Published:Updated:

இன்று நேபாளம்... நாளை ?

மிரட்டும் பூகம்பம்... மிரளும் தமிழகம்

றந்தவர்களின் எண்ணிக்கையைச் சரியாகக் கணிக்கக்கூட முடியாத அளவில் பூகம்பத்தின் கோரப் பிடியில் சிக்கியிருக்கிறது நேபாளம். பாரபட்சம் காட்டாமல் அனைத்துக் கட்டடங்களையும் சிதைத்து சின்னாபின்னமாக்கி இருக்க... அதன் அதிர்வலைகள் தமிழகம் வரை பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள தயாராக இருக்கிறோமா நாம்?

இன்று நேபாளம்... நாளை ?

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தரராஜனிடம் பேசினோம். ‘‘இயற்கைச் சீரழிவிலே மிகக் கொடூரமானது பூகம்பம்தான். அது, உயிர்களைக் கொல்வதுடன் நிற்காமல், அடுக்குமாடிக் கட்டடங்களையும் சுக்கு நூறாக்கிவிடும். அத்தகைய வீரியம் அதற்கு உண்டு. கடந்த காலங்களில், இந்தியாவின் வட மாநிலத்தில் லத்தூர் மற்றும் பூஜ் ஆகிய மாவட்டங்களில் மிகப் பெரிய பூகம்பங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதில், ஒரு கட்டடம்கூட மிஞ்சவில்லை. அனைத்தும் தரைமட்டமாயின. அந்த கோரச் சம்பவத்தைத் தொடந்து மத்திய அரசானது, கட்டடங்களுக்கான ஒரு வரைமுறையை (National Building Code) வெளியிட்டது. அதன்படி, ஒரு கட்டடத்தை இப்படித்தான் கட்ட வேண்டும் என்ற விதிகளை அரசு வகுத்திருக்கிறது. ஆனால், இன்று வரை அந்த விதிமுறைகளை யாருமே பின்பற்றுவதில்லை. அதைக் கண்காணிக்கவும் மத்திய அரசு தவறிவிட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1934-ல் இமயமலையில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதுகுறித்த ஆய்வுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று காலம் காலமாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தும் அந்த முயற்சி கிடப்பிலே இருந்ததுதான் மிச்சம். கடந்த ஆண்டு, மியாமி பல்கலைக்கழகத்தினர் வெளியிட்ட ஆய்வு, அனைவரையும் திகில் அடைய வைத்திருக்கிறது. அதில், இந்தியப் பெருங்கடலில் நீண்டகாலமாக பாறைகளுக்கு அடியில் அழுத்தம் ஒன்று உருவாகி வருகிறது. அது நாளுக்கு நாள் அதிகரித்து தன் ஆற்றலை வீரியப்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த அழுத்தம் வெளிப்படும்போது, 9.8 ரிக்டர் அளவு நில நடுக்கமும், 130 அடி அளவுள்ள அலைகளும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்டு உயிர்ச் சேதம் கடுமையாக இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள்.

இன்று நேபாளம்... நாளை ?

இதுபோன்ற இயற்கைப் பேரழிவின்போது நம்மை காத்துக்கொள்ளும் வழிமுறைகள் என்னென்ன என்பதையும் நாம் அறிந்திருக்கவில்லை. இதனை முறையாகக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டியது நம் அரசுதான். அதன் விளைவுதான் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரை மாய்த்துக்கொள்ளும் செய்திகள். இயற்கையை சிதைத்து பாறைகளைக் குடைந்து ஆய்வுக் கூடங்கள் அமைப்பதுகூட பின்னாளில் கடுமையான சீரழிவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றன. பெரிய திட்டங்களால் என்றுமே பெரிய ஆபத்துகள் காத்து இருக்கின்றன’’ என்று எச்சரிக்கை செய்கிறார் அவர்.

மத்திய அரசின் உள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரான வெற்றிச்செல்வனிடம் பேசினோம். “குஜராத் பூகம்பம் மற்றும் தமிழகத்தில் சுனாமிக்குப் பிறகு விழித்துக்கொண்ட மத்திய அரசு, தேசிய பேரிடர் மேலாண்மை என்ற ஆணையத்தை உருவாக்கியது. அதன்மூலம் மாநில முதல்வர்களின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் அந்தந்த மாநிலங்களில் இந்த ஆணையம் செயல்படுத்தப்பட்டது. மாவட்டம்தோறும் கலெக்டர்கள் இதன் பொறுப்பாளர்களாக அங்கம் வகிக்கின்றனர். இயற்கைப் பேரழிவின்போதுதான் இவர்கள் அனைவரும் ஒன்றுகூட வேண்டும் என்பதில்லை. அதற்கு முன்பே முன்னெச்சரிக்கைத் திட்டங்களை வகுத்திருக்க வேண்டும். மேலும், வருடத்துக்கு மூன்று முறையாவது இந்தக் குழு கூடி  ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருக்க வேண்டும். இது எதுவும் தமிழகத்தில் நடந்ததாகத் தெரியவில்லை. கூடங்குளம் மற்றும் கல்பாக்கத்தில் அணு உலை விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட ஒத்திகையின்போது அதில் பங்கெடுத்த அரசு அதிகாரிகளுக்கு யாருக்கு என்ன உத்தரவு கொடுக்க வேண்டும்  என்பதுகூட தெரியாமல் திணறியதை நேரில் கண்டோம். அவர்கள் பயன்படுத்திய வாக்கி டாக்கிகளும் வேலை செய்யவில்லை.

இன்று நேபாளம்... நாளை ?

பேரழிவு காலத்தில் பொதுமக்களை மீட்பதற்கு சிறப்புக்குழு ஒன்று அரக்கோணத்தில் இருக்கிறது. அதில், மொத்தம் 1,500 பேர் இருக்கின்றனர். தமிழகத்தில் எங்கு இயற்கைப் பேரழிவு ஏற்பட்டாலும் இந்தக் குழுதான் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை இருக்கிறது. மேலும், இதுபோன்ற காலகட்டத்தில் பொதுமக்களுக்கு போதிய விழிப்பு உணர்வு இல்லாமல் உயிர்ச் சேதம் அதிகமாகிறது. அதற்கு உதாரணம்  தானே புயலால் 44 உயிர்களை வாரிக் கொடுத்ததுதான்.

எங்களுடைய கோரிக்கை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு பேரிடர் காலத்தின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பயிற்சியை தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். வெளிநாடுகளில் குழந்தைகளுக்கு பேரிடர் மேலாண்மை அவர்களுடைய  பாடத்திட்டங்களில் கட்டாயம் இடம்பெற்றுள்ளது. நம் கல்வித் துறையும் அதைப் பின்பற்றி அரசுப் பள்ளிகளில் இதுகுறித்த விழிப்பு உணர்வு வகுப்புகளை எடுக்க முன்வர வேண்டும்.

இன்று நேபாளம்... நாளை ?

இந்த பேரிடர் மேலாண்மையில் அரசு காட்டும் அலட்சியம் இயற்கை சீற்றங்களின்போது உயிர்ச்  சேதத்தை அதிகப்படுத்தும்.

2005-ல் மத்திய அரசு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதோடு சரி. அதன் பிறகு, எந்தவொரு கூட்டத்தையும் மத்திய அரசு கூட்டவில்லை. மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை மாநில அரசானது அதற்கேற்றார்படி புதிய விதிகளை இயற்ற வேண்டும். 10 வருடங்களைக் கடந்த நிலையில் தமிழகத்தில் அந்தச் சட்டத்தில் எந்தவொரு புதிய சட்ட விதிகளும் வடிவமைக்கப்படவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்’’ என்றார் அவர்.

இன்று நேபாளம்... நாளை ?

‘வரும் முன் காப்போம்’ என்று வெறும் வாசகங்களை எழுதி வைத்தால் மட்டும் போதாது!

- நா.இள.அறவாழி

டேஞ்சர் மண்டலம் மூன்றில் சென்னை!

இந்திய மாநிலங்களைப் பொறுத்தவரையில், எங்கே நிலநடுக்கம், பூகம்பம் ஏற்பட்டாலும்... உடனே விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுடுகிறவர்கள் யார் தெரியுமா? தேசிய பேரிடர் மீட்புப் படை (நேஷனல் டிஸ்ஸாஸ்டர் ரெஸ்பான்ஸ் ஃபோர்ஸ்). இந்த டீமில் ஒரு பகுதியினர்தான் தற்போது நேபாளத்தில் மீட்புப் பணிக்காக சென்றிருக்கிறார்கள். இந்தப் படை டெல்லியை தலைமையிடமாகக் கொண்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முகாம்கள் இருக்கின்றன. 10 பட்டாலியன்களில் மொத்தமாக 11 ஆயிரத்து 500 வீரர்கள் இருக்கிறார்கள். சகலவித மீட்புப் பணிகளில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். இந்தப் படைப் பிரிவின் தற்போதைய டி.ஜி.பி-யாக இருப்பவர் ஓ.பி.சிங். இதே பிரிவில் ஐ.ஜி-யாக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த சந்திப் ராய் ரத்தோர் ஐ.பி.எஸ். தமிழகத்தில் இந்தப் படையினர், வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் முகாம் அமைத்து இயற்கையின் நடவடிக்கையை கண்காணிக்கிறார்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி ஒருவர், ‘‘மிகவும் டேஞ்சர் மண்டலம் 5-ல் இருப்பது அந்தமான் தீவுகள். மிகத்தீவிர வாய்ப்புள்ள இடம் அது! கடலுக்கடியில் ஃபிளேட்டுகளில் ஏற்படும் உராய்வுகள் அடிக்கடி நிகழ்கின்ற இடம். எங்களுக்கு போர்ட்ப்ளேயரில் ஒரு முகாம் உள்ளது. டேஞ்சர் மண்டலம் 3-ல் சென்னை, கோவை வருகின்றன. மற்ற முக்கிய ஊர்கள் டேஞ்சர் மண்டலம் 2-ல் வருகின்றன. இவை எந்த லெவலில் இருந்தாலும், அதையெல்லாம் சமாளிக்கும் வகையில் எங்களிடம் தேர்ந்த வீரர்களும் அதற்கான கருவிகளும் இருக்கின்றன. ‘எப்போதும் பேரிடர் சேவையில்’ என்பதுதான் எங்களது தாரகமந்திரம். க்ளைமேட் எப்படி இருந்தாலும், அதை எதிர்கொண்டு மீட்புப் பணியில் ஈடுபடுவது எப்படி என்று எங்களுக்குத் தெரியும்.

திடீரென ஓர் ஆற்றை கடக்க தற்காலிக பாலம் அமைக்க வேண்டுமா? எங்களால் நிச்சயமாக முடியும். மௌலிவாக்கத்தில் நடந்த பில்டிங் விபத்தில் 12 பேர்களை உயிருடன் மீட்டோம். 52 உடல்களை மீட்டோம். 72 மணிநேரத்துக்குப் பிறகு எங்களது மோப்பநாய் உதவியுடன் மௌலிவாக்கத்தில் ஒடிசா இளைஞர் ஒருவரை உயிருடன் மீட்டோம். நிலநடுக்கம் மட்டுமல்ல! கெமிக்கல் கசிவு, கதிரியக்க பொருட்களின் ஆபத்து, நியூக்லியர் வீச்சு போன்ற மிக மோசமான விபத்துகளில்கூட நாங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். ஆபத்தில் உதவுவதுதான் எங்கள் வேலை’’ என்று சொல்கிறார்.

- ஆர்.பி.

இமயமலை வளர்கிறது!

80 வருடங்களுக்கு ஒருமுறை நேபாளம் மிகப்பெரிய நிலநடுக்கத்தை சந்திக்கும் என்பது நேபாள மக்களைப் பொறுத்தவரை ஒரு செவிவழிச் செய்தியாக உலவிவருகிறது. 1934-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது 12 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு சிறிய நிலஅதிர்வுகள் ஏற்பட்டாலும், பாதிப்பு அதிகம் இல்லை. 2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது 11 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், ‘இளைஞர்கள் தாங்கள் தப்பிவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த வேளையில், நிச்சயம் பெரிய அளவில் நிலநடுக்கம் வரும்’ என்றே முதியவர்கள் கூறியுள்ளனர். தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இது  உண்மையாகிவிட்டதாகத் தகவல்கள் பரவுகின்றன. இதன் பின்னணியில் அறிவியல் உண்மை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விஞ்ஞானிகள், ‘‘இந்திய புவித்தட்டு, எப்போதுமே யூரோ - ஏசியன் புவித்தட்டை அழுத்தியபடி மேலே எழும்பியுள்ளது. எனவேதான், இமயமலை ஆண்டுக்கு 5 மி.மீ வீதம் உயர்ந்து வருகிறது. பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த அழுத்தத்தை, ஒரு நிலநடுக்கத்தின் மூலம், குறைத்துக்கொள்வது பூமியின் இயல்பு’’ என்கின்றனர்.

- ஜெ.பிரகாஷ்

முற்றுப்புள்ளி வைத்த ஜப்பான்!

“உலகின் எந்தவொரு பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதை முழுமையாகத் தடுக்க முடியாது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகமும் கேரளமும் பாதுகாப்பாகவே இருக்கின்றன. தற்போது நமக்கு பெரும் சவாலாக இருப்பது பூகம்பத்தின்போது கட்டடங்கள் இடிந்து விழுவது. ஜப்பானில் நீண்ட ஆய்வுக்குப் பிறகு அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். தடுப்பு கட்டடங்களைக் கட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் நிலநடுக்கத்தின்போது கட்டடங்கள் குலுங்குமே தவிர தரைமட்டமாகாது. அதேபோல், மண் பரிசோதனை செய்வது என்பது மிக முக்கியம். கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் பிரமாண்ட கட்டடங்களைக் கட்டுவதற்கு புவியியல் நிபுணர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும். இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இயற்கைப் பேரழிவின்போது உயிர்சேதத்தைத் தவிர்க்க முடியும்’’ என்கிறார் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் புவியியல் துறைத் தலைவர் மணிமாறன்.