Published:Updated:

மலேசியாவில் மீண்டும் மகாதீர் முகமது... ஒரு ரியல் 'கபாலி'யின் கதை!

மலேசியாவில் மீண்டும் மகாதீர் முகமது... ஒரு ரியல் 'கபாலி'யின் கதை!
மலேசியாவில் மீண்டும் மகாதீர் முகமது... ஒரு ரியல் 'கபாலி'யின் கதை!

மலேசியாவில் மீண்டும் மகாதீர் முகமது... ஒரு ரியல் 'கபாலி'யின் கதை!

15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனக்கு பரிச்சயமான இடத்தில் வந்து அமர்கிறார் 92 வயது மகாதீர் முகமது. மலேசியாவின் புதிய பிரதமராக அமர இருக்கும் இவருக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. தொடர் ஊழல் குற்றச்சாட்டுகளில் பிரதமர் நஜீப் ரசாக் தலைமையிலான மலேசிய அரசு சிக்கியதால் எதிர்க்கட்சியுடன் கூட்டணி மேற்கொண்டு, ஆட்சியில் இருந்த பரிசன் தேசிய கூட்டணியை வீழ்த்தியுளார் மகாதீர். 

இதன்மூலம் 60 ஆண்டு காலமாக பாரிசன் தேசிய கூட்டணி நடத்தி வந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, மலேசியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்படும் முதல் ஆட்சி மாற்றம் இது. 'தனது பலத்தை அறிந்து வைப்பதைவிட எதிரியின் பலவீனத்தை நன்கு அறிந்தால் வெற்றி உறுதி' என்ற கூற்றுக்கு எடுத்துக்காட்டாக மகதிர் கூட்டணி விளங்கியுள்ளது. நஜீப் ரசாக்கின் கடந்த ஆட்சியில், 4700 ஆயிரம் கோடி ருபாய் ஊழல் நடந்துள்ளதாக வந்த குற்றச்சாட்டுதான் மகாதீர் ஆட்சியமைக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

மகாதீர் முகமதுக்கு எதிராக பா.தே. கூட்டணியில் வேட்பாளராக இருந்தது நஜீப் ரசாக். ஆனால், ரசாக்கின் அரசியல் குருவாக விளங்கியவர் மகாதீர். எனவே, இந்தத் தேர்தலை அரசியலையும் விட தன்மானப் பிரச்னையாகவும் பார்க்கப்பட்டது. தடைகளைத் தாண்டி மகாதீர் வெற்றிபெற்றதன் மூலம் நஜீப் ரசாக் ஆட்சி முடிவுக்கு வருகிறது. இத்தனைக்கும் தனது வயது முதிர்வு காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகியவர் மகாதீர். கட்டுக்கோப்பான அவரது ஆட்சிக்கு மலேசிய மக்கள் அத்தனை ஆதரவை அளித்திருந்தார்கள். 

பொதுவாக 92 வயது நிரம்பிய ஒருவர், தனது பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடும் உடல்நிலையில் இருந்தாலே அரிதாக பார்க்கப்படும். ஆனால், 92 வயதில் தனது நாட்டில் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார் மகாதீர். இவரது வெற்றிக்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது, கூட்டணி கட்சிகளுடன் இவர் மேற்கொண்ட ஒப்பந்தம்தான். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே தான் பிரதமராக இருப்பேன் என்று அவர் செய்த ஒப்பந்தத்தைக் கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொண்டன.

1981 முதல் 2003-ம் ஆண்டு வரை மலேசிய பிரதமராக இருந்தவர் மகாதீர். தெற்காசிய நாடுகளில் மலேசியாவை பொருளாதார ரீதியில் முன்னேற்றியதில் இவருக்கு பெரும் பங்குண்டு. மீண்டும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் ஆட்சியமைப்பதால், மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரத்திற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய மலாய் நாடுகள் அமைப்பின் முதன்மை உறுப்பினர்களில் இவரும் ஒருவர். பின்னர், ஏற்பட்ட மலேசிய - சீன கலவரத்தில், மலேசியாவின் முதல் பிரதமர் அப்துல் ரஹ்மானை விமர்சித்ததால் அந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டார். மீண்டும் 1970-ல் கட்சியில் சேர்ந்து 1981-ல் அக்கட்சியின் தலைவரானார். தனது காட்டமான நடவடிக்கைக்கு பெயர் போன மகாதீர், தனது துணைப் பிரதமரைக்கூட பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார். 

வயாதானபின்னரும் முன்பு செய்த ஆட்சியைப்போல தற்போதும் அவரால் ஆட்சிபுரிய முடியுமா என்று சிலர் சந்தேகித்தாலும், 92 என்பது வெறும் வயது மட்டுமே, எனது உடல் வலிமையையும் மன வலிமையையும் அது பிரதிபலிக்கவில்லை என்கிறார் மகதிர். 'பதவியில் இருந்து விலகி 14 ஆண்டுகள் ஆனாலும் தினமும் அவர் அலுவலகத்திற்கு வந்து செல்வார்' என்கின்றனர் கட்சி அலுவலகத்தினர். 

மகாதீரின் இந்த வாழ்க்கை உலக மக்களுக்கு புதிதாக இருந்தாலும் தமிழக மக்களுக்கு சற்று கேள்விப்பட்ட கதையாகவேத் தோன்றும். 'கபாலி' படத்தில் ரஜினி கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையில் மகாதீருடன் ஒத்துப்போகிறது. சிறுவயதில் கட்சியில் சேர்ந்து நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக புரட்சி செய்து, பின்னர் மக்களின் செல்வனாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து, மீண்டும் வயதான காலத்தில் ஸ்டைலாக, கெத்தாக  ரீ-என்ட்ரி குடுத்து கால்மேல் கால் போட்டு உட்கார்ந்துள்ளார் மகாதீர்.

'90 வயதிற்கு மேல் ஒருவர் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்.. பெரிதாக என்ன செய்துவிடப்போகிறார்' என்ற தொனியில் ஏச்சுகள் வந்துகொண்டிருந்த நேரத்தில், 4700 ஆயிரம் கோடி ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கும் அவரது குடும்பத்தினரும் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்திருக்கிறது மகாதீர் தலைமையிலான மலேசிய அரசு. 

அடுத்த கட்டுரைக்கு