அரசியல்
அலசல்
Published:Updated:

நியூஸ் எம்பஸி

கியூபா
பிரீமியம் ஸ்டோரி
News
கியூபா

கைதான 205-க்கும் அதிகமான உக்ரைன் வீரர்களில் ஒருவரான மிக்கைலோ டையனோவ் என்பவரை மட்டும் தற்போது ரஷ்ய ராணுவம் விடுவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

`பீட்டா’வின் செக்ஸ் ஸ்ட்ரைக்!

`விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கிறோம்’ என்ற பெயரில், கடந்தகாலங்களில் பல சர்ச்சைக் கருத்துகளைப் பதிவுசெய்திருக்கிறது `பீட்டா’ அமைப்பு. தற்போது, `அசைவம் சாப்பிடும் ஆண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளாதீர்கள்’ என்று சர்ச்சையைக் கிளப்பும் கோரிக்கை ஒன்றைப் பெண்களிடம் முன்வைத்திருக்கிறது. இது குறித்து பீட்டா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``மாமிசம் சாப்பிடும் ஆண்களுடன் செக்ஸ் ஸ்ட்ரைக் செய்யவேண்டிய நேரமிது. சில ஆண்கள், அசைவம் சாப்பிடுவதன் மூலம் தங்களது பெருமையை மற்றவர்களிடம் காட்டிக்கொள்ள நினைக்கின்றனர். அத்தகையவர்கள் விலங்குகளை மட்டும் துன்புறுத்தவில்லை, இந்த பூமிக்கும் கூடுதல் கார்பனை வெளியேற்றி கேடு செய்கின்றனர்’’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. பீட்டாவின் இந்த அறிக்கைக்குப் பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.

நியூஸ் எம்பஸி

அடையாளம் மாறிப்போன உக்ரைன் வீரர்!

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யப் படையினர், சில உக்ரைன் வீரர்களைச் சிறைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். கைதான 205-க்கும் அதிகமான உக்ரைன் வீரர்களில் ஒருவரான மிக்கைலோ டையனோவ் என்பவரை மட்டும் தற்போது ரஷ்ய ராணுவம் விடுவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ரஷ்ய ராணுவத்தால் கைதுசெய்யப்படுவதற்கு முன்பு, கைதுசெய்யப்பட்டு விடுதலையான பிறகு என மிக்கைலோவின் இரண்டு புகைப்படங்களையும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறது. விடுதலையான நிலையில், உடல் மெலிந்து, கண்களின் கீழ்ப்புறம் வீங்கி, எலும்புகள் வெளியில் தெரியும்படி மிகவும் பரிதாபமான நிலையிலிருக்கிறார் டையனோவ். மேலும், ``மிக்கைலோ டையனோவ் அதிர்ஷ்டசாலி. ரஷ்யாவிடம் பிடிபட்ட பலரும் உயிர் பிழைக்கவில்லை. நாசிச மரபுகளை ரஷ்யா எப்படித் தொடர்ந்து பின்பற்றுகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு’’ என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. தற்போது, கீவ் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார் டையனோவ்!

நியூஸ் எம்பஸி

கியூபாவில் கொண்டாட்டம்!

கியூபாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொள்வது, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது தொடர்பாக அந்த நாட்டின் `குடும்பச் சட்ட’த்தில் கடந்த 2019-ல் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு கியூபாவிலுள்ள மதத் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்தச் சீர்திருத்தங்கள் கிடப்பில் போடப்பட்டன. இந்த நிலையில், கடந்த வாரம் இது தொடர்பான பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது கியூபா அரசு. வாக்கெடுப்பில், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வது, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது ஆகியவற்றுக்கு ஆதரவாக 66.9% பேரும், எதிராக 33.1% பேரும் வாக்களித்தனர். இதையடுத்து, அந்த நாட்டிலுள்ள தன்பாலின ஈர்ப்பாளர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்!