Published:Updated:

பின்லேடன் லட்சியம்... சதாம் உசேன் நிச்சயம்... புஷ் ஃபார்முலாவில் சிதைந்த ஈராக் - ட்வின் டவர் முதல் ட்ரம்ப் வரை பாகம் 8

பின்லேடன் லட்சியம்... சதாம் உசேன் நிச்சயம்... புஷ் ஃபார்முலாவில் சிதைந்த ஈராக் - ட்வின் டவர் முதல் ட்ரம்ப் வரை பாகம் 8
பின்லேடன் லட்சியம்... சதாம் உசேன் நிச்சயம்... புஷ் ஃபார்முலாவில் சிதைந்த ஈராக் - ட்வின் டவர் முதல் ட்ரம்ப் வரை பாகம் 8

பின்லேடன் லட்சியம்... சதாம் உசேன் நிச்சயம்... புஷ் ஃபார்முலாவில் சிதைந்த ஈராக் - ட்வின் டவர் முதல் ட்ரம்ப் வரை பாகம் 8

டிமானிடைசேஷனை மறக்க ஒரு பீப் சாங்..., நீட் தேர்வுப் பிரச்னையை திசை திருப்ப ஒரு 'ஜிமிக்கி கம்மல்' பாட்டு என நொடிக்கு நொடி மாறும் இணைய மேஜிக் அமெரிக்காவுக்கு அப்போதே தெரிந்திருந்தது. உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவிடம் பின்லேடன் எங்கே என்று கேட்டுக் கொண்டிருந்த வேளையில், 'ரசாயன ஆயுதங்கள் ஈராக்கில் உள்ளது' என்று புதுக்கணக்கை ஆரம்பித்து யுத்த பூமியை கொஞ்சம் ஈராக் பக்கம் மாற்ற முடிவெடுத்து வேலைகளை வெற்றிகரமாக ஆரம்பித்தது அமெரிக்கா. இந்தமுறை அமெரிக்காவின் இலக்கு ஈராக் அதிபர் சதாம் உசேன். ஒசாமா பின்லேடனை மறக்க, ஈராக் போரை தீவிரப்படுத்த நினைத்தது அமெரிக்கா.

'ரசாயன ஆயுதங்கள் இருக்கிறதா, இல்லையா என்று ஈராக்கிடம் கேள்வி கேட்டது மட்டுமில்லாமல் அதுகுறித்த சோதனையையும் அமெரிக்கா மேற்கொள்ளும்' என்று அறிவிக்க, கோபத்தின் உச்சத்துக்கே போனார் சதாம் உசேன். 'ஐ.நா கேள்வி கேட்டது, அதற்குப் பதில் கூறிவிட்டோம். தேவையில்லாத வேலைகளைச் செய்யவேண்டாம்' என்று அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை எச்சரித்தார் சதாம் உசேன். 

ஆனாலும், புஷ் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி ஐ.நா-வை சம்மதிக்க வைத்து, அமெரிக்கா சோதனை நடத்த அனுமதி வாங்கினார். வேறு வழியில்லாமல் சதாமும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.

'அமெரிக்கா வந்து ஏதாவது குட்டையை குழப்பும்' என்று சதாம் உசேனுக்குத் தெரியும். அதனால் 12 ஆயிரம் பக்க அறிக்கை ஒன்றை தயார் செய்து ஐ.நா-வுக்கு அனுப்பினார். ஐ.நா-வும் அமெரிக்காவின் அறிக்கை வரட்டும் என்று பொறுமையாக இருந்தது. சதாம் உசேனின் அறிக்கை அவ்வளவு தெளிவாக இருந்தது. மூன்று மாத சோதனைக்குப் பிறகு ரசாயன ஆயுதங்கள் இல்லை; ஆனால் ஈராக் அறிக்கையில் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளது என்று தெரிவித்தது அமெரிக்கா. அதுமட்டுமில்லாமல் ஈராக் மீது போர் என்ற விஷயத்தை உலக பயங்கரவாத யுத்தத்தின் அடுத்த நகர்வு என்றும் அமெரிக்காஅறிவித்தது. ஈராக் மீது போர் தொடுப்பதற்கு பல நாடுகளும் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்தன. அதற்குக் காரணம், அப்போது பல நாடுகளுக்கு சதாம் உசேன் பிரச்னையாக இருந்ததுதான்.

ஈராக் போருக்கு தேதி குறித்தார் புஷ். 'சதாம் உசேன் அல்லது பின்லேடன் இரண்டில் ஒரு தலை உருண்டாலும் அடுத்த ஆட்சி நமதே' என்ற மனநிலையில் இருந்தார் அவர். 2003 மார்ச் 19-ம் தேதியன்று முறைப்படி போரைத் தொடங்கியது அமெரிக்கா. அன்றே வீடியோவில் தோன்றிய சதாம் உசேன் ''அமெரிக்கர்கள் அனைவரும் கிரிமினல்கள்'' என்று கூறினார். ஆப்கான் யுத்தம் போல் அல்ல ஈராக் யுத்தம் என்பது மட்டும் அமெரிக்காவுக்கு தெளிவாக தெரிந்தது. தெளிவான ப்ளானுடன் களமிறங்கியது. முதல் இலக்கு உம் கஸர். காரணம், எண்ணெய்க் கிணறுகளை தங்கள் வசமாக்குவது என்பதற்காகத்தான். இப்போது சில மீம்களை எல்லாம் வைரலாகப் பார்க்க முடிகிறது. எண்ணெய் அதிகமாக இருக்கிறது என்றால், அமெரிக்கா வடையைக்கூட விட்டு வைக்காது. இதைத்தான் அமெரிக்கா எல்லா ஊர்களிலும் செய்தது. ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமெரிக்கா கவனமாக ஆடியது. ஆனால், ஈராக்கோ பவர் ப்ளேயில் டெஸ்ட் மேட்ச் ஆடியது போன்று கவனமாக போரில் பங்கேற்றது. இதில் சில ஈராக் வீரர்கள் சரணடைந்ததால், அந்நாட்டின் பலம் குறையக் காரணமாக அமைந்தது.

பாஸ்ரா நகரம் அமெரிக்கா வசமானது. அடுத்த இலக்கு பாக்தாத். அமெரிக்கப் படைகள் வேகமாக முன்னேறின. ஈராக் படை சோர்வடைந்துவிட்டது என்பதை அறிந்தார் சதாம் உசேன். இதற்கிடையில் சதாம் உசேன் சரணடைந்துவிட்டார் என்ற புரளி கிளம்பியது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார் சதாம். தொலைக்காட்சியில் தோன்றிப் பேசினார். ஈராக் படையினருக்கு அவரின் பேச்சு உற்சாகமூட்டுவதாக அமைந்தது. அமெரிக்காவுக்கு சவால் விடும்வகையில் புதிய உத்தியை முன்னிறுத்தியது ஈராக். முதல் முறையாக தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியது ஈராக். இனி ஈராக்கின் போர் உத்திகளில் தற்கொலைப்படை தாக்குதலுக்கும் இடமுண்டு என்றனர். அந்தச் செயலில் ஈரானுக்கும், சிரியாவுக்கும் விருப்பமில்லை என்றாலும் ஈராக்கிற்காகவும், அமெரிக்க வெறுப்பு காரணமாகவும் அந்த நாடுகள் ஆதரவளித்தன. ஈரானையும், சிரியாவையும் கடுமையாக எச்சரித்தது அமெரிக்கா. 

ஈராக்கை துவம்சம் செய்த அமெரிக்கா, இங்கேயும் இடைக்கால அரசுக்கு ஆடிஷன் நடத்திக் கொண்டிருந்தது. பின்லேடனும் பிடிபடவில்லை. சதாம் உசேனும் பிடிபடவில்லை என்ற விஷயம் மட்டும் புஷ்ஷின் தூக்கத்தைக் கலைத்தன. 2003-ல் சதாம் உசேனின் மகன்களைக் கொன்றனர். பின்பு ரசாயனத் தாக்குதலின் மூளையாகத் திகழ்ந்த கெமிக்கல் அலி சிறைபிடிப்பு என்றதுமே சதாம் வீழ்ந்துவிட்டார். இருந்தாலும் போர் தொடரும் என்ற அறிக்கை மட்டும் வந்தது.

சதாம் உசேனைப் பிடிக்க 'ஆபரேஷன் ரெட் டான்' என்ற தாக்குதலைத் தொடங்கி சதாமின் சொந்த ஊரான திக்ரித்தை சல்லடையிட்டது அமெரிக்கப் படைகள். அங்கிருந்து 10-15 கி.மீ தொலைவில் ஒரு ஊரில் உள்ள கட்டடத்தின் கீழே 8 அடி ஆழத்தில் பதுங்கு குழியில் ஒரு வயதானவர் தங்கி இருந்தார். அவரை அமெரிக்கப்படையினருக்கு ஆரம்பத்தில் அடையாளம் தெரியவில்லை. அவரைப் பிடித்தது. கிழிந்த உடை, நீண்ட தாடி, பரட்டைத் தலையுடன் இருந்த நபரைப் பிடித்து விசாரித்தது. அங்கு பிடிபட்டபோது நிராயுதபாணியாக நின்ற அந்த நபர், கரகர குரலில் 'நான் தான் சதாம் உசேன். ஈராக்கின் பிரஸிடென்ட்' என்றார். ஆனால். அப்போது சதாம் தப்பிக்க முயற்சிக்கவில்லை. 'சதாமை பிடித்துவிட்டோம்' என்று அமெரிக்கப் படையினர் கொண்டாடினர். ஆனால், 'இது அமெரிக்காவின் வெற்றியல்ல; சதாமின் இயலாமை' என்ற விமர்சனங்கள் அப்போது எழுந்தன. 

ஜார்ஜ் புஷ்ஷுக்கு இந்த வெற்றி நிம்மதியைத் தந்ததா? அமெரிக்க சாம்ராஜ்யம் உலக நாடுகளில் மேலோங்கியதா? என்பது பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்... 

அடுத்த கட்டுரைக்கு