சினிமா
Published:Updated:

எதிர்வீட்டில் தொடங்கியது; இன்ஸ்டாவில் தொடருது!

தீஷா, சதீஷ், தீபா, தாரா
பிரீமியம் ஸ்டோரி
News
தீஷா, சதீஷ், தீபா, தாரா

சதீஷ் சென்னைக்காரர். தீபாவுக்குக் கர்நாடகம். தாய்மொழி, துளு. இரண்டு பேரின் காதல், சுவாரஸ்ய எபிசோடு.

“முதல்ல இந்த மனுஷன் ஏன் இப்படி ஆயிட்டார்னு கடுப்பாத்தான் இருந்துச்சு. நின்னா வீடியோ, உக்காந்தா வீடியோ, ஆபீஸ்லகூட சாப்பிடுற கேப்ல வீடியோ... நான் சீரியஸா மீட்டிங் அட்டெண்ட் பண்ணிட்டி ருப்பேன்... என்னையும் ப்ரேமுக்குள்ள வச்சு வீடியோ எடுத்திருவார். மறுநாள் ஆபீஸ்ல எல்லாரும் கலாய்ப்பாங்க. கொஞ்சம் கொஞ்சமா என்னையும் உள்ளே கொண்டு வந்துட்டார்...” சிரிக்கும் தீபாவை முறைக்கிறார் சதீஷ்குமார்.
எதிர்வீட்டில் தொடங்கியது; இன்ஸ்டாவில் தொடருது!

“என்ன நினைச்சு ஆரம்பிச்சேன்னு தெரியலே ஜி... ஆனா, இன்னைக்கு பெரிய அங்கீகாரம் கிடைச்சிருக்கு. எங்கே போனாலும் ‘என்ன ப்ரோ... எப்படியிருக்கீங்க’ன்னு அடையாளம் கண்டு விசாரிக்கிறாங்க. இன்ஸ்டாவுல எங்க போஸ்ட்டுக்குக் கீழே கமெண்ட்களைப் படிச்சீங்கன்னா எப்படி ரீச் ஆயிருக்கோம்னு புரியும்” சீரியஸாகப் பேசுகிறார் சதீஷ்.

டிக் டாக் பிரியர்களுக்கு சதீஷ்-தீபாவைப்பற்றி பெரிய அறிமுகம் தேவையில்லை. டிக் டாக்கை மூடியபிறகு இன்ஸ்டாகிராமுக்குப் பெயர்ந்த தம்பதிக்கு லைக்ஸ் குவிகிறது. போகிற போக்கில், முறைப்பும் சிரிப்புமாக சின்னச் சின்ன ஸ்கிட்களால் சொக்க வைக்கிறார்கள். ‘உங்களைப் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணிக்கிற ஆசையே வந்துச்சு பிரதர்’ என்று கமெண்டில் உருகுகிறார்கள் இளைஞர்கள். பள்ளிக் காதல்... காலம் தாண்டிப் பயணித்துத் திருமணத்தில் முடிய, பரிசாக தீஷா, தாரா என்று இரண்டு குட்டி தேவதைகள். கவிதை மாதிரி வாழ்க்கை.

தீஷா, சதீஷ், தீபா, தாரா
தீஷா, சதீஷ், தீபா, தாரா

“சின்ன வயசுலேருந்தே சினிமா மேல பெரிய ஈர்ப்புங்க. தளபதியோட வெறித்தன ஃபேன் நான். ஆரம்பக்கால சினிமாவுல இருந்து நாளைக்கு ரிலீஸாகப்போற சினிமா வரைக்கும் எல்லாத் தகவல்களையும் சுண்டுவிரல்ல வச்சிருப்பேன். அம்மாவும் அப்படித்தான். ரெண்டு பேரும் உக்காந்து, ‘இந்தப் பாட்டு எந்தப் படம்’, ‘அந்தப் பாட்டு எந்தப் படம்’ன்னு பாடி விளையாடுவோம். காலம் வேற வேற திசைகள்ல நகர்த்திக்கிட்டுப் போயிருச்சு. அப்பா, அவரை மாதிரியே என்னையும் சிவில் இன்ஜினீயராக்க விரும்பினார். டிப்ளோமா படிச்சேன். ஆனா மனசுக்குள்ள ஒரு நடிகன் வளர்ந்துக்கிட்டே இருந்தான். டப்ஸ்மாஷ் வந்தபிறகு எல்லாருமே நடிகரானாங்களா... நானும் ஆகிட்டேன்” என்கிறார் சதீஷ்.

சதீஷ் சென்னைக்காரர். தீபாவுக்குக் கர்நாடகம். தாய்மொழி, துளு. இரண்டு பேரின் காதல், சுவாரஸ்ய எபிசோடு.

எதிர்வீட்டில் தொடங்கியது; இன்ஸ்டாவில் தொடருது!

“நான் அப்போ ஒன்பதாம் வகுப்பு படிச்சுக்கிட்டிருந்தேன். சதீஷ் பத்தாவது. ரெண்டு பேர் வீடும் எதிரெதிர்ல. இது ஒண்ணு போதாதா? ரெண்டு பேருக்கும் காமன் ஃப்ரெண்ட்ஸ். அப்போவே கிரஷ் இருந்துச்சு. ஒரு பையன் மூலமா தூதுவிட்டேன். சார், ‘எனக்கு அந்த ஐடியால்லாம் இல்லே’ன்னு ரொம்பவே பிகு பண்ணினார். சரி விட்டுப்பிடிப்போம்னு விட்டுட்டேன்” என்ற தீபாவை இடைமறிக்கிறார் சதீஷ்.

“நான் பத்தாவது முடிச்சுட்டு டிப்ளோமா சேர்ந்தேன். அந்த நேரத்துல ஒரு விபத்து. கால்ல அடிபட்டு ஆஸ்பத்திரியில படுத்திருந்தேன். என்னைப் பார்க்க வந்தா. அப்போ அழுத அழுகை என்னை விழ வச்சிடுச்சு. அதுக்கப்புறம் மகாபலிபுரம், புலிக்குகைன்னு காதல் வளர்ந்துச்சு. செமயான காலம் அது... சரியா கல்லூரி விடுற நேரத்துக்கு வாசல்ல போய் நிப்பேன். ஒரு போலீஸ்காரர் என்னைக் கவனிச்சுக்கிட்டே இருந்திருக்கார். ஒருநாள் புடிச்சுட்டார்... ‘ஏன் தினமும் இங்கேயே நிக்குறே’ன்னு கேட்டார். ‘அக்கா படிக்குது சார், கூப்பிட வருவேன்’னு சொன்னேன்... ‘உன்னையப் பாத்தா அக்காவைக் கூப்பிட வர்றவன் மாதிரி தெரியலே’ன்னு லத்தியை ஓங்கிட்டார். இப்படி அடி, உதைன்னு எல்லாத்தையும் தாண்டித்தான் காதல் வளர்ந்துச்சு...” சிரிக்கிறார்கள் இருவரும்.

“நாலைஞ்சு வருஷம் ஓடுச்சு. நான் படிப்பு முடிச்சதும் வேலை கிடைச்சிருச்சு. வீட்டுல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க. ‘இது அமெரிக்க மாப்பிள்ளை’, ‘இது ஜெர்மன் மாப்பிள்ளை’ன்னு அம்மா போட்டோக்களை காமிச்சுக்கிட்டே இருந்தாங்க. நான் இவரோட ஃபேஸ்புக் புரொபைல் போட்டோவை ஓபன் பண்ணி ‘இந்தப் பையனை லவ் பண்றேன்’னு ஒரே போடா போட்டுட்டேன். அம்மாவுக்கு அதிர்ச்சி. வீட்டுக்கு எதிர்ல இருந்துகிட்டே இந்த வேலை பாத்திருக்கானேன்னு...”

எதிர்வீட்டில் தொடங்கியது; இன்ஸ்டாவில் தொடருது!

சதீஷ் வெட்கப்படுவதுபோல நடிக்கிறார்.

“எங்க வீட்டு ஹால்ல உக்காந்திருப்பேன். தீபா பால்கனியில நிப்பா. இதை எங்க அண்ணன் கவனிச்சிட்டான். ‘என்னடா நடக்குது இங்கே’ன்னு கேட்டான். ‘நாங்க லவ் பண்றோம். யார்கிட்டயும் சொல்லிடாத’ன்னு சொன்னேன். அடுத்த நிமிஷம் அம்மாகிட்ட சொல்லிட்டான். எங்க சைடுல எந்தப் பிரச்னையும் இல்லை. அங்கே கொஞ்சம் தயக்கம். அவங்க சுத்த சைவம். ரொம்ப மரபு சார்ந்த குடும்பம். ஆனா, ரெண்டு குடும்பத்துக்கும் புரிதல் இருந்துச்சு. ஒருநாள் தீபா வீட்டுல எங்களைக் கூப்பிட்டாங்க. அவங்களைக் கவுக்கிறதுக்காகவே துளு கத்து வச்சிருந்தேன். பெரிசா கருத்து வேறுபாடுகள் இல்லாம சுமுகமா முடிஞ்சிருச்சு...’’ என்ற சதீஷ் தொடர்கிறார்.

“காதலிக்கிற காலம் வேற... கல்யாணத்துக்குப் பிறகு நிறைய பக்குவம் வேணும். ரெண்டு பேரோட பலவீனங்களும் திருமணத்துக்குப் பிறகுதான் பரஸ்பரம் தெரியத் தொடங்கும். நாங்க ஒருத்தருக்கொருத்தர் நம்பிக்கையா இருந்தோம். கல்யாணமாகும்போது எனக்கு வேலைகூட இல்லை. தீபா வேலைக்குப் போய்க்கிட்டிருந்தா. அவ கொடுத்த உற்சாகம், அடுத்தடுத்து எனக்கும் வேலைகள் அமைஞ்சது. ஒரு மாதிரி லைஃப்ல செட்டிலாகிட்டோம்” என்ற சதீஷின் கரம் பற்றிக்கொண்டு, “தீஷா வயித்துல இருந்தப்போ மூணாவது மாதம்... பிளீடிங் ஆகி ரொம்ப முடியாமப் போச்சு. அம்மா மாதிரி பக்கத்துல இருந்து கவனிச்சுக்கிட்டார் சதீஷ்... அந்தமாதிரி அக்கறை காட்டற நேரத்துலதான் காதல் வளரும். அதை யாரும் மிஸ் பண்ணக்கூடாது” என்கிறார் தீபா.

விளையாட்டாக டப்ஸ்மாஷில் தொடங்கியது, மியூசிக்கலியில் வளர்ந்து டிக் டாக்கில் நின்றது. அங்கு சதீஷ்-தீபா வீடியோக்களுக்கு செம ரெஸ்பான்ஸ். “நான்தான் நிறைய டேக் வாங்குவேன். கடுப்பாயிருவார்... ஒருமுறை போனெல்லாம் உடைஞ்சிருக்கு. வீடியோக்களை நான் ஸ்டேட்டஸ் வைக்கத் தொடங்கினபிறகுதான் எங்க குடும்பத்துக்கே தெரியும். ஆபீஸ்லயும் நிறைய பேர் பாராட்டுவாங்க. அடிக்கிறது, முறைக்கிறதுன்னு ஜாலியா பண்ணுவோம். ‘நீங்க கொடுத்து வச்சவங்க... அடிச்சுத் துவைக்கிறீங்க. எங்களால முடியலயே’ன்னு சில பேரு வருத்தப்படுவாங்க. அறந்தாங்கி நிஷா, அவங்க கணவர் பத்திப் பேசுற வீடியோவை வச்சு ஒரு டிக் டாக் பண்ணினோம். பாத்துட்டு ரொம்ப சந்தோஷமா பேசினாங்க. இப்போ குடும்ப நண்பராயிட்டாங்க. அதேமாதிரி அர்ஜுன், இந்திரஜா, பாத்திமா பாபு மேடமும் பேசியிருக்காங்க.”

குறுக்கிடும் சதீஷ், “டிக்டாக் தடை செய்யப்பட்டது இழப்புதான். ஆனா, தொழில்நுட்பம் மாறிக்கிட்டுத்தானே இருக்கும். இன்ஸ்டாவுல நாங்க எதிர்பார்த்ததைவிட பெரிய வரவேற்பு. லாக்டவுன்ல நிறைய வீடியோக்கள் செஞ்சோம். அக்கா, அண்ணான்னு எல்லாருமே உறவுமாதிரி ஆயிட்டாங்க. ரொம்ப நெகிழ்ச்சியா சிலபேர் கமெண்ட் பண்ணுவாங்க. ஜாலியான ஒரு விஷயம்னு இல்லாம, நிறைய பேருக்கு அன்பாவும் ஆறுதலாவும் உறவாவும் இருக்கோம்ங்கிறது பெரிய சந்தோஷம். அதில்லாம நிறைய நண்பர்களை இது சம்பாதிச்சுக் கொடுத்திருக்கு. சந்தோஷ்-அமிர்தா, மித்ரா-ஜோன்ஸ், செல்வா-அனு, அபிஷேக்-அம்ருதான்னு எங்களை மாதிரியே எந்தப் பிரச்னையும் இல்லாம ஃபேரா பண்றவங்க எல்லாம் நண்பர்களாகிட்டோம்” என்கிறார்.

“சாருக்கு சினிமாவுல நடிக்கணும்னு ரொம்ப ஆசை... போட்டாவைப் பார்த்து பொருத்தமான கேரக்டர் இருந்தா யாராவது கூப்பிடுங்கப்பா...” என்று கைகூப்பிச் சிரிக்கிறார் தீபா. திஷாவும் சாராவும் சேர்ந்து கைதட்டிச் சிரிக்க, அழகாகிறது அந்த வீடு!