அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

நியூஸ் எம்பஸி

புரூஸ் லீ
பிரீமியம் ஸ்டோரி
News
புரூஸ் லீ

கருமுட்டை உருவாகி 30 ஆண்டுகள் கழித்து பிறந்திருப்பதால், இந்த இரட்டைக் குழந்தைகளை, `உலகின் மிக வயதான குழந்தைகள்’ என அங்கீகரித்திருக்கிறது தேசிய கருமுட்டை தான மையம்

நியூஸ் எம்பஸி

புரூஸ் லீ மரணத்துக்குத் தண்ணீர் காரணமா?

உலகப் புகழ்பெற்ற தற்காப்புக்கலை ஜாம்பவான் புரூஸ் லீ, 1973-ம் ஆண்டு தன்னுடைய 32-வது வயதில் பெருமூளை வீக்கம் காரணமாக உயிரிழந்தார். வலி நிவாரண மாத்திரைகளை, பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக உட்கொண்டதே புரூஸ் லீயின் இறப்புக்குக் காரணம் என மருத்துவ உலகம் நம்பிவந்தது. மறுபக்கம், அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அவரின் காதலியால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுவிட்டதாகவும் சந்தேகங்கள் பரபரத்தன. இந்த நிலையில், ஐரோப்பிய சிறுநீரக சங்க ஆய்விதழின் டிசம்பர் பதிப்பில் வெளியாகியிருக்கும் மருத்துவக் கட்டுரை அனைவரையும் அதிர்ச்சி கலந்த வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

புரூஸ் லீ அதிக அளவு தண்ணீர் குடித்ததால் இறந்திருக்கலாம் எனச் சிறுநீரக நிபுணர்கள்குழு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்திருப்பதாக, அந்தச் சங்கத்தின் ‘கிளினிக்கல் ஜர்னல் ஆஃப் கிட்னி’-யில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிகப்படியான தண்ணீரை உட்கொண்டதால், ரத்தத்தில் சோடியத்தின் அளவு குறைந்து, சிறுநீரகங்கள் அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற முடியாமல் `ஹைபோநட்ரீமியா’ ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நியூஸ் எம்பஸி

10 நாள்களில் 17 பேரின் தலை துண்டிப்பு!

கடந்த மார்ச் மாதம் ஒரே நாளில், 81 ஆண்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றி, ஒட்டுமொத்த உலகத்தையும் பரபரக்க வைத்தது சவுதி அரேபியா அரசு. இந்த நிலையில், அங்கு கடந்த 10 நாள்களில் மட்டும் 17 பேரின் தலையைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. போதைப்பொருள்கள் பயன்பாடு தொடர்புடைய குற்றங்களில் இத்தகைய தண்டனை அங்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முன்னதாக மரண தண்டனையை வெகுவாக குறைத்துக்கொண்டிருப்பதாகக் கூறியிருந்த சவுதி அரசின் இந்த நடவடிக்கையை, `வருந்தத்தக்க நிகழ்வு’ என ஐ.நா குறிப்பிட்டிருக்கிறது. சமீபத்திய தரவுகளின்படி, சவுதியில் இந்த ஆண்டு 130-க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது தெரியவருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளோடு ஒப்பிட்டால், இந்த எண்ணிக்கை மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூஸ் எம்பஸி

பிறக்கும்போதே முப்பது வயது... உலகின் மிக வயதான இரட்டைக் குழந்தைகள்!

அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தைச் சேர்ந்த பிலிப் ரிட்ஜ்வே-ரேச்சல் ரிட்ஜ்வே தம்பதி, 30 ஆண்டுகளாக (1992 - ஏப்ரல் மாதம்) பூஜ்ஜியத்துக்கும் கீழே, மைனஸ் 200 டிகிரியில் கிரையோபிரிசர்வ் செய்யப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட கருமுட்டைகளிலிருந்து இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்து சாதனை படைத்திருக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதி, பிறந்த இந்த இரட்டைக் குழந்தைகளில் ஆண் குழந்தைக்கு `திமோத்தி’ எனவும், பெண் குழந்தைக்கு `லிடியா’ எனவும் பெயரிட்டிருக்கின்றனர். கருமுட்டை உருவாகி 30 ஆண்டுகள் கழித்து பிறந்திருப்பதால், இந்த இரட்டைக் குழந்தைகளை, `உலகின் மிக வயதான குழந்தைகள்’ என அங்கீகரித்திருக்கிறது தேசிய கருமுட்டை தான மையம். இதன் மூலம் 27 ஆண்டுகளாக உறையவைக்கப்பட்ட கருமுட்டையிலிருந்து 2020-ம் ஆண்டு பிறந்த `மோலி கிப்சன்’ என்ற குழந்தையின் சாதனையை முறியடித்திருக்கின்றன இந்தக் குழந்தைகள்!