Published:Updated:

மசாஜ்... பாலியல் சேவை... உல்லாசம்: அதிபரால் நாசமாக்கப்படும் பள்ளி மாணவிகள்!- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்? ( பகுதி-5)

மசாஜ்... பாலியல் சேவை... உல்லாசம்: அதிபரால் நாசமாக்கப்படும் பள்ளி மாணவிகள்!- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்? ( பகுதி-5)
மசாஜ்... பாலியல் சேவை... உல்லாசம்: அதிபரால் நாசமாக்கப்படும் பள்ளி மாணவிகள்!- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்? ( பகுதி-5)

காட்சி 1: 

வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் அமைந்திருக்கும் பள்ளி அது.  காலை வேளை பாட  வகுப்புத் தொடங்கி மாணவர்கள், ஆசிரியர் நடத்தும் பாடத்தைக் கவனித்துக்கொண்டிருக்கின்றனர். பள்ளி மைதானத்தில்  சில வகுப்பு மாணவர்கள் எதற்காகவோ குழுமியிருக்கின்றனர். 

ஓர் உயர் நிலைபள்ளிக்கே  உரிய கலகலப்பும் சத்தமுமாக பள்ளி இயங்கிக்கொண்டிருக்கையில், திடீரென பள்ளியின் கதவை உடைத்துக்  கொண்டு வருவதுபோன்ற வேகத்தில் சர்... சர்ரென நான்கைந்து ராணுவ வாகனங்கள் பள்ளிக்குள் நுழைகின்றன. அடுத்தகணமே பள்ளி ஸ்தம்பித்துப் போகிறது. மயான அமைதி. மாணவர்களும் ஆசிரியர்களும் திகைப்புடன்  பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ராணுவ வாகனத்திலிருந்து திபு திபுவென இறங்கும் அதிகாரிகள், ஒவ்வொரு  வகுப்பறைக்குள்ளும் நுழைந்து, "எல்லோரும் உங்கள் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு வேகமாக வந்து வாகனங்களில்  ஏறுங்கள்... ம்... சீக்கிரம்" என உத்தரவிடுகிறார்கள். 

அடுத்த நிமிடமே மாணவ, மாணவிகள் வரிசையாக வகுப்பிலிருந்து வெளியேறி மைதானத்தில் நிறுத்தப்பட்டிருக்கும்  வாகனங்களில் ஏறுகின்றனர். கூடவே ஆசிரியர்களும். அவர்களை ஏற்றிக்கொண்டு அந்த வாகனங்கள் வேகமாக வெளியேறி, நகருக்கு வெளியே இருக்கும் ஒரு திறந்தவெளி மைதானத்துக்குச் செல்கின்றன. அங்கே ஏற்கெனவே திரண்டிருக்கும் பல ஆயிரக்கணக்கானோருடன் இவர்களும் நிற்க வைக்கப்படுகின்றனர். அப்படி நிற்கவைக்கப்படும் மாணவர்களில் ஹீ யியான் லிம் என்ற மாணவியும் ஒருவர். 

அப்போது ஓர் இசைக்குழுவைச் சேர்ந்த 11 வடகொரியர்கள் மைதானத்தின் மத்தியப் பகுதிக்குக் கொண்டுவரப்படுகின்றனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு 'நீலப்படம்' தயாரித்தது. அவர்கள் மீதான குற்றத்தை அதிகாரி ஒருவர் சத்தமாக மைக்கில் அறிவித்து, அவர்களுக்கான தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடுகிறார். 

குற்றம் சுமத்தப்பட்ட 11 பேரின் முகங்களும் கறுப்புத் துணியால் மூடப்பட்டுள்ளன. அவர்களது கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டுள்ளன. வாயிலும் துணி திணிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் " இரக்கம் காட்டுங்கள்..." என்றோ  அல்லது தண்டனை நிறைவேற்றப்படும்போது வலி பொறுக்க முடியாமல் கத்தவோ முடியாது. 

அவர்கள் ஒவ்வொருவரும் விமான எதிர்ப்பு பீரங்கியின் முனையில் கட்டித் தொங்கவிடப்பட்டதும் தண்டனையை  நிறைவேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுவதோடு, அங்குள்ள மக்கள் அனைவரும் அதனைப் பார்க்குமாறும் கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. அடுத்த நொடி பீரங்கி வெடித்து, அங்கிருப்பவர்களின் காதைச் செவிடாக்கும் அளவுக்கு சத்தத்தை எழுப்புகிறது. இப்படி ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து சத்தம் வந்துகொண்டே இருக்க, அந்த இசைக்குழுவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் காணாமல் போகின்றனர். அவர்களது சடலங்கள் சில அடி தூரத்தில் சதைகளும், எலும்புகளுமாக தரையில் சிதறிக்கிடக்கின்றன. அந்த இடமே ரத்த சகதியாகக் காட்சி தருகிறது. 

நடப்பது அத்தனையும் சுமார் 200 அடி தூரத்திலிருந்து அடி வயிறு கலங்க மற்ற மாணவர்களைப் போன்ற அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார் மாணவி ஹீ யியான் லிம்.

அதற்கு அடுத்து நடந்ததுதான் கொடூரத்தின் உச்சம். கொல்லப்பட்டு மைதானத்தில் கிடந்தவர்களின் சதைகள் மற்றும்  எலும்புகள் மீது அந்த பீரங்கிகள் ஓட்டப்பட்டு, அவை மண்ணோடு மண்ணாக்கப்படுகின்றன. 

" இதுபோன்ற சம்பவத்தை நான் பார்த்தது அதுதான் முதன்முறை. அதைப் பார்த்ததிலிருந்து என் மனமும் உடலும்  மிகவும் பாதிக்கப்பட்டன. நடந்த சம்பவம் எனது நினைவுக்குள் வந்து வந்து சென்று எனது அடிவயிற்றையே  கலங்கியது. என்னால் தொடர்ந்து 3 நாள்களுக்குச் சாப்பிட முடியாமல் போய்விட்டது" என்று அந்தச் சம்பவத்தை  நினைவு கூர்கிறார்  ஹீ யியான்.

காட்சி-2: 

இன்னொரு நாள். அதே பள்ளிக்கூடம். அதே நேரம். அதேபோன்று ராணுவ வாகனத்தில் வந்த அதிகாரிகள்,  மாணவிகள் அனைவரையும் பள்ளி மைதானத்துக்கு வருமாறு உத்தரவிட்டனர். அதன்படி மாணவிகள் வந்து  வரிசையாக நின்றனர். அவர்களை ஒவ்வொருவராக பார்த்த அதிகாரிகள், பார்க்க அழகாக, 5.5 அடி உயரத்துடன், நேரான, நீண்ட  கால்களுடைய மாணவிகளை மட்டும் தங்களுடன் அழைத்துச் சென்றனர். இந்த அதிகாரிகள் அதிபருக்காக ஸ்பெஷலாக இயங்கும் ' உல்லாசப் படை'யைச் ( Pleasure Squad) சேர்ந்தவர்கள்.

" இந்த மாணவிகள் அனைவரும் அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு 'செக்ஸ் அடிமை'யாக இருக்கவே அழைத்துச்  செல்லப்பட்டனர் என்பது எனக்குப் பின்னர்தான் தெரியவந்தது. அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு தலைநகர்  பியோங்யாங்கில் எத்தனை அரண்மனைகள் உள்ளன என்பது யாருக்குமே தெரியாது. எந்த வீட்டில் எப்பொழுது  இருப்பார் என்பதும் தெரியாது. அவ்வளவு ரகசியமாகவே இருக்கும் அவரது அந்தப்புர வாழ்க்கை. கிம் ஜாங்குக்குத்  திருமணம் ஆகி மனைவியும் குழந்தைகளும் ( சிலர் மூன்று குழந்தைகள் என்கின்றனர்; சிலர் ஒரு குழந்தை  என்கின்றனர்)  உள்ளனர். ஆனால், அவர் ப்ளேபாய் போன்றுதான் நடந்துகொள்கிறார். அதிபரின் உல்லாசப் படையினரால் பள்ளிகளிலிருந்து இவ்வாறு  அழைத்துச் செல்லப்படும் அழகான மாணவிகள் அனைவரும் பெரும்பாலும் 13 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் அனைவரும் மருத்துவ, குறிப்பாக 'கன்னித்தன்மை' உடையவர்களாக இருக்கிறார்களா எனப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.  

பின்னர் அவர்கள் அதிபருக்கு பாலியல் சேவை, மசாஜ் சேவை மற்றும் ஆடிப் பாடி மகிழ்விக்கும் சேவை செய்யவென மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுவார்கள். இவர்களுக்கு அதிபருக்கு பிடித்தமான  உணவுகளை எவ்வாறு பரிமாற வேண்டும், எவ்வாறு மசாஜ் செய்வது, எவ்வாறு அவரது செக்ஸ் அடிமையாக நடந்துகொள்ள வேண்டும் என்பன போன்றவை கற்றுத்தரப்படும். 

ஆமாம்! அவர்கள் கிம் ஜாங்குடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதே சமயம் அவருக்குப் பிடித்தமான  முறையில் நடந்துகொள்ளாவிட்டாலோ அல்லது தவறிழைத்தாலோ அல்லது ஆட்சேபணை ஏதும் தெரிவித்தாலோ  அவ்வளவுதான்... அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். 

இவ்வாறு அதிபருக்காகக் கொண்டுவரப்படும் மாணவிகள், மீண்டும் அவர்கள் குடும்பத்தினரை அல்லது உறவினர்களைச் சந்திக்கவோ, தொடர்புகொள்ளவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். 'இந்த மாணவிகள் அரசாங்கத்தின் முக்கிய திட்டப்பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்' என்றே அவர்களது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தப்படும். 

இதுபோன்ற சுமார் 2,000 டீன் ஏஜ் பெண்களைக் கொண்ட ரகசிய அணி ஒன்று அதிபருக்குச் சேவை செய்வதற்காகவும் அவரை மகிழ்விப்பதற்காகவும் உள்ளது. இப்படி ஒரு குழு செயல்படுவதே பெரும்பாலான வடகொரிய மக்களுக்குத் தெரியாது.

அதிபரின் விருப்பப்படி நடந்துகொண்டால், அவர் அனுபவித்து சலித்துப்போன பின்னர் அம்மாணவிகள் அயலுறவு விவகாரங்களைக் கையாளும் ராணுவ மூத்த அதிகாரிகளுக்குத்  திருமணம் செய்து வைக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். சில பெண்கள் தாங்களாகவே ராணுவத்தில் சேர்ந்துவிடுவார்கள். 

2 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், அதிபர் கிம்மோ நீச்சல்குளம்,  அழகான தோட்டங்கள், நீரூற்றுகள் கொண்ட ஆடம்பர பங்களாக்களில் ஆடம்பரமான உணவுகளை ருசித்துக்கொண்டு  ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்" என கிம் ஜாங் உன்னின் உள்ளார்ந்த வாழ்க்கை ரகசியங்களைப் புட்டு  புட்டு வைத்துள்ளார் ஹீ யியான்.

லஞ்சம் வாங்கும் ராணுவத்தினர்

 ஹீ யியானின் குடும்பம், அதிபர் கிம் ஜாங்குக்கு உறவு வட்டத்தில் இருக்கும் குடும்பம் என்பதால், அவரின் தந்தை  ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றினார். இதனால் நகரில் முக்கிய நபர்கள் இருக்குமிடத்திலேயே இவர்களுக்கு  வீடு கொடுக்கப்பட்டிருந்தது.  

" அதிபர்  நடத்தும்  ஏவுகணைச் சோதனையால்  நாட்டில் அவ்வப்போது ஒருவித பதற்றம் இருந்துகொண்டே  இருக்கும்.இதனால் எனது தந்தை இரவில்கூட போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதுபோல ராணுவச்  சீருடையுடன்தான் தூங்குவார். ராணுவத்தில் முக்கியமான அதிகாரி என்ற முறையில், அவரது பணி காரணமாக கிம்  ஜாங்கின் ஆட்சி அவலங்களை எங்களால் மிக நெருக்கமாகப் பார்க்க முடிந்தது"  என்று கூறும் லிம்மின் தந்தை  அவரது 51-வது வயதில் மரணமடைந்தார். 

" என் தந்தை ராணுவத்தில் அதிகாரி அந்தஸ்தில் பணியாற்றினார் என்றாலும் அவருக்குச் சம்பளம் ஒன்றும்  சொல்லிக்கொள்ளும்படி இல்லை. எல்லா ராணுவ அதிகாரிகளுக்கும் இதே கதைதான். அதைவிட கொடுமை கீழ்  நிலை ராணுவ வீரர்களுக்கு. அவர்களுக்குச் சம்பளம் என்ற ஒன்று கொடுக்கப்படுகிறதா என்று சொல்ல முடியாத  அளவுக்கு மிக மிகக் குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. இதர அரசு ஊழியர்களுக்கும் இப்படித்தான் குறைந்த  சம்பளம். 

அதே சமயம் என் தந்தை ராணுவத்தில் உயரதிகாரி என்பதால், பதவியை வைத்து அவர் லஞ்சம் வாங்கி நிறைய  சம்பாதித்தார். அதனால் நாங்கள் பணக்கஷ்டம் இல்லாமல் வளர்ந்தோம். அதே சமயம் எங்கள் தந்தை வீட்டுக்கு  வந்தால், ராணுவ விவகாரங்கள் குறித்தோ அல்லது அதிபர் கிம் ஜாங் குறித்தோ எங்களிடம்  ஒரு வார்த்தைகூட  பேசமாட்டார். ஏனெனில் வீட்டைச் சுற்றி மட்டுமல்ல. அங்கிங்கெனாதபடி எங்கும் ராணுவ வீரர்கள் சுற்றி  வந்துகொண்டுதான் இருப்பார்கள். எனவே, ஒரு வார்த்தை அதிபரைக் குறித்து தவறாகப் பேசிவிட முடியாது. அப்படிப்  பேசினால் பேசியவரின் குடும்பமே கொல்லப்படும்" என்று சொல்லும் லிம், அவரின் தந்தை மறைவுக்குப் பின்னர்  இனிமேலும் இங்கிருக்க முடியாது என நினைத்து, தனது தாயார், ஒரு சகோதரி மற்றும் ஒரு தம்பியுடன் மிக  ரகசியமான முறையில் தென்கொரியாவுக்குத் தப்பி வந்துள்ளார். அவரது தந்தையுடன் பணிபுரிந்த ஓர் அதிகாரியின்  உதவியுடன், வழியெல்லாம் ஆங்காங்கே மறிக்கும் ராணுவத்தினருக்கு லஞ்சம் கொடுத்து லஞ்சம் கொடுத்தே  எல்லையைக் கடந்து தப்பியுள்ளார். மிகக்குறைந்த சம்பளம்தான் கிடைக்கிறது என்பதால், ராணுவத்தினரும் லஞ்சம்  வாங்கிக்கொண்டு இவ்வாறு வடகொரியாவிலிருந்து ரகசியமாகத் தப்பிக்க நினைப்பவர்களுக்கு உதவுகின்றனர்.   

இவ்வாறு தென்கொரியாவுக்குத் தப்பி வந்த லிம், இங்கிலாந்திலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு  அளித்த பேட்டியில்தான் மேற்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளார். 

சிறை முகாமல்ல... வதை முகாம்

லிம்மைப் போன்று தப்பி வந்த வேறு சிலர், வடகொரியாவின் கொடூர சிறை முகாம்களில் நடக்கும் விதவிதமான  கொடுமைகள் குறித்தும், நெஞ்சைப் பதறவைக்கும் சிறை அதிகாரிகளின் அட்டகாசங்கள் குறித்தும் பல்வேறு  தகவல்களை வெளியிட்டுள்ளனர். 

கிறிஸ்தவர்கள், அரசியல் கைதிகள், அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாகக்  குற்றம்சாட்டப்பட்டவர்கள் எனச் சுமார் 80,000 முதல் ஒன்றேகால் லட்சம் பேர் வரை இந்த வதை முகாம்களில்  அடைக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

" இந்தச் சிறை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அடிமைத் தொழிலாளிகளாக நடத்தப்படுகின்றனர்.  நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு சிறை அதிகாரிகளால் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்படும்  கைதிகளின் உடல்களை, சக கைதிகளையே அருகில் உள்ள மலை உச்சிக்குச் சுமந்து செல்ல சிறை அதிகாரிகள்  கட்டாயப்படுத்துவார்கள். சரியான உணவு எதுவும் கொடுக்கப்படாமல் தேகம் மெலிந்து பலவீனமாகக் காணப்படும்  அந்தக் கைதிகள் சடலத்தை மிகவும் கஷ்டப்பட்டு மலை உச்சிக்குக் கொண்டு செல்வார்கள். அவ்வாறு கொண்டு  செல்லப்படும் சடலங்களின் முகங்கள் எலிகளால் கடித்துக் குதறப்பட்டு, பார்க்கவே மிகவும் கொடூரமாக இருக்கும்.  அவ்வாறு மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்படும் சடலங்கள் எரிக்கப்பட்டு, அவற்றின் சாம்பலை வயல்களுக்கு  உரமாகப் பயன்படுத்த அதிகாரிகள் எடுத்துச் செல்வார்கள். 

சித்ரவதைகள், போதிய உணவு கொடுக்காமல் பட்டினி போடுவது, மருத்துவ சிகிச்சை அளிக்க மறுப்பது, பாலியல்  பலாத்காரம் என இன்னும் பல்வேறு கொடுமைகளை அந்த வதை முகாம்களில் சிறைக் கைதிகள் அனுபவித்து  வருகின்றனர். நாய் மற்றும் பன்றிகளை விட கேவலமான வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள். இதற்கு செத்துப்போவதே மேல். 

அதிபர் கிம் ஜாங்கை விமர்சித்து சிறை முகாமுக்குப் போகும் யாரும் உயிருடன் திரும்ப முடியாது. வடகொரிய  சமூகத்தில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், கிம்மையோ அல்லது அவரது குடும்பத்தினரை  மட்டும் நீங்கள் விமர்சித்துவிடக் கூடாது. மீறி விமர்சித்து பிடிபட்டால், உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும்  நீங்கள் உயிர் பிழைக்க முடியாது. அப்படி ஒரு பயங்கரமான அரசு அமைப்பு அங்கு இருக்கிறது" என்று  வடகொரியாவிலிருந்து தப்பி வந்த யேங் கீ என்பவர் ஐ.நா. விசாரணைக் குழுவிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில்  கூறியுள்ளார். 

ஐ.நா விடுத்த எச்சரிக்கை 

வடகொரியாவில், குறிப்பாக சிறைமுகாம்களில் நடக்கும் சித்ரவதைகள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மனித  உரிமை மீறல்கள் தொடர்பாகப் புலனாய்வு செய்து அறிக்கை அளிக்க குழு ஒன்றை ஐ.நா. அமைத்தது. இந்தக்  குழுவினர் வடகொரியாவிலிருந்து தப்பி வந்து தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில்  தஞ்சமடைந்தவர்களிடம் நடத்திய விசாரணைகள் மற்றும் அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள்,  வடகொரியாவுக்குச் சென்று நடத்திய விசாரணைகள், வடகொரிய சிறை முகாம்களில் அடைக்கப்பட்டு  தப்பிப்பிழைத்தவர்கள் போன்றவர்களிடம் நடத்திய விசாரணைகள் மற்றும் வாக்கு மூலங்கள் அடிப்படையில் 400 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை தயாரித்தது. 

இந்த அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்து பேசிய அந்தக் குழுவின் தலைவர்  மிக்கேல் கிர்பய்,  பிணங்களைப் பானையில் வைத்து மலை உச்சிக்குக் கொண்டு செல்லுமாறு கைதிகளைக்  கட்டாயப்படுத்தியது போன்ற சித்ரவதைகளெல்லாம் ஹிட்லரின் நாஜிப் படைகள் செய்த கொடூரங்களை  நினைவூட்டுகிறது என்று கூறினார். மேலும் மனித உரிமைகளுக்கு எதிராக, மனிதத்தன்மை கொஞ்சமும் இல்லாமல்  வடகொரியாவில் நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு ராணுவத் தலைமை தளபதி என்ற முறையில் நீங்கள்தான்  பொறுப்பேற்க வேண்டும் என்றும், செய்யும் அனைத்துக் குற்றங்களுக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டிய  சூழல் வரும் என்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு, தான் எழுதிய கடிதத்தையும் அப்போது கிர்பய் வெளியிட்டிருந்தார். 

ஆனால், ஐ.நா விசாரணைக் குழு தாக்கல் செய்த இந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளையெல்லாம்  மறுத்த வடகொரியா,  'மனித உரிமைகள் பாதுகாப்பு' என்ற பெயரில் அதிபர் கிம் ஜாங்கின் ஆட்சியைக்  கவிழ்ப்பதற்கான சதி இது என அதனை அலட்சியப்படுத்திவிட்டது. 

இந்த நிலையில், " வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளைப் பற்றி மட்டுமே உலக நாடுகள் பேசவும் கவலை  வெளியிடவும் செய்கின்றன. ஆனால், வடகொரியா விஷயத்தில் அதையும் தாண்டி கவனம் செலுத்த வேறு  விஷயங்களும் இருக்கின்றன என்பதை இந்த உலகுக்குக் காட்டுவதாக உள்ளது இந்த அறிக்கை. உலக நாடுகள்  இனியேனும் இந்தக் கொடுமைகளுக்கு முடிவுகட்ட முன்வர வேண்டும்" என்று மனித உரிமைகள் ஆணையத்தின்  செய்தித் தொடர்பாளர் ஜுலி ரிவேரோ கூறியிருந்தார். 

அவர் அவ்வாறு கூறி ஆண்டுகள் மூன்று ஓடிவிட்டன. நிலைமையில் எவ்வித மாற்றமுமில்லை!  
=======================================================

சிறை முகாம்கள்: உயிர் பிழைத்தவர்களின் உறைய வைக்கும் வாக்குமூலங்கள்

கிம் ஜோ இல் ( முன்னாள் ராணுவ அதிகாரி)  

" பொது இடத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை முதன்முதலில் நான் பார்த்தது எனது வகுப்புத்  தோழனின் மைத்துனர் கொல்லப்பட்டபோதுதான். முதல் குண்டு பட்டதிலேயே அவரது மண்டையிலிருந்து மூளை  சிதறி ரத்தம் தெறித்தது. அதனைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியில் கத்தினார்கள். அப்படி ஒரு நிகழ்வைப் பார்த்த  பின்னால் உங்களால் இரவில் தூங்க முடியாது" 

யங் சூன் ( 9 ஆண்டுகள் வடகொரியவின் 'யோடோக்' என்ற சிறை முகாமில் இருந்தவர்) 

" என்ன குற்றம் என்று தெரியாமலேயே என் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற ஆறு பேரும் என்னுடன் சிறைக்குக்  கட்டாயப்படுத்தி அனுப்பப்பட்டார்கள். 70 வயதுக்கும் மேலான என் தாய் தந்தையர், என் 9 வயது மகள் மற்றும் 7  வயது, 4 வயது மற்றும் ஒரு வயது கொண்ட என் மூன்று மகன்கள் சிறையிலடைக்கப்பட்டனர். என் பெற்றோர்  பட்டினியாலேயே உயிரிழந்து போனார்கள். அவர்களை அடக்கம் செய்ய என்னால் சவப்பெட்டிகூட வாங்க  முடியாமல் போய்விட்டது." 

ஷின் டாங் ( சிறை முகாமில் பிறந்து தையல் மெஷின் ஒன்றைக் கீழே போட்டதற்காகத் தண்டிக்கப்பட்டவர்) 

" எனக்குத் தண்டனையாக என் இரண்டு கரங்களுமே மணிக்கட்டுக்குக் கீழே வெட்டப்படப்போவதாகத்தான் நான்  எண்ணினேன். ஆனால், நல்லவேளையாக எனது கைவிரல்கள் மட்டுமே துண்டிக்கப்பட்டன."

ஜீ ஹியான் ( என்ன குற்றம் செய்தார் என்பதைச் சொல்லாமலேயே சிறை முகாமுக்கு 1999-ம் ஆண்டுக்கு  அனுப்பப்பட்டவர்) 

" ஒரு சிறைக் காவலர், சிறை முகாமில் உள்ள ஒரு குழந்தையின் தாயாரிடம் ' உன் குழந்தையைத் தலைகீழாகப்  பிடித்து வாளியில் உள்ள தண்ணீரில் அமிழ்த்து' எனத் துப்பாக்கி முனையில் மிரட்டினார். 'என் குழந்தையை  விட்டுவிடுங்கள்...!' என அந்தப் பெண் எவ்வளவோ கெஞ்சியும் அவர் இரக்கம் காட்டவில்லை. கடைசியில் அந்தப்  பெண் கைகள் நடுங்க, தன் குழந்தையைத் தலைகீழாகத் தூக்கி வாளித் தண்ணீரில் அமிழ்த்தினார். சில  நிமிடங்களிலேயே அந்த வாளித்தண்ணீரிலிருந்து குமிழ்கள் வெளிவரத் தொடங்கி, அந்தக் குழந்தை இறந்துபோனது." 

=============================================================

கிம் ஜாங் இன்னும் மிரட்டுவார்...