Published:Updated:

வரலாற்றை மாற்றி எழுதுமா? 18 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா வந்த வட கொரிய கடிதம்!

வரலாற்றை மாற்றி எழுதுமா? 18 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா வந்த வட கொரிய கடிதம்!
வரலாற்றை மாற்றி எழுதுமா? 18 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா வந்த வட கொரிய கடிதம்!

18 ஆண்டுகளுக்குப் பிறகு வட கொரிய அரசு சார்பாகக் கடிதம் ஒன்று எழுதப்பட்டு வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டது. இதன்மூலம் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைச் சந்தித்த வட கொரிய படைத்தலைவர் கிம் யோங் சோல்,

`ஒரு கதை சொல்லட்டா சார்...' ரெண்டு நாடுகளுக்கு நடுவுல பெரிய சண்டை.. இவுங்க, `அவுங்க மேல குண்டு போடுவேன்'னு மிரட்டுறாங்க... அவுங்க, `இவங்க மேல குண்டு போடுவேன்'னு மிரட்டுறாங்க... அப்புறம், `சண்டைலாம் வேணாம்... சமாதானம் ஆகிக்குவோம்'னு சொல்றாங்க... அடுத்து, `சரி விடுப்பா... சந்திச்சுப் பேசுவோம்'ங்குறாங்க... மறுபடியும் வேணாம்... கடைசியா "ஓ.கே சந்திச்சுப் பேசலாம்'னு முடிவெடுக்குறாங்க'' - இப்படி `ஹரி' பட டிரெய்லர் மாதிரி சுத்தி சுத்தி அடிக்குற ஒரு கதையக் கேட்டுருக்கீங்களா..? இந்தக் கதைக்குத்தான் உலகின் முக்கியத் தலைவர்களான அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகிய இருவரும் ஸ்க்ரிப்ட் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் ஜூன் 12- ம் தேதி வருமா என்பதைத் தாண்டி, இவர்கள் சந்திப்பார்களா என்பது பில்லியன் டாலர் கேள்வியாகியுள்ளது. 

வட கொரியா  தனது அணு ஆயுதச் சோதனைகளால் பல ஆண்டுகளாக  உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. இதனால் அந்நாட்டின்  மீது உலக நாடுகள் பலவும் பொருளாதாரத் தடை விதித்திருந்தன. கொரியப் போருக்குப் பின்னர் தென் கொரியாவுடன் மோதல் போக்கைச் சந்தித்துவந்த வட கொரியா, அந்நாட்டை மிரட்டும் தொனியில் அடிக்கடி அணு ஆயுதச் சோதனையில் ஈடுபட்டு வந்தது. இதனால், உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த வட கொரியா, சமீபத்தில் சமாதானப் பேச்சுக்கு இறங்கிவந்தது. முதல்படியாகத் தென் கொரிய அதிபர் மூன் ஜியே இன்னை அந்நாட்டு எல்லைக்கே சென்று கிம் ஜாங் உன் சந்தித்தது உலக நாடுகளின் வரவேற்பைப் பெற்றது.

தென் கொரிய அதிபருடனான சந்திப்பின்போது, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பைச் சந்திக்கவும் கிம் ஜாங் உன்  விருப்பம் தெரிவித்திருந்தார். கிம் ஜாங் உன்னின் அழைப்பை ஏற்று அவரைச் சந்திக்க ட்ரம்ப் சம்மதம் தெரிவித்திருக்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சந்திப்பு சிங்கப்பூரில் வரும் ஜூன் 12-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. `உலக அமைதிக்கான மிக முக்கியமான தருணமாக, அந்தச் சந்திப்பை மாற்ற நாங்கள் முயற்சி செய்வோம்’ என அந்தச் சந்திப்பு குறித்து ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக ட்ரம்ப் திடீரென கடந்த 26-ம் தேதி அறிவித்தார். அதுதொடர்பாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ``வட கொரியாவின் சார்பில் வந்த சமீபகால அறிக்கையில்,நேரடியான விரோதப்போக்கும், கோபமும் தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில் சந்திப்பது நன்றாக இருக்காது. எனினும், பேச்சுவார்த்தை ரத்தாவது எனக்குச் சற்று வருத்தத்தை ஏற்படுத்துகிறது’’ என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு ஒருவரை ஒருவர் சந்திக்க மறுத்துவந்த நிலையில், ஒருவழியாக வட கொரியாவின் கோரிக்கையின் மூலம் மீண்டும் சமாதானம் அடைந்து அவர்களது சந்திப்பை உறுதி செய்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ட்ரம்பின் இந்தத் திடீர் அறிவிப்புக்கு  வட கொரியா நாட்டின் சமரச முடிவே காரணம் என்று கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக உலக நாடுகளின் விமர்சனங்களுக்கு வட கொரியா உள்ளானதன் காரணம்  என  அந்நாட்டின் அணு ஆயுதத் தளத்தைப் பலரும் கைகாட்டி வந்தனர். இதனால், தங்கள் நாட்டைப்  பற்றி, பிற நாடுகள் வைத்துள்ள குற்றச்சாட்டை ஏற்று அணு ஆயுதத் தளத்தை தகர்க்கவுள்ளதாக வட கொரியா அறிவித்தது. அறிவித்தபடியே சர்வதேச பத்திரிகையாளர்கள் 30 பேரின் முன்னிலையில், அந்நாட்டின் அணு ஆயுதத் தளம் தகர்க்கப்பட்டது. வட கொரியாவின் இந்தச் செயல் அமெரிக்க உட்பட பல நாடுகளுக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளித்தது. மேலும், 18 ஆண்டுகளுக்குப் பிறகு வட கொரிய அரசு சார்பாகக் கடிதம் ஒன்று எழுதப்பட்டு வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டது. இதன்மூலம் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைச் சந்தித்த வட கொரிய படைத்தலைவர் கிம் யோங் சோல், அந்தக் கடிதத்தை அவரிடம் வழங்கினார். சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக நீடித்த இந்தச் சந்திப்பின் முடிவாக ட்ரம்ப், வட கொரியா அதிபரைச் சந்திப்பதாக உறுதியளித்துள்ளார். வட கொரியாவிலிருந்து 18 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளை மாளிகைக்கு ஒரு கடிதம் வருவது இதுவே முதல்முறை.

சிங்கப்பூரில் சந்திப்பு நடப்பதற்குக் காரணம் சிங்கப்பூரின் நடுநிலைத்தன்மைதான் என்று அந்நாட்டின் தொழிற்துறை அமைச்சர் சான்சான்சிங் முன்பே தெரிவித்திருந்தார். சிங்கப்பூரில் உள்ள ஷாங்கிரி -லா, மெரினா பே சான்ட்ஸ் ரிசார்ட் உள்ளிட்ட 6 பிரபல சொகுசு ஹோட்டல்கள் இந்தச் சந்திப்புக்காகப் பரீசிலிக்கப்பட்டு வருகின்றன. வட கொரியாவின் பொருளாதார முன்னேற்றம். பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிரான முடிவுகள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசவுள்ளனர். ஏற்கெனவே, இருந்த மனக்கசப்புகள் இந்தச் சந்திப்பில் பேசப்படுமா என்ற கேள்விக்கு அமெரிக்காவின் மாகாணச் செயலர் போம்பியோ, அதுகுறித்த விஷயங்கள் இடம்பெறாது என்று கருத்துத் தெரிவித்திருந்தார். 

உலக நாடுகளே கண்டு அஞ்சும்வேளையில், முக்கியத் தலைவர்களான இவர்கள் இருவரும் மாறி மாறித் தங்கள் சந்திப்புகளை ரத்துசெய்து வருவது பள்ளிக் குழந்தைகள் சண்டை போட்டுக்கொள்வது போலும், காதலர்கள் இருவர் இடும் செல்லச் சண்டைகள் போலும் உள்ளது என்று சமூக வலைதளங்கள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டன. ஜூன் 14 ட்ரம்பின் பிறந்தநாள். ஜூன் 12-இல் பிறந்தநாள் பரிசாக கிம் ஜாங் உன் மீட்டிங் அமையும் என்று வெள்ளை மாளிகை நம்பிக்கை தருகிறது. ஜூன் 12-ம் தேதிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மீண்டும் இவர்களது மனநிலையில் மாற்றம் ஏதும் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

அடுத்த கட்டுரைக்கு