அரசியல்
Published:Updated:

நியூஸ் எம்பஸி

ஹோண்டுராஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹோண்டுராஸ்

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

நியூஸ் எம்பஸி

முதல், உச்ச நீதிமன்றப் பெண் நீதிபதி!

பாகிஸ்தானின் 74 ஆண்டுக்கால வரலாற்றில், முதன்முறையாகப் பெண் ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக் கிறார். லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ஆயிஷா மாலிக்கின் பெயரை, உச்ச நீதிமன்ற நீதிபதி பொறுப்புக்குக் கடந்த ஆண்டு பரிந்துரைத்தது பாகிஸ்தான் நீதித்துறை ஆணையம். அப்போதே `சீனியாரிட்டி அடிப்படையில் நான்காவது இடத்திலிருக்கும் ஆயிஷாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியமர்த்தக் கூடாது’ என பாகிஸ்தான் பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்தது. ஆனால், நீதித்துறை ஆணையமோ, ‘தேசத்தின் நலனுக்காக ஆயிஷாவைப் பரிந்துரைக்கிறோம்’ என்று கூறியது. இந்த நிலையில், ஆயிஷாவின் நியமனத்தை உறுதிசெய்யும் உத்தரவை, கடந்த வாரம் வெளியிட்டார் ஜனாதிபதி ஆரிஃப் அல்வி. ஜனவரி 24-ம் தேதி அன்று, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டார் ஆயிஷா. 55 வயதாகும் ஆயிஷா, ``பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டு மீண்ட பெண்களிடம், கன்னித்தன்மைக்கான சோதனை செய்யப்படுவது சட்டத்துக்குப் புறம்பானது, பாகிஸ்தானின் அரசியலமைப்புக்கு எதிரானது” எனச் சாடி, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது!

நியூஸ் எம்பஸி

போர்க்களமான நாடாளுமன்றம்!

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் சமீபத்தில் நடந்த தேர்தலில், தாராளவாதக் கட்சியைச் சேர்ந்த சியோமாரா வெற்றிபெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். `கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த லூயிஸ் ரெடோண்டோவை (Luis Redondo) நாடாளுமன்ற அவைத் தலைவராகத் தேர்வுசெய்வோம்’ என சியோமாரா உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் நாடாளுமன்றத் தலைவருக்கான வாக்கெடுப்பில், தாராளவாத கட்சியைச் சேர்ந்த 20 உறுப்பினர்கள் லூயிஸுக்கு வாக்களிக்காத காரணத்தால், ஜார்ஜ் காலிக்ஸ் என்பவர் நாடாளுமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த லூயிஸின் ஆதரவு எம்.பி-க்கள், அவருக்கு எதிராக வாக்களித்த ஆளுங்கட்சி எம்.பி-க்களைச் சரமாரியாகத் தாக்கினர். ஆளுங்கட்சி எம்.பி-க்களும் பதில் தாக்குதல் நடத்த, நாடாளுமன்றம் போர்க்களமானது. நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் மோதிக்கொண்ட சம்பவம், அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது!

கொரோனா முடிவுக்கு வரும் காலம் மிக அருகில்!

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் உலக மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில், சில விஷயங்களைக் கூறிவருகிறார்கள் சுகாதார நிபுணர்கள். உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிரிவு இயக்குநர் Hans Kluge, ``கொரோனா தொற்றுப் பரவல், அதன் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஒமைக்ரான் பரவல் உச்சநிலை பெற்று, குறையத் தொடங்கிய சில மாதங்களில், மக்களிடையே நோய் எதிர்ப்புசக்தி ஏற்படக்கூடும். தடுப்பூசி, நோய்த் தொற்று பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் நோய் எதிர்ப்புசக்தி ஏற்படும். இதன் மூலம் கொரோனா முடிவுக்கு வரும்’’ என்றிருக்கிறார். இதேபோல பல்வேறு நாடுகளிலுள்ள தொற்றுநோய் நிபுணர்களும், ``கொரோனா தொற்றுப் பரவல் முடிவுக்கு வரும் காலம் மிக அருகில் இருக்கிறது’’ என்று நம்பிக்கை தருகிறார்கள்!