
சுமிதா ரமேஷ் (துபாயிலிருந்து)
ஆர்மீனியா... சுற்றிப்பார்க்கும்போது மிக அழகான நாடு... வரலாற்றைக் கேட்கும்போதோ கேட்பவரை அழவைக்கும் தேசம். சோவித் யூனியன் தூள்தூளானதில் உதித்தெழுந்த நாடு. துருக்கியும் அஸர்பெய்ஜானும் தம் எல்லைகளில் மிரட்ட இரான், ஜார்ஜியாவுடன் மட்டும் நட்புடன் ஹாய் சொல்லும் நாடு. ரஷ்யக் கலாசாரத்தையும் ஐரோப்பியக் கலாசாரத்தையும் சேர்த்துத் தாங்கியபடியே வரவேற்கும் பூமி.
`தி ரிபப்ளிக் ஆஃப் ஆர்மீனியா' எனப்படும் இப்போதைய ஆர்மீனியாவின் 20 சதவிகிதப் பகுதி மட்டுமே தங்களுடையது என்று வருத்தமுடன் சொல்கிறார்கள் ஆர்மீனியர்கள். அப்படியென்றால் மீதி?!
துபாயிலிருந்து நீலக்கடல் தாண்டி இரானின் வறண்ட மலைமுகடுகளைக் கடக்கும்போது கிழக்கு அஸர்பெஜான் அராரட் ஜில் மலைப்பிரதேசங்களின் வழி பயணிக்கிறோம். பனி போர்த்திய மலைகளை வெள்ளைப்பூனைகளாகப் பார்த்துக்கொள்ளும் மேகங்கள், கீழே பச்சை கம்பளம் விரிக்கப்பட்ட பகுதி.
விமானம் மெள்ள கீழ் இறங்க, பலவண்ண புல்வெளிக் கம்பளங்களாக விரிந்த தரைகள்; தலையில் இரும்பு ஷீட்டைக் கவிழ்த்துக்கொண்ட இருப்பிடங்கள்... பழைமையும் இயற்கையும் போட்டிப்போடும் நகரமாக, ஆர்மீனியாவின் தலைநகர் யெரவான் வரவேற்கிறது.

திரும்பிய பக்கமெல்லாம் மலைகள், சற்று உறுத்திப்பார்க்கும் வெயில், சிறிய ஏர்போர்ட், வளைகுடா நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு `ஆன் அரைவல் விசா'. ஒருவருக்கு ஐந்து டாலர் என சிறிய க்யூவில் நிற்க... அதற்கான பணம் செலுத்தும் இமிக்கேரஷனில் அமர்ந்துள்ள பெண்கள் நம் ஹீரோயின்களைவிட அழகாக ஈர்க்கின்றனர்.
`பாரே' (Baare) என்று விசா ஸ்டாம்பிங்கில் வரவேற்கிறார்கள், பாக்ஸ் போன்ற சீட்டில் அமர்ந்த இமிக்கிரேஷன் ஆபீஸர்கள். பாரே என்றால், ஆர்மீனிய மொழியில் `ஹலோ'வாம். நாமும் `பாரே' எனத் தலையசைக்கிறோம் தன்னிச்சையாக!
ஏர்போர்ட் டு ஹோட்டலில் வழிநெடுகிலும் மக்களின் எளிய வாழ்க்கை, வீடுகளில் தெரியும் ஆன்டெனாக்கள் லோக்கல் சேனலின் வலிமையை ஒளிபரப்புகின்றன. அந்த சேனல்கள் நம்மை, அதாங்க இந்தியர்களை இணைக்கிறது. எப்படி? சொல்கிறேன்!
மெகா சைஸ் ஒயின் பாட்டில்கள் சந்திகளில் வரவேற்க... என்ன காரணம்? அதையும் சொல்கிறேன்!
ஹோட்டல் ரிஸப்ஷனில் மட்டுமே ஆங்கிலம் என்பதை அறியும் காலம், அத்தனை சீக்கிரம் டைனிங் ஹாலிலேயே எங்களுக்கு வந்தது பெரும்சோகம். முதல் சறுக்கலே, வெஜிடேரியன் ஃபுட் வேண்டுமென்ற ஆர்டரில்!
வேண்டிய உணவு பற்றி சகலமும் விளக்கியதும் கிடைத்த வெஜிடபிள் சூப், சாலட், மிரட்டிப்பார்த்த பருத்த சாதம்... இவையே அமிர்தம் என அப்போது அறிந்திருக்கவில்லை. பின்பு எங்கும் அப்படியொரு வெஜிடேரியன் உணவுகூட கிடைக்கவில்லை. நீங்கள் சுத்த சைவம் எனில் தயாராக ரெடி டு ஈட் உணவு வகைகளைச் சுமந்து செல்க!
யெரவான் (Yerevan)
ஆர்மீனியா பயணிக்கும் தலைநகரங்களைக் கொண்டது என்கிறார்கள். மாறிக்கொண்டே இருக்குமாம். அதில் 13-வது தலைநகராக உள்ள நகரம் யெரவான். யெரவான் சிட்டியின் ஸ்பெஷலே அதன் அமைப்புதான்.
கலாசாரத் தொழில் நிர்வாகத் தலைநகரான இது, `ஹ்ரஸ்டான்' நதிக்கரையில் உள்ளது. இப்படித்தாங்க இருக்கு பெயரெல்லாம். ரஷ்ய, ஆர்மீனிய மொழிகளின் சொற்கள் நம் பல்லை உடைக்கின்றன.

சுற்றிலும் மலைத்தொடர்கள் அமர்ந்திருக்க நடுவே பள்ளத்தாக்கு. சுமாரான உயரத்தில் குறைந்த மாடிகளுடன் கட்டடங்கள், `பழைய கட்டடங்களாக இருக்கே...' எனும் உணர்வைத் தருகின்றன. பெயின்ட் செய்யப் படாத கருஞ்சிவப்பினாலான பிளாக்ஸினால் கட்டப்பட்டவை. மேற்பூச்சு இல்லாமல் இயற்கை அழகுடன் காட்சியளிக்கின்றன.
இவ்வளவு பழைய நகரா என்று நினைக்கும் போதே, அந்தக் கற்கள் இப்போது அமைதியான, முந்தைய ஆக்ரோஷ எரிமலைகளின் பரிசு என்கிறார்கள். அப்படியே குளிர்ந்த மலைகளின் கற்களைக்கொண்டு கட்டடங்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இதனால் குளிர், வெயில் தாக்காமல் இருக்குமாம்.
நம் ஹைதராபாத், பெங்களூரு, ஓசூரை நினைவுபடுத்துகின்றன ரோலர் கோஸ்டராக இறங்கி ஏறும் சாலைகள் மற்றும் அவற்றின்மேல் அமைந்துள்ள வீடுகள். அத்தனையும் கழுவி விட்டாற்போல படு சுத்தம்.
ஐஸ்க்ரீமைப் பார்த்து அழுத குழந்தையின் சிரிப்பைப்போல வெயிலுக்கு சம்பந்தமே இல்லாமல் நம் இதயத்தை மழைச்சாரல் நனைக்கிறது.
கண்களில் தெரியும் ஆர்மீனியப் பெண்கள் ஸ்கர்ட், பேன்ட் என மிக நேர்த்தியான உடைகளுடன் பளிச்சென உலாவுகின்றனர். வெயிலோ மழையோ... குடைகளுடன் வருகின்றனர்.
ஆமாங்க... சம்மரில் போக திட்டமிட்டாலும் குடை, ஜெர்கின், ஜாக்கெட்ஸ் கொண்டு செல்லுதல் அவசியம். மழை சொல்லாமல் கொள்ளாமல் வந்து நனைத்துப் பார்க்கிறது.
மாத சராசரி வருமானம் 120-350 அமெரிக்க டாலர் எனப்படும் மக்களா இவர்கள்... இவர்களின் தோற்றம் அப்படியில்லையே என்ற ஆச்சர்யக் கேள்வி நமக்குள் எழுகிறது. வாட்ச், குளிர்கண்ணாடி, துணிமணிகள் என அனைத்து முன்னணி பிராண்டுகளின் போலிகளும் பிளாட்பார்ம் கடைகளில் பரவிக் கிடக்க, அவையே சொல்லாமல் சொல்லியது நமக்கான பதிலை.
The rose coloured capital எனப்படும் யெரவான் நகரின் முக்கிய இடம் Republic Square. பாரீஸ், வியன்னா நகரங்களைப் போன்ற அவென்யூக்களை உருவாக்கத் திட்டமிட்டுக் கட்டினார்களாம். சோவியத் காலத்தில் 1921-1990 வரை இந்தத் தலைநகரத்தை ரீமாடலிங் செய்தவர் அலெக்ஸாண்டர் தம்மானியான் என்ற ஆர்க்கிடெக்ட். இவரது டிசைனிலேயே உருவாகியிருக்கின்றன பல தெருக்களும், உலகின் மிகப்பெரிய கதீட்ரல் உட்பட பல கட்டடங்களும்.
மதர் ஆஃப் ஆர்மீனியா
இரண்டாம் உலகப்போரின் நினைவாக வைக்கப்பட்ட ஸ்டாலினின் சிலையை அகற்ற 1962-ல் ஒரு கலவரம்... ஒரு போர் வீரர் உயிரிழக்க, பலர் காயமுற்ற போராட்டத்தில் வைக்கப்பட்ட சிலை.
இது யெரவான் நகரின் ஐகானாக, 55 மீட்டர் உயரத்தில் அதன் பீடத்துடன் சேர்த்து கையில் வாளுடன் ஆர்மீனிய உடையில் ஒரு பெண் சிலையாக நிற்கிறார். அந்தச் சிலை ஆர்மீனியாவுக்காக, துருக்கி - குர்தீஷ் போர்களில் ஈடுபட்ட தமது கணவர்களுக்காக ஆயுதம் ஏந்திய வீரப்பெண்மணிகளின் நினைவாக வைக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாம் உலகப்போரின் உயிர்நீத்த ஆர்மீனிய படை வீரர்களின் நினைவாக அங்குள்ள சிலை முன் எரிகிறது ஜோதி.அந்த வீரர்களின் நினைவாக மே 9 அன்று மக்கள் கூடி சிலைக்குப் பூத்தூவி நினைவு கூர்கின்றனர்.
வரலாற்றுச் சின்னங்கள்
இரண்டாம் உலகப்போரில் சோவியத் படைகள் வெற்றிப்பெற்றதன் அடையாளமாக நிறுவப்பட்ட ஒரு ஸ்தூபி, டவர், அதனுடன் இணைக்கப்பட்ட ஓபரா ஹவுஸ் என அமைக்கப்பட்டுள்ளது.
இதையொட்டியே விக்டோரியா பார்க் உள்ளது. யெரவானின் சிறிய மலைப்பகுதியில் ஓர் அருவி உள்ளது.
Cafesjian மியூசியத்தில் உலகின் தலைசிறந்த கண்ணாடி ஓவியங்கள், ஆன்ட்டிக் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன.
வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களில் இப்போது பீட்சா கடைகள் இருப்பதை உள்ளூர் மக்கள் வருத்தத்துடன் சொல்கின்றனர். கடந்த ஏப்ரலில் நிகழ்ந்த மக்கள் கிளர்ச்சி (velvet revolution) மூலம் பதவியேற்ற அதிபர் மாற்றங்கள் கொண்டுவருவார் என்று நம்புகிறார்கள். பலிக்கட்டும் என்று வாழ்த்துவோம்.
சிட்டி பழசாக இருந்தாலும் பெரும்பாலும் பளிச் தெருக்கள், சாலைகள்... அங்கெல்லாம் தமன்னா, ஹன்சிகா போலவே வெளிர் பெண்களைப் பார்க்க முடிகிறது.
பைக், சைக்கிள் அதிகம் காணாத தெருக் களில் சோவியத் பீரியட் டிராம் வண்டிகள் எலெக்ட்ரிக் பஸ்களாக மாறியுள்ளன. மினி பஸ்களும் வேன்களும் பொது போக்குவரத்துக் காக உள்ளன. மெட்ரோ ரயில் வசதியும் உண்டு.
ஆர்மீனியா, இயற்கை மாசுபடாமல் ஹெச் டூ ஓவும் ஆக்ஸிஜனும் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்ட தேசம்.
எப்போது செல்லலாம்?
மார்ச் - நவம்பர் வரை ஆர்மீனியாவைச் சுற்றி பார்க்கும் சீசன். ஏப்ரல் - ஜூலை வரை சம்மர்.
காலை 5 மணிக்கே சுளீர் என்று ஹாய் சொல்லும் சூரியன் இரவு 8.30 மணிக்கு மேல்தான் ரெஸ்ட் மோடுக்குச் செல்கிறார்.
எங்களுக்குத் தண்ணீர் பிரச்னையே கிடையாது என்கிறார்கள். காரணம், நதிகள் மற்றும் ஓடைகள். சாலைகளில் ஆங்காங்கே குடிநீர்க் குழாய்கள் உள்ளன. அவற்றில் மூடி இன்றி எப்போதும் நீர் ஊற்றுபோல வழிந்தபடி உள்ளன. எங்கும் பிடித்து அருந்தலாம். தண்ணீரும் கற்கண்டை கரைத்துவிட்டாற்போல இனிக்கிறது.
டிக்ரான் மெட்ஸ் என்ற தெரு ஷாப்பிங் செய்ய உகந்தது. தெரியான் தெருவில் உள்ள கர்மா ரெஸ்டாரன்ட் ஓகே. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன ஐஸ்க்ரீம் பார்லர்கள்.
சில இந்திய உணவகங்கள் உள்ளன. அதற்கு கூகுளின் உதவியுடன் டாக்ஸியில் பயணிக்கலாம். இந்திய / ஆசிய ரெஸ்டாரன்ட் என்றே அழைக்கிறார்கள்.
எல்லா வீடுகள், ஹோட்டல்களின் வாசல்களிலும், வழிகளிலும் காட்டுச்செடிகள் போல ரோஜா செடிகள் விதவிதமாக ஈர்க்கின்றன.
இந்தியர்களை ஆர்மீனியர்கள் அதிசயமாக ஆசையுடன் பார்த்து கையசைக்கிறார்கள், `நமஸ்தே' என்று நம்மைக் கண்டதும் கைகூப்பு கிறார்கள், தங்களுக்குள் பேசிக்கொண்டு வெட்கப்படுகிறார்கள், சற்று நாம் நின்றாலும் நம்மை போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள்.

`அப்படி எது உங்களுக்கு ஹெவியா லைக் பண்ண வைக்குது?' என்று கேட்கத் தோன்றுமே... உள்ளூர் டிவி சேனல்களில் இப்போது ஆர்மீனிய மொழியில் டப் செய்யப்பட்ட நம் இந்தி சீரியல்கள் சக்கை போடு போடுகின்றனவாம். அதனால்தான்!
இந்தி சீரியல் ஹீரோ ஹீரோக்களின் ரசிகர்களாக மாறியுள்ள ஆர்மீனியர்கள் பொது இடங்களில் நம்மை மிகவும் மதிக்கிறார்கள். இந்தியர்களை வி.ஐ.பி ரேஞ்சுக்குக் கவனிக்கிறார்கள்.
சோவியத் காலத்திலிருந்து நம் சினிமாக்கள் அங்கே பரவியுள்ளதால் பலருக்கும் மிதுன் சக்ரவர்த்தி ஆதர்ச ஹீரோவாம். `டிஸ்கோ ஆடுவாரே அவர்தான் பிடிக்கும்' என்கிறார்கள் 80’ஸ் கிட்ஸ்.
கூர்மையான மூக்கு மற்றும் மஞ்சளும் பிங்க்கும் கலந்த நிறத்தில் செழிப்பான பெண்களும், மிகச்சரியான பிஸிக்கும் கொண்ட ஆண்களும் நல்ல உழைப்பாளிகளாகத் தென்படுகிறார்கள். 1980-க்குப் பிறகு பிறந்த பெண்களுக்குத் தகுந்த ஆண்கள் கிடைக்காத சோகம் பரவி, பலரைத் திருமணம் செய்துகொள்ளாமல் செய்துள்ளதாம். காரணம், தொடர்ந்து நிகழ்ந்த உள்நாட்டு, வெளிநாட்டுப் போர்கள். அத்தனை சோகம் அப்பிக்கிடக்கிறது ஆர்மீனியர் முகங்களில்.
பல முறை நில நடுக்கங்கள், எரிமலைகளின் தாக்கங்கள் என பாதிக்கப்பட்டுள்ள நாட்டில் அவர்களை அதிகம் வருத்தத்துக்குள்ளாக்குவது ஆர்மீனிய ஆண்களைப் போருக்கு தேவை என அழைத்துச்சென்று அவர்களை பலிகடாவாக்கி தங்கள் நாட்டு வீரர்களைக் காத்துக்கொண்ட இரண்டாம் உலகப்போர் நாடுகள். அது மட்டுமல்ல... இழப்பு இன்னும் அதிகமானது துருக்கி, அஸர்பைஜான் ஆகிய அண்டை நாடுகளுடான போர்களால்.
செஸ், ஆர்மீனியர்களுக்குப் பிடித்தமான கேம். ரஷ்யாவின் வேர்ல்டு சாம்பியன்ஸ் தயாராகறாங்களாம் பாஸ்... மூளைக்காரங்க தான்!
கார்களை நேசிக்கும் ஆர்மீனியர்களின் வீடுகள் சுமாராக இருந்தாலும் வீட்டுக்கு இரண்டு உள்ளன. பழசா இருந்தாலும் என்னோடதாக்கும் என்று ஓட்டிவருவதை சாலைகளில் பார்க்க முடிகிறது. நேர்மையாகவே டாக்ஸி கட்டணம் வசூலிக்கிறார்கள்.
ட்ராம் (Dram) ஆர்மீனியாவின் கரன்ஸி. 10, 20 மற்றும் 50 லுமா என்ற பைசா போன்றவையும் புழக்கத்தில் உள்ளன. ஒரு ரூபாய்க்கு 6.7 ஆர்மீனிய ட்ராம் (இதை டைப்பும் நேரத்தில்!).
காலையில் 8-9.30 மணிக்கும் இரவு 7-8 மணிக்குள்ளும் வீடு திரும்பும் ஆர்மீனியர் களுக்குப் பிடித்த உணவு டோல்மா. உடனே நமக்கு நம்ம தல பாடல்தான் ப்ளாஷ் அடிக்குது!
லாவாஷ்... இது பேப்பர் மாதிரியான மெலிசான சப்பாத்தி. மைதாமாவில் செய்யப்படும் தினப்படி உணவு.
அதிகமாக இலை தழைகளையும் பழங் களையும் விரும்பி சாப்பிடும் ஆர்மீனியர் களின் ஸ்கின் காம்ப்ளக்ஷனின் ரகசியம் அது தானோ!
அடுத்த இதழிலும் ஆர்மினியாவைச் சுற்றி வருவோம்!