பழகிவிட்டோம். கேஸ் விலை ஏறியதால் இப்போது பலரும் தவிக்க, அவர்களுக்குக் கைகொடுக்கும் விதமாக கேஸ் அடுப்பைவிட விரைவாக அனலை தந்து உணவை வேகமாக வேகவைக்க, நவீன விறகு அடுப்பை வடிவமைத்து அசத்தியிருக்கிறார், நாமக்கல்லைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.

நவீன விறகு அடுப்பு
நவீன விறகு அடுப்பு

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த முள்ளுக்குறிச்சி பகுதியில் உள்ள கடைக்கோடி கிராமமான தும்பல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வம்தான் அந்த விவசாயி. குறைவான விறகு, புகை வராத தன்மை, கேஸ் அடுப்பைவிட விரைவாக சமையல் செய்யக்கூடிய வசதி என்று இந்த அடுப்பு, சுற்றியுள்ள நளபாகர்களின் மனம் கவர்ந்திருக்கிறது. பட்டறையில் வைத்து புதிய அடுப்பு ஒன்றை உருவாக்கிக்கொண்டிருந்த செல்வத்தைச் சந்தித்தோம்.

``பூர்விகம் இந்த கிராமம்தான். எங்களுக்கு சொந்தமா மூணு ஏக்கர் நிலமும், கால்நடைகளும் இருக்கு. அடிப்படையில நான் விவசாயி என்றாலும், எங்கப்பா விவசாயத்தை பார்த்து வந்ததால், நான் 20 வருஷமா போர்வெல் போடுற வண்டியோட டிரைவரா இருந்தேன். அப்போ, தொழில் நிமித்தமா வெல்டிங் அடிக்கிற வேலையையும் கத்துக்கிட்டேன். டிரைவிங் வேலையில போதுமான வருமானம் இல்லை. இன்னொரு பக்கம் சொந்த நிலத்துல விவசாயம் பார்த்துக்கிட்டு இருந்த எங்கப்பா திடீர்னு மறைஞ்சுட்டார். அதனால, விவசாயத்தைப் பார்க்க ஆரம்பிச்சேன். ஆனா அதுலயும் நஷ்டம் வந்துச்சு.

நவீன விறகு அடுப்பை உருவாக்கும் செல்வம்
நவீன விறகு அடுப்பை உருவாக்கும் செல்வம்

எளிமையான கருவி! 

மெக்கானிக் பணி, கட்டட வேலைனு பல வேலைகளுக்குப் போனேன். ஒரு கட்டத்தில் உடல்நிலை சரியில்லாததால, மறுபடியும் விவசாயத்தை பாக்க ஆரம்பிச்சேன். இந்நிலையில, வெல்டிங் அடிக்கிற பயிற்சி ஏற்கெனவே இருந்ததால, காலால எளிமையா தேங்காய் உரிக்கும் கருவியைக் கண்டுபிடிச்சேன். அது விவசாயிகள்கிட்ட நல்லா ரீச் ஆச்சு. அதனால, இப்படி எளிமையான கருவிகளை கண்டுப்பிடிப்போம்னு நினைச்சேன். அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்பதான், கேஸ் விலை உயர்வு உள்ளிட்ட விசயங்களால மக்கள் அல்லாடுவதை உணர்ந்தேன். அதே நேரம், அவங்களால பழையபடி விறகு அடுப்புக்கும் திரும்பமுடியலை.

அடுப்பின் வடிவமைப்பு! 

விறகு நிறைய வேணும், அதுக்கு வழியில்லாமல் தவிக்கும் சூழல். இதனால, கொல்லம் பட்டறையில இரும்பை அடிக்க பயன்படுத்தும் அடுப்புமுறையை அடிப்படையாகக் கொண்டு, நவீன விறகு அடுப்பை வடிவமைக்கும் யோசனை வந்தது. உடனே அதற்கான முயற்சியில இறங்கினேன். என்னிடம் இருந்த, வயலுக்கு மருந்து அடிக்கப் பயன்படுத்தும் கருவியில இருந்த 12 வோல்ட் பேட்டரியை கொண்டு, அதில் வேகக்கட்டுப்பாடு கருவியைப் பொருத்தி, கூலரில் இருக்கும் சிறிய மின்விசிறி மூலம் காற்றை செலுத்தி, குறைந்த அளவு விறகுகளை வைத்து அதிவேகமா நெருப்பு வரக்கூடிய வகையில அடுப்பை வடிவமைத்தேன்.

நவீன விறகு அடுப்பு
நவீன விறகு அடுப்பு

அதிக புகை இல்லை, நகர்ப்புறங்களிலும் பயன்படுத்தலாம்! 

இந்த பேட்டரி மூலமாக இயங்கக்கூடிய விறகு அடுப்பு, எரிவாயு சிலிண்டர் மூலம் எரியும் அடைப்பை விட வேகமா சமையல் செய்ய ஏதுவா இருக்கும். அதேபோல, இந்த அடுப்பு சமையல் எரிவாயு பயன்படுத்தி சமைக்கும் நேரத்தை விட மிக விரைவாவும், துரிதமாவும் சமையல் செய்ய உதவும். தவிர, இந்த அடுப்பை பொறுத்தவரை கிராமங்களுக்கும் மட்டும் இல்லாம, நகர் பகுதிகளிலும் பயன்படுத்தும் வகையில அதிக புகை வராமல் பயன்படுத்துவதற்கு ஏதுவா வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடவே, இந்த நவீன விறகு அடுப்பை பயன்படுத்துவதால புகை வராதது மட்டுமன்றி, பாத்திரங்கள் கரிப்பிடிக்காமலும் இருக்கும்.

300 ரூபாய்க்கு விறகு வாங்கினா போதும்! 

ஒரு மாசத்துக்கு சிலிண்டர் வாங்க ரூ. 1,200 செலவானா, இந்த அடுப்பை எரிக்க ரூ. 300 க்கு விறகு வாங்கினா போதுமானது. இதை பயன்படுத்துவதால ரூ. 900 மிச்சப்படுத்த முடியும். இந்த அடுப்பில் முழு விறகா வைக்கக்கூடாது. அரை அடி துண்டுகளா வெட்டி, அடுப்புக்குள்ள வைக்கணும். ரெகுலேட்டர் அமைப்பு மூலம், தேவையான அளவில் வெப்பம், தனலை கூட்டவோ, குறைக்கவோ முடியும்.

நவீன விறகு அடுப்பை உருவாக்கும் செல்வம்
நவீன விறகு அடுப்பை உருவாக்கும் செல்வம்

விலை ரூ. 4,600! 

சாதாரண விறகு அடுப்புகள்ல ஒருமுறை சமைக்கப் பயன்படுத்தும் விறகுகளைக் கொண்டு, இந்த அடுப்பில் ரெண்டு அல்லது மூன்று முறை சமைக்க முடியும். கடந்த ஐந்து மாதமா இந்த அடுப்பை விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். கிராமப் பெண்களிடம் இந்த அடுப்பு நல்ல வரவேற்பை பெற்றதால, அவங்க மூலமா நிறைய கஸ்டமர்கள் வர ஆரம்பிச்சாங்க. இப்போ, மாசம் 20 அடுப்புகள் வரை விற்பனை ஆகுது. இந்த அடுப்பு 22 கிலோ எடை கொண்டது. அதனால, இதில் பயன்படுத்தும் பொருள்கள், செய்கூலினு இதை உருவாக்க ரூ. 4,600 செலவாகுது. அந்த அடக்க விலைக்கே விற்பனை செய்றேன்.

இதை பயன்படுத்தும் பெண்கள் பலர், `இந்த புதுமையான நவீன விறகு அடுப்பை எங்களுக்குக் கொடுத்து, எங்க கஷ்டத்தைப் போக்கியதோடு, பணத்தையும் மிச்சப்படுத்திக் கொடுத்திருக்கீங்க. விறகு அடுப்புல சமைக்கிற மாதிரியான சிரமமும் இல்லை, கேஸ் அடுப்பை பயன்படுத்துற மாதிரியான பொருளாதாரப் பிரச்னையும் இல்லை'னு பாராட்டுவாங்க. அப்போ, எனக்கு ஏதோ சாதிச்ச மாதிரி இருக்கும். மக்களுக்கு பயன்படுற மாதிரி இன்னும் எளிமையான கருவிகளை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறேன்" என்றார்.

வாழ்த்துகள்!