Published:Updated:

டொனால்ட் ட்ரம்பின் ஓராண்டு ஆட்சியில் அமெரிக்கா வளர்ந்ததா... வீழ்ந்ததா?!

டொனால்ட் ட்ரம்பின் ஓராண்டு ஆட்சியில் அமெரிக்கா வளர்ந்ததா... வீழ்ந்ததா?!
டொனால்ட் ட்ரம்பின் ஓராண்டு ஆட்சியில் அமெரிக்கா வளர்ந்ததா... வீழ்ந்ததா?!

கருணாநிதி போல குடும்ப அரசியல், சீமான் போல மண்ணின் மைந்தனுக்கு ஆதரவு, ஜெயலலிதாவின் பிடிவாதம், விஜயகாந்த் போன்ற பேச்சு என்று தமிழக அரசியல்வாதிகளின் மொத்தக் கலவையாக அமெரிக்காவின் அதிபராக ஆட்சியில் அமர்ந்திருக்கிறார் ட்ரம்ப், அதிபராகப் பொறுப்பேற்று ஒரு வருடம் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. பயணத்தடை, மெக்ஸிகோ சுவர், வடகொரியாவுக்கு செக், சிலிக்கான் வேலிக்கு மிரட்டல், ஹச்1பி விசா, அமெரிக்கா ஃபர்ஸ்ட் என டி20 ஸ்டைல் வேலைகளைச் செய்கிறார் அமெரிக்க அதிபர். அதிபராக ஓராண்டில் ட்ரம்ப் என்ன செய்தார் என்பதில்தான் உலகின் பார்வை உள்ளது.

கூட்டமில்லா பதவியேற்பு

ஒபாமா அதிபராகப் பதவியேற்ற இரண்டு முறையும் வெள்ளை மாளிகை முன்பு தரை தெரியாத அளவுக்கு மனிதர்களால் நிரம்பி வழிந்தது வெள்ளை மாளிகை வளாகம். ட்ரம்பின் பதவியேற்பில் கூட்டமே இல்லை. மேலும் நீங்கள் எங்கள் அதிபரே இல்லை என்ற பதாகைகளுடன் எதிப்பாளர்கள் அமெரிக்க வீதிகளில் வலம் வந்தனர். அமெரிக்காவின் கடற்கரைப் பகுதிகளில் ட்ரம்புக்குத் துளியும் செல்வாக்கு இல்லை. அங்குதான் அதிகம் படித்தவர்கள் இருக்கிறார்கள் என்பது ஜனநாயகக் கட்சியின் வாதம். 

ட்விட்டர் அதிபர்

அதிபராகப் பதவியேற்ற நாள்முதல் தனது சொந்த ட்விட்டர் பக்கத்திலிருந்து 2598 ட்விட்களை செய்துள்ளார். அதிபருக்கான அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து 1797 ட்விட்களை செய்துள்ளார். இதில் 672 ட்விட்கள் தனது சொந்தப் பக்கத்திலிருந்து ரீ-ட்விட் செய்யப்பட்டவை. ஒபாமா அதிபராக இருந்த காலகட்டத்தில் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து 18 மாதங்களில் 372 ட்விட்களைதான் செய்துள்ளார். ஆனால் ட்ரம்ப் ட்விட்டரிலேயே வாழ்கிறார் ஒருநாளைக்கு சராசரியாக 12 ட்விட்களை தட்டி விடுகிறார் ட்ரம்ப். 

தடையோ தடை

ட்ரம்ப் பதவியேற்று முதலில் கையெழுத்திட்டதே ஒபாமா கேர் ரத்து செய்யும் ஆணையில்தான். அதனை தொடர்ந்து சிரியா உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழையத் தடை என்று அறிவித்தார். பின்னர் ஹ1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வேலைக்கு வருபவர்களுக்கும் செக் வைத்தார். மெக்ஸிகோவிடம் சுவர் எழுப்பப் பணம் கேட்டது. வடகொரியாவை ஒற்றை பட்டனை அழுத்தி அழித்து விடுவேன் என மிரட்டுவது என வருடம் முழுவதும் அதிர்ச்சி மோடிலேயே வைத்திருந்தார்.

மிரட்டிய சிலிக்கான் வேலி

அமெரிக்காவில் சட்ட விரோதமாகப் புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்றுவேன். அமெரிக்கர் அல்லாத பிறநாட்டவரின் எண்ணிக்கையையும் குறைக்கும் அமெரிக்க ஃபர்ஸ்ட் திட்டத்துக்கு ட்ரம்ப் அச்சாரம் போட்டதும் சிலிக்கான் வேலி சிஇஓ-க்களின் எதிர்ப்பு முதல் வில்லனாக ட்ரம்புக்கு அமைந்தது. திறமையானவர்களை இழந்துவிடுவீர்கள் என கூகுள் சுந்தர் பிச்சை குரலுயர்த்தினார். என்னங்க சார் உங்க சட்டம், அமெரிக்கா புலம்பெயர்ந்தவர்களால் கட்டமைக்கப்பட்டது என மார்க் ஆங்க்ரி மோடை ஆக்டிவேட் செய்தார். 

ஆன்டி இந்தியன்

இந்தியாவுடன் நட்பு பாராட்டுவேன் என்று சத்தமாக முழங்கிய ட்ரம்புக்கு இந்தியர்கள் மீது வெறுப்பு அதிகமாகிவிட்டது. ஹச்1பி விசாவில் கிடுக்கிபிடி போட்ட ட்ரம்ப் இப்போது லட்சக்கணக்கில் இந்திய டெக்கிகளை வெளியேற்ற ப்ளான் போடுகிறார். அதுமட்டுமல்லாமல் அமெரிக்கர்களைப் பணியமர்த்த வலியுறுத்தும் திட்டமும் உள்ளதாம். இதனால் நிறுவனங்களுக்குச் செலவு அதிகமாகும் என விழி பிதுங்கியுள்ளனர் சிலிக்கான் வேலி சிஇஓ-க்கள். க்ரின்கார்டுக்கு காத்திருப்போரும் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்றால் 6 லட்சம் இந்தியர்கள் இந்தியா திரும்பும் சூழல் ஏற்படும் என்கின்றனர் அமெரிக்க வாழ் இந்தியர்கள்.

பயமுறுத்தும் வார் ரூம்

அமெரிக்க அதிபருக்கு அன்றாடம் அமெரிக்கா குறித்த தகவல்களை வழங்க வெள்ளை மாளிகையில் வார் ரூம் என்ற அமைப்பு செயல்படுகிறது. காலை 9 மணிக்கும், மாலை 4 மணிக்கும் இந்த அமைப்பு அளிக்கும் அறிக்கையில் அமெரிக்காவின் ப்ளஸ், மைனஸ் இருக்கும். ஆனால் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு வார் ரூம் பாசிட்டிவ் செய்திகளை மட்டும்தான் தரவேண்டும் என்ற உத்தரவால் அமெரிக்கா புகழ் மட்டுமே வாசிக்கிறது. இது ஆபத்தானது என்ற அபயக்குரலும் எழத் தொடங்கிவிட்டது.

பொருளாதாரத்தில் சிக்ஸர்

2016ல் ஒபாமா அரசு இருந்த போது 1.5 சதவிகிதமாக இருந்த ஜிடிபி ட்ரம்பின் ஓராண்டு ஆட்சியில் 2.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2009 பொருளாதாரச் சரிவின் போது 10 சதவிதமாகவும், ட்ரம்ப் பதிவியேற்பதற்கு முன்பு 5 சதவிகிதமாகவும் இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் தற்போது 4.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ட்ரம்ப் அதிபராவதற்கு முன்பு நவம்பர் 9, 2016ல் 18589 புள்ளிகளாக இருந்த டவ் ஜோன்ஸ் பங்குச்சந்தை தற்போது 26,014 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. ட்ரம்ப் ஆட்சியில் பொருளாதாரம் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது என்பதில் மறுப்பதற்கு இடமில்லை.

துப்பாக்கிச் சூடு

ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து நடந்த மோசமான தாக்குதல்கள் எண்ணிக்கை மொத்தம் ஐந்து. அதில் உயிரிழந்தோர் மட்டும் 145 பேர். ஒரு ஆண்டில் அமெரிக்காவின் 127 நகரங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாசாரம் என்பதை தாண்டி அரசு துப்பாக்கி சந்தையைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம். அமெரிக்காவில் உள்ள அரசியல் லாபி தான். குறிப்பாக குடியரசு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் பலருக்கு தேசிய ரைபிள் அசோசியேஷன் மற்றும் அமெரிக்க துப்பாக்கி உரிமையாளர்கள் சங்கம் லாபி செய்கிறது. மொத்தமாக உள்ள 435 அமெரிக்க பிரதிநிதிகளில் 232 பேரை இந்தச் சங்கங்கள் லாபி செய்கின்றன. இதனை மறைக்க ட்ரம்ப் மக்களின் மனநிலையில் பிரச்னை என்று கூறியதும் சர்ச்சைக்குள்ளானது.

அவமானப்படுத்திய மேடைகள்

சென்ற வருட ஆஸ்கர் மேடையில் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெலின் லைவ் ட்விட்டில் ட்ரம்ப்பை சாடியது, 2017 கோல்டன் க்ளோப் விருதில் மெரில் ஸ்ட்ரீப்பின் ட்ரம்ப்புக்கு எதிரான மிக நீண்ட உரை, 2018 கோல்டன் க்ளோப் விருது மேடையில் ட்ரம்பை நக்கலாக கலாய்த்த செத் மேயர்ஸ் என விருது மேடைகள் ட்ரம்புக்கு எதிராகவே அமைந்தன. 

குடும்ப அரசியல்

அதிபர் ட்ரம்பின் ஆலோசகராக அவரது மகள் இவான்கா நியமிக்கப்பட்டுள்ளார். இவான்காவின் கணவர் ஜெராடும் அதிபர் ஆலோசகர்தான். அரசாங்கத்தின் முக்கியப் பதவிகளில் இன்னும் சில முக்கிய உறவினர்களைப் பணியமர்த்தியிருக்கிறார் ட்ரம்ப். அதிபர் தேர்தலின் போது பிரசார அதிகாரியாக இருந்த டேவிட் பூன் அமெரிக்க அதிபருக்கும் ரஷ்யாவுக்கு நடந்த பேச்சுவார்த்தைகள், தேர்தல் விதிமீறல்கள் எனப் பல விஷயங்களை முன் வைத்தார். மேலும் ட்ரம்பின் மகள் இவான்காவுக்கு அதிபர் ஆகும் ஆசை இருந்தது, ட்ரம்பின் மகனும், மருமகனும் ரஷ்ய வல்லுநர்களோடு ட்ரம்ப் டவரில் பேசிய விஷயங்கள் அமெரிக்காவுக்குத் தீங்கு விளைவிப்பவை என்று கூறினார். இதற்கு டேவிட் பூன் மனநிலை தவறிவிட்டார் என்கிறார் ட்ரம்ப்.

மொத்தத்தில் ஓராண்டில் நிறைய வைரல் நிகழ்வுகளை நிகழ்த்திய ட்ரம்ப் ஆக்கபூர்வமான எதையும் செய்யவில்லை. மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்புவேன் என்றவர் ஒரு செங்கலை கூட வைக்கவில்லை. அமெரிக்கர்களுக்கு நல்லது செய்வேன் என்று சொல்பவரை அமெரிக்கா வெளிப்படையாக எதிர்க்கிறது. இது முதல் வருடம் அதற்குள் இம்பீச்மென்ட் குறித்தெல்லாம் பேச்சு எழுகிறது. 2020ன் அமெரிக்க அதிபருக்கான அரியணையை ட்ரம்ப் தக்க வைப்பாரா என்ற கேள்விக்கு இந்த வருட பதில் இல்லை என்பதுதான். ஓப்ரா வின்ஃப்ரேவும், மார்க் சக்கர்பெர்க்கும், மிச்செல் ஒபாமாவும்தான் அமெரிக்காவும் 2020 களத்தில் இருக்கிறார்கள். மிஸ்டர் ட்ரம்ப் நீங்கள் ரியல் எஸ்டேட் வியாபாரி அல்ல, அமெரிக்க அதிபர் அந்த மனநிலைக்கு மாறி மீதமுள்ள நாள்களில் செயல்பட்டால் மேக் ட்ரம்ப் க்ரேட் எகெய்ன் சாத்தியம். இல்லையெனில் மீண்டும் குத்துச்சண்டை மைதானங்களில் வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கும்.