Published:Updated:

அதிரவைக்கும் தாலிபன்களின் 100 நாள் ஆட்சி!

தாலிபன்கள்
பிரீமியம் ஸ்டோரி
தாலிபன்கள்

பட்டினியில் 10 லட்சம் குழந்தைகள்... கடுமையாக ஒடுக்கப்படும் பெண்கள்... தொடர் குண்டுவெடிப்புகள்...

அதிரவைக்கும் தாலிபன்களின் 100 நாள் ஆட்சி!

பட்டினியில் 10 லட்சம் குழந்தைகள்... கடுமையாக ஒடுக்கப்படும் பெண்கள்... தொடர் குண்டுவெடிப்புகள்...

Published:Updated:
தாலிபன்கள்
பிரீமியம் ஸ்டோரி
தாலிபன்கள்

‘இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல் இப்போது நாங்கள் இல்லை; இது சரிசெய்வதற்கான நேரம். கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் பெண்களை அனுமதிப்போம். ஊடகச் சுதந்திரம் பாதுகாக்கப்படும். ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானிலும் அமைதியை ஏற்படுத்துவோம். மக்களின் வாழ்வை மேம்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். உலகச் சமுதாயம் எங்களை நம்ப வேண்டும்!’ - தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த புதிதில் உதிர்த்த நம்பிக்கை வார்த்தைகள்தான் இவை!

தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றி நூறு நாள்கள் கடந்துவிட்டன. ஆனால், அவர்கள் சொன்னதுபோல் எந்த நேர்மறையான மாற்றமும் அங்கு நிகழவில்லை. மாறாக, என்னவெல்லாம் நடந்துவிடக் கூடாது என்று உலக நாடுகள் அஞ்சினவோ, அவைதான் அங்கு அரங்கேறிக்கொண்டிருக்கின்றன!

அதிரவைக்கும் தாலிபன்களின் 100 நாள் ஆட்சி!

பெண்களுக்கெதிரான கொடுமைகள்!

‘தாலிபன்கள் ஆப்கனைக் கைப்பற்றியதும், அவர்கள் முதலில் கொண்டுவந்த சட்டமே பெண் சுதந்திரத்துக்கு எதிராகத்தான் இருந்தது. `பெண்கள் ‘ஹிஜாப்’ அணியாமலோ, ஆண்களின் துணை இல்லாமலோ வீட்டைவிட்டு வெளியில் வரக் கூடாது’ எனத் தடை விதிக்கப்பட்டது. அதேசமயம், தாலிபன்கள் வீடு வீடாகச் சென்று இளம்பெண்களையும், சிறுமிகளையும் தூக்கிவந்து வலுக்கட்டாயமாகத் திருமணமும் செய்துகொண்டார்கள். `அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கிவிட்டோம்’ எனக் கூறிய தாலிபன்கள், நீதிபதிகள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள் என உயர் பொறுப்பில் இருக்கக்கூடிய பெண்கள்மீது குறிவைத்துத் தாக்குதல் நடத்தினர். சிலர், கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டனர். ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கல்லூரிகளின் வகுப்பறைகளில் திரைச்சீலைகள் போடப்பட்டு இரு பாலரும் பிரித்து வைக்கப்பட்டனர்.

மிக முக்கியமாக, தாலிபன்களின் இடைக்கால ஆட்சி அமைந்தபோது, அமைச்சரவையில் பெண்களுக்கென எந்த இடமும் கொடுக்கப்படவில்லை. பெண்கள் விவகாரத்துறை அமைச்சகமும் கலைக்கப்பட்டது. தாலிபன்களின் இத்தகைய செயல்பாடுகளை எதிர்த்து, ‘ `பெண்களுக்கும் சம உரிமை வேண்டும்’ எனக் கோரி ஆப்கன் பெண்கள் போராட்டத்தில் இறங்கினர். அமைதிவழியில் போராடிய பெண்களை சவுக்கால் அடித்தும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் அவர்களின் போராட்டத்தை தாலிபன்கள் ஒடுக்கினர். இந்த நிலையில், தற்போது பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வருவதற்கும், பணியிடங்களுக்குச் செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது’ என்பதான அதிர்ச்சியூட்டும் செய்திகளே ஆப்கனிலிருந்து தொடர்ந்து வெளிவருகின்றன.

அதிரவைக்கும் தாலிபன்களின் 100 நாள் ஆட்சி!

கடுமையான சட்டங்கள், கொடூரமான தண்டனைகள்!

தாலிபன்கள் தீவிரமான ஷரியத் சட்டங்களை அமல்படுத்தினர். இசை நிகழ்ச்சிகள், கேளிக்கைகளைத் தடைசெய்தார்கள். பொதுவெளியில் பாடல் கேட்டவர்கள் சுடப்பட்டனர். நாட்டுப்புறப் பாடகர் ஃபவாத் அந்தராபியைக் கொடூரமாகக் கொலைசெய்தனர். திருமணவிழாவில் இசை நிகழ்ச்சி நடத்திய 13 பேர், தாலிபன்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகினர். தாலிபன்களின் ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் கடுமையான அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன.

தற்போதும்கூட, எட்டு புதிய கட்டுப்பாடுகளை தாலிபன்கள் கொண்டுவந்திருக்கின்றனர். அதாவது, ‘பெண்கள் நடிப்பில் வெளிவரும் தொலைக்காட்சித் தொடர்களை ஒளிபரப்பக் கூடாது, பெண் நிருபர்கள், பத்திரிகையாளர்கள் ஊடகங்களில் பேசும்போது கட்டாயம் தலை, முகத்தை மறைத்து ‘ஹிஜாப்’ அணிந்திருக்க வேண்டும். வெளிநாட்டு கலாசாரத்தைப் போற்றும் படங்கள், ஷரியத் கொள்கைக்கு எதிரான படங்களுக்கு முற்றிலுமாகத் தடைவிதிக்கப்படுகிறது’ என்று அதில் கூறப்பட்டிருக்கிறது.

தொடர் குண்டுவெடிப்புகள்!

தாலிபன்கள் ஆட்சியில் தீவிரவாதத் தாக்குதல்களும் கடுமையாக அதிகரித்திருக்கின்றன. கடந்த அக்டோபர் மாதத் தொடக்கத்தில், ஷியா பிரிவினர் வழிபடும் மசூதி ஒன்றில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 50 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். இந்தச் சம்பவம் நடந்த சில நாள்களில், காபூல் விமான நிலையம், பேரோன் ஹோட்டல், குண்டூஸ் பகுதி என மேலும் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியான குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்த ஒரு மாதத்தில் மட்டும் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். இது போன்ற தாக்குதல்களை தாலிபன்களுக்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் தொடர்ந்து நடத்திவருகின்றனர். அதேபோல் இந்த நவம்பர் மாதமும், தலைநகர் காபூலிலுள்ள சர்தார் முகமது தாவுத்கான் ராணுவ மருத்துவமனை அருகே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில், 19 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

பாதாளத்தில் பொருளாதாரம்... பட்டினியில் பொதுமக்கள்!

ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டுவந்த சர்வதேச நிதி உதவிகள் நிறுத்தப்பட்டன. வெளிநாட்டு முதலீடுகள், வர்த்தக உறவுகள், போக்குவரத்து என அனைத்து நடவடிக்கைகளும் துண்டிக்கப்பட்டன. தாலிபன்களும், ஆப்கானியர்கள் அனைவரும் `ஆப்கனி’ நாணயத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறி வெளிநாட்டு நாணயங்களுக்குத் தடைவிதித்தனர். அரசு கஜானா காலியானதால், அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதும் அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்குவதும் நிறுத்தப்பட்டன. ஆப்கன் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குச் சென்றது.

மேலும், அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம், உணவுத் தட்டுப்பாடு, பசி, பஞ்சம், வேலைவாய்ப்பின்மை ஆகியவை பன்மடங்கு அதிகரித்தன. `ஆப்கானிஸ்தானில் வாழக்கூடிய 95 சதவிகித மக்களுக்குப் போதுமான உணவு இல்லை. சுமார் 2.3 கோடி ஆப்கன் மக்கள் பட்டினியில் சிக்கித் தவிக்கிறார்கள்’ என்று சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிரவைக்கும் தாலிபன்களின் 100 நாள் ஆட்சி!

சாவின் விளிம்பில் குழந்தைகள்!

ஆப்கனில் குழந்தைகளின் நிலை மிகக்கடுமையாக மோசமடைந்திருக்கிறது. யுனிசெஃப் (UNICEF) அறிக்கையில், 50 லட்சம் ஆப்கன் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் சாவின் விளிம்பில் இருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உணவுக்காக, உடைமைகளையும் பெற்ற குழந்தைகளையும் விற்கும் கொடூர நிலைமைக்கு ஆப்கன் மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். தாலிபன்களின் ஆட்சியால், உலக அரங்கில் கைவிடப்பட்ட தேசமாக ஆப்கானிஸ்தான் உருமாறியிருக்கிறது. மனிதநேய அடிப்படையில் ஐ.நா-வும், உலகச் சுகாதார அமைப்பும் சில உதவிகளைச் செய்துவருகின்றன. ஆனால், அவை போதுமானதாக இல்லை. இந்த நிலை நீடித்தால், வரும் பனிக்காலத்துக்குள் லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் குழந்தைகளும் பட்டினியால் உயிரிழக்கக்கூடும் எனக் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும், தாலிபன்களின் கடுமையான சட்டங்களும் கட்டுப்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டும் மக்கள்மீது திணிக்கப்பட்டும் வருகின்றன. ஆட்சியைக் கையில் வைத்திருப்பவர்கள் மோசமானவர்களாக இருக்கலாம். அதற்காக அங்கு வாழும் அப்பாவி மக்களுக்குச் சென்று சேரவேண்டிய உதவிகளை உலக நாடுகள் நிறுத்தக் கூடாது. ஆப்கன் மக்களுக்கு உடனடியாகச் சர்வதேச நாடுகளின் உதவிகள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதே உலகம் முழுவதுமுள்ள மக்களின் அவசரக் கோரிக்கையாக இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism