
அணு விஞ்ஞானியின் காரில் ஏதோ சத்தம் கேட்க, இஞ்சின் உராய்வதாக நினைத்துக்கொண்டு காரை விட்டு இறங்குகிறார்.
நாட்டின் அதிமுக்கியமான அணு விஞ்ஞானி தன் மனைவியுடன் குண்டு துளைக்காத காரில் சென்றுகொண்டிருக்கிறார். அவரின் பாதுகாப்புக்கு மூன்று வாகனங்களில் போலீஸார் முன்னும் பின்னும் அரணாகச் செல்கிறார்கள். செல்லும் வழியில் எங்கோ குண்டு சத்தம் கேட்க, ஒரு கார் மட்டும் விலகி, அதைக் கவனிக்கச் செல்கிறது.
அணு விஞ்ஞானியின் காரில் ஏதோ சத்தம் கேட்க, இஞ்சின் உராய்வதாக நினைத்துக்கொண்டு காரை விட்டு இறங்குகிறார். 150 மீட்டர் இடைவெளியில் இன்னொரு நிஸான் கார் நிற்கிறது. அதிலிருந்து ஒரு மெஷின் கன், விஞ்ஞானியைச் சரமாரியாகச் சுடுகிறது. அவரைக் காப்பாற்ற முயன்ற பாதுகாவலர் களையும் சுட்டு வீழ்த்துகிறது மெஷின் கன். நிஸான் காரைச் சுற்றி வளைக்க முற்பட்ட போதுதான் அடுத்த ஷாக். அந்தக் காரில் யாருமே இல்லை. கண் இமைக்கும் நேரத்தில் அந்தக் காரும் வெடித்துச் சிதறுகிறது. எல்லாமே ரிமோட் கன்ட்ரோல். இவையனைத்தும் நடந்தது மூன்று நிமிட இடைவெளியில்.

‘நோலனின் டெனெட் படக் காட்சியா’ என்றால், அதுதான் இல்லை. கடந்த வாரம் ஈரான் நாட்டு மூத்த அணு விஞ்ஞானி மொஹ் சென் ஃபக்ரிஜடே இப்படி டெக்னாலஜியின் மூலம் கொல்லப்பட்டிருக்கிறார். ‘ஈரான் அணு ஆராய்ச்சியின் தந்தை’ எனப் புகழாராம் சூட்டப் பட்டவரை நிமிடங்களில் வீழ்த்தியிருக்கிறார்கள். முப்பது ஆண்டுகளாக இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவான மொசாட்டின் ஹிட் லிஸ்ட்டில் இருந்தவரைக் காப்பாற்றிவந்த ஈரான், இந்தமுறை தோற்றிருக்கிறது. ஈரானின் அணு ஆராய்ச்சி புராஜெக்ட் 110, 111 ஆகியவற்றின் சூத்திரதாரியாக இருந்தவர் மொஹ்சென்.
ஈரானில் விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், பெரும் பதவியில் இருப்பவர்கள் குரூரமான முறையில் கொல்லப்படும்போதெல்லாம் ஈரானின் கரங்கள் இஸ்ரேலையும் அமெரிக்காவையும் நோக்கித்தான் நீளும்.இம்முறையும் அதே! 2018-ம் ஆண்டு ஏப்ரல் 30 தேதி இஸ்ரேல் பிரதமர், ‘`எங்களிடம் ஈரான் அணு ஆராய்ச்சி செய்கிறது என்பதற்கான ஆதாரங்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றன’’ எனத் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளித்தார்.அப்போது, ‘மொஹ்சென் ஃபக்ரிஜடே என்னும் பெயரை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்’ எனப் பேசியிருந்தார் அவர்.
‘மொஹ்சென் கொலைக்குப் பழி தீர்ப்போம்’ எனக் கொக்கரித்திருக்கிறது ஈரான். மொஹ்சென் கொலையில் இஸ்ரேலின் கரங்களில் ரத்தம் படிந்த அளவுக்கு அமெரிக்காவின் கரங்களில் இல்லையென்றாலும், இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்காவுக்கு முன்னரே தெரியும் என்கின்றன புலனாய்வுக் குழுக்கள்.

இந்தக் கொலை குறித்து இஸ்ரேல் நிருபர் ஒருவர், ‘இது ஈரான்மீதான தொழில்முறை மற்றும் உளவியல் தாக்குதல்’ என ட்வீட் செய்ததை ரீட்வீட் செய்து சிக்கியிருக்கிறார் ட்ரம்ப்.
ஈரானின் அணு ஆராய்ச்சிகள் எப்போதும் அமெரிக்காவுக்கு உவப்பானதாக இருந்ததில்லை. பல்வேறு தடைகளை ஈரான்மீது திணித்திருக்கிறது. 2015-ம் ஆண்டு ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் அப்போதைய அதிபரான ஒபாமா. உலக அரங்கில் இந்த இரு தேசங்களுக்கு இடையேயான மிகப்பெரிய நகர்வாக அது பார்க்கப்பட்டது. 2018-ம் ஆண்டு மே 10-ம் தேதி அந்த அணு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாகத் தன்னிச்சையாக முடிவெடுத்தார் ட்ரம்ப். ஈரான் ஒப்புக்கொண்டால் ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முடிவில் இருந்தார் ஜோ பைடன். அதில்தான் மிளகாய்ப்பொடியை `செத்தும் கெடுத்தான் செவ்வந்தியப்பன்’ பாணியில் தூவியிருக்கிறார் ட்ரம்ப்.
அணு ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபடும் ஈரானுக்கு இது மிகப்பெரும் பின்னடைவு. ‘ஓட்டப் பந்தயத்தில் முதலில் வருபவனைச் சுட்டுவிடுவோம்’ என்றால், ஒவ்வொருவரும் பின்னோக்கி ஓடத் தொடங்குவார்கள். பாதுகாப்பு வளையத்துக்குள் எப்போதுமிருக்கும் 60 வயதான மொஹசெனையே சுட்டு வீழ்த்த முடியும் என்றால், அடுத்த நிலையில் இருப்பவர்கள் உயிருக்குத்தானே முக்கியத்துவம் அளிப்பார்கள் என்பதாக இருக்கிறது ஈரான் எதிரிகளின் அறைகூவல். `அமெரிக்காவுடன் இனியும் பேச்சுவார்த்தை வேண்டாம். போர் புரிய வேண்டும்’ என ஈரான் மக்களும் சில தலைவர்களும் போராட ஆரம்பித்தி ருக்கிறார்கள். இது நிச்சயம் உலகிற்கு நற்செய்தி இல்லை.
ஈரானின் அணு ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் சர்ச்சையான முறையில் கொல்லப்படுவது இது முதல் முறை அல்ல.
2010-ம் ஆண்டு மௌசத் அலி மொஹமதி என்கிற துகள் இயற்பியல் விஞ்ஞானி, மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த ரிமோட் கன்ட்ரோல் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.
அதே ஆண்டு மஜித் ஷரியர் என்கிற விஞ்ஞானி காரில் சென்றுகொண்டிருந்த போது, அவரது காருக்கு அருகில் வேறு வாகனங்களில் வந்து வெடிகுண்டுகளை வைத்து, அவரைக் கொலை செய்தனர். இவர் தற்போது கொல்லப்பட்டிருக்கும் மொஹ்செனுடன் வேலை பார்த்தவர்.
2011-ம் ஆண்டு ஈரானின் அணு ஆராய்ச்சிகளில் ஈடுப்பட்டதாகச் சொல்லப்படும் கல்வியாளர் டாரியஷ் ரீஜானிஜத்தை இருசக்கர வாகனத்தில் வந்து சுட்டுக் கொன்றனர் பயங்கரவாதிகள்.
2012-ம் ஆண்டு ஈரானின் யுரேனிய மையத்தின் துணைத் தலைவர் முஸ்தபா அஹமதி ரோஷனை காந்தவியல் வெடிகுண்டுகளை வைத்துக் கொன்றிருக்கிறார்கள்.