Published:Updated:

சரிந்தது பொருளாதாரம்... தடுமாறியது அமெரிக்கா... என்ன செய்தார் புஷ் ? - ட்வின் டவர் முதல் ட்ரம்ப் வரை பாகம் 9

சரிந்தது பொருளாதாரம்... தடுமாறியது அமெரிக்கா... என்ன செய்தார் புஷ் ? - ட்வின் டவர் முதல் ட்ரம்ப் வரை பாகம் 9
சரிந்தது பொருளாதாரம்... தடுமாறியது அமெரிக்கா... என்ன செய்தார் புஷ் ? - ட்வின் டவர் முதல் ட்ரம்ப் வரை பாகம் 9

சரிந்தது பொருளாதாரம்... தடுமாறியது அமெரிக்கா... என்ன செய்தார் புஷ் ? - ட்வின் டவர் முதல் ட்ரம்ப் வரை பாகம் 9

சதாம் உசேனைப் பிடித்த மகிழ்ச்சியில் இருந்தது அமெரிக்கா. ஆனால், பின்லேடன் எங்கே என்பது மட்டும் விடைதெரியாத கேள்வியாக தொடர்ந்தது. புஷ் இந்தத் தேர்தலில் வெற்றி பெற எதையாவது செய்ய வேண்டும் என்ற திட்டம்தான் அவரது மனதில் ஆழமாய் இருந்தது. குடியரசுக் கட்சியின் வேட்பாளராக குடியரசுக் கட்சியால் மீண்டும் புஷ்ஷே நியமிக்கப்பட்டார். ஜனநாயக கட்சியின் சார்பில் ஜான் கெர்ரி நியமிக்கப்பட்டார். புஷ் தனக்கு பாசிட்டிவாக நினைத்தது ஈராக் போரில் கிடைத்த வெற்றி, தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகள்தான். இதைத்தான் 'முதல் அதிபர்' விவாதத்தில் மையமாக வைத்து ஆரம்பித்தார்.

அடுத்தடுத்த விவாதங்களில் உள்நாட்டுக் கொள்கைகள், பாதுகாப்பு ஆகிய விஷயங்களும், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளும் மேலோங்கின. அக்டோபர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு கத்தாரைச் சேர்ந்த தொலைக்காட்சியில் ஒரு வீடியோ வெளியாகிறது. அதில் ஒசாமா பின்லேடன் தோன்றி  9/11 தாக்குதலுக்குப் பொறுப்பேற்கிறார். அதைச் செய்தது அல்கொய்தாதான் என்று ஒப்புதல் அளிக்கிறார். அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டது என்று சிலர் விமர்சித்தனர்.

தேர்தல் களத்தில் ஜான் கெர்ரியை வீழ்த்தி இரண்டாவது முறையாக அதிபராகிறார் புஷ். 274 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிபராகப் பதவியேற்றார். இந்த வெற்றிக்கு எதிரணியில் பலமான வேட்பாளர் இல்லாததும், ஈராக் போர் வெற்றியும் முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டன. தேர்தல் வெற்றிக்குப் பின் ஈராக்கில் பல்லூஜா பகுதியிலிருந்து அமெரிக்க ராணுவம் திரும்ப அழைக்கப்பட்டது. ராணுவத் தளபதி மற்றும் செயலாளராக இருந்த காலின் பவேல் நீக்கப்பட்டு அந்தப் பதவியில் காண்டலோசா ரைஸ் நியமிக்கப்பட்டார்.

போர் குற்றங்களுக்காக சதாம் உசேனுக்கு மரண தண்டனை உறுதியாகி தூக்கிலிடப்பட்டார். இதுவரை எல்லாமே புஷ் அரசுக்கு நன்மை பயக்கும் விஷயங்களாகவே இருந்து வந்தது. ஆனால் புஷ்ஷின் முதல் சவாலாக உருவெடுத்தது. கத்ரீனா சுறாவளி கடற்கறை ஓர அமெரிக்காவை உலுக்கி எடுத்தது. பல உயிரிழப்புகள், பொருட் சேதங்கள் என அனைவரையும் கலங்கடித்த சூறாவளிக்கு புஷ் அரசு சரியான உதவிகளை வழங்க தவறியதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் காலதாமதம் செய்ததும் புஷ் அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தின. இதனை சரிசெய்ய ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகளை மொத்தமாக விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா திடீர் ஸ்டன்ட் அடித்ததும் அவர்களுக்கு ஆதரவாக வேலை செய்யவில்லை. 

ஓரினச் சேர்க்கை, பறவைக் காய்ச்சல், சோமாலியாவில் அல்கொய்தாவுக்கு எதிரான தாக்குதல் என அடுத்தடுத்து சிக்கலில் தவித்தது அமெரிக்கா. இதெல்லாம் சும்மா ட்ரெய்லர் என்பது போல உலகப் பொருளாதார வீழ்ச்சியைத் தொடங்கி வைத்ததே அமெரிக்காதான். 
700 பில்லியன் டாலர் பெயில் அவுட் ஆனது. அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியாக இது பதிவானது. 17 வருடங்களில் இல்லாத அளவுக்கு ஜிடிபி 0.3 சதவிகிதமளவுக்குக் குறைந்தது. ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி, கடன்களை அள்ளி வழங்கியது என எல்லா காரணங்களும் அமெரிக்கப் பொருளாதாரத்தை வீழ்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றன.

இந்த முறை குடியரசுக் கட்சியிடம் தேர்தலில் சொல்லி ஜெயிக்க வெற்றிகள் ஏதுமில்லை. பின்லேடனையும் இன்னமும் தேடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த முறை எதிரணிக்குக் கிடைத்தது வேட்பாளர் அல்ல. உலகமே வியக்கும் ஒரு நன் மனிதர் என்ற பெயரோடு களமிறங்கினார் பாரக் ஒபாமா. குடிரசுக் கட்சிகளின் பிரதான மாகாணங்களும் இம்முறை ஜனநாயகக் கட்சிப்பக்கம் தாவின. அமெரிக்காவில் ஓங்கி ஒலித்த நிறவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒருவர் வந்துவிட்டார் என்ற நம்பிக்கை அமெரிக்க மக்கள் மனதில் நின்றது. ஆம் அதுதான் ஒபாமாவின் தேர்தல் பிரசார வாசகம். ஒபாமாவின் பேச்சுக்கள் மக்கள் மனதில்; நம்பிக்கையை விதைத்தன. ஒபாமாவின் பிறப்பில் ஆரம்பித்து மதம் வரை அனைத்தும் விமர்சனத்துக்கு உள்ளாகின. ஆனால், அவர்களால் ஒபாமாவின் உரைகள் ஏற்படுத்திய தாக்கத்தை குறைக்க முடியவில்லை.ஒபாமா நம்பிக்கை என்றார், நம்மால் முடியும் என்றார். வென்றார் அமெரிக்க தேர்தலோடு அமெரிக்க மக்களின் மனதையும். மக்கள் அவரை தங்களில் ஒருவராகப் பார்க்கத் தொடங்கினார். ஒபாமாவின் தன்னம்பிக்கை குடியரசுக் கட்சியின் தன்னம்பிக்கையைச் சிதைத்தது. 

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். ஆரம்பக் கேள்விதான் என்ன ஆனார் ஒசாமா? ஒசாமா விஷயத்தில் ஒபாமா என்ன நிலைப்பாடை எடுத்தார். அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
 

அடுத்த கட்டுரைக்கு