Published:Updated:

'தாக்குதல் நடத்துவது எப்படி?' போருக்கு முன்பே க்ளாஸ் எடுத்த பின்லேடன் - ட்வின் டவர் முதல் ட்ரம்ப் வரை பகுதி 6

'தாக்குதல் நடத்துவது எப்படி?' போருக்கு முன்பே க்ளாஸ் எடுத்த பின்லேடன்  - ட்வின் டவர் முதல் ட்ரம்ப் வரை பகுதி 6
'தாக்குதல் நடத்துவது எப்படி?' போருக்கு முன்பே க்ளாஸ் எடுத்த பின்லேடன் - ட்வின் டவர் முதல் ட்ரம்ப் வரை பகுதி 6

'தாக்குதல் நடத்துவது எப்படி?' போருக்கு முன்பே க்ளாஸ் எடுத்த பின்லேடன் - ட்வின் டவர் முதல் ட்ரம்ப் வரை பகுதி 6

'விக்ரம் வேதா' திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாதவனிடம் ஒரு வசனம்கூறுவார். ''கிட்டத்தட்ட நீயும், நானும் ஒண்ணுதான் சார்..." என்று. இந்த வசனம் யாருக்குப் பொருந்துதோ இல்லையோ, கண்டிப்பாக அமெரிக்காவுக்குப் பொருந்தும். ஆப்கான் போர் சமயத்தில், அமெரிக்காவைப் பார்த்து அல்-கொய்தா கூறும் வார்த்தையும் இதுவாகத்தான் இருந்திருக்கும். அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை தரைமட்டமாக்கிக் கொண்டிருந்த நேரத்தில் அமெரிக்கப் படைகள் கண்ட காட்சி, அவர்களை உறையவைத்தது. செயற்கைக்கோள் படங்கள் மேலும் அவர்களைப் பயமுறுத்தின. 

ஆம். ரசாயனத் தாக்குதலுக்கு விலங்குகளை வைத்து சோதனை நடத்திப் பார்த்திருக்கிறது அல்-கொய்தாவும், தாலிபான் தீவிரவாதிகளும். அது என்ன ரசாயனத் தாக்குதல் என்ற கேள்வி எழலாம். சமீபத்தில் சிரியாவில் நடந்த ரசாயனத் தாக்குதல் நமக்கு நினைவிருக்கலாம். நூற்றுக்கும் அதிகமானவர்களை காவு வாங்கிய ரசாயனத் தாக்குதலின் ஆதி மூலத்தைத் தேடினால் ஆப்கான் தாக்குதல்களும் அதில் அடங்கியிருக்கும். விலங்குகளை வைத்து சோதித்துப் பார்த்து, அதன் பின்னர் மனிதர்கள் மேல் பயன்படுத்தும் இந்த ரசாயனம் மனிதனை என்ன செய்யும் என்று கேட்டால், கிடைக்கும் பதில்கள் நம்மை மூச்சடைக்கச் செய்கின்றன.

ரசாயனத் தாக்குதல்களை 'பிளிஸ்டர் ஏஜென்ட், சோக்கிங் ஏஜென்ட், ப்ளட் ஏஜென்ட், நெர்வ் ஏஜென்ட்' என்று வகைப்படுத்துகிறார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். ஆனால், முடிவு என்னவோ ஒன்றுதான். உயிரைப் பறிப்பதில் அணு ஆயுதங்களுக்கு நிகரானவை இவை. பிளிஸ்டர் ஏஜென்ட் வகை ரசாயன ஆயுதங்கள் வெடித்ததும், அப்பகுதியில் உள்ள உயிர்கள் இந்த ரசாயனப் பொருளைச் சுவாசித்ததும் இறந்துவிடும் விஷத்தன்மை கொண்டவை. சோக்கிங் ஏஜென்ட் வகை தாக்குதல்களில், மூச்சடைப்பு, இதயச் செயல்பாடு நிறுத்தம் போன்றவை ஏற்பட்டு உயிர் பிரியும். ப்ளட் ஏஜென்ட் என்பது, ரத்தத்தை மொத்தமாகச் சுண்டி இழுத்து, உறையச் செய்து ஆளைக் கொன்றுவிடும் தன்மை கொண்டது. நான்காவது வகைதான் இப்போது சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தும் சரின் எனும் ரசாயனம். இதுதான் நெர்வ் ஏஜென்ட் வகை  தாக்குதலுக்கு வழிவகுப்பவை. நேரடியாக நரம்பு மண்டலத்தைத் தாக்கி ஆளைக் கொல்லும் அபாயகரமான தாக்குதல். இந்தத் தாக்குதலுக்கு அல்-கொய்தா தயாராகி இருப்பதை அறிந்து ரஷ்யாவிடம் உதவிக்கு ஓடியது அமெரிக்கா. காரணம் ரசாயனத் தாக்குதல்களில் அமெரிக்காவை விட ரஷ்யா கில்லி என்பதால்தான்.

இதற்கிடையே, ஆப்கானில் அல்கொய்தா அமைப்பினரின் கூடாரங்களை அமெரிக்கா சல்லடையாக சலித்துத் தாக்கிக்கொண்டிருந்தது. அதன் ஒரு பகுதிதான் காபூலிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலிருந்த ஒரு கூடாரத்தைத் தேடிக்கண்டுபிடித்தது. அதிலிருந்த ஆவணங்கள், அமெரிக்காவை பயத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றன. அமெரிக்காவில் 9/11 தாக்குதலுக்குப் பின், ஆற அமர உட்கார்ந்து யோசித்துதான் போருக்கு ஸ்கெட்ச் போட்டு ஆப்கானிஸ்தானை சென்றடைந்தது. ஆனால், அமெரிக்கா இங்கு கட்டாயம் வரும் என்று, ஆப்கானில் தனது படை வீரர்களுக்கு அவசர, அவசரமாக போர்ப் பயிற்சிகளை அளித்துள்ளார் ஒசாமா பின்லேடன். 

அமெரிக்கா கைப்பற்றிய அந்தக் குறிப்புகளில் கப்பலைத் தகர்ப்பது, விமானத் தாக்குதல், ரசாயனத் தாக்குதல் போன்றவற்றுக்குச் சரியான விளக்கங்களுடன் பல்கலைக்கழக பாடத்திட்டம் போல் அது தயாரிக்கப்பட்டிருந்தது. நம்ம ஊரில் முப்பது நாள்களில் ஆங்கிலம் படிப்பது எப்படி என்பது போன்ற புத்தகங்களைப் பார்த்திருப்போம். இந்தக் குறிப்புகள் குறுகிய காலத்தில் தீவிரவாதியாவது எப்படி என்ற ரகத்தில் இருந்ததைக் கண்டு, அமெரிக்கா அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றது. இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், 9/11 தாக்குதலை இப்படித்தான் நடத்த வேண்டும் என்பது போன்ற குறிப்புகளும் அதில் இடம்பெற்றிருந்ததுதான். இதைவிட அமெரிக்காவுக்கு வேறு என்ன தலைவலி வேண்டும்? 

ஆனால், அமெரிக்கா ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவாக இருந்தது. இந்த ரசாயனத் தாக்குதல்கள் தரையில்தான் பாதிப்பை உண்டாக்கும். இன்னும் அமெரிக்கத் தரைப்படைகள், ஆப்கானிஸ்தானில் கால் வைக்கவில்லை. விமானத் தாக்குதல்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்று கணித்தது. ஆனால், அதிலும் சிக்கல் ஏற்பட்டது. ரசாயனத் தாக்குதல்கள், ஆப்கானில் இருக்கும் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக இல்லாமல் அமெரிக்க மண்ணில் நிகழ்ந்து விட்டால் என்று யோசித்து மீண்டும் கவலைப்பட்டது அமெரிக்கா. அமெரிக்க தரைப்படை கால் வைக்காததற்கு இன்னொரு காரணமும் கூறப்பட்டது. ஆப்கானில் நிலவும் பனியைச் சமாளிக்க முடியாமல்தான் தரைப்படையினர் அங்கு செல்வதற்குத் தாமதப்படுத்தியதாம்.

ரஷ்யாவுடனான ஆப்கான் போரில் இதே பின்லேடன்தான், இஸ்லாமியர்களை ஒன்றுதிரட்டி பெரும்படையை உருவாக்கினார். 'அதுபோன்றதொரு விஷயம் மீண்டும் நடந்தால்...' என்றெல்லாம் அமெரிக்கா ஆராய்ச்சி நடத்தியவண்ணம் இருந்தது. அப்போதுதான் 'பின்லேடன் ஆப்கானில் இருக்கிறார்' என்ற வீடியோ வெளியானது. அல்கொய்தா - தாலிபான்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட குறிப்புகளில் 'இஸ்லாமியர்களுக்கு எதிரான அனைத்து நாடுகளுமே எதிரிதான்' என்று தெரிவிக்கப்பட்டிருந்த நீண்ட அந்தப் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றிருந்தது.

ஆப்கானிஸ்தானில் கட்டடம்  உடைக்கும் வேலையை அமெரிக்க செய்துகொண்டிருந்தது. அதுவரை, பின்லேடன் காந்தஹாரில் பதுங்கியிருந்ததாகவே தகவல். அதன் பின்னர் அவர் தன் இருப்பிடத்தை 'தோராபோரா' மலைப்பகுதிகளுக்கு மாற்றிக்கொண்டார். இந்நிலையில், பின்லேடன் பேசிய வீடியோ அமெரிக்காவிடம் சிக்கியது. இல்லை... இன்றும் திருத்தமாகச் சொன்னால் அமெரிக்காவின் கையில் சிக்க வைக்கப்பட்டது. 

அதில், "எமது வீரர்களுக்கு விமானத்தில் ஏறும்வரை இலக்கு தெரியாது. விமான எரிவாயும் இரும்பை உருக்கும் என்பது சின்ன கால்குலேஷன்தான். அதுதான் வெற்றி" என்று அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்த பேச்சுகள் அமெரிக்க அதிபர் புஷ்ஷூக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

"வீடியோவெல்லாம் வெளியாகிறது, பின்லேடன் எங்கே?" என்று சீறினார் புஷ். "அமெரிக்காவில் உள்ள ஒரு மாகாணத்தின் சைஸ்கூட இல்லாத ஆப்கானிஸ்தானில் பின்லேடனைத் தேட முடியவில்லையா?" என்று கோபமாகக் கேட்டார். மலைப்பகுதிக்குள் தீவிரமாக ஊடுருவ அமெரிக்கா, தனது குள்ள நரித்தன உத்திகளை மீண்டும் கையில் எடுத்தது. "அதற்கெல்லாம் பலன் கிடைத்ததா? பின்லேடன் என்ன ஆனார்? அல்-கொய்தாவின் ஆக்‌ஷன் ப்ளான் என்ன?" என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு