Published:Updated:

ரீல்ஸ் பட்டாளம்

 ஜோன்ஸ் வசந்த் - சங்கமித்ரா
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோன்ஸ் வசந்த் - சங்கமித்ரா

எங்களுடையது லவ் மேரேஜ். நாங்க கிறிஸ்டியன். மித்ரா இந்து. ரெண்டு பேர் வீட்டிலும் பேசி பெரியவங்க தாலி எடுத்துக் கொடுத்து உறுதிமொழி எடுத்துக்கிட்டு தமிழ் முறைப்படி எங்க திருமணம் நடந்துச்சு.

இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்ஸர்... இதுதான் இன்ஸ்டாவின் டிரெண்டிங் வார்த்தை! வெரைட்டியான வீடியோக்களைப் பதிவிட்டு தமக்கென பாலோயர்ஸைத் தக்கவைத்திருக்கும் இன்ஸ்டா செலிப்ரிட்டிகளின் செல்ஃப் இன்ட்ரோதான் இந்தப் பகுதி!

இன்ஸ்டாகிராம் இல்லாத காலம் எப்படி இருந்திருக்கும்... பாரதிராஜா படத்தில் வருகிற கிராமம் மாதிரி இருந்திருக்கும்! வெரைட்டியான நான்-சிங்க் ரீல்ஸ்கள் இல்லாமல், கான்செப்ட் வீடியோக்கள் இல்லாமல், 60 செகண்டுக்குள்ள ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள முடியாமல், ‘டேய் எப்புட்றா’ எனக் கேட்காமல்... பிடிக்காதவங்களை ஃபேக் ஐடி-யில் திட்ட முடியாமல், பிடிச்சவங்களைத் தேடி ஃபாலோ பண்ண முடியாமல்... நமக்குள்ள இருக்கிற பிரபுதேவாக்களையும், சித்ராக்களையும், இளையராஜாக்களையும் வெளிக்கொண்டு வர முடியாமல்... நினைச்சுக்கூடப் பார்க்க முடியலதானே?

`கத்தி' படத்துல விஜய்ண்ணா சொன்ன மாதிரி நாம எல்லாரும் இப்ப இன்ஸ்டா கிராமத்துலதான் வாழ்ந்துட்டு இருக்கோம். காலையில கண்ணு முழிச்சதும் நம்ம டிஸ்ப்ளே பார்க்கிறோமோ இல்லையோ, இன்ஸ்டா நோட்டிபிகேஷனைப் பார்த்துட்டுதான் அந்த நாளையே ஸ்டார்ட் பன்றோம். இன்ஸ்டா ரீல்ஸ் பார்த்து நாமளும் சிரிச்சிட்டு நம்ம ஃப்ரெண்ட்ஸுக்கும் ஷேர் பண்ணி அவங்களையும் சிரிக்க வைக்கிறதுல தனி ஆனந்தமே இருக்கு! அப்படி இன்ஸ்டா ரீல்ஸ் மூலமா ஃபேமஸானவங்களைத்தான் இப்ப பார்க்கப்போறோம்.

இவங்களோட கான்செப்ட் வீடியோக்கள் ஹிட் அடிக்குதோ இல்லையோ... இவங்க புளூப்பர் வீடியோக்கள் எல்லாமே செம வைரலாகும். ஃபாலோயர்களால் `கிரின்ச் கப்புள்' என அன்போடு அழைக்கப்படும் ஜோன்ஸ் வசந்த் - சங்கமித்ரா தம்பதியை டிஸ்டர்ப் செய்ய அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டினோம்.

ரீல்ஸ் பட்டாளம்

‘‘கிரின்ச் கப்புள்னு பேரு வந்ததுக்கு முக்கிய காரணமே இவன் தான்’’ என்றவாறு பேசத் தொடங்கினார் மித்ரா. ‘‘இவன் சில விஷயங்களில் கிரின்ச் பண்ணுவான்... எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டான். இவன் ரீல்ஸ்ல பேசுறதை வச்சு எங்களை அப்படிக் கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க’’ என்றதும், ‘`சரி, சரி, விடு!’' என்றவாறு ஜோன்ஸ் தொடர்ந்தார்.

‘‘நாங்க ரெண்டு பேருமே ஐ.டி-யில் ஒர்க் பன்றோம். வேலை முடிஞ்சு ஃப்ரீ டைம்ல மித்ரா மியூசிக்கலி பண்ணுவாங்க. ஆரம்பத்தில் அது எனக்குப் பிடிக்கவே இல்ல. `உனக்கு இருக்குற வேலையில இது தேவையா?'ன்னு தினமும் திட்டுவேன். அவங்க பன்றதைப் பார்த்து அது பிடிச்சுப் போய் ஒரே மாசத்துல நானும் அவங்ககூட சேர்ந்து வீடியோ பண்ண ஆரம்பிச்சிட்டேன். அதுக்கப்புறம்தான் இன்ஸ்டாகிராமிற்கு வந்தோம். வீடியோ, ஃபோட்டோஸ் எல்லாம் போட்டு ஒரு பத்தாயிரம் ஃபாலோயர்ஸ் தேத்தி வச்சிருந்தோம். அந்த சமயத்துலதான் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான Wall என்கிற ரியாலிட்டி ஷோவுல கலந்துக்கிற வாய்ப்பு கிடைச்சது. அதுக்கப்புறம்தான் பெரிய மாற்றமே எங்க வாழ்க்கையில நிகழ்ந்துச்சு’’ என்றதும், ‘‘நான் சொன்னேன்ல, இவன் இப்படித்தான் பில்டப் கொடுப்பான். அது என்ன கதைன்னு நானே சொல்றேன்’’ என மித்ரா பேச ஆரம்பித்தார்.

‘‘இவன் பயங்கரமா பிளான் பண்ணுவான்... ஆனா, எதுவும் நடக்காது. நான் ரொம்ப பிராக்டிக்கல் பர்சன். நமக்கு என்ன வருமோ அது வரும்னு பல தடவை எடுத்துச் சொல்லியிருக்கேன். ஆனாலும், இவன் கேட்டபாடில்லை. Wall புரோகிராமிலும் அதுதான் நடந்துச்சு. அவன் பயங்கரமா பிளான் பண்ணி கேம் விளையாடினான். ஆனா, அதுல நாங்க 100 ரூபாய்தான் ஜெயிச்சோம். அந்த செட்ல எல்லாரும் நாங்க அழுது ஃபீல் பண்ணுவோம்னு எதிர்பார்த்தாங்க. ஆனா நாங்க உடனேயே சிரிக்க ஆரம்பிச்சிட்டோம். பலரும் ‘நீங்க ரொம்ப பாசிட்டிவாக எடுத்துக்கிட்டீங்க, நல்லா விளையாடுனீங்க’ன்னு இன்ஸ்டாகிராமில் தேடிவந்து மெசேஜ் பண்ணினாங்க. அந்தப் புரோகிராமிற்குப் பிறகு ஃபாலோயர்ஸ் அதிகமானாங்க’’ மித்ரா சொல்ல, ஜோன்ஸ் குறுக்கிட்டார்.

‘‘விஜய் டி.வி ‘நீயா, நானா’வில் இப்ப வரைக்கும் என்ன கப்பிள் புரோகிராம்னாலும் எங்களுக்கு முதலில் அழைப்பு வந்திடும்! கோவிட் டைம்ல கணவன்-மனைவி பரிதாபங்கள்தான் ஷோவுடைய டாப்பிக். ரெண்டு பேரும் எங்கேயோ வெளியில கிளம்பினோம். நான் ரொம்ப லேட் ஆக்குனேன்னு போட்டோ எடுத்து, `ஹஸ்பண்ட் ஃபார் சேல்'னு இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டிருந்தா. அதை ஷோவுல சொன்னேன். கோபிநாத் அண்ணன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டாரு. அந்த க்ளிப் இப்பவரைக்கும் ரீ ஷேர் ஆகிட்டே இருக்கு. எங்க பார்த்தாலும் ‘நீங்கதானே அந்த ஹஸ்பண்ட் ஃபார் சேல்’னு கேட்பாங்க’’ன்னு சொல்லவும், ‘`முக்கியமான விஷயத்தை உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன்’' என சீரியஸ் மோடில் பேச ஆரம்பித்தார் மித்ரா.

இருவரிடமும், அவர்களின் லவ் ஸ்டோரியை ஷார்ட்டா சொல்லும்படி கேட்டோம். ‘‘எங்களுடையது லவ் மேரேஜ். நாங்க கிறிஸ்டியன். மித்ரா இந்து. ரெண்டு பேர் வீட்டிலும் பேசி பெரியவங்க தாலி எடுத்துக் கொடுத்து உறுதிமொழி எடுத்துக்கிட்டு தமிழ் முறைப்படி எங்க திருமணம் நடந்துச்சு. 10,000 ரூபாய் சம்பளத்தில்தான் எங்க லைஃப் ஸ்டார்ட் ஆச்சு. படிப்படியா உழைச்சு சம்பாதிச்சு எங்க சொந்த சம்பாத்தியத்தில் வீடு, கார் எல்லாம் வாங்கினோம். கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் வீட்ல சமைக்கக்கூட காசு இல்லாம ஆபீஸில் கொடுக்கிற மூணு வேளை சாப்பாட்டை மட்டுமே நம்பி இருந்த காலமெல்லாம் இருந்திருக்கு’’ என்றதும் மித்ரா இடைமறித்தார்.

‘‘Women Against Women எனச் சொல்லுவாங்க. இன்ஸ்டாகிராமில் ஜோன்ஸுடைய பாதுகாவலர்களாக பெண்கள்தான் இருப்பாங்க. ‘புருஷனை ஏன் இவ்வளவு கொடுமைப்படுத்துற? ஏன் இப்படி வேலை வாங்குற’ என பலர் கமென்ட்ஸ் போடுவாங்க. அப்படி கஷ்டப்பட்டுட்டு இன்னொருத்தரைத் தாங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியம் எனக்கும் இல்ல, ஜோன்ஸுக்கும் இல்லைன்னு நினைக்கிறேன். அந்த மாதிரியான கமென்ட் படிச்சாலே, `ஓகே பூமர் ஆன்ட்டி! போயிட்டு வாங்க'ன்னு கமென்ட்டை டெலிட் பண்ணிடுவேன். அதேசமயம் எங்களை அப்படியே ஏத்துக்கிட்டு எங்களுக்கு சப்போர்ட் பன்றவங்களுக்கு நன்றி’' என்றதும் ``நீங்க என் கூட செல்ஃபி எடுத்துக்கணுமா?' என ஜோன்ஸ் கேட்க... `யார்றா இவன்?' என மித்ரா தலையில் அடித்துக்கொண்டார்.

ரீல்ஸ் பட்டாளம்

அடிச்சுக் கேட்டாலும் எது பண்ண மாட்டீங்க?

‘‘நானும் ஜோன்ஸூம் பல ஊர்களுக்கு டிராவல் பண்ணியிருக்கோம். அந்த இடத்துக்குப் போனா அதை நாங்க எக்ஸ்ப்ளோர் பண்ண நினைப்போமே தவிர அங்க போய் Vlog பண்ணலாம்னு எங்களுக்குத் தோணாது. அதே மாதிரி, சாப்பிடுறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாப்பாட்டை ரசிச்சு, ருசிச்சு சாப்பிடாம அங்க போய் உட்கார்ந்துட்டு அது எப்படி இருக்குன்னு வீடியோ எடுக்கவெல்லாம் வராது. எங்களுக்கு இந்த Vlog, ஃபுட் ரிவ்யூவெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராதுங்க. அதற்கெல்லாம் நாங்க சரிப்பட்டு வரமாட்டோம். இன்ஸ்டா முழுக்கவும் பிசினஸ்தான்! அதுல எல்லாமே புரொமோட் ஆகுது. எங்களைப் பொறுத்தவரைக்கும் கோடி ரூபாய் கொடுத்தாலும் சில விஷயங்களைப் பண்ண மாட்டோம்.’’