தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

புத்துயிர்ப்பு: இருளும் ஒளியும்

புத்துயிர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
புத்துயிர்ப்பு

ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல், ஆலிஸ் ரைட் மற்றும் பலர்

`நான் இதைத்தான் செய்வேன், இப்படித்தான் செய்வேன் என்றோ, இதையெல்லாம் செய்ய மாட்டேன், அதையெல்லாம் செய்ய முடியாது என்றோ ஒரு செவிலியர் ஒருபோதும் தன் வாழ்நாளில் சொல்லக்கூடாது' என்கிறார் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்.

`சூழல் என்னவெல்லாம் உன்னிடம் எதிர்பார்க்கிறதோ, அதையெல்லாம் நீ செய்ய வேண்டும். மாட்டேன் என்று தயங்குவாயானால், மன்னிக்கவும் இந்தப் பணிக்கு நீ ஏற்றவள் கிடையாது' என்கிறார் நைட்டிங்கேல்.

அவர் இப்படிக் கறாராகச் சொல்வதற்கு தகுந்த வரலாற்று காரணம் இருந்தது. நைட்டிங்கேல் வாழ்ந்த அதே லண்டனில் 200 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளை நோய் மூர்க்கத்தோடு பரவி 75,000 பேரைக் கொன்றொழித்திருந்தது. குடும்பம் குடும்பமாக, வீதி வீதியாக, கிராமம் கிராமமாக மக்கள் மடிந்துகொண்டிருந்தனர். ஆட்சியிலிருந்த இரண்டாம் சார்லஸ் பீதியடைந்து இடத்தைக் காலி செய்து பத்திரமான ஓரிடத்தில் ஒளிந்துகொண்டார். வழிநடத்த அரசு இல்லை. அதிகாரிகள் இல்லை. எல்லோருக்கும் உயிர் பயம். இந்த நிலையில், மக்களைக் காக்கவேண்டிய அவசியத்துக்குத் திருச்சபை தள்ளப்பட்டது. அப்போதைய இங்கிலாந்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு சிறிய தேவாலயம் இருக்கும். அங்கே ஒரு பாதிரியார் இருப்பார். வட்டார மக்களுக்குத் தேவாலயமே எல்லாம். பிறப்பு, இறப்பு, திருமணம், பஞ்சாயத்து என்று என்னவாக இருந்தாலும் தேவாலயத்தைத்தான் நாடுவார்கள். கொள்ளை நோய் தாக்கியபோதும் அவர்கள் அதைத்தான் செய்தார்கள்.

ஆனால், பாதிரிகளால் என்ன செய்ய முடியும்... `கவனமாக இருங்கள், வெளியில் வராதீர்கள், தொற்று பரவாமல் இருக்க உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்' என்று அறிவுரை வழங்குவதைக் கடந்து வேறு என்ன செய்வதென்று அவர்களுக்கு விளங்கவில்லை. இருள் விலக மறுத்தது. நோயுற்றவர்களின் அருகில் செல்ல அவர்கள் குடும்பத்தினரே மறுத்தனர். சடலங்கள் பெருகிக்கொண்டே போயின. உடல்களை அப்புறப்படுத்தவும் ஆளில்லை. இது எங்கே போய் முடியும்? நீண்ட ஆலோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் அருகிலிருந்து கவனித்துக்கொள்ள இரு செவிலியர்களை நியமிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், யார் வருவார்கள்... அதற்கொரு வழி இருந்தது. ஒவ்வொரு வட்டாரத்திலும் கணவனை இழந்த, கைவிடப்பட்ட, வயதான பெண்கள் பலர் தேவாலயத்திடமிருந்து கருணைத்தொகை பெற்று வாழ்ந்து வந்தனர். அவர்கள் அனைவருக்கும் தகவல் சென்று சேர்ந்தது. `இன்று முதல் நீங்கள் செவிலியர்களாக நியமிக்கப்படுகிறீர்கள். உடனடியாக அலுவலகத்துக்குக் கிளம்பி வாருங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும், எங்கே பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம். மற்றபடி, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக!'

தேவை என்னவோ உதவி. ஆனால், அந்த உதவி உத்தரவுமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது. `மன்னிக்கவும்... இந்தப் பணியை என்னால் ஏற்க முடியாது' என்று மறுப்பதற்கான அதிகாரம் அந்தப் பெண்களுக்கு இல்லை. `ஐயோ, எனக்கும் தொற்று ஏற்பட்டுவிட்டால் என்னாகும்...' என்று அஞ்சுவதற்கும் உரிமை இல்லை. `எப்படியும் நீ வயதானவர்தானே... எப்படியும் உனக்கென்று குடும்பமோ வாழ்க்கையோ இல்லையல்லவா... பிறகென்ன தயக்கம்?'

புத்துயிர்ப்பு
புத்துயிர்ப்பு

கைவிடப்பட்ட பெண்கள் போக, சிறையில் இருந்த பெண்களும் (அப்போதும் பெண்கள்தாம்!) செவிலியர்களாக மாறினர். தூக்குக்கயிற்றுக்குக் காத்திருந்த ஒரு பெண்ணின் தண்டனையை நிறுத்திவிட்டு நோயுள்ள ஒருவரைக் கவனித்துக்கொள் என்று சொல்லி அனுப்பியபோது, இது வரமா, சாபமா என்று தெரியாமல் அவர் நிச்சயம் விழித்திருப்பார்!

ஒரு நோயாளிக்கு இரண்டு செவிலியர்கள் என்பது கணக்கு. முகவரி கொடுத்து அனுப்பி விடுவார்கள். 24 மணி நேரமும் அந்த இருவரும் அங்கேயே இருக்க வேண்டும். சமைப்பது, உணவு அளிப்பது, உடல் உபாதைகளோடு இருப்பவர்களை ஆற்றுப்படுத்துவது என்று அனைத்தையும் செய்தாக வேண்டும். இருமல், சளி, கட்டி, ரத்தம் எதைக் கண்டும் முகஞ்சுளிக்கக் கூடாது. குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை நோயாளிகள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். தொட்டு, தூக்கி, சுமந்து, சுத்தப்படுத்த வேண்டும். உங்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படலாம். உங்கள் உடலிலும் கட்டி தோன்றலாம். உங்களுக்கும் வலிக்கலாம். நீங்களும் இறக்கலாம். ஆனால், இறக்கும்வரை உங்கள் கடமைகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.

இப்படி உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய செவிலியர்களை லண்டன் மக்கள் எப்படிப் பார்த்தனர்... வீதியோரம் ஒரு செவிலியர் வருகிறார் என்பது தெரிந்தவுடன் பட்டென்று கதவை அறைந்து சாத்திக்கொள்வார்கள். நோயாளிகளின் வீடுகள் தவிர, வேறு எங்கும் ஒரு குவளை தண்ணீர்கூட அவர்களுக்குக் கிடைக்காது. தெரியாத்தனமாக யாரேனும் ஒரு செவிலியர் வழியில் குறுக்கிட்டுவிட்டாலும் கண்டபடிக்கு ஏசுவார்கள். அவமதிப்போடு முடியாது. நீ பணிவிடை பார்த்தவர்கள் எல்லோரும் ஏன் இறக்க வேண்டும் என்று சந்தேகப்படுவார்கள். நீ வந்த பிறகு என் வீடே சுடுகாடாக மாறிவிட்டது என்று தாக்குவார்கள். கொள்ளை நோயைப் பரப்புவதே செவிலியர்கள்தாம்; அவர்களை ஊரைவிட்டு விரட்டியடியுங்கள் என்றுகூட அறைகூவல் விடுக்கப்பட்டது.

ஒவ்வொரு முறை இருள் கவியும்போதும் நட்சத்திரங்கள் நம் காதுகளில் கிசுகிசுக்கின்றன. கலங்காதே, விடியலொன்று உனக்காக வந்துகொண்டிருக்கிறது!

கொள்ளை நோயால் இறந்துபோனவர்களை என்ன செய்வது? அதற்கும் பெண்களைத்தான் வரவழைக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு வீட்டுக்கும் இருவர் நேரில் சென்று, உடலைப் பரிசோதித்து, எந்தக் காரணத்துக்காக அவர் இறந்துபோயிருக்கிறார் என்பதைத் தேடி ஆராய்ந்து பதிவு செய்ய வேண்டும். இவர்கள் ‘தேடும் பெண்கள்’ என்று அழைக்கப்பட்டனர். செவிலியர்களைப் போலவே இவர்களுக்கும் கடினமான, சவாலான பணிகள் காத்துக் கிடந்தன. இறப்பு குறித்த விவரங்களை அளிப்பதோடு நில்லாமல், சடலத்தைக் குளிப்பாட்டுவது, முடித்திருத்தம் செய்வது, சவரம் செய்வது என்று அனைத்தையும் செய்து முடித்து, புதைப்பதற்கு உடலை ஒப்படைக்க வேண்டியதும் இவர்கள் பொறுப்பு.

ஒரு சடலத்துக்கு இவ்வளவு என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு இந்தப் பெண்கள் பதிவு செய்த கொள்ளை நோய் மரணங்களின் எண்ணிக்கை, 1665-ம் ஆண்டில் மட்டும் 68,596 என்கிறது ஒரு குறிப்பு.

செவிலியர்களைப் போலல்லாது வெளி யிலிருந்தும் இவர்கள் வரவழைக்கப்பட்டனர். நோயாளிகளோடு புழங்குபவர்களையே வெறுத்தொதுக்கிய லண்டன் மக்கள் சடலங் களோடு புழங்குபவர்களை விட்டுவிடுவார்களா என்ன... கடுமையாக வசைபாடினார்கள். வெறுத்தொதுக்கினார்கள்.

இதனாலெல்லாம் செவிலியர்கள் (தேடல் பெண்களும்தாம்) தங்கள் பணிகளை நிறுத்திக் கொள்ளவில்லை என்பதோடு, அவர்களுடைய அணுகுமுறையில் ஆச்சர்யமூட்டும் மாற்றமொன்று தென்பட ஆரம்பித்தது. கட்டாயத்தின்பேரில் வீடு வீடாக ஏறி, இறங்கிக்கொண்டிருந்தவர்கள் இப்போது தங்கள் அனுபவங்கள் வாயிலாக நிறையக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தனர். தொற்று நோய் என்றால் என்ன? அது எவ்வாறு ஓர் உடலிலிருந்து இன்னொன்றுக்குப் பரவுகிறது? இந்நோய் ஒருவரை எப்படியெல்லாம் அல்லலுற வைக்கிறது? நோயுற்ற ஒருவரை எப்படித் தனிமைப்படுத்துவது? அவருக்கு எந்த மாதிரியான உணவை அளிப்பது? நோயுற்ற உடல், சடலம் இரண்டிலிருந்தும் அவர்களுக்குப் புதிய பாடங்கள் கிடைத்துக்கொண்டே இருந்தன. இந்தப் பாடங்களை அவர்கள் தங்களுக்குள் தொகுத்துக்கொண்டே வரத் தொடங்கினர்.

கணிசமான செவிலியர்கள் மதிப்புமிக்க ஆலோசகர்களாக உயர்ந்ததோடு சாவின் விளிம்பிலிருந்து பலரை மீட்டெடுக்கவும் ஆரம்பித்தனர். அவர்களைப் பற்றிய சமூகத்தின் பார்வை மெள்ள மெள்ள மாற ஆரம்பித்தது. ‘கொள்ளை நோயை எதிர்கொண்ட சில நல்ல செவிலியர்கள் எங்கள் குடும்பத்துக்குத் தேவைப்படுகிறார்கள். தயவுசெய்து உடனடியாக அனுப்பி வைக்க முடியுமா?’ என்று கனவான்களும் சீமாட்டிகளும் கடிதம் எழுதி தங்கள் முறை வரும்வரை காத்திருக்க ஆரம்பித்தனர். நானே வரவேண்டுமென்றால் கட்டணம் கூடுதலாக இருக்கும், பரவாயில்லையா என்று மூத்த செவிலியர்கள் ஒயிலாகப் பதிலளிப்பதையும் காண முடிந்தது.

ஒருமுறை பெரிய பணக்கார வீடொன்றில் பணிபுரிய இரு செவிலியர்கள் சென்றிருக் கிறார்கள். இருவரும் நோயாளிகளைக் கவனித்துக்கொண்ட விதம், அருவருப்போ அச்சமோ இன்றி வெளிப்படுத்திய அன்பு ஆகியவை குடும்பத்தை வெகுவாக ஈர்த் திருக்கின்றன. இந்த நிலையில் இருவரில் ஒரு செவிலியருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுவிட்டது. அவரும் கிளம்பத் தயாராகிவிட்டார். ஆனால், குடும்பத்தினர் அவரை விடவில்லையாம். வீட்டிலேயே வைத்துக்கொண்டு தங்களுள் ஒருவராக அவரைக் கருதி, அதே அன்போடு பராமரித்து, அவர் நலம்பெற்று எழுந்ததை உறுதி செய்த பின்னரே வெளியேற அனுமதித்திருக்கிறார்கள்.

கொள்ளை நோய் மறைந்துசென்ற பிறகும் செவிலியர்களுக்கு நாலாபுறத்திலிருந்தும் அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. ஒவ்வோர் அழைப்பும் ஒரு புதிய அனுபவத்தை அவர்களுக்கு அளித்தது. கொள்ளை நோயில் தொடங்கியவர்கள் மேலும் பல நோய்களின் இயல்புகளை அறிந்துகொள்ள ஆரம்பித்தனர். குழந்தைகளுக்கு எப்போது எந்த மாதிரியான உபாதைகள் வரும்? முதியோர்களுக்கு எத்தகைய சிக்கல்கள் வரும்? மகப்பேறு காலங்களில் எப்படிப்பட்ட உதவிகள் தேவைப்படும்? நஞ்சு உட்கொண்ட ஒருவரை எப்படி மீட்பது? பாம்புக்கடிக்கு என்ன மருந்து? எதுவாக இருந்தாலும் செவிலியர்களைக் கேளுங்கள். அவர்களுக்குத் தெரியாதது ஏதேனும் உண்டா... எந்த நோய்க்கு எந்த மூலிகை தர வேண்டும், எவ்வளவு தர வேண்டும், எப்போது தர வேண்டும்... செவிலியர்களின் விரல் நுனிகளில் தகவல்கள் கொட்டிக்கிடந்தன. அந்த விரல்நுனிகளைக் கண்களில் எடுத்து ஒற்றிக்கொண்டனர் பலர்.

அபூர்வமாக சில செவிலியர்களின் பெயர்கள் இன்று நமக்குக் கிடைக்கின்றன. ஆலிஸ் ரைட் என்றொருவர் கொள்ளை நோய் வந்தபோது லண்டனில் பலருக்குச் சிகிச்சை அளித்திருக்கிறார். இவரைப் பார்க்க ஒவ்வொரு நாளும் சிறு கூட்டம் திரண்டு வருமாம். ஒரு சிலரைத் தவிர மற்றவர்களின் பெயர்கள் நமக்குக் கிடைக்கவில்லை. இருளைக் கிழித்துக்கொண்டு நட்சத்திரங்கள் போல அவர்கள் லண்டன் வானில் மின்னி மறைந்திருக்கிறார்கள். அந்த நட்சத்திரங்களிடமிருந்து பெற்ற ஒளியைக் கொண்டுதான் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் தனது கைவிளக்கை ஏற்றியிருக்கிறார்.

ஒவ்வொரு முறை இருள் கவியும்போதும் நட்சத்திரங்கள் நம் காதுகளில் கிசுகிசுக்கின்றன. கலங்காதே, விடியலொன்று உனக்காக வந்துகொண்டிருக்கிறது!