அலசல்
Published:Updated:

நியூஸ் எம்பஸி

நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
News
நியூஸ் எம்பஸி

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாகப் பணத் தட்டுப்பாடு அதிகரித்து, அந்த நாடு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகச் செய்திகள் வருகின்றன

நியூஸ் எம்பஸி

மியான்மரில், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றினார் ஆங் சான் சூகி. ஆனால், சூகி தேர்தலில் மோசடி செய்து வெற்றிபெற்றதாகவும், பண மோசடிகளில் ஈடுபட்டதாகவும் கூறி 2021, பிப்ரவரியில் ஆட்சியைக் கைப்பற்றியது அந்நாட்டு ராணுவம். சூகி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு, அவரது கட்சியின் எம்.பி-க்கள் பலரும் கைதுசெய்யப்பட்டனர். மக்கள் பலரும் ராணுவ ஆட்சியை ஏற்க மறுத்து சூகிக்கு ஆதரவாகப் போராடினர். இதற்கிடையில், சூகியின் மீது ராணுவத்துக்கு எதிராக மக்களைத் தூண்டியதாகவும், போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து மியான்மரின் பொதுச் சுகாதார விதியை மீறியதாகவும் வழக்கு தொடரப்பட்டது. எட்டு மாதங்களாக இந்த வழக்கை விசாரித்த மியான்மர் நீதிமன்றம், சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது. அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற சூகி, மக்கள் விடுதலைக்காகப் போராடியதற்காக ஏற்கெனவே 21 ஆண்டுகள் சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது!

நியூஸ் எம்பஸி

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாகப் பணத் தட்டுப்பாடு அதிகரித்து, அந்த நாடு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகச் செய்திகள் வருகின்றன. நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், செர்பியா நாட்டிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் இம்ரான் கானை கிண்டல் செய்யும்ரீதியில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு, ``கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அரசு அதிகாரிகள் உங்களுக்காக அமைதியாக எவ்வளவு காலம் பணிபுரிவோம் என்று எதிர்பார்க்கிறீர்கள் இம்ரான் கான்... இதுதான் புதிய பாகிஸ்தானா?” என்று பதிவிடப்பட்டிருக்கிறது. அடுத்த ட்வீட்டிலேயே, ``என்னை மன்னித்துவிடுங்கள். வேறு வழியில்லை’’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இது உலக அரங்கில் இம்ரான் கானுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லப்பட்டுவந்த நிலையில், செர்பியாவின் பாகிஸ்தான் தூதரக ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்திருக்கிறது.

மர்ம தேசமான வட கொரியாவில், தடைசெய்யப்பட்ட திரைப்படத்தைப் பார்த்ததற்காக மாணவர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஹைசன் நகரிலுள்ள பள்ளியில், 14 வயது மாணவர் ஒருவர் தென் கொரிய படமான `தி அங்கிள்’ படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது காவல்துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். படத்தில் முதல் ஐந்து நிமிடங்களை மட்டுமே பார்த்திருந்த அந்த மாணவருக்கு, 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. வட கொரியாவில் அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட எதிரி நாடுகளின் புத்தகங்கள், பாடல்கள், ஓவியங்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவற்றை ஒருவர் பார்த்தாலோ, கேட்டாலோ, வைத்திருந்தாலோ அவருக்கு ஐந்து முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். முன்னதாக, தென் கொரிய வெப் சீரீஸான `ஸ்விக்ட் கேம்’ தொடரை டௌன்லோடு செய்து பார்த்ததற்காக சில இளைஞர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டதாக அமெரிக்கச் செய்தி ஊடகமான `ரேடியோ ஃபிரீ ஏசியா’ தெரிவித்திருந்தது.