Published:Updated:

ஜூன் 12... எஸ்.டி.டியில் நிற்பார்களா கிம், ட்ரம்ப்..!

ஜூன் 12... எஸ்.டி.டியில் நிற்பார்களா கிம், ட்ரம்ப்..!
ஜூன் 12... எஸ்.டி.டியில் நிற்பார்களா கிம், ட்ரம்ப்..!

ஜூன் 12 ம் தேதி சிங்கப்பூர் சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியாகப் போகிறது. ஆம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் இருவரும் நேரில் சந்திக்கவிருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் கிம், `என்னிடம் அணு ஆயுத பட்டன் இருக்கிறது. அழுத்தினால் மொத்தமும் காலி' என்றார். பதிலுக்கு ட்ரம்ப், `என்னிடம் அதைவிடப் பெரிய பட்டன் இருக்கிறது' என்றார். இப்படி எதிரும்புதிருமாகப் பேசிக்கொண்ட இவர்கள் இன்று... `ட்ரம்ப்பை சந்திப்பதற்குள் வடகொரியாவில் உள்ள அனைத்து அணு ஆயுதக் கூடங்களும் அழிக்கப்பட்டுவிடும்' என்கிறார் கிம். `இந்தச் சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்' என்கிறார் ட்ரம்ப். `உலகில் அழிக்க முடியாத சக்தி அணுக்கள் மட்டுமல்ல... மாற்றமும்தான்' என்பதை நிஜத்தில் செய்து காட்டியிருக்கிறார்கள் கிம் மற்றும் ட்ரம்ப்.

சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற முக்கியமான சந்திப்பு... தென்கொரியாவின் ஜனாதிபதி மூன் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஆகிய இருவருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பு. இரண்டாம் உலகப் போர் காலம் தொட்டே இந்த இரண்டு நாடுகளுமே பகையாளிகள். வருடங்கள் ஓட, வட கொரியா  ஓர் அடாவடி தேசமாக மாறி அடுத்தடுத்து பல அணு ஆயுதச் சோதனைகளை நடத்தியது. அமெரிக்காவுக்கும், அதனுடன் நட்பு பாராட்டிய தென்கொரியாவுக்கும் வடகொரியா சிம்ம சொப்பனமாக உருவெடுத்தது. ஒரு கட்டத்தில் போர் மூண்டுவிடுமோ என்ற பயம் கொரிய மக்களுக்கு ஏற்பட்டது. இந்தச் சூழலில்தான் இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது. இருநாடுகளைப் பிரிக்கும் எல்லைப் பிரதேசத்தில், வடகொரிய அதிபர் கிம் காலடி எடுத்து வைக்க, அவரை தென்கொரியாவின் அதிபர் கை கொடுத்து வரவேற்று தன் நாட்டுக்குள் அழைத்துச் சென்றதையெல்லாம் பார்த்த உலகம் `நடப்பதெல்லாம் கனவா நனவா' என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தது.

``நாங்கள் அணு ஆயுதச் சோதனை நடத்தும் போதெல்லாம், உங்களை அதிகாலைத் தூக்கத்திலிருந்து எழுப்பி செய்தி சொல்லப்பட்டிருக்கிறது என்று அறிந்தேன். இனி அப்படி நடக்காது. உங்கள் தூக்கம் இனி கெடாது'' என்று கிம், தென் கொரியாவின்  ஜனாதிபதியிடம் மெல்லிய புன்னகையுடன் கூறியது இருநாட்டு மக்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்திருக்கிறது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு பேசிய வட கொரிய அதிபர் கிம், `விரைவில் ட்ரம்ப்பைச் சந்திப்பேன்' என்றார். 

வடகொரிய -  அமெரிக்க அதிபரின் சந்திப்பும் இதே நிம்மதியைக் கட்டாயம் ஏற்படுத்தும் என்பதுதான் சர்வதேசத் தலைவர்களின் எதிர்பார்ப்பு. கிம் மிகவும் துணிச்சலான முடிவை எடுத்துள்ளார். அணு ஆயுதச் சோதனைக் கூடங்களின் சுரங்கங்கள், ஆயுத தளம் எல்லாவற்றையும் மூடிவிடுவதாக அறிவித்துள்ளார். பதிலுக்கு அமெரிக்கா தங்கள் நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா இந்தச் சந்திப்புக்குப் பின் வட கொரியாவுடனான பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, தென்கொரியா, சீனா, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் வடகொரியாவைப் பார்வையிட்டுத் தரும் கட்டுரைகள்தாம் வடகொரியாவின் வாக்குறுதிகளை உறுதி செய்யும். வடகொரியா இதற்கும் தயாராகத்தான் உள்ளது. 

சிங்கப்பூரில் சந்திப்பு நடப்பதற்குக் காரணம் சிங்கப்பூரின் நடுநிலைத்தன்மைதான் என்று அந்நாட்டின் தொழிற்துறை அமைச்சர் சான்சான்சிங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் உள்ள ஷாங்கிரி-லா, மெரினா பே சான்ட்ஸ் ரிசார்ட் உள்ளிட்ட 6 பிரபல சொகுசு ஹோட்டல்கள் இந்தச் சந்திப்புக்காக பரீசிலிக்கப்பட்டு வருகின்றன. வடகொரியாவின் பொருளாதார முன்னேற்றம். பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிரான முடிவுகள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசவுள்ளனர். ஏற்கெனவே, இருந்த மனக்கசப்புகள் இந்தச் சந்திப்பில் பேசப்படுமா என்ற கேள்விக்கு அமெரிக்காவின் மாகாணச் செயலர் போம்பியோ அது குறித்த விஷயங்கள் இடம்பெறாது என்று பதிலளித்துள்ளார். 

இருநாடுகளுக்குமிடையேயான இந்தச் சந்திப்பு உலக அமைதிக்கான முக்கிய வரலாற்றுப் பதிவாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எஸ்டிடினா வரலாறு தானே என்று நக்கலாக எள்ளி நகையாடிய இருவரும் இப்போது கை குலுக்கிச் சந்திக்கும் ஆச்சர்யம் ஜூன் 12 ம் தேதி நடக்கவிருக்கிறது. ஜூன் 12 சர்வதேச அரசியலின் எஸ்டிடி-யில் இடம்பிடிக்கப்போகிறது. 

தென்கொரியா - வடகொரியா, அமெரிக்கா- வடகொரியா, இந்தியா-சீனா என உலகின் சண்டைக்கார நாடுகள் எல்லாம் கை குலுக்கத் தொடங்கியுள்ளன. இந்தப் புதிய உறவுகள் அமைதியைத் தரும் என்றால் அதைவிட மகிழ்ச்சி வேறு இல்லை!