Published:Updated:

நியூஸ் எம்பஸி!

நியூஸ் எம்பஸி!
பிரீமியம் ஸ்டோரி
News
நியூஸ் எம்பஸி!

கடுப்பேத்துகிறார் மை லார்ட்!

* இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை தொடர்பாக ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவர, மறுபுறம் எல்லையில் நடைபெற்றதாகச் சில தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதாவது, `சீன ராணுவம் இந்திய வீரர்களைப் பின்னோக்கிச் செல்லவைக்க ‘மைக்ரோவேவ்’ ஆயுதங்களைப் பயன்படுத்தியது’ என பீஜிங் பேராசிரியர் ஜின் கேன்ராங் என்பவர் தெரிவித்ததாக பிரிட்டன் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. மலை முகடுகளை மைக்ரோவ் வேவ் அவனாகப் பயன்படுத்தியதன் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தாமலேயே, இந்திய வீரர்களைப் பின்னோக்கி நகரவைத்தார்கள் என அவர் தெரிவித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

நியூஸ் எம்பஸி!

மைக்ரோவேவ் ஆயுதங்கள் நீர் மூலக்கூறுகளை வெப்பமடையச் செய்யும். இதனால், முதலில் வலி தோன்றும். தொடர்ந்து அது பயன்படுத்தப்பட்டால், தலைவலி, வாந்தி, மூச்சுத்திணறல் உண்டாகும் எனக் கூறப்படுகிறது. எனினும், சீனா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது. அதேபோல இந்திய ராணுவமும் இந்தத் தகவல்கள் போலியானவை என்று மறுத்திருக்கிறது! #போலி `மைக்ரோவேவ்’

நியூஸ் எம்பஸி!

* ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் 5’ எனும் கொரோனா தடுப்பூசி, இந்தியாவிலும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பூசி கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் 92 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்று ரஷ்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்த நிலையில், இந்தத் தடுப்பூசி இந்தியா மற்றும் சீனாவிலும் உற்பத்தி செய்யப்படும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இது ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், பிற நாடுகளுக்குத் தடுப்பூசியை வழங்குவதற்கும் வழிவகை செய்யும் என புதின் தெரிவித்திருக்கிறார். #கோ கொரோனா..!

* அமெரிக்க அதிபர் தேர்தலில் பல்வேறு மோசடிகள் நடந்திருப்பதாக ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறார். இந்தநிலையில், அமெரிக்க சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர், கிறிஸ்டோபர் கிரெப்ஸ் ``தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற தேர்தல், பாதுகாப்பான தேர்தல்” என்றார். ஏற்கெனவே தேர்தல் முடிவுகளால் கடுப்பிலிருந்த ட்ரம்ப், கிரெப்ஸ் பேச்சால் மேலும் கடுப்பானார். இதைத் தொடர்ந்து, அவரைப் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியிருக்கிறார் ட்ரம்ப். இதை ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ட்ரம்ப், இந்தப் பதவி நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தார். #கடுப்பேத்துகிறார் மை லார்ட்!

நியூஸ் எம்பஸி!

* அஜர்பைஜான் - ஆர்மீனியா நாடுகளுக்கு இடையே நாகர்னோ-காராபாக் பகுதி தொடர்புடைய மோதல் கடந்த 6 வாரங்களுக்கும் மேலாக நீடித்துவந்தது. இந்நிலையில், நவம்பர் 9-ம் தேதி அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ், ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷினியன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் கையெழுத்திட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின்படி, கல்பஜர் நகரமும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் நவம்பர் 15 முதல் அஜர்பைஜான் கட்டுப்பாட்டுக்குள் செல்லும். இதனால் 14-ம் தேதி கல்பஜர் பகுதியில் வசித்துவந்த அர்மேனியர்கள், தாங்கள் கட்டி வசித்துவந்த வீடுகளைத் தீ வைத்துக் கொளுத்திவிட்டு சென்றிருக்கிறார்கள். தங்களின் எந்த உடமைகளும் அஜர்பைஜான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்குச் சென்றுவிடக் கூடாது என இப்படிச் செய்திருக்கிறார்கள். # என்னா... வில்லத்தனம்!