Published:Updated:

வளர்த்துவிட்ட அமெரிக்காவை ஏன் வெறுத்தார் பின்லேடன்? - ட்வின் டவர் முதல் ட்ரம்ப் வரை - பாகம் 7

வளர்த்துவிட்ட அமெரிக்காவை ஏன் வெறுத்தார் பின்லேடன்? - ட்வின் டவர் முதல் ட்ரம்ப் வரை - பாகம் 7
வளர்த்துவிட்ட அமெரிக்காவை ஏன் வெறுத்தார் பின்லேடன்? - ட்வின் டவர் முதல் ட்ரம்ப் வரை - பாகம் 7

புதுசா கட்சி ஆரம்பிச்சுருக்கிற கமல்ஹாசன்கிட்ட போய் நீங்க வலதுசாரியா இல்ல இடதுசாரியானு கேட்டா நான் மையமான ஆளுனு ஒரு விளக்கம் கொடுக்கிற மாதிரி. பின்லேடன்கிட்ட போய் நீங்க நல்லவரா, கெட்டவரானு கேட்டா ரெண்டும் இல்லாம ஒரு பதில் இருக்கு என்பதுதான் பின்லேடன் பற்றிய கேள்விக்கான நிலைப்பாடு. அமெரிக்கா மீது பின்லேடன் நடத்தியது தீவிரவாதத் தாக்குதல் என்றால், அமெரிக்கா இஸ்லாமிய நாடுகள் மீது நடத்தியதும் தீவிரவாதத் தாக்குதல்கள்தானே என்பதுதான் பின்லேடன் தரப்புக் கூற்று.

ஆப்கானிஸ்தானில் சர்வநாசம் செய்துகொண்டிருந்த அமெரிக்காவுக்கு, பெரும் பிரச்னையாக இருந்த கேள்வி, பின்லேடன் எங்கே என்பது மட்டும்தான். தோராபோரா மலைப்பகுதிகளில் பின்லேடன் ஒளிந்திருப்பது யாருக்கும் தெரியாமல்தான் இருந்தது. ஆனால், வடக்குக் கூட்டணிப் படையினர் அங்குள்ள பழங்குடியினர் உதவியுடன் இடத்தை அறிந்தனர். 

பின்லேடன் படையினர்  ஆளுக்கு ஒரு பக்கம் சென்று எதிராளியைக் குழம்ப வைப்பார்கள். அதன்பின் அவர்கள் சென்ற திசையில்லாமல் வேறு திசைக்குச் செல்வது போன்ற உத்திகள் ஆரம்பத்தில் கைகொடுத்தன. ஆனால், பல போர்களைப் பார்த்த, பல போர்களுக்குப் பயிற்சி அளித்த அமெரிக்கா முன் இந்த உத்திகளால் நீண்ட நாள்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தோராபோரா மலையில் குகைகளில் பதுங்கி இருந்த அல்கொய்தாவினரைத் தரைப்படை வீரர்கள் இல்லாமல் விமானப்படை வீரர்களை வைத்தே சமாளித்தது அமெரிக்கா. சிலர் சரணடைந்தனர், சிலர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவுக்கு வடக்குப்பகுதி கை வசப்பட்டது. அப்படியே கந்தஹார், காபூலில் தாலிபான்களை விரட்டியடித்து நாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது அமெரிக்கா.

கந்தஹாரையும், காபூலையும் அமெரிக்கா கைப்பற்றியது என்று ஒற்றைவரியில் சொன்னால் அது சாதாரணமாகிவிடும். கந்தஹார் தான் ஆப்கானிஸ்தானின் தலைநகர் என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு அழகான ஊரை அமைதியான மயானமாக மாற்றியது அமெரிக்கா தான். 

இடைக்கால அரசை அமைக்க அமெரிக்கா பேச்சுவார்த்தைகளைத் துவங்கியது, ஆனால், ஒன்று மட்டும் நடக்கவே இல்லை. வந்த வேலை என்ன... பின்லேடனை பிடிப்பது. அது மட்டும் நடக்கவே இல்லை. சரி இப்போது கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போம். இவ்வளவு கொடூரமாக ஆப்கானைத் தாக்கும் அமெரிக்கா தீவிரவாதியா... அமெரிக்காவைத் தாக்கிய பின்லேடன் தீவிரவாதியா... எல்லாருக்கும் தானாகவே இந்தக் கேள்வி மனதில் எழும். பின்லேடன் பேசியது தீவிரவாதம் அல்ல.. தன் மதம் மீதான பற்று என்கின்றனர் பின்லேடனைக் கொண்டாடுபவர்கள். 

பின்லேடன் நல்லவரா? கெட்டவரா? இந்த நாயகன் பட கேள்விக்கு விடை தேட இந்தச் சில காரணங்கள் தேவைப்படும். அமெரிக்காதான் பின்லேடனை வளர்த்துவிட்டது, ரீகனே பார்க்க விரும்பினார் என்று சென்ற அத்தியாயங்களில் படித்தவர்கள் பின்லேடன் ஏன் அமெரிக்காவை வெறுக்கத் துவங்கினார் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். இதனை பின்லேடனின் பேட்டிகளில் இருந்தே பெற முடியும்.

1998-ம் ஆண்டு டைம் பத்திரிகைக்கு ஒரு பேட்டி தருகிறார் பின்லேடன். அதில் தனது தாயகத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் கூடாது என்று சூளுரைக்கிறார். சவுதி மண்ணை விட்டு அமெரிக்கா வெளியேற வேண்டும். மத்தியக் கிழக்கு நாடுகளைக் கண்காணிக்க அமெரிக்கா யார்? என்ற கோபம் தனக்கு இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

வரலாற்றில் இன்னும் கொஞ்சம் பின்னே சென்றால் 1997-ம் ஆண்டு. இந்த முறை சி.என்.என் பேட்டியில் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களை முற்றிலுமாக அழிக்க ஏதாவது ஒரு காரணத்தை எடுத்துக்கொண்டு அமெரிக்கா அங்கு செல்கிறது என்றும் இதை அமெரிக்கா நிறுத்தும் வரை அதன் மீதான புனிதப்போர் தொடரும் என்கிறார்.

பின்லேடன் மனதில் அமெரிக்கா மட்டும் எதிரியல்ல. அமெரிக்காவில் இன்று பிறந்த குழந்தையையும் அவர் எதிரியாகப் பார்க்க வேண்டும் என்ற மனநிலையில்தான் இருந்திருக்கிறார். காரணம் அவர்கள்தான் இந்த அரசைத் தேர்ந்தெடுக்கிறார்கள், அதுதான் உலகில் இஸ்லாமியத்துக்கு எதிராகச் செயல்படுகிறது என்பது பின்லேடன் தரப்பு வாதம். ஒருங்கிணைந்த இஸ்லாமிய தேசம் பின்லேடனின் கனவு அதற்காகப் பல நாடுகள் அவருக்கு உதவின. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் அமைப்பும் ஒன்று. இதுதான் பிற்காலத்தில் டிசம்பர் 13 பாராளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டது. இஸ்லாமியர்களை அழிப்பவர்களையும், அதற்கு ஆதரவளிப்பவர்களை அழிப்பதும்தான் பின்லேடன் மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் கனவு. 

இதெல்லாம் பின்லேடன் அமெரிக்காவை வாட்டி வதைக்க முக்கியக் காரணங்களாக இருந்தன. அதிபர் புஷ்ஷுக்கு நேரடி நெருக்கடி ஆரம்பித்தது. அமெரிக்க மக்களே பின்லேடனை ஏன் பிடிக்கவில்லை. எங்கே பின்லேடன் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆப்கானைக் கையில் வைத்திருந்த அமெரிக்காவுக்கு இதுதான் பெரிய தலைவலி. புஷ் யோசித்தார். அடுத்தமுறை அதிபராக வேண்டும் என்றால் பின்லேடன் தலை வேண்டும். ஆனால், அது தாமதமாகலாம் என்பதால் புதிய ஐடியாவை யோசித்தார். அது வேறு என்னவாக இருக்கும். மீண்டும் போர்தான். இந்த முறை யார்? அவருக்கும் அமெரிக்காவுக்கும் என்ன பிரச்னை? அடுத்த பாகத்தில் பார்ப்போம்.