Published:Updated:

வல்லரசு கனவும் காத்திருக்கும் சவால்களும்! - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் - பகுதி 10

வல்லரசு கனவும் காத்திருக்கும் சவால்களும்! - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் - பகுதி 10
வல்லரசு கனவும் காத்திருக்கும் சவால்களும்! - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் - பகுதி 10

வல்லரசு கனவும் காத்திருக்கும் சவால்களும்! - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் - பகுதி 10

வல்லரசு கனவும் காத்திருக்கும் சவால்களும்! - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் - பகுதி 10

ந்தத் தொடரின் கடைசி அத்தியாயத்தில் நுழைந்திருக்கிறோம். கடந்த அக்டோபர் மாதம் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது மாநாட்டில் ஜின்பிங், சீன அதிபராக மேலும் ஐந்தாண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதையும், அதனைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உரையின்போது, இன்னும் 30 ஆண்டுகளில் சீனாவை உலகின் வல்லரசாக்கிவிட வேண்டும் என்ற அவரது கனவை வெளியிட்டு, அதற்கான செயல்திட்டங்களை அறிவித்ததையும், தமது கனவை நனவாக்கும் நோக்கத்துடன் ஜின்பிங் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும், அவரது கனவுக்கேற்ப சர்வதேச அரங்கிலும் (அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உலக நாடுகளின் மத்தியில் செல்வாக்கு இழந்து நிற்பதோடு, சொந்த நாட்டிலேயே பெரும் பிரச்னைகளை எதிர்கொண்டு தவித்து வருவது உள்பட) பல்வேறு நிகழ்வுகள் ஜின்பிங்குக்குச் சாதகமாக நடந்து வருவதையும் விரிவாகப் பார்த்தோம். 

2017-ன் ரன்னர் அப்

அதிலும், கடந்த 2017-ம் ஆண்டைப் பொறுத்தமட்டில் ஜின்பிங்குக்கு மிகவும் அதிர்ஷ்டமான, அவர் எதிர்பார்த்ததை விட மிகவும் சிறப்பாக அமைந்தது என்றே கூறலாம். உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச அரங்கிலும், குறிப்பாக வடகொரியா போன்ற சர்வதேச பிரச்னைகளின் போக்கைத் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட தனி ஒருவனாக வளர்ந்து நிற்கிறார் ஜின்பிங். அந்த அளவுக்கு சர்வதேச அளவில் ஜின்பிங்கின் செல்வாக்கு ஆதிக்கம் செலுத்தியது. இதனால்தானோ என்னவோ பிரபல அமெரிக்க பத்திரிகையான 'டைம்' 2017-ன் ரன்னர் அப் ( Runner-up ) ஆக ஜின்பிங்கை அறிவித்துள்ளது.  

இத்தனை செல்வாக்கு மற்றும் சாதகமான அம்சங்கள் பல காணப்பட்டபோதிலும், ஜின்பிங்கின் கனவு நிறைவேற அவருக்குப் பல சவால்கள் காத்திருக்கின்றன. போதாதற்கு இப்போதைக்கு ட்ரம்ப்பால் அமெரிக்காவின் செல்வாக்கு உலக அரங்கில் சற்று சரிந்திருந்தாலும், 'உலக வல்லரசு' என்ற கெத்தை அமெரிக்கர்கள் அவ்வளவு சீக்கிரம் இழந்துவிட மாட்டார்கள் என்றும், ட்ரம்ப் மட்டுமே அமெரிக்கா அல்ல; விரைவிலேயே நிலைமை மாறும் என்றும் அமெரிக்க ஆதரவு நாடுகள் சொல்லி வருகின்றன.

வல்லரசு கனவும் காத்திருக்கும் சவால்களும்! - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் - பகுதி 10

காத்திருக்கும் சவால்கள் 

இந்த நிலையில், சீனாவை உலக வல்லரசாக உருவாக்க முயலும் ஜின்பிங்குக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் இருக்கும் முக்கியமான சவால்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்...

2010-ம் ஆண்டிலிருந்து சீரான வளர்ச்சியிலிருந்த சீனாவின் பொருளாதாரம், கடந்த ஆண்டில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது. இந்த ஆண்டும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் சரிவைச் சந்திக்கலாம் என்றும், அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை அதிகரித்தால் அது சீனாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். " அநேகமாக 2018-ல் ஜின்பிங்குக்கு மிகப்பெரிய சவால் எது என்றால், பொருளாதாரப் பிரச்னைகளுக்கிடையே மக்களிடையே இருக்கும் தனது செல்வாக்கைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதுதான். நடுத்தர வர்க்க மக்களிடமிருந்து எந்த மாதிரியான எதிர்ப்புக் கிளம்பி வரும் என்பதை பார்க்க நானும் ஆவலாகவே இருக்கிறேன்" என்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சீன மையத்தின் தலைவர் ஷூஸன் ஷிர்க். இது தவிர காற்று மாசு, கல்வித் தரம் மற்றும் இணையதள தணிக்கை உள்ளிட்ட விவகாரங்களும் சீன நடுத்தர வர்க்க மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும்.

விரட்டியடிக்கப்படும் இடம்பெயர் தொழிலாளர்கள்...

நடுத்தர வர்க்க மக்களின் கதை இதுவென்றால், நகரங்களுக்கு இடம்பெயர்ந்த கிராமப்புற மக்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. கடந்த அக்டோபரில் ஜின்பிங் சீனாவின் வல்லமைமிக்க தலைவராக தன்னை முன்னிறுத்திக் கொண்டதிலிருந்தே பல்வேறு சமூகப் பிரச்னைகள் சீனாவில் வரிசை கட்டின. குறிப்பாக அரசின் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, மீண்டும் கிராமங்களுக்கே துரத்தியடிக்கப்பட்டனர். நகரின் குறுகலான கட்டடங்களில் நெரிசலான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த ஏழை கிராமப்புறத் தொழிலாளர்கள், 'நகரமயமாக்கல்' என்ற பெயரில் குளிரும் பனியும் வாட்டியெடுத்த அந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அவர்களின் சொந்த கிராமங்களுக்கே விரட்டியடிக்கப்பட்டனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்த நெரிசல் மிகுந்த அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு தங்கியிருந்த 19 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். போதாதா அரசுக்குக் காரணம் சொல்ல? 'உயிர் பாதுகாப்பு நடவடிக்கை' என்ற பெயரில் இந்த இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் நகரங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அரசைப் பொறுத்தவரை அவர்கள் குறைந்த கூலிக்குக் கிடைத்த மற்றும் பயன்படுத்திவிட்டு தூர எறிந்துவிடக்கூடிய ஒரு பொருளாகவே பார்க்கப்பட்டனர். அரசின் இந்த நடவடிக்கை ஜின்பிங் தலைமையிலான அரசுக்கு ஒரு களங்கமாகவே பார்க்கப்படுகிறது. 

வல்லரசு கனவும் காத்திருக்கும் சவால்களும்! - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் - பகுதி 10

தலைநகர் பெய்ஜிங்கில் இதுபோன்று கிராமப்புற தொழிலாளர்கள் விரட்டியடிக்கப்படுவது இது முதன்முறையல்ல. கடந்த ஆண்டுகளிலும் இதுபோன்று விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். குறைந்த கூலிக்கு வேலையாள் தேவை என்றால் அவர்களை அனுமதிப்பதும், வேலை முடிந்ததும் அவர்களைத் துரத்தியடிப்பதும் ஆண்டாண்டு காலமாக நடப்பதுதான். 

அதே சமயம், சீனப் பொருளாதார வளர்ச்சியில் இவர்களது உழைப்பும் பங்கும் இருப்பதை மறுக்க முடியாது. குறிப்பாக கடந்த பத்தாண்டுகளில் இணைய வர்த்தகத் தொழில் சீனாவில் உச்சத்தில் இருந்த நிலையில், அந்தத் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகளைக் கொண்டு செல்லுதல், வாகனம் ஓட்டுதல், பொருள்கள் டெலிவரி போன்ற சேவைப் பணிகளுக்கு இந்தப் புலம்பெயர்ந்த கிராமப்புறத் தொழிலாளர்கள்தான் குறைந்த கூலிக்குப் பெருமளவில் பயன்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் சீனாவின் வல்லமைமிக்கத் தலைவராக ஜின்பிங் உருவெடுத்துள்ள நிலையில், அவரது ஆட்சியில் தங்களது வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருந்தது. ஆனால், தற்போதைய உலகின் எந்த ஒரு தலைவர் இதுபோன்று கிராமப்புறங்களிலிருந்து இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது அக்கறை கொள்கிறார்? இதில் ஜிங்பிங் மட்டும் விதிவிலக்கா என்ன? இதோ தூக்கியெறியப்படும் பேப்பர் டீ கப் போன்று இந்தத் தொழிலாளர்களும் விரட்டியடிக்கப்படுகின்றனர். 

அதிகரிக்கும் கிராம/நகர வருமான இடைவெளி

சீனாவைப் பொறுத்தமட்டில் நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையேயான வருமான வித்தியாசத்தின் இடைவெளியும், வாழ்க்கைத்தர சமமின்மையும் மிக நீண்டதாக உள்ளது. " சீன கிராமம் ஒன்றில் வசிக்கும் ஏழை விவசாயி ஒருவரின் ஓராண்டு வருமானம் முழுவதையும் கொடுத்தால் கூட அவரால் ஒரு நவீன ஐபோனை வாங்க முடியாது. அதுவே சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் தனது நாய்க்கு உணவுக்காகச் செலவிடப்படும் தொகையில் 8 ஐபோன்களை வாங்கமுடியும். அந்த அளவுக்குப் பணக்காரர்களுக்கும் கிராமப்புற ஏழைகளுக்கும் இடையேயான வருமான இடைவெளி அகண்டு காணப்படுகிறது. இது நல்லதுக்கல்ல. இந்த வருமான இடைவெளியும் துரத்தியடிக்கப்படும் கிராமப்புற மக்களின் கோபமும் ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாக சீனாவை உலக வல்லரசாக்கும் ஜின்பிங்கின் கனவுக்கு எதிராக மாறிவிடும் அபாயம் உள்ளது" என எச்சரிக்கிறார் பிரபல சீன அரசியல் விமர்சகரான ஜியாஜியா லீ. 

வடகொரியாவால் தலைவலி

2017-ம் ஆண்டைப் பொறுத்தவரை சீனாவின் அயலுறவுக் கொள்கை என்பது ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைக் கொண்டதாகவே அமைந்தது. ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்ததாக ஆகட்டும், அதேபோன்று மியான்மர் மற்றும் பங்காளதேஷுக்கும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கூட மத்தியஸ்தம் செய்ய வந்ததாகட்டும் சீனாவின் அயலுறவுக் கொள்கை பிற நாடுகளுக்கு ஆத்திரமூட்டக் கூடியதாகவே அமைந்தது. சீனாவின் இத்தகைய நடவடிக்கைக்கு அடிநாதமாக இருந்தது பட்டுப் பாதை பொருளாதாரத் திட்டம் மற்றும் சீன- பாகிஸ்தான் பொருளாதர வழித் தடப் பாதையை அடிப்படையாகக் கொண்ட அதன் எதிர்காலப் பொருளாதர வளர்ச்சிக் கண்ணோட்டம்தான்.

வல்லரசு கனவும் காத்திருக்கும் சவால்களும்! - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் - பகுதி 10

அதே சமயம் இதுபோன்ற விஷயத்தில், அதாவது மத்தியஸ்தம் செய்வதில் அதற்கு உள்ள அனுபவமின்மை, எதிர்காலத்தில் சீனாவுக்கு உலக அரங்கில் எந்த அளவுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது தவிர்த்து அண்டை நாடான இந்தியாவுடன் அவ்வப்போது எல்லைத் தகராறில் ஈடுபடுவதும் சீனாவை ஒரு பொறுப்பான நாடாக உலக அரங்கில் காட்டத் தவறுகிறது. மேலும், பட்டுப்பாதை திட்டத்தைக் காரணம் காட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் மேற்கொள்ளப்படும் சீன திட்டங்களுக்கு உள்ளூரில் கிளம்பும் எதிர்ப்பு போன்றவற்றையும் ஜின்பிங் எதிர்காலத்தில் சமாளித்தாக வேண்டும். 

இவையெல்லாவற்றையும்விட, ஜின்பிங்குக்கு இப்பொழுதும் இருக்கிற மிகப்பெரிய அயலுறவுக் கொள்கை தலைவலி என்னவென்றால் அது, அதன் புற வாசலில் இருக்கும் வடகொரியாதான். அந்த நாட்டு அதிபர் கிம் ஜாங், அவ்வபோது அமெரிக்காவைத் தாக்கப்போவதாக மிரட்டுவதும், அவ்வப்போது அணு ஏவுகணைச் சோதனை நடத்துவதும் அமெரிக்காவை கடுமையாக ஆத்திரம் கொள்ள வைத்துள்ளது. எனவே, தொடர்ந்து எரிச்சலூட்டிக் கொண்டிருக்கும் கிம் ஜாங்கைத் தட்டி வைக்க போர் ஒன்றுதான் தீர்வு என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் அவ்வப்போது மிரட்டுவதால், சீனாவை உலக வல்லரசாக்கும் முனைப்பில் இருக்கும் ஜின்பிங்குக்கு, அப்படி ஓர் போர் மூண்டுவிடாதபடிக்குத் தடுக்கும் பொறுப்பும், அண்டை நாடு என்ற அடிப்படையில் கடமையும் இருக்கிறது. இந்த நிலையில் ஜின்பிங் இதை எப்படிச் சமாளிக்கப்போகிறார் என்று உலக நாடுகள் மிக உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. 

அச்சுறுத்தும் அமெரிக்கா

இவை தவிர அமெரிக்காவுடனான வர்த்தக உறவில் ஏற்கெனவே முட்டல் மோதல் நிலவுகிற நிலையில் ஃபுளோரிடா, ஹம்பர்க் மற்றும் பெய்ஜிங்கில் அடுத்தடுத்து ஜின்பிங் மற்றும் ட்ரம்ப் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையும், கடந்த டிசம்பரில் "ஜின்பிங் ஒரு சீர்திருத்தவாதி" என்று ட்ரம்ப் புகழ்ந்ததும் தற்காலிகமாக அந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

வல்லரசு கனவும் காத்திருக்கும் சவால்களும்! - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் - பகுதி 10

அதே சமயம் 2018-ம் அப்படியே இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் வடகொரியாவின் மிரட்டல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதால், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் அளவை அமெரிக்கா மேலும் குறைக்கலாம். மேலும் அறிவு சார்ந்த சொத்து விதிகளை மீறியதாக (intellectual property violations) சீனா மீது கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அமெரிக்கா நடத்தி வரும் விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அது  சீனா மீது பெரும் பொருளாதார அபராதம் விதிக்கும் நடவடிக்கைக்கு வழிவகுத்துவிடும். அப்படி ஒன்று நிகழ்ந்தால், அது ஜின்பிங்கின் 'உலக வல்லரசு' கனவுக்குக் களங்கத்தை ஏற்படுத்திவிடும்.  

மாறுவாரா ஜின்பிங்?

" சீனா பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்ட 40-வது ஆண்டாக 2018 மலர்ந்திருக்கிறது. கடந்த அக்டோபரில் ஜின்பிங், சீனாவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டபோதே வெளிநாட்டு வங்கிகள் மற்றும் பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனங்களுக்கான உரிமை வரம்புகளை தளர்த்துவது உள்ளிட்ட பல்வேறு தாராளமயமாக்கல் அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். ஜின்பிங்கின் முதல் ஐந்தாண்டு பதவி காலத்தில், அவர் சந்தை சீர்திருத்தவாதியா அல்லது பொருளாதார தேசியவாதியா என்ற விவாதம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சீனாவின் தன்னிகரற்ற தலைவராக உயர்ந்திருக்கும் இந்தத் தருணத்தில் உலகின்  மிகப்பெரிய இரண்டாவது பொருளாதார நாடான சீனா, எந்த அளவுக்குத் தனது கதவுகளைத் திறக்கப்போகிறது என்பதைக் காட்ட வேண்டிய சூழலும், அதனால் சீனாவுக்கு எத்தகைய பலன் அல்லது பாதகம் என்பதைக் கணித்து அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தமும் ஜின்பிங்குக்கு ஏற்பட்டுள்ளது.  

வல்லரசு கனவும் காத்திருக்கும் சவால்களும்! - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் - பகுதி 10

இந்தப் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் சீனாவை இன்னும் திறன்மிக்க நாடாக உருவாக்கப்போகிறதா அல்லது புதைகுழியில் தள்ளிவிடுமா என்பதை வருங்காலங்களில் பார்த்துவிடலாம்" என்கிறார் பிரபல சீனப் பொருளாதார ஆராய்ச்சியாளரான டிரே மெக்ஆர்வர். 

" கடந்த அக்டோபரில் நடந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டைத் தொடர்ந்து ஜின்பிங் என்ற ஒற்றை மனிதரின் அதிகாரத்தின் கீழ் ஆளப்படும் நிலைமைக்கு சீனா மாறியிருப்பதன் மூலம், பழைய தலைவர் மாவோ அத்தியாயத்துக்கு சீனா திரும்பி உள்ளதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இன்றைய உலகத்தில் எந்த ஒரு நாடும் மாவோ காலத்து அரசியலோ ஆட்சி முறையோ சரிப்பட்டு வராது என்பதால், ஜின்பிங் தன்னையும் தனது ஆட்சி செய்யும் முறையையும் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்"  என்கிறார் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான மையத்தின் உறுப்பினரும் அரசியல் ஆலோசகருமான டெர்வின் பெரைரா. 

சீனா வேறு ஜின்பிங் வேறு அல்ல. அப்படியிருக்கையில் 2017-ன் ரன்னர் அப் ( Runner-up ) ஆக ஜின்பிங்கை  டைம் பத்திரிகை புகழ்ந்துள்ள நிலையில், 2050-ல் சீனா உலக வல்லரசாக உருவெடுக்க வேண்டும் என ஜின்பிங் விரும்பினால், முதலில் அவர் தன்னை ஓர் உலகத் தலைவருக்கான தகுதியுடையவராக மாற்றிக்கொள்வதோடு, சீனா மீதான 'ஆக்கிரமிப்பு நாடு' என்ற முத்திரையை அகற்றும் அளவுக்குப் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும்.

மாறுவாரா ஜின்பிங்...? 

இத்தொடர் இத்துடன் நிறைவுற்றது.  

அடுத்த கட்டுரைக்கு