அரசியல்
அலசல்
Published:Updated:

ஆச்சர்யமா இருக்கே அப்படியா! - ‘பவர்லிஃப்ட்’ ஸ்டார் ராஜா

ஈ.ராஜா
பிரீமியம் ஸ்டோரி
News
ஈ.ராஜா

எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தினமும் காலையில ஒரு மணி நேரம் வொர்க்அவுட்டுக்கு ஒதுக்கிடுவேன்

முப்பதாண்டுகளுக்கும் மேலாக அ.தி.மு.க-வின் கோட்டையாக இருந்த சங்கரன்கோவில் தொகுதியை, கடந்த சட்டசபைத் தேர்தலில் கைப்பற்றியது தி.மு.க. அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமியைத் தோற்கடித்து எம்.எல்.ஏ-வாக ஆனார் 36 வயதே ஆன ஈ.ராஜா. ஆனால், ஆச்சர்யம் இதுவல்ல... தமிழக எம்.எல்.ஏ-க்களில் விளையாட்டுத்துறையில் இவரே ராஜா என்பதுதான் ஆச்சர்யம்! இதற்காக முதல்வர் ஸ்டாலினின் பாராட்டையும் சமீபத்தில் பெற்றிருக்கிறார்.

தமிழ்நாடு வலுதூக்கும் கூட்டமைப்பின் சார்பில் அக்டோபர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் சென்னையில் நடந்த மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் முதலிடம் பிடித்திருக்கிறார் ராஜா. இதன் மூலம், கோவாவில் தேசிய அளவில் நடைபெறும் போட்டியிலும், நியூசிலாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான காமன்வெல்த் போட்டியிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பையும் இவர் பெற்றிருக்கிறார். பல்வேறு தரப்புகளிலிருந்தும் ராஜாவுக்குப் பாராட்டுகள் குவிந்தாலும், முதல்வர் அழைத்துப் பாராட்டியதில் ஏகத்துக்கும் உற்சாகமாக இருக்கிறார் மனிதர்.

“யூ.ஜி படிக்கிற காலத்துல நான் வெயிட் லிஃப்டிங்தான் பண்ணிட்டு இருந்தேன். ஆனால், என் உடம்புக்கு அது செட் ஆகாததால, பவர் லிஃப்டிங் மேல கவனத்தைத் திருப்பினேன். 2010-ல தென்னிந்திய அளவில் நடந்த போட்டியில் கலந்துக்கிட்டு ஜெயிச்சேன். அந்த காலகட்டத்துல கழகத்துல சேர்ந்ததால கட்சிப் பணிகளோட, நேரம் கிடைக்கும்போது பவர் லிஃப்டிங் பயிற்சிக்கும் போவேன். அதோட தமிழ்நாடு வலுதூக்கும் கூட்டமைப்பின் தென்காசி மாவட்டத் தலைவராகவும் இருக்கேன். இந்த நேரத்துலதான் மாநில அளவிலான போட்டியில கலந்துக்குற வாய்ப்பு கிடைச்சுது. சென்னை மேடவாக்கத்துல நடந்த போட்டியில 100 கிலோ, 110 கிலோ, 120 கிலோ ஆகிய பிரிவுகளில் மாநில அளவுல முதல் பரிசு வாங்கினேன்.

ஆச்சர்யமா இருக்கே அப்படியா! - ‘பவர்லிஃப்ட்’ ஸ்டார் ராஜா

எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தினமும் காலையில ஒரு மணி நேரம் வொர்க்அவுட்டுக்கு ஒதுக்கிடுவேன். சட்டமன்ற மானியக் கோரிக்கை கூட்டம் நடந்தப்பகூட, எம்.எல்.ஏ ஹாஸ்டல் ஜிம்முல தினமும் வொர்க்அவுட் பண்ணினேன். அங்கே இருந்த மாஸ்டர் யுவராஜ் ரொம்ப ஹெல்ப் பண்ணினாரு. அதைப் பார்த்து அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்லாம் நல்லா என்கரேஜ் பண்ணினாங்க. போட்டியில ஜெயிச்ச பின்னாடி எங்க மாவட்டச் செயலாளர் பாராட்டினாரு. விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், முதல்வர்கிட்ட இந்த விஷயத்தைக் கொண்டுபோய் சந்திப்புக்கு ஏற்பாடு செஞ்சாரு. முதல்வர் என்கிட்ட, ‘நம்ம எம்.எல்.ஏ ஒருத்தர் விளையாட்டுத்துறையிலயும் சாதிக்குறது பெருமையா இருக்கு. வெரிகுட்... நல்லா பிராக்டீஸ் பண்ணுங்க. நேஷனல் லெவல், இன்டர்நேஷனல் லெவல் போட்டிகள்லயும் ஜெயிச்சுட்டு வரணும்’னு வாழ்த்தினாரு. சின்ன வயசுல இருந்தே ஸ்போர்ட்ஸுல சாதிக்கணும்கிறது என்னோட ஆசை. அது சட்டமன்ற உறுப்பினரா இருக்கும்போது நிறைவேறினதுல டபுள் சந்தோஷமா இருக்கு!’’ என்கிறார் இந்த ‘பவர்லிஃப்ட்’ ஸ்டார்!