சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

ஆபத்தில் உதவும்... பட்டம் வாங்கித் தரும்... பனைத் தொழில்!

கலை
பிரீமியம் ஸ்டோரி
News
கலை

கலை

பனை ஓலை மூலம் அன்றாடப் பயன்பாட்டுக்காக கைவினைப் பொருள்கள் செய்வதை அறிந்திருப்போம். இந்தக் கைவினைப் பொருள்களுக்கான சந்தைவாய்ப்பும் எப்போதும் ஏறுமுகம்தான்! ஆனால், அதிலேயே புதுவிதமாக யோசித்து பனை ஓலையில் மனித உருவங்களைச் செய்து அசத்திவருகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த பனைத் தொழிலாளி ஒருவர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள கருங்குளத்தைச் சேர்ந்த பால்பாண்டிதான் இந்த வித்தியாச முயற்சிக்குச் சொந்தக்காரர். கிராமத்தில் யாரைக் கேட்டாலும், `பனைப் பொருள் பால்பாண்டி’ வீட்டுக்கு வழிகாட்டுகிறார்கள். நாம் சென்றிருந்த நேரத்தில் பனையோலையில் அப்துல் கலாம் உருவச் சிலையைப் பின்னிக்கொண்டிருந்தார் பால்பாண்டி. “ராமானுஜம்புதூர் பக்கத்துல இருக்கிற சீலாத்திகுளம்தான் நான் பொறந்த கிராமம். பனையேறும் தொழில்தான் எங்க பூர்வீகமே. என்கூடப் பொறந்தவங்க மொத்தம் அஞ்சு பேரு. அந்த ஊர்ல தொடக்கப்பள்ளிதான் இருந்துச்சு. அதுக்குமேல படிக்கணும்னா அஞ்சு கிலோமீட்டர் தூரம் தாண்டி பக்கத்தூருக்குதான் போகணும். `அவ்வளவு தூரம் நடந்து போயி பள்ளிக்கூடத்துக்குப் போகணுமா?’ன்னு பெத்தவங்க பிள்ளைகளை அனுப்ப மாட்டாங்க. என்னையும் அனுப்பலை. அதனால, அஞ்சாம் வகுப்புவரைக்கும்தான் படிச்சேன். குடும்பச் சூழ்நிலையைத் தெரிஞ்சுக்கிட்டு அப்பாவுடன் பனைத் தொழிலுக்குப் போக ஆரம்பிச்சேன். வெட்டிப்போடும் பனை ஓலை, நுங்குக் குலைகளைச் சேகரிக்கறது, பதநீர் காய்ச்சுறது, கருப்பட்டி ஊத்துறது, சிப்பம் கட்டுறதுன்னு சின்னச் சின்ன வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சேன்.

கொஞ்சம் கொஞ்சமா பனை ஏறவும் கத்துக்கிட்டு, 13 வயசுல தனியா பனை ஏறி கலசம் கட்டி, பதநீர் இறக்க ஆரம்பிச்சுட்டேன். தொழில் இல்லாத காலத்துல வயக்காட்டு வேலைக்கும் போவேன். நிலக்கடலைத் தோட்டத்துக்குக் காவலுக்கு இருந்த நேரத்துல, ராத்திரியெல்லாம் பனை ஓலையில பெட்டி முடையக் கத்துக்கிட்டேன். அப்படியே பாய், கட்டில், சேர்னு விதவிதமான பொருள்கள் செய்யறதையும் கத்துக்கிட்டேன். 20 வயசுல கல்யாணமாச்சு. எனக்கு ஏழு ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை. சீஸன் மந்தமா இருந்துச்சுன்னாலும், பனையேத்தம் குறைஞ்சாலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம்னு பக்கத்து மாவட்டங்களுக்குப் போய் பனை ஏறிட்டு வருவேன். ஒரு தடவை, எங்க ஊருலேருந்து மூணு பேரு தஞ்சாவூருக்குத் தொழிலுக்குப் போனோம். ஒரு பனங்காட்டுல எல்லாரோட பையையும்வெச்சுட்டு பம்புசெட்டுல குளிக்கப் போனோம். வந்து பார்த்தா, பையில இருந்த பணம் மட்டும் திருடு போயிருந்துச்சு. சாப்பாட்டுக்குக்கூட வழியில்லை.

பால்பாண்டி
பால்பாண்டி

தண்ணீரை மட்டும் குடிச்சு ஒருநாளைக் கழிச்சோம். ரெண்டாவது நாள் அப்படியே நடந்து போய்க்கிட்டிருந்தப்போ அங்கேயிருந்த மாரியம்மன் கோயிலுக்குப் போனோம். கோயிலுக்குப் பக்கத்துல இருந்த வேப்ப மரத்துல உட்கார்ந்துட்டோம். கோயிலைச் சுற்றி நிறைய பலகாரக்கடைகள் இருந்துச்சு. கடைக்காரர்கள், தினமும் காலையில தயார் செய்யுற உணவுப் பண்டத்துல ரெண்டு, மூணை ஒரு இலையிலவெச்சு, கோயில் வாசல்ல இருந்த தேருக்கு முன்னாலவெச்சு சாமி கும்பிட்டுட்டுதான் வியாபாரத்தை ஆரம்பிப்பாங்க. அதை கவனிச்சோம். ஆனா, அதை எடுத்து சாப்பிடுறதுக்காகவே ஒரு கூட்டம் இருந்துச்சு. அவங்ககூட சேர்ந்து நாங்களும் வடை, இட்லி, புட்டு, அப்பம், பழம்னு கிடைச்சதைச் சாப்பிட்டு மூணு நாளை ஓட்டினோம்.

அதுக்குப் பிறகு அங்க தாக்குப்பிடிக்க முடியலை. ஊருக்குத் திரும்பக் கையில பத்துப் பைசாகூடக் கிடையாது. என்ன செய்யலாம்னு யோசிச்சோம். கடைவீதியைச் சுத்தி வரும்போது, பனையோலைப் பெட்டிகள் விற்பனைக்கு வெச்சிருந்தாங்க. அதைப் பார்த்ததும்தான், `கையில வெண்ணெயை வெச்சுக்கிட்டு நெய்யைத் தேடி அலையுறோமே’ன்னு யோசனை வந்துச்சு. என்கூட வந்தவங்ககிட்டயும் இதைச் சொன்னேன். பையிலிருந்து செலவுக்கு வெச்சிருந்த பணத்தைக் களவாண்ட மகராசன், தொழிலுக்குப் பயன்படுத்துற பாளை அரிவாளை எடுத்துட்டுப் போகலை. அரிவாளைக் கையில எடுத்துக்கிட்டுப் பனைமரத்தைத் தேடிப்போனோம். ஒருவழியா பனைமரத்தைக் கண்டுபிடிச்சு, ஆளுக்கு ஒரு மரத்துல ஏறி சரசரன்னு ஓலைகளை வெட்டிப் போட்டோம். மரத்துக்குக் கீழேயே உட்கார்ந்து 25 பெட்டிகள்வரை முடைஞ்சோம். அதே மாரியம்மன் கோயில் வாசல்ல உட்கார்ந்து வித்தோம். மொத்தம் 107 ரூபா கிடைச்சுது.

107 ரூபான்னா… இன்னைக்கு அதோட மதிப்பு மூவாயிரம் ரூபாய்க்குச் சமம். அந்தக் காசுல வயிறாரச் சாப்பிட்டுட்டு அடுத்த பஸ்ஸைப் பிடிச்சு ஊரு வந்து சேர்ந்தோம். அந்த நேரத்துல என் பசியையும் போக்கி, சொந்த ஊருக்கே திருப்பி அனுப்பிவெச்சது பனைமரம்தான்.

எனக்கு இப்போ வயசு 61. இதுவரைக்கும் முப்பதாயிரம் தடவையாவது மரத்துல ஏறி, இறங்கியிருப்பேன். உச்சியிலிருந்து மூணு முறை கீழே விழுந்தும், எந்த அடியுமில்லாமத் தப்பிச்சுட்டேன். அஞ்சு வருசத்துக்கு முன்னால வீட்டுக்கு மளிகைச் சாமான் வாங்குறதுக்காக பைக்குல கடைக்குப் போயிருந்தப்போ, எதிரே வந்த கார் மோதி இடுப்பு, கால் பகுதியில பலமா அடிபட்டுடுச்சு. `இனிமேல் சைக்கிள், பைக் ஓட்டக் கூடாது. ரொம்ப தூரம் நடக்கக் கூடாது. பனைமரம் ஏறவே கூடாது'ன்னு டாக்டர் சொன்னதுமே உயிரே போனது மாதிரி ஆயிப்போச்சு. `நீங்க பனை ஏற வேண்டாம்ப்பா. நாங்க வேலைக்குப் போறோம்ல. குடும்பத்தைப் பார்த்துக்குறோம்...'ன்னு பசங்களும் சொல்லிட்டாங்க. ரெண்டு வருஷம் சும்மா இருந்து பார்த்தேன். `ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்குமா...’ன்னு சொல்லுறது மாதிரி, பனைக்குப் பனை ஏறி இறங்கிட்டு இருந்தவனை, `ஒத்த ரூமுக்குள்ள உட்கார்ந்து ஓய்வெடுங்க’ன்னு சொன்னா எப்படிய்யா இருக்க முடியும்?

கலை
கலை

ஒரு வருஷம்வரைக்கும் பெட்டி முடைஞ்சேன். பெட்டிக்கு பதிலா ஏதாவது உருவங்களைச் செஞ்சுபார்க்கலாமான்னு தோணுச்சு. பேரன், பேத்திகளுக்கு விளையாட முதல்ல பொம்மை செஞ்சேன். அதுக்கே ஒருநாள் ஆகிடுச்சு. தொடர்ந்து வில்லு வண்டி, விமானம், ஒட்டகம், யானை, குதிரை, திருச்செந்தூர்கோயில் கோபுரம், தேவாலய கோபுரம், தாஜ்மஹால், கலப்பை ஏந்திய விவசாயி, உழவு செய்யுற விவசாயி, ஓலைச் செருப்புன்னு என் மனசுல என்னென்ன தோணுச்சோ, யார் என்ன செய்யச் சொல்றாங்களோ அதையெல்லாம் செய்ய ஆரம்பிச்சேன். `மனித உருவங்களைச் செய்தா என்ன’ன்னு தோணிச்சு. மறைந்த தலைவர்கள்ல எனக்கு காமராஜரை ரொம்பப் பிடிக்கும். அதனால, காமராஜரையே டெஸ்ட்டுக்கு எடுத்துக்கிட்டேன்.

முதலில் கால்பகுதியைச் செஞ்சு முடிச்சேன். தொடர்ந்து இடுப்புப்பகுதி, உடல்பகுதி, கை, மணிக்கட்டு, தலைப்பகுதின்னு ஒவ்வொரு பாகமா செஞ்சு, கடைசியா எல்லாத்தையும் ஒண்ணுசேர்த்தேன். `ஜவுளிக்கடையில வேட்டி, சட்டை வாங்கிப் போடலாம்’னு நினைச்சேன். `அதையும் ஏன் ஓலையில செய்யக் கூடாது’ன்னு தோணிச்சு. அதுக்கு ஏத்த மாதிரி ஓலையைப் பக்குவமாக் கிழிச்சுச் செஞ்சேன். அவரோட பிறந்தநாளில் வீட்டுலேயே காட்சிப்படுத்தினேன். இப்போ, அப்துல் கலாம் ஐயா உருவத்தைச் செஞ்சுட்டிருக்கேன். முழுமையாகச் செஞ்சாலும், அவரோட பிறந்தநாள் நெருங்கும் சமயத்துலதான் பெயின்ட் அடிச்சுத் தயார்ப்படுத்துவேன்.

இதுல எனக்கு எதுவுமே வருமானம் இல்லை. ஆர்வம் மட்டும்தான். இதுவரைக்கும் 200-க்கும் மேற்பட்ட பொருள்களைச் செஞ்சிருக்கேன். சின்ன வயசுல பனைத்தொழிலுடன், கத்துக்கிட்ட வைத்தியத் தொழிலையும் செஞ்சுட்டு வர்றேன். பாம்புக்கடி, தேள்கடி, விஷக்கடிக்குப் பார்வை பார்க்க வருபவர்கள் தரும் பணத்தைவெச்சுதான் ஓலை வெட்டுதல், பெயின்ட், கலைப்பொருள்களை வாங்கிக்கறேன். பனை ஓலைகளில் உருவங்களைச் செய்றதால, சென்னை சர்வதேசப் பல்கலைக்கழகம் எனக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்திருக்கு. இது எனக்கான அங்கீகாரம் இல்லை. என் குலசாமி பனைக்குக் கிடைத்த அங்கீகாரம்” எனச் சொன்னபடியே விடைகொடுத்தார் பால்பாண்டி!