Published:Updated:

48 மணி நேரத்தில் 4.68 மில்லியன் டாலர் வசூல்... கடன் சுமையைக் குறைக்க மலேசியா அரசு பலே ஐடியா!

48 மணி நேரத்தில் 4.68 மில்லியன் டாலர் வசூல்... கடன் சுமையைக் குறைக்க மலேசியா அரசு பலே ஐடியா!
48 மணி நேரத்தில் 4.68 மில்லியன் டாலர் வசூல்... கடன் சுமையைக் குறைக்க மலேசியா அரசு பலே ஐடியா!

48 மணி நேரத்தில் 4.68 மில்லியன் டாலர் வசூல்... கடன் சுமையைக் குறைக்க மலேசியா அரசு பலே ஐடியா!

புதிய அரசு, நல்ல விடியலுக்கான நம்பிக்கை, ஊழலை வேரறுத்த திருப்தி... என மலேசியாவின் சந்தோஷத் தருணங்களில் மற்றுமோர் இலக்கை நிர்ணயித்திருக்கிறார் புதிய நிதி அமைச்சர் லிம் குவான் எங். மே-9 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று பதவியேற்றிருக்கும் புதிய அரசு, மலேசியச் சீரமைப்புப் பணியில் வேகம் காட்டிவருகிறது. 

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.  மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் ஆட்சி, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆட்சிதான். அவர் 2009-ம் ஆண்டில் நாட்டின் ஆறாவது பிரதமராகப் பதவி ஏற்றபோது அவரின் தந்தையைப்போல் சிறப்பாகச் செயல்படுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. (நஜிப் துன் ரசாக், மலேசியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த துன் அப்துல் ரசாக்கின் மகன்.) அந்த நம்பிக்கை படிப்படியாகக் குறைந்து, நாட்டின் கடன் சுமை வேகமாக ஏற ஆரம்பித்தது.

நஜிப் ஆட்சிக்காலத்தில் நடந்த 1எம்.டி.பி (1MDB - 1Malaysia Development Berhad) நிறுவனத்தின் பல மில்லியன் டாலர் ஊழல், ஒரே கட்சி ஆட்சி செய்யப்பட்டு வந்த மலேசியாவின் வரலாற்றையே மாற்றி எழுதியது. அதோடு, என்னதான் நஜிப் `நாட்டின் கடன் சுமை கட்டுக்குள்தான் இருக்கிறது. 55 சதவிகித ஜிடிபி அளவை அது தாண்டவில்லை; 50.8 சதவிகிதம்தான் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் தவறான உருவகம் செய்யப்பார்க்கின்றன' என விளக்கம் சொல்ல முயன்றாலும், `நாடு திவாலாகிவிடுமோ!' என்ற அச்சம் மக்கள் மனதில் உருவாவதை அவரால் தடுக்க முடியவில்லை. இதன் விளைவுதான் அரசியலில் மக்கள் நடத்திக்காட்டிய அதிரடி மாற்றம். 

நஜிப் பதவியிழந்தார். பல்வேறு ஊழல் குற்றங்களுக்குள் இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் ரிங்கிட் கடன் சுமை அனைவரையும் பதறவைக்க, ஏதாவது செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் நாடு தன்முனைப்பைத் தொடங்கியுள்ளது.

நிக் ஷாசாரினா பக்தி என்கிற 27 வயதுப் பெண், க்ரௌடு ஃபண்டிங் முறையில் நாட்டின் ஒரு டிரில்லியன் கடன் சுமையைக் குறைக்க எடுத்த முதல் முயற்சியே, நிதியமைச்சர்  லிம்மின் `மலேசிய நம்பிக்கை நிதி' உருப்பெற காரணம்.

மே 30-ம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 24 மணி நேரத்துக்குள் 7 மில்லியன் ரிங்கிட் (2.35 மில்லியன் டாலர்) குவித்துள்ளது. 48 மணி நேரத்துக்குள் 18.6 மில்லியன் ரிங்கிட் (4.68 மில்லியன் டாலர்). `இந்த கலெக்‌ஷன், மக்களின் நம்பிக்கையைப் பெறுமா?' என்ற கேள்விக்கு லிம்மின் சிம்பிளான பதில் ``மக்கள், தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும்போது அதை வரவேற்கவே செய்வோம். இது, மலேசியர்கள் அனைவரும் ஓர் இதயம், ஓர் உணர்வு, ஓர் உடல் என்பதை வெளிப்படுத்தும் தருணம்" என்கிறார். அதோடு நிற்காமல், வெளிப்படைத்தன்மைக்காக மலேசிய நம்பிக்கை நிதியில் பணம் செலுத்துவதற்கென தனியாக வங்கிக்கணக்கு எண் வழங்கப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டில் நடக்கும் இந்த முயற்சியின் முன்னோடி, ஏற்கெனவே 1998-ம் ஆண்டில் தென்கொரியர்கள் நிகழ்த்திக்காட்டியதுதான். அது 1998-ம் ஆண்டின் தொடக்கம். தென்கொரிய மக்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்பாக வைத்திருந்த தங்கத்தை எல்லாம் வாரி வழங்கி,  சற்றும் தயங்காமல் தன் தாய்நாட்டின் கடனைத் தீர்க்க வரிசைகட்டி நின்றார்கள். அவை உழைப்பைக் கொட்டி ஈட்டிய தங்கம் மட்டுமல்ல; அவர்கள் வாழ்க்கையின் அதிமுக்கியத் தருணங்களின் சாட்சிகளும்கூட. கல்யாண மோதிரங்கள், மெடல்கள், வியாபார வெற்றிக்காகவும் அறுபதாவது பிறந்தநாளுக்காகவும் வழங்கப்படும் அதிர்ஷ்ட தங்கச்சாவிகளையும்கூட தயங்காமல் நாட்டுக்காக அள்ளிக்கொடுத்ததில் ஐ.எம்.எஃப் கடன் மூன்று வருடத்துக்கு முன்னதாகவே அடைக்கப்பட்டது.  

கொட்டிக்கொடுத்த கொரியர்களின் நாட்டுப்பற்றுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் மலேசியர்களும் கொள்கையை முன்னெடுக்கிறார்கள். ஒருவேளை இந்தக் கடன் சுமை குறையாமல் இருக்குமேயானால், பிறக்கும் ஒவ்வொரு மலேசியக் குழந்தையும் 33,000 ரிங்கிட் கடனுடன்தான் பிறக்கும் என்ற பயம் நாட்டையே உந்தித்தள்ளுகிறது.

ஊழலுக்கு எதிராக மலேசியர்களின்  பெருமுயற்சியாகவே இந்தக் கூட்டுமுயற்சி பார்க்கப்படுகிறது. ஆதிக்கச்சக்திகளுக்கும்   அநியாயத்துக்கும் எதிராக மக்கள் ஒன்று திரளும்போதெல்லாம் வென்றே தீர வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பம்!

ஆல் தி பெஸ்ட் மலேசியா!

அடுத்த கட்டுரைக்கு