
மகிழ்ச்சியாக இருப்பது ஒரு கலை. அதை அனைவரும் கற்றுத் தேர்வது இல்லை. இன்னும் சொல்லப் போனால் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென நினைப்பது ஒரு மனநிலை
தமிழ்ச்செல்வி தி
அந்தக்காலம் போல
பையன்கள் இல்லாத வீடுகளின்
சொத்துகளை
பங்காளிகள் எடுத்துக்கொள்வதில்லை
பெருந்தன்மையுடன்
பெண்களுக்கு
விட்டுக் கொடுக்கிறீர்கள்.
அந்தக்காலம் போல
பையன்கள் இல்லாத பெற்றோர்களுக்கு
இறுதிச்சடங்குகள்
பங்காளிகளால் செய்யப்படுவதில்லை
பெருந்தன்மையுடன்
பெண்களை
அனுமதிக்கிறீர்கள்.
எந்தக்காலத்தில்
பையன்களுடன் பிறந்த
பெண்களுக்கும்
உங்கள் பெருந்தன்மையின்
கதவுகள் திறக்கும்?

Elambarithi Kalyanakumar
தொலைதூர பேருந்து பயணத்தில்
யாருமே அமர விரும்பாத
கடைசி இருக்கையைப் போல
யாரோ யாருக்காகவோ
காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
Vinod Arumugam Cyber Bhudda
தமிழர்கள் 1,000 ரூபாய் கூலி கேட்கிறார்கள். ஆனால், வட இந்தியர்கள் 250 ரூபாய் கூலிக்கு வேலையைப் பறிக்கிறார்கள் என்று சொல்லுபவர்கள் எல்லாம் யார் என்று பார்த்தால்... IT மற்றும் Service துறை... அமெரிக்காவில் 15,000 டாலர் சம்பளம் தரப்படும் வேலையை வெறும் 500 டாலருக்கு இந்தியாவில் செய்பவர்கள்.

Gokul Prasad
முகமது ரஃபியைக் கடவுளின் குரல் என்பார்கள். ஜேசுதாஸின் குரலோ... மனிதர்களின் துயருக்காகத் தேவன் செய்யும் பிரார்த்தனை, மன்றாடல்.
இந்திரா ராஜமாணிக்கம்
Life ரொம்ப சிம்பிள் சார்.
பிடிச்சதை சாப்பிடணும்.
படுத்ததும் தூங்கணும்.
கொஞ்சம் புத்தகங்கள்.
கொஞ்சம் திரைப்படங்கள்.
எது நடந்தாலும் அதில் நமக்கான பாஸிட்டிவ்களை எடுத்துக்குற நிதானம். அடிக்கடி தள்ளிப்போட்டாலும் எப்பயாச்சும் ஒரு பயணம்.
எப்பப் பார்த்தாலும் மொபைலையே பார்க்காம கொஞ்சம் உலகத்தையும் வேடிக்கை பார்க்கணும்.
வேலை, பொருளாதாரம்னு ஓடிக்கிட்டே இருந் தாலும் சின்னச்சின்ன குழந்தைத்தனங்களைத் தக்க வச்சுக்கணும்.
அதோட... இழப்புகளையெல்லாம் யோசிக்க நேரம் இல்லாத அளவுக்கு நிறைய நிறைய நேசிக்கணும்.
தோழர் 2023-க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

Ramanujam Govindan
சந்தோஷத்தின்
நிழல்களாய்ப் பின்தொடர்கின்றன
பயமும் குற்ற உணர்ச்சியும்.
Latha
சுமந்தலையாதீர்!
நன்றாக நடக்கத் தொடங்கிய பின்பும் சில பிள்ளைகள் வெளியில் செல்கையில் தன்னை தூக்கிக் கொள்ளச் சொல்லி அடம்பிடிக்கும். கொஞ்சுவதற்கோ, இல்லை... சமயத்தில் நீண்ட தூரம் நடக்க இருந்தாலோ போனால் போகிறதென சிறிது நேரம் தூக்கி நடக்கலாம். நம்மில் சிலர் அது அழுகிறதே என்று தூக்கிக் கொண்டு நாம் மூச்சு வாங்க நடந்து களைப்படைவோம். இன்னும் சிலரோ அது கேட்கும் முன்னரே, ஐயோ பாவம் நடக்கிறதேயென நாமே தூக்கி சுமப்போம். சிலர் எரிந்து விழுவோம் நம் கையாலாகத்தனத்தில்.
உண்மையில் செய்ய வேண்டியது என்னவென்றால், அதற்கு புரியும்படி எடுத்துரைப்பது. `கண்ணா.. நான் என் உடம்பையும் தூக்கிட்டு உன் உடம்பையும் தூக் கிட்டு நடக்கறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். நீ நடக்குறதுக்காகத்தான் உனக்கு கால் இருக்கு. இன்னைக்கு நீ சின்னப்புள்ள, நான் கஷ்டப்பட்டாவது தூக்கிட்டு போறேன்னு வச்சிட்டாலும், நடக்காமயே இருந்தா உன் கால் வலுவிழந்துடும். அப்புறம் உன்னால பெரியவனானப்புறமும் நடக்க முடியாம போய்டும். அப்போ என்னாலயும் உன்ன தூக்க முடியாது. அதனால நீ நடந்து பழகிக்கனும்!’
இப்படித்தான் சில உறவுகளையும் நட்புகளையும் நாம் தூக்கிச் சுமந்தலைகிறோம் அவசியமே இல்லாத போதும்.
அவரவர் பிரச்னைகளை அவரவர் சமாளிக்கும் திறமை வேண்டும். இன்று நாம் இருக்கலாம். நாளை இல்லாமல் போகலாம். எல்லாவற்றிற்கும் நானிருக்கிறேன் என்பது போன்ற செயல்கள் அன்பின் வெளிப்பாடாக தோற்றமளிக்கலாம். ஆனால், அது அவர் களை பலவீனமாக்கும் என்பதே உண்மை!
ஒருவரின் எல்லா பிரச்னைகளையும் நம் தலையில் போட்டுக்கொண்டு, அதற்காக நாம் கவலைப்பட்டு, நாம் முயற்சியெடுத்து, செயல்பட்டு போய்க்கொண்டே இருக்கை யில் அவரிடமிருந்து ஒரு முயற்சியும் இருக்காது. `அதான் அவங்க இருக்காங்களே, அவங்ககிட்ட கொட்டுவோம் சரியாகிடும்’ என்ற எண்ணம் வந்துவிடும். சுமக்கும் நாமோ, ஆரம்பத்தில் உடலில் சக்தியிருக் கிற தைரியத்தில் குழந்தை அழுதவுடன் தூக்கி விட்டு, மூச்சு முட்டும்போது, நடை தள்ளாடும்போது அந்த எரிச்சலில் பிள்ளையை இறக்கிவிட்டு, `சனியனே உனக்கு கால் இருக்குதானே, நடந்து வா’ எனப் பிள்ளையை சாடும் பெற்றோராக மாறி அவர் மேல் எரிச்சல்படுவோம்.
திடீரென இறக்கிவிட்டு திட்டும் பெற்றோர் ஏற்படுத்தும் குழப்பம்போல், அந்த மனிதரும் குழப்பம் அடைந்து கோபமோ, வெறுப்போ நம்மீது கொள்வார். ஏனெனில் இன்றுவரை நம்மிடம் இறக்கி வைப்பதைத் தவிர அவருக்கு வேறெதுவும் தெரிந்திருக்காது.
அன்பென்ற பெயரில் மற்றவரை சுமந்தலைவது இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் காழ்ப்புணர்வை கொண்டு வரலாம். இல்லை குழம்பித் தவிக்க விடலாம். மற்றவரின் முதுகில் நாம் சுமையாகவோ, இல்லை நம் முதுகை மற்றவர் சுமையை தூக்கும் கருவியாகவோ வைத்துக் கொள்ளாமல் இருப்பது இருவருக் கும் நல்லது.
நல்லது கெட்டதில் உடன் நிற்பதற்கும் முழுமையாக அவர் சுமையை நாம் சுமப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. தெளிவாக இருப்பது இருவருக்கும்
நல்லது!

மாஸ்டர் பீஸ்
சரியான வாய்ப்புகள் வருமென வரும் வாய்ப்புகளை எல்லாம் நழுவ விடுகிறோம். கடைசியில், எனக்கு வாய்ப்புகளே வரவில்லையென சுய பச்சாதாபத்தில் ஆறுதல் தேடுகிறோம். உணர்க... இங்கு சரியான வாய்ப்பு, தவறான வாய்ப்பு என்று எதுவுமில்லை. கிடைக்கிற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்!
புகழ்
மகிழ்ச்சியாக இருப்பது ஒரு கலை. அதை அனைவரும் கற்றுத் தேர்வது இல்லை. இன்னும் சொல்லப் போனால் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென நினைப்பது ஒரு மனநிலை. தன்னிரக்கம் கொண்டவர் களுக்கு அது வாய்ப்பதில்லை.
டீ
தோல்விகளில், உறவுகளுக்கிடையேயான மனக் கசப்புகளில் மனம் கேட்கும் கேள்விகளை எப்பொழுதும் சமாதானம் செய்யாதீர்கள். நியாயமாக பதில் அளித்து பழகுங்கள்.