Published:Updated:

``பிறப்பால் எல்லா மனிதர்களும் சமம்..!” - கறுப்பின மக்களின் விடிவெள்ளி ஆப்ரகாம் லிங்கன் பிறந்ததினப் பகிர்வு

``பிறப்பால் எல்லா மனிதர்களும் சமம்..!” - கறுப்பின மக்களின் விடிவெள்ளி ஆப்ரகாம் லிங்கன் பிறந்ததினப் பகிர்வு
``பிறப்பால் எல்லா மனிதர்களும் சமம்..!” - கறுப்பின மக்களின் விடிவெள்ளி ஆப்ரகாம் லிங்கன் பிறந்ததினப் பகிர்வு

 லிங்கன், அடிமை முறையால் சிதைக்கப்பட்டு எலும்புக்கூட்டின்மேல் தோல் போர்த்தியதுபோலான கறுப்பின மக்களுக்காகப் பிறந்த விடிவெள்ளி! அமெரிக்க நாட்டின் 16 வது ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற ஆப்ரகாம் லிங்கனின் பதவிக்காலம் முழுவதும் உள்நாட்டு போரிலேயே முடிந்தது.  

``பிறப்பால் எல்லா மனிதர்களும் சமம்..!” - கறுப்பின மக்களின் விடிவெள்ளி ஆப்ரகாம் லிங்கன் பிறந்ததினப் பகிர்வு

ஐக்கிய அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தைச் சேர்ந்த ஹாட்ஜன்வில் பகுதியில் ஹார்டின் எனும் ஊருக்கு அருகே உள்ள ஒரு மர வீட்டில் 1809-ம் ஆண்டு பிறந்தார் ஆப்ரகாம் லிங்கன். செவ்விந்தியர்களால் படுகொலை செய்யப்பட்ட இவருடைய தாத்தாவின் நினைவாக இவருக்கு இந்தப் பெயரைச் சூட்டினார் தந்தை தாமஸ் லிங்கன். சிறு வயதிலேயே ஆப்ரகாமுக்கு பைபிள் படிக்கக் கற்றுக்கொடுத்தார் தாய் நான்சி. அவர் சத்தம் போட்டு பைபிள் படிப்பதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் அனைவரும் ஆச்சர்யம் அடைவார்கள். ஏனெனில், 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அப்போது அவருக்கு வயது நான்கைக்கூட கடக்கவில்லை. கென்டகி மாநிலம் அமெரிக்காவின் மற்ற மாநிலங்களைவிடப் பொருளாதாரம், கல்வி என எல்லாவற்றிலும் பின்தங்கியிருந்தது.

சிறு வயதிலிருந்தே வயதுக்கு மீறிய உயரத்தோடும் வலிமையோடும் இருந்தார். ஏழு வயதிலேயே அவருக்குத் துப்பாக்கியால் குறி பார்த்துச் சுடவும் தெரியும் கோடாரியைப் பயன்படுத்தவும் தெரியும். ஆப்ரகாம் லிங்கனுக்கு எல்லாவற்றையும்விட மிகவும் பிடித்தது... படிப்பது... படிப்பது... மற்றும் படிப்பது. சிறுவயதிலேயே தாயை இழந்த லிங்கனுக்கு சதா சர்வகாலமும் துணை புத்தகம்தான். ஊரில் யாரிடமாவது எங்கேயாவது புத்தகம் இருக்கிறது என்று தெரிந்துவிட்டால் போதும்... 30 மைல் தூரமாயினும் சரி, 50 மைல் தூரமாயினும் சரி நடந்தே சென்று அதை வாங்கிப் படித்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பார்.

16 வயதாகும்போது நீதிமன்றங்களில் நடக்கும் ஒரு வழக்கை நேரில் பார்த்ததிலிருந்து வக்கீல் ஆக வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்தது. கூலி வேலை பார்த்து பிழைத்துக்கொண்டிருந்தார் லிங்கன். 21 வயது வரை அப்பா, சித்தியுடன் இருந்தார். பிறகு, தனியாக இருக்க முடிவு செய்தார்.

``பிறப்பால் எல்லா மனிதர்களும் சமம்..!” - கறுப்பின மக்களின் விடிவெள்ளி ஆப்ரகாம் லிங்கன் பிறந்ததினப் பகிர்வு

வேலை நிமித்தமாக நியூ ஆர்லியன்ஸ் என்ற நகருக்குச் சென்றபோதுதான் அந்தக் கொடுமையான காட்சிகளைக் கண்டார். அடிமைச் சந்தையில், அடிமைகள் விற்கப்படுவதைக் கண்டார். அதுவரை அடிமை வியாபாரத்தை அவர் நேரில் கண்டதில்லை. நாம் காய்கறிகள் பழங்கள் வாங்கும்போது எப்படி ஆய்வு செய்து வாங்குவோமா அதுபோல கறுப்பின மக்களைத் தட்டிப் பார்த்து, தடவிப் பார்த்து விலைக்கு வாங்குவார்கள். ஒரு நீக்ரோ பெண்ணை வாங்க வந்த வெள்ளையன் அவளின் பெண் அங்கங்களைத் தடவிப் பார்த்தும் அமுக்கிப் பார்த்தும் விலைக்கு வாங்கினார். துடிதுடித்துப் போனார் லிங்கன். “இந்த அடிமை முறையை மட்டும் ஒழிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் ஒழிப்பேன்'' என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

பல இலக்கிய மன்றங்களிலும் பட்டி மன்றங்களிலும் இணைந்து சொற்பொழிவு ஆற்றுவார். இவர் பேச்சைக் கேட்பதற்காகவே கூட்டம் கூடும். 1832-ம் ஆண்டு இவரின் நண்பர்களும் அக்கம் பக்கத்தினரும் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடச் சொன்னார்கள். சிலர் வற்புறுத்தினார்கள். ஆனால், அந்தத் தேர்தலில், தோல்வியைத் தழுவினார்... ஆனாலும், அது ஒன்றும் மோசமான தோல்வி இல்லை. இதற்கு முன்பு செய்த தொழிலும் தோல்வி... இதன் பின்னர் செய்த தொழிலும் தோல்வி.

1833-ம் ஆண்டு, போஸ்ட் மாஸ்டராக நியமிக்கப்பட்டார். பிறகு மீண்டும் 1834-ம் ஆண்டு  மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினரானார் லிங்கன். 1836, 1838, 1840 எனத் தொடர்ச்சியாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்று உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது 27 வயதில் வழக்கறிஞரானார். வழக்கறிஞர் தொழிலை அவர் காசுக்காகச் செய்யவில்லை. மன திருப்திக்காக மட்டுமே செய்தார். மிகவும் குறைந்த அளவுதான் கட்டணமாக வாங்குவார். ஏழைகள் என்றால், ஒரு ரூபாய் செலவில்லாமல், வழக்கு முடியும் வரை அவர்களுக்கு ஆகும் செலவையும் சேர்த்து இவரே பார்த்துக்கொள்வார். 1858-ம் ஆண்டு குடியரசுக் கட்சியின் சார்பாக மாநில செனட்டர் தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலிலும் தோல்வியையே தழுவினார். ஆனால், ஆச்சர்யம் அளிக்கும் விதமாக லிங்கன் 1859-ம் ஆண்டு குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 'அடிமை முறையை ஒழிப்பதையே தன் வாழ்நாளின் முக்கிய குறிக்கோளாகக் கொண்டவர் லிங்கன். எனவே, அவர் ஆட்சிக்கு வந்தால் தங்களின் அடிமை வியாபாரம் பாதிக்கப்படும்' என அஞ்சினர் தென் மாநிலத்தவர்கள். அந்த முறை ஜனாதிபதி தேர்தலில் நடந்த நான்குமுனை போட்டியால் லிங்கன் வெற்றி வாகை சூடினார். தேர்தல் முடிவுகள் வெளியாகி 1861-ம் ஆண்டு லிங்கன் பதவியேற்கும் முன்னரே அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் வெடிக்கத்தொடங்கியது. வட மாநிலங்களில் அவ்வளவாக அடிமை வியாபாரம் இல்லை. ஆனால், தென் மாநிலங்களில் அடிமை வியாபாரம் அதிகம் நடக்கும்.

 கொஞ்சம் கொஞ்சமாகத் தெற்கு மாநிலங்கள் ஒவ்வொன்றும் பிரிந்து போய்க்கொண்டிருந்தது. ஏழு மாநிலங்கள் சேர்ந்து கான்பெடரேசி என்ற தென்னகக் கூட்டு அரசாங்கத்தை நிறுவியது. இதனால் இரண்டு அரசாங்கங்களாகப் பிளவுற்றது அமெரிக்கா. இதன் பின்னர் 1861-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி அன்று லிங்கன் பதவியேற்றார். அடுத்த நாளே கொஞ்சம் கொஞ்சமாக உள்நாட்டுப் போர் பற்றிக்கொண்டது. தெற்கு கரோலினா அமெரிக்காவிலிருந்து பிரிந்துபோனது. ஆனால், துறைமுகக் கோட்டையான சம்டர் மட்டும் அமெரிக்கா வசம் இருந்தது. அங்கே தென்பகுதி படையினால் அமெரிக்க யூனியன் ராணுவம் விரட்டியடிக்கப்பட்டது. படைபலத்தைக் கூட்ட கட்டாய ராணுவ சேவை அமலுக்கு வந்தது. இதன் மூலம் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.

 லிங்கனின் பதவிக்காலம் முழுவதும் உள்நாட்டுப் போரிலேயே முடிந்துபோனது. உள்நாட்டுப் போரின் தொடக்கத்தில், அமெரிக்க யூனியன் தோல்வியைத் தழுவினாலும், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு விட ஆரம்பித்தது. 'பிரிந்துபோன மாநிலங்கள் மூன்று மாத காலத்தில், யூனியனுடன் ஐக்கியமாகாவிட்டால், அனைத்து அடிமைகளும் விடுதலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுவிடுவார்கள்' என்று லிங்கன் ஓர் அறிக்கையை வெளியிட்டார். பின்னர் 1863-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி அடிமைகளின் விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டார். அதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து அடிமைகளும் விடுதலைப் பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். 'பிறப்பால் எல்லா மனிதர்களும் சமம்; நீக்ரோக்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு' என்று சொல்லிக்கொண்டு வந்த லிங்கன், ஒரு வழியாகத் தான் நினைத்ததை செய்து முடித்தார்.

பிறகு, 1863-ம் ஆண்டின் இறுதியில் அமெரிக்க யூனியனுக்குப் போர் முனையில் வெற்றி கிட்ட ஆரம்பித்தது. 1864-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், மீண்டும் லிங்கன் ஜனாதிபதியானார். 1865-ம் ஆண்டு ஏப்ரல் 9, அன்று தென்னகப் படையின் தளபதி ராபர்ட் லீ சுற்றிவளைக்கப்பட்டார். அதோடு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. உள்நாட்டுப் போர் முடிந்து வெறும் ஐந்தே நாள்களில், அதாவது ஏப்ரல் 14-ம் தேதி, கறுப்பின மக்களுக்கு விடுதலை கொடுத்தது பொறுக்காமல் தென்னக ஆதரவாளர் ஜான் வில்கிஸ் பூத் என்பவர் ஆப்ரகாம் லிங்கனைச் சுட்டுக் கொன்றார். இன்றுடன் அவர் பிறந்து 209 ஆண்டுகள் ஆகிவிட்டன. நீக்ரோக்களுக்கு அவர் செய்த நன்மைகளுக்காக இந்த மகத்தான மனிதனை உலகம் இன்னும் 2,000 ஆண்டுகள்கூட ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும்!