Published:Updated:

எமிர் பைசல் தொடங்கி பஷர் அல் ஆஸாத் வரை...100 ஆண்டுகளாகப் போரின் பிடியில் சிரியா!

எமிர் பைசல் தொடங்கி பஷர் அல் ஆஸாத் வரை...100 ஆண்டுகளாகப் போரின் பிடியில் சிரியா!
எமிர் பைசல் தொடங்கி பஷர் அல் ஆஸாத் வரை...100 ஆண்டுகளாகப் போரின் பிடியில் சிரியா!

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே நடைபெறும் போரில் ஒரே வாரத்தில் 500 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்னும் செய்தி உலகையே உலுக்கி எடுக்கிறது. உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியாகி நம் இதயத்தை நொறுங்கச் செய்கின்றன. சிரியாவில் தற்போதைய மோதல்கள் ஏதோ கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களாக நடைபெற்றுக்கொண்டிருப்பது அல்ல. கடந்த நூறாண்டுகளாகவே போரின் பிடியில் சிக்கி சிரியா சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. பல நாடுகளின் பல்வேறு தாக்குதல்களை சிரியா எதிர்கொண்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் சிரியா சந்தித்த போர்களின் முக்கிய நிகழ்வுகள் இதோ...

1918 - அக்டோபர் - ஆங்கிலேயரின் உதவியுடன் மன்னர் எமிர் பைசல் தலைமையில் சென்ற அரேபியப் படைகள், அதுவரை இருந்த பல ஆண்டுகால ஒட்டமான் ஆட்சியை வீழ்த்தி, டமாஸ்கஸ் நகரைக் கைப்பற்றியது.

1919 -  வெர்சைலஸ் நகரில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் சுயாட்சி முறையை அமல்படுத்த கோரினார் மன்னர் எமிர் பைசல். அதே ஆண்டு ஜூன் மாதத்தில் சிரியாவின் தேசிய காங்கிரஸ் தேர்தல் நடைபெற்றது. பாலஸ்தீன பிரதிநிதிகளுடன் சிரியாவின் சட்டசபை கூடியது.

1920 - மார்ச்  - அரேபிய மன்னர் எமிர் பைசலை சிரியா நாட்டு மன்னராக தேசிய காங்கிரஸ் அறிவித்தது.

1920 - ஜூன் - 'சான் ரெமோ அமைதி மாநாட்டில்' எடுக்கப்பட்ட முடிவின் மூலம் மன்னர் பைசல் தலைமையிலான ஆட்சி, இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன்படி 'சிரியா - லெபனான்' பகுதிகள் பிரெஞ்சு அரசின் கட்டுப்பாட்டிலும், பாலஸ்தீனப் பகுதி ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலும் விடப்பட்டது.

1920 - ஜூலை - மன்னர் பைசலை வெளியேற்றி டமாஸ்கஸ் நகரைக் கைப்பற்றியது பிரெஞ்சுப் படை. ஆகஸ்ட் மாதத்தில் லெபனானை தனி நாடாக அறிவித்தது.

1922 - சிரியாவை மூன்று பகுதிகளாகப் பிரித்தது பிரெஞ்சு அரசு. அதில் கரையோரப் பகுதியை ஒரு பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கும்  தென் பகுதியை மற்றொரு பிரிவினருக்கும் பிரித்தளித்தது.

1925-26 - பிரெஞ்சு அரசை எதிர்த்து மக்களிடையே தேசிய அளவில் கிளர்ச்சி  ஏற்பட்டது. அதன்விளைவாக பிரெஞ்சு அரசு, டமாஸ்கஸ் நகரில் வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தியது.

1928 - ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டு, சிரியா நாட்டிற்கு அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கப்பட்டது. இதை பிரெஞ்சு நாட்டின் உயர் ஆணையர் நிராகரித்ததால் மீண்டும் கிளர்ச்சி உருவானது.

1936 - சிரியாவிற்கு சுதந்திரம் வழங்க பிரெஞ்சு அரசு ஒப்புக்கொண்டது. ஆனால், ராணுவம் மற்றும் பொருளாதாரத்தில் தங்கள் ஆதிக்கத்தைத் தொடர்ந்ததுடன், லெபனான் தனி நாடாகவே தொடர்ந்தது. 

1940 - இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியிடம் பிரெஞ்சு தோல்வியடைந்ததால் சிரியா, Vichy பிரான்ஸ் கட்டுப்பாட்டில் வந்தது.

1941 - ஆங்கிலேய மற்றும் 'ஃப்ரி பிரெஞ்சு' படைகள் சிரியாவைக் கைப்பற்றின. பிரெஞ்சு ஜெனரல் 'டே கௌலே' தங்கள் படை வெளியேறுவதாக அறிவித்தார்.

1945 - பிரெஞ்சு அரசை வெளியேற வலியுறுத்தி சிரியா நாட்டு மக்கள் போராட்டம்.

1946 - பிரெஞ்சு நாட்டின் கடைசிப்படை சிரியாவிலிருந்து வெளியேறியது.

1947 - மைக்கேல் அப்லாக் மற்றும் சாலாஹ்-அல்-தின் அல்-பிட்டார்  தலைமையில் 'அரேபிய சோசியலிஸ பாத் கட்சி' நிறுவப்பட்டது.

1949 - ஓராண்டு இடைவெளியில் ஏற்பட்ட ராணுவப் புரட்சி மூலம் ராணுவத் தளபதி அடிப் -அல்- ஷிஷாக்லி ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தார்.

1954 - அல்-ஷிஷாக்லிக்கு எதிராக ராணுவ அதிகாரிகள் சதி செய்தனர். ஆனால் அதன் விளைவாக மக்களாட்சி மலர்ந்தது.

1955 - மூத்த தேசியவாதி ஷுக்ரி-அல்-குவாத்தலி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எகிப்து நாட்டுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டது சிரியா.

1958 - பிப்ரவரி - எகிப்து மற்றும் சிரியா நாடுகள் இணைந்து 'ஐக்கிய அரபு குடியரசை' உருவாக்கின. இதற்கு எகிப்து அதிபர் கமல் அப்துல் நாசிர் தலைமை தாங்கினார். 'இரு நாடுகளும் இணைய வேண்டும்' என்று கூறிய பாத் கட்சியினரைக் கண்டிக்கும் வகையில், அவர் சிரியாவின் அரசியல் கட்சிகளை கலைக்க உத்தரவிட்டார். 

1963 - மார்ச் - ராணுவ அதிகாரிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். பாத் கட்சியிலிருந்து மந்திரிசபை அமைக்கப்பட்டு, அமின்-அல்-ஹபீஸ் அதிபரானார்.

1966 - பிப்ரவரி - பாத் கட்சி அதிகாரத்தை எதிர்த்து சாலாஹ்-ஜாதிட் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மூத்த தலைவர்களான அமின்-அல்-ஹபீஸ், சாலஹ்-அல்-தின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

1967 - ஜூன் - ஆறு நாள்களில் சிரியாவின் விமானப்படையை வீழ்த்தி கோலன்-ஐக் கைப்பற்றியது இஸ்ரேல்.

1970 - நவம்பர் - அதிபர் நூருல் தின்-ஐ வெளியேற்றி சாலாஹ்-ஜாதிட்டை கைது செய்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹபீஸ்-அல்-அஸாத்.

1971 - மார்ச் - பொதுவாக்கெடுப்பின் மூலம் சிரியா அதிபராக அஸாத் ஏழு ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1973 - 'இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் மட்டுமே அதிபராக இருக்க வேண்டும்' என்ற அரசியலமைப்புச் சட்டத்தை 'யார் வேண்டுமானாலும் அதிபராகலாம்' என்று மாற்றியதற்காகப் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது. இதனால அஸாத்தை நாத்திகவாதி என்று பலரும் குற்றம்சாட்டினர். கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. 

1973 - அக்டோபர் - சிரியாவும், எகிப்தும் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராகப் போர் தொடுத்தன. கோலன் கோபுரத்தை மீட்டெடுக்கத் தவறியது. 

1974 -மே - விடுவிப்பு உடன்பாட்டை ஏற்று சிரியாவும், இஸ்ரேலும் கையெழுத்திட்டன.

1975 - பிப்ரவரி - இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள அரபு நிலத்தை விட்டுக்கொடுத்தால், இஸ்ரேலுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என சிரியா அதிபர் ஹபீஸ் அல் அஸாத் அறிவித்தார்.

1976 - ஜூன் - நடப்பு நிலைமையைப் பாதுகாக்க, லெபனான் நாட்டுப் போரில் சிரியா தலையிட்டது.

1978 - கேம்ப் டேவிட் அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில், இஸ்ரேலில் சமநிலை கொண்டுவரும் அதிகாரம் பெற்றார் அஸாத்.

1980 - முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர் ஒருவர் அஸாத்தை சுட்டுக்கொல்ல முயற்சி செய்தார்.

1983 - மாரடைப்பு ஏற்பட்டு அஸாத் உடல்நலம் பாதிக்கப்பட்டார். ஆனால், அரசு  நிர்வாகம் அதை மறுத்தது. இந்நிலையில் அஸாத்தின் சகோதரர் ரிபாத் அரசு அதிகாரத்தைக் கையில் எடுக்கத் தயாரானார்.

1984 - ரிபாத் துணை அதிபராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். 

1990 - குவைத் நாட்டின் மீது ஈராக் படையெடுத்தது. அமெரிக்கக் கூட்டுப்படையுடன் இணைந்து ஈராக்கிற்கு எதிராக சிரியா போர் செய்தது. இதன் மூலம் சிரியாவுக்கு அமெரிக்கா மற்றும் எகிப்துடன் இணக்கமான உறவு ஏற்பட்டது.

1991 - அக்டோபர் - மேட்ரிட் நகரில் நடைபெற்ற மத்திய கிழக்கு நாடுகளின் அமைதிக்கூட்டத்தில் பங்குபெற்ற சிரியா, 'கோலன் கோபுரம்' குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

1994- அஸாத்தின் மூத்த மகன் ஃபசில், கார் விபத்தில் உயிரிழந்தார்.

1998 - அஸாத்தின் சகோதரர் ரிபாத், துணை அதிபர் பதவியிலிருந்து விலகினார். 

1999 - டிசம்பர் - இஸ்ரேலிடமிருந்து 'கோலன்'-ஐ மீட்பது குறித்த பேச்சுவார்த்தையை அமெரிக்காவில் நடத்த எண்ணினார் அஸாத். ஆனால், அப்பேச்சுவார்த்தை மாதக் கணக்கில் தள்ளிப்போனது.

2000 - ஜூன் -  ஹபீஸ் அல் அஸாத் காலமானார். அவருடைய இரண்டாவது மகன் பஷர் சிரியா புதிய அதிபராகப் பதவி ஏற்றார்.

2000 - நவம்பர் - கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகன் 600 பேரை விடுவிக்க பஷர் ஆணையிட்டார்.

2001 - இருபது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அரசியல் பிரவேசம் மேற்கொள்ளப் போவதாக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் அறிவித்தது.

2001 - ஜூன் - சிரியாவின் ஆதிக்கத்தை லெபனான் நாட்டினர் எதிர்த்ததால், தங்கள் படையை வெளியேற்றியது சிரியா.

2001 - செப்டம்பர் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற சார்பு சீர்திருத்த செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

2004 - ஜனவரி - துருக்கி நாட்டிற்குப் பயணம் மேற்கொண்ட முதல் சிரிய அதிபரானார் பஷர் அல் அஸாத். இதன் மூலம் பல ஆண்டுகளாக இருநாடுகளுக்கும் இடையே இருந்த கசப்பான உறவு முடிவுக்கு வந்தது.

2004 - மே - பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகவும், ஈராக் நாட்டில் தீவிரவாதிகளை தடுக்கத் தவறியதாகவும் கூறி, சிரியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா.

2005 - பிப்ரவரி - லெபனான் முன்னாள் பிரதமர் ஹரிரி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, அமெரிக்காவுடனான உறவில் பாதிப்பு ஏற்பட்டது.

2006 - நவம்பர் - ஏறக்குறைய கால் நூற்றாண்டிற்குப் பிறகு ஈராக் மற்றும் சிரியா இடையே தூதரக உறவு உருவானது.

2007 - மார்ச் - சிரியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது ஐரோப்பிய யூனியன்.

2007 - ஏப்ரல் - அமெரிக்காவின் பிரதிநிதி நான்சி பெலோஷியை அதிபர் பஷர் அல் அஸாத் சந்தித்தார். 

2007 - செப்டம்பர் - வடக்கு சிரியாவிலுள்ள அணு ஆயுத ஆலை கட்டடத்தை விமானம் மூலம் இஸ்ரேல் தகர்த்தது.

2008 - ஜூலை - அதிபர் அஸாத் பிரெஞ்சு அதிபர் நோக்கோலஸ் சரகாசியைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட விரிசல்களைச் சரி செய்ய உதவியது.

2008 - அக்டோபர் - சுதந்திரமடைந்த பிறகு முதல் முறையாக சிரியாவுக்கும்,லெபனானுக்கும் இடையே நல்லிணக்க உறவு ஏற்பட்டது.

2010 - மே - சிரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா மறுபரிசீலனை செய்தது.

2011 - மார்ச் - அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி டேரா நகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். மிகப்பெரிய அளவில் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து, 12 பேரை விடுவிக்க ஆணையிட்டார் அஸாத்.

2011 - மே - எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தடுக்க டேரா நகருக்கு ராணுவப்படைகள் சென்றன. 

2011 - ஜூன் - சிரியாவின் ரகசிய அணு உலை தொடர்பான செய்தியை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் தெரிவிக்கப்போவதாக சர்வதேச அணுசக்தி மேலாண்மை வாரியம் அறிவித்தது.

2011 - நவம்பர் - அரபு நாட்டுடன் அமைதி முயற்சியில் ஈடுபாடு காட்டாததால், சிரியாவுக்கு எதிராக அரபு லீக் வாக்களித்தது.

2012 - பிப்ரவரி - ஹோம்ஸ் மற்றும் பிற நகரங்கள் மீது வெடிகுண்டு தாக்குதலில் ஏற்படுவதைத் தடுக்க அரசு முன்வந்தது.

2012 - மார்ச் - ஐ.நா. பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் வரையறுத்த அமைதித் திட்டத்தை ஐ.நா. சபை ஒப்புக்கொண்டது.

2012 - ஜூன் - தங்கள் நாட்டு விமானம் மீது சிரியா துப்பாக்கிச்சூடு நடத்தியதால் விதிமுறைகளில் மாற்றம் செய்தது துருக்கி. மேலும், இதுபோன்ற சம்பவம் நேர்ந்தால், சிரியா - துருக்கி எல்லையை ராணுவ அச்சுறுத்தல் உள்ள இடமாக அறிவிப்போம் என்றும் கூறியது.

2012 - அக்டோபர் - அலெப்போ நகரில் நடைபெற்ற தீவிபத்து காரணமாக, பழைமை வாய்ந்த பல இடங்கள் சேதமடைந்தன.

2012 - டிசம்பர் - அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், துருக்கி மற்றும் வளைகுடா நாடுகள் இணைந்து எதிர்தரப்பு தேசியக் கூட்டணியை "நியாயமான பிரதிநிதி" என்று அங்கீகரித்தன.

2013 - ஜனவரி - டமாஸ்கஸில் உள்ள ராணுவ மையத்தின் மீது குண்டு வீசியதாக இஸ்ரேல் மீது சிரியா குற்றம்சாட்டியது.

2013 - செப்டெம்பர் - டமாஸ்கஸில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதை ஐ.நா. ஆயுத மேலாண்மை அமைப்பு கண்டுபிடித்தது. இதனால், ஆயுதக் கிடங்குகளை அழிக்க ஐ.நா. ஒப்புதல் அளித்தது.

2014 - ஜனவரி, பிப்ரவரி - இடைக்கால அரசாங்கத்தைப் பற்றி பேசத் தவறியதால், ஜெனீவா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

2014 - மார்ச் - போராட்டக்காரர்களின் கடைசி இடமாகக் கருதப்பட்ட யாபிரௌடை சிரியா ராணுவம் மற்றும் ஹெஸ்பொல்லாஹ் படை கைப்பற்றியன.

2014 - செப்டம்பர் - ஐந்து அரபு நாடுகளுடன் இணைந்து அலெப்போ மற்றும் ரக்கா பகுதிகளில் உள்ள முஸ்லிம் ஆக்கிரமிப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
 
2015 - மே - சிரியாவின் மத்தியப் பகுதியில் உள்ள பழைமைவாய்ந்த நகரமான பாமிராவை இஸ்லாமியப் போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். மேலும், உலக அளவில் பாரம்பர்யம் மிக்க சில இடங்களைச் சீர்குலைத்தனர். 

2015 - செப்டம்பர் - சிரியா மீதான முதல் விமானப்படை தாக்குதலை ரஷ்யா நடத்தியது.

2015 - டிசம்பர் - சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸிலிருந்து போராட்டக்காரர்களை வெளியேற்ற சிரியா ராணுவம் அனுமதித்தது. இதன்மூலம் அந்த இடத்தை அரசு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றியது.

2016 - மார்ச் - ரஷ்யா உதவியுடன், பாமிரா மாகாணத்தை சிரியா அரசு மீட்டது.

2016 - ஆகஸ்ட் - முஸ்லிம் போராட்டக்காரர்களைக் காப்பாற்ற சிரியா எல்லைக்குள் துருக்கி நுழைந்தது.

2016 - டிசம்பர் - ரஷ்யாவின் விமானப்படை மற்றும் ஈரான் ராணுவத்தின் உதவியுடன் பெரிய நகரமான அலெப்போவை சிரியா அரசு மீட்டெடுத்தது.

2017 - ஜனவரி - முஸ்லிம் அல்லாத போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த ரஷ்யா, ஈரான் மற்றும் துருக்கி தீர்மானம் எடுத்தது.

2017 - ஏப்ரல் - சிரியா போராட்டக்காரர்கள் மீது ரசாயனத் தாக்குதலை நடத்திய அரசின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆணையிட்டார்.

2017 - மே - குர்திஷ் பாதுகாப்புக் கூட்டத்திற்கு ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது.

2017 - ஜூன் - அமெரிக்க ஆக்கிரமிப்பு இடமான ராக்காவில் தாக்குதல் நடத்தியதால், சிரியா போர் விமானம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

2017 நவம்பர்  - இஸ்லாமியப் பகுதிகளை முழுமையாக சிரியா ராணுவம் கைப்பற்றியது. இது ஐ.எஸ். அமைப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது.

2017 - டிசம்பர் - சிரியா சென்று பார்வையிட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இஸ்லாமிய அமைப்பின் மீதான தங்கள் தாக்குதலில் வெற்றி பெற்றதாக அறிவித்தார். மேலும் ரஷ்யாவின் உதவியுடன் வடமேற்குப் பகுதிகளை சிரியா அரசு கைப்பற்றியது.

2018 - ஜனவரி - ஆப்ரின் பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த குர்திஷ் இனப் போராட்டக்காரர்களை வெளியேற்ற வடக்கு சிரியா பகுதியில் துருக்கி, கடும் தாக்குதலை நடத்தியது.

2018 - பிப்ரவரி - கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கிழக்கு கௌட்டா நகர் மீது ஐ.நா. போர் நிறுத்தத் தீர்மானத்தை மீறி, சிரியா அரசுப் படைகள் நடத்திவரும் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்