போராட்டமான படிப்பு, பாடி ஷேமிங், பாசிட்டிவ் வாழ்க்கை... ஒரு மருத்துவரின் டைரிக் குறிப்பு!

‘அடுத்தவங்க உன்கிட்ட எப்படி நடந்துக்கிறாங்கன்னு கவலைப்படாதே... அவங்களை உன்னை கவனிக்க வைக்கணும்னா நீ படிப்புல கவனத் தைச் செலுத்து.
ஹேமமாலினி ரஜினிகாந்த்... இவரை பல் மருத்துவர், காஸ்மெட்டாலஜி நிபுணர் என எளிமையாகவும் அறிமுகம் செய்யலாம். மிஸஸ் தமிழ்நாடு, மிஸஸ் இந்தியா போட்டிகளின் முதல் ரன்னர் அப், பாடி ஷேமிங்கிலிருந்து மீண்டவர் என ஸ்பெஷலாகவும் அறிமுகம் செய்யலாம். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல காஸ்மெட்டிக் கிளினிக்கின் சிஇஓவான ஹேமமாலினியின் இன்றைய அடையாளம், உயரத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கு மான உத்வேக உதாரணம்.
‘`தேனி மாவட்டத்துல போடிநாயக்கனூர்ல பிறந்து வளர்ந்தேன். அம்மா ப்ளஸ் ஒன்னும், அப்பா எட்டாவதும்தான் படிச்சிருக்காங்க. ஏழ்மையான குடும்பம். டாக்டராகணும்ங்கிறது என் சின்ன வயசு கனவு. ஆனா அதுக்கு வசதியில்லாத குடும்பச் சூழல். ஆனாலும் பேருக்கு ஒரு டிகிரி படிக்கவெச்சு, உடனே கல்யாணம் பண்ணிவெச்சிடணும்னு நினைக் கிற குடும்பங்களுக்கு மத்தியில என் அப்பா என் கனவுக்குத் துணை நின்னார். தனக்கு கிடைக்காத படிப்பு, தன் பிள்ளைங்களுக்கு கிடைக்கணும்னு உறுதியா இருந்தார்.
ப்ளஸ் டூ வரைக்கும் அரசுப் பள்ளியில, தமிழ் மீடியத்துல படிச்ச நான், காலேஜ்ல சேர சென்னைக்கு வந்தேன். சென்னையில மீனாட்சியம்மாள் டென்டல் காலேஜ்ல பல் மருத்துவப் படிப்புல சேர்ந்தேன். மார்பை மறைக்கிற மாதிரி புத்தகங்களைப் பிடிச்சுக் கிட்டு, கூன் போட்டு குனிஞ்ச தலை நிமிராம நடந்து பழகியிருந்த எனக்கு சென்னை வாழ்க்கை மிரட்சியைக் கொடுத்துச்சு. இங்கிலீஷ் பேசத் தெரியாது... சரியா டிரஸ் பண்ணத் தெரியாது... மாநிறமான என் ஸ்கின் கலர் பெரிய பிரச்னையா இருந்தது. எல்லாரும் என்னை ஒதுக்கறாங்களோன்ற உணர்வு அதிகமாச்சு. என்னை நானே தனிமைப்படுத்திக் கிட்டேன். இதனாலயே நான் கடுமையான ஸ்ட்ரெஸ்ஸுக்குள்ள போயிட்டேன். இதெல் லாம் சேர்ந்து எனக்கு ‘ஹைப்பர் வென்டி லேஷன்’னு ஒரு பிரச்னையை ஏற்படுத்துச்சு. அதாவது பதற்றம் அதிகமாகும்போது ஏற்படற மூச்சுத்திணறல் பிரச்னை அது. அந்தப் பிரச்னையை என்னால கட்டுப்படுத்த முடியலை. என் நடை, உடை, பாவனை, ஸ்கின் கலரோடு சேர்த்து அந்தப் பிரச்னையை யும் வெச்சு என்னைக் கிண்டல் பண்ணாங்க.
எப்போதும் நான் தனியா இருக்கிறதை கவனிச்ச ஒரு புரொஃபஸர்தான் ‘அடுத்தவங்க உன்கிட்ட எப்படி நடந்துக்கிறாங்கன்னு கவலைப்படாதே... அவங்களை உன்னை கவனிக்க வைக்கணும்னா நீ படிப்புல கவனத் தைச் செலுத்து. லைஃப்ல எல்லாரும் உன்கூட வரணும், உன்னைத் திரும்பிப் பார்க்கணும்னா, நீ ஏதாவது சாதிச்சுக் காட்டணும்’னு சொன் னார். அதையே எனக்கான தாரக மந்திரமா எடுத்துக்கிட்டு கடுமையா உழைக்க ஆரம்பிச் சேன். டாப் 10 ஸ்டூடன்ட்ஸ்ல ஒருத்தியா படிப்பை முடிச்சிட்டு வெளியே வந்தேன்...’’ டாக்டர் ஹேமமாலினியாக பட்டம் பெற்ற தருணம் பகிர்கையில் சிலிர்க்கிறது நமக்கு.
‘` `உனக்கு இன்னும் படிக்கணும்னு தோணினா படிம்மா....’ன்னு சொல்லி என்னை போஸ்ட் கிராஜுவேஷன்ல சேர்த்துவிட்டார் அப்பா. சந்தோஷமா படிச்சிட்டிருந்தபோது, ஒருநாள் ஒரு போன் வந்தது. ‘உங்கப்பா உன் படிப்புக்காக ஓவரா கடன் வாங்கறாரு. ஏற்கெனவே நிறைய பேர்கிட்ட நிறைய கடன் வாங்கிட்டாரு... இப்போ மறுபடி கேட்கறாரு... அவர் சக்திக்கு அது ரொம்ப அதிகம்... பார்த் துக்கோ’ன்னு சொல்லிட்டு போனை வெச்சிட் டாங்க. அந்தக் குரல் அன்னிக்கு முழுக்க என்னைத் தூங்கவிடலை. அப்பா எனக்காக பட்ட கஷ்டங்கள் போதும்னு முடிவு பண்ணி, பி.ஜி படிப்பை பாதியோடு நிறுத்தினேன். ஆனா அடுத்தென்னங்கிற கேள்வி துரத்துச்சு...’’ பாசத்துக்காக லட்சியத்தை ஒதுக்கிவைத்த வரின் வாழ்வில் அடுத்து நடந்த அனைத்துமே ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ ரகம்.
‘`என் கலரையும் தோற்றத்தையும் வெச்சு தானே என்னை பாடி ஷேமிங் பண்ணாங்க... அதே துறையில ஏன் சாதிச்சுக் காட்டக் கூடாதுனு தோணுச்சு. கிளினிகல் காஸ் மெட்டாலஜி கோர்ஸ் படிச்சேன். இந்தமுறை அப்பாகிட்ட பணம் கேட்க மனசு வரலை. என் ஃபிரெண்ட்ஸ்தான் பண உதவி பண் ணாங்க. ஒரு காஸ்மெட்டாலஜி கிளினிக்ல வேலை பார்த்துட்டே படிச்சிட்டிருந்தேன். வேலை பார்த்த இடத்துல நான் கத்துக்கணும்னு நினைச்ச விஷயங்களை சொல்லிக்கொடுக்க யாரும் தயாரா இல்லை. கத்துக்கொடுக்கறீங் களானு கேட்டதுக்காக என்னை வேலையை விட்டே அனுப்பிட்டாங்க. அதுக்கப்புறம் இன்னும் வெறித்தனமா அந்தத் துறை தொடர்பான விஷயங்களைத் தேடித்தேடி படிச்சேன். என்னை அப்டேட் பண்ணிக்கிட்டு இன்னொரு கிளினிக்குக்கு இன்டர்வியூவுக்கு போனேன். அங்கே என்னை இன்டர்வியூ பண்ணவர் பிளாஸ்டிக் சர்ஜன் டாக்டர் ரஜினிகாந்த். செலக்ட் ஆனேன். என் திறமை மேல என்னைவிட அவருக்கு நம்பிக்கை அதிகமா இருந்தது. அதனால கிளினிக்கையே என் பொறுப்புல விட்டார். என்னால இதை யெல்லாம் பண்ண முடியுமானு தயங்கின போது, ‘யூ ஆர் மோர் தேன் ஹூ யூ ஆர்’னு சொல்லி ஊக்கப்படுத்தினார்.
பியூட்டி இண்டஸ்ட்ரியில முக்கியமான பொறுப்புல இருக்குற நான், என்னை அழகா வெளிப்படுத்திக்கிட்டாதான் என்னைத் தேடி வரும் பேஷன்ட்ஸுக்கு என் சிகிச்சைகள் மேல நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்னு புரிஞ்சது. அதுக்காகவே என் பேச்சு, நடை, உடை, பாவனைகளை மாத்திக்கிட்டேன். எடையைக் குறைச்சேன். சரியான காஸ் மெடிக்ஸ் பயன்படுத்தவும், ஆரோக்கியமா சாப்பிடவும் பழகினேன். சைக்கிளிங், டிரெக் கிங்னு ஆக்டிவ்வா, ஃபிட்டா மாறினேன். என் தாழ்வு மனப்பான்மை மெள்ள மெள்ள மாற ஆரம்பிச்சது. எம்.எஸ்.எம்.இயில ஆந்த்ர ப்ரூனர்ஷிப் கோர்ஸ் படிச்சேன். நம்ம அரசு நடத்தற ஆந்த்ரப்ரூனர் டெவலப்மென்ட் புரொகிராம்ல கலந்துகிட்டேன். சுயதொழில் தொடங்கறதுக்கான ஏ டு இஸட் எல்லா தகவல்களையும் கத்துக்கிட்டு சொந்தமா என் காஸ்மெட்டிக் கிளினிக்கை ஆரம்பிச்சு நடத்திட்டிருக்கேன். நான் பாடி ஷேமிங்கை அனுபவிச்ச காலத்துல எனக்கு நிறைய செலவு பண்ணி என் அழகை மேம் படுத்திக்கவோ, க்ரூமிங் பண்ணிக்கவோ வசதி யில்லை. அதை மனசுல வெச்சுக்கிட்டுதான் எல்லாருக்கும் சாத்தியமாகிற பட்ஜெட்ல என் சிகிச்சைகளைக் கொடுத்துக்கிட்டிருக்கேன்...’’ நெடுங்கதை சொல்லும் ஹேமமாலினியின் கரியரை அழகாக்கிய ரஜினிகாந்த்தே, கணவராகவும் வாய்த்திருக்கிறார்.

‘`டாக்டரா, பிசினஸ்வுமனா சக்சஸ் பண்ணிட்டேன். லைஃப்ல நல்ல நிலைமைக்கு வந்துட்டேன். ஆனாலும் பாடி ஷேமிங்கை அனுபவிச்சபோது ஏற்பட்ட வலி இப்பவும் எனக்கு மறக்கலை. கிண்டல் பண்ணவங்க முன்னாடி வாழ்ந்துகாட்டணும்னு ஒரு வெறி இருந்துட்டே இருந்தது. அப்பதான் ‘மிஸஸ் தமிழ்நாடு’ போட்டிக்கான அறிவிப்பு வந்தது. அதுல கலந்துக்கிறதுனு முடிவெடுத்தேன். ஆனா அதுக்கு முன்னாடி என்னை முழு மையா தயார்படுத்திட்டுப் போக நினைச்சேன். மிஸ் யுனிவர்ஸ் ஹர்னாஸ் சந்துவுக்கு மென்ட்டாரா இருந்த அலேசியா ரவுட் மற்றும் அஞ்சலி ரவுட்கிட்ட மும்பையில பயிற்சி எடுத்துக்கிட்டேன். கூன் தோற்றத்து லேருந்து வெளியேவரப் போராடின எனக்கு மிஸஸ் தமிழ்நாடு இவென்ட்டுல ‘மிஸஸ் ராம்ப் வாக்’ டைட்டில் கிடைச்சது. முதல் `ரன்னர் அப்'பா வந்தேன். அடுத்து நான் கலந்துகிட்ட மிஸஸ் சௌத் இந்தியா போட்டி யில என்னால ஜெயிக்க முடியலை. அப்புறம் ‘மிஸஸ் இந்தியா’வுல கலந்துகிட்டு, முதல் `ரன்னர் அப்'பா வந்ததோடு, ‘மிஸஸ் இன்டெலி ஜென்ட்’ டைட்டிலும் ஜெயிச்சேன்...’’ எடுத்த சபதம் முடித்த மகிழ்ச்சியில் இருப்பவருக்கு இன்னுமொரு லட்சியம் மிச்சமிருக்கிறது.
‘`ஆன்காலஜி ஏஸ்தெடிக்ஸ்னு ஒரு துறையில இப்போ தீவிரமா இயங்கிட்டிருக்கேன். புற்று நோய்லேருந்து மீண்டவங்களுக்கு உதவறது தான் என் அடுத்த இலக்கு. ‘இந்தியா டர்ன்ஸ் பிங்க்’ அமைப்புல டாக்டரா இருக்கேன். புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிர சாரங்கள் பண்றேன். புற்றுநோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் ரேடியேஷனால முடி கொட்டும், உடல் இளைக்கும், ஸ்கின் வறண்டு போகும். அதையெல்லாம் என் சிகிச்சையில மீட்டுக்கொடுக்கிற முயற்சிகளைப் பண் றேன்....’’ உலக அழகியாக உள்ளம் கவர்கிறார் ஹேமமாலினி.
மீள்வோம்... மீட்போம்!