Published:Updated:

ஸ்டெர்லைட் நிறுவன வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் பேட்டி!

ஸ்டெர்லைட் நிறுவன வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் பேட்டி!
ஸ்டெர்லைட் நிறுவன வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் பேட்டி!

ஸ்டெர்லைட் நிறுவன வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் பேட்டி!

டிசா மாநிலத்தின் நியமகிரி மலை பற்றி ஒரு சுவாரஸ்யத் தகவலை உங்களிடம் பகிர்ந்தாக வேண்டும். மக்களின் அநாவசியத் தேவைகளால் பாதிக்கப்படாத, அப்பழுக்கற்ற இன்னும் தூய்மையாகவே இருக்கும் கர்லாபாட் மற்றும் கொதாகார் காடுகளைக் கொண்ட மலைப்பகுதி அது. அந்தப் பகுதியில் வசிக்கும் டோங்க்ரியா கோந்த் குடிமக்களுக்கு அந்த மலைதான் கடவுள்.  தங்கள் கடவுளை வணங்க அந்த மலையின் உச்சி மீது ஏறி அந்த இனப் பெண்கள் நடனமாடுவார்கள். அதுதான் அவர்கள் தங்கள் கடவுளான அந்த மலையை வணங்கும் முறை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நடத்திய அதே வேதாந்தா நிறுவனம்தான் 2010-ல் பாக்சைட் கணிமத்தை எடுப்பதற்காக அந்த மலையை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. தங்களது கடவுளைக் காப்பாற்ற எண்ணிய மக்கள் அந்த நிறுவனத்துக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்தார்கள். போராட்டம் உச்சநீதிமன்றம் வரை ஒலித்தது. வேதாந்தா நிறுவனம் அந்த மலையில் பாக்சைட் தாது எடுக்கலாமா, வேண்டாமா? என்பது பற்றி அந்த மலைப்பகுதி மக்களே தங்களது கிராம சபைக் கூட்டத்தில் முடிவு செய்யலாம் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. கிராம சபைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2014ல் வேதாந்தா நிறுவனம் அந்தப் பகுதியில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்பட்டது. அந்த மக்கள் தங்களின் கடவுளைக் காப்பாற்றினார்கள்.

தூத்துக்குடியில் இதே வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாள்களாக நடந்த போராட்டத்தின் வீரியம் 13 பேரின் (அரசாங்கக் கணக்குப்படி) உயிரிழப்பில் முடிந்திருக்கிறது. தற்போது அந்த ஆலை நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டு அங்கிருந்தும் வேதாந்தா நிறுவனம் வெளியேற்றப்பட்டிருக்கிறது. அந்த ஆலை இனி திறக்கவே திறக்கப்படாது என்றிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.  தூத்துக்குடி சம்பவத்தின் தாக்கம்  பிரிட்டன் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. லண்டன் பங்கு வர்த்தகச் சந்தை பட்டியலில் இருந்தே வேதாந்தா நிறுவனத்தை நீக்கும்படி அங்குள்ள எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. தூத்துக்குடி சம்பவத்துக்குப் பிறகு முதன்முறையாக ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் 'தி எக்கனாமிக் டைம்ஸ்' நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார்.  அதில், தன் நிறுவன செயல்பாடுகள் மற்றும் அவற்றின் மீதான விமர்சனங்கள் குறித்துப் பேசியிருக்கிறார். அவரது பேட்டியிலிருந்து சில பகுதிகள்..

கேள்வி: ``ஸ்டெர்லைட் காப்பர் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டத்தின்போது காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு உங்களின் விளக்கம் என்ன?" 

பதில்: ``13 பேர் உயிரிழந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. எங்கள் வேதாந்தா ஆலையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில்தான் அந்தச் சம்பவம் நடந்திருக்கி்றது. ஒரு பொறுப்புமிக்க கார்ப்பரேட் நிறுவனமாக நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் எங்களால் முடிந்தவரையில் உறுதுணையாக இருப்போம். ஸ்டெர்லைட் ஆலை இயங்கவே இல்லை. ஆலையை இயக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்காகக் காத்திருந்தோம். இந்த நிலையில், போராட்டம் நடந்தது துரதிர்ஷ்டவசமானது. தவறான பிரசாரம் மக்களிடமிருந்து உண்மையை மறைத்துவிட்டது."

கே: ``போராட்டச் சூழலை உங்களது நிறுவனம் அனுமானிக்கத் தவறி விட்டதா?"

ப: ``இல்லவே இல்லை; 'மே 22-ல் மக்கள் இப்படியான போராட்டம் ஒன்றில் ஈடுபட இருக்கிறார்கள்' என்று முன்கூட்டியே எங்களுக்குத் தகவல் வந்தது. அந்த அடிப்படையில் நீதிமன்றத்துக்குச் சென்றோம். நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத் தகவல் தந்தது. அதன் அடிப்படையிலேயே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.”

கே: ``லண்டனில் இருந்துகொண்டு உங்கள் வெளிநாட்டு முதலீட்டுத் தொடர்புகளை எப்படி மேலாண்மை செய்கிறீர்கள்?" 

ப: ``இந்தத் துறையில் இருக்கும் மற்ற எந்த நிறுவனங்களைவிடவும் நாங்கள் எங்கள் கொள்கைகளில் கண்டிப்பானவர்கள். இன்னும் ஏழு மடங்கு விரிவாக்கம் செய்யும் அளவுக்கு நம்மிடம் உற்பத்திப்பொருள் மற்றும் திறன் இருக்கிறது. அதன்மூலம் நேபாளம், பங்களாதேஷ் உள்பட அத்தனை இந்தியத் துணைக்கண்ட நாடுகளுக்கும் நாம் ஏற்றுமதி செய்யலாம். நீங்களே சொல்லுங்கள்! எத்தனை காலம்தான் நாம் இறக்குமதி செய்துகொண்டே இருக்கப்போகிறோம்?. மேலும், சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் சமரசமற்றவர்கள். எங்கள் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் கொள்கைகளை நிர்ணயிப்பதற்கு, உலகின் தலைசிறந்த 25 நிபுணர்களை நாங்கள் நியமித்திருக்கிறோம் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா?"

கே: ``ஆலையிலிருந்து வெளியேறும் திரவக் கழிவுகள், சுற்றுச்சூழலையும் அந்தப் பகுதி மக்களின் ஆரோக்கியத்தையும் பாதிப்பதாகப் போராட்டக்காரர்கள் கூறுகிறார்களே?."

ப: ``இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆய்வுசெய்ய இந்தியாவிலிருந்தோ, உலகின் வேறெந்த நாட்டிலும் இருந்தோ சார்பற்ற எந்தத் தொழில்நுட்ப அமைப்புகள் விசாரணை நடத்த முன்வந்தாலும், அதற்கு ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். சட்டப்படி, அதுதொடர்பாக எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயார். ஏனென்றால், எங்கள் ஆலையிலிருந்து அப்படியான கழிவுகள் எதுவும் வெளியேறவில்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். நாங்கள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை."

கே: ``அப்படியென்றால் போராட்டம் எதனால் ஏற்பட்டிருக்கும்? அதன் தாக்கத்தைத் தணிக்க தற்போது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?". 

ப: ``போராட்டம் தொடர்பாக யாரையும் காரணம்காட்டிப் பயனில்லை. ஏனென்றால், நடந்தவை எதுவுமே எதிர்பாராதது. போராட்டத்தின் போக்கைப் பற்றி, மக்களுக்கு எந்த விழிப்பு உணர்வும் இருந்திருக்கவில்லை. போராட்டக்காரர்களில் பலர் இந்தப் பிரச்னையில் எங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்பதற்குத் தயாராக இருந்தார்கள். ஆனால், பிரிவினைவாதிகள் போராட்டத்தில் வன்முறையை ஏவிவிட்டு, அந்தச் சூழலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அதுபோன்றவர்களுக்கு என்னுடைய கோரிக்கையெல்லாம் ஒன்றே ஒன்றுதான். 'உங்கள் வியாபாரத்தை அரசியலில் இருந்து விலக்கிக் கொள்ளுங்கள்.' என்பதுதான். நமக்கு வலுவான அரசாங்கம் தேவை என்பது ஒருபக்கம் இருக்கிறது. ஆனால், உலகில் இருக்கும் வலுவான அரசாங்கங்களிலும் சிறப்பான பொருளாதாரம் உடைய நாடுகளிலும் வியாபாரங்களும் அரசியலும் கலக்கப்படுவதில்லை."

கே: ``இந்தத் துறையில் உள்ள மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், உங்களின் ஸ்டெர்லைட் ஆலை எத்தகையது?"

ப: ``உலக அளவிலான செப்புத் தேவைகளில் இந்தியா வெறும் 5% மட்டுமே உற்பத்தி செய்கிறது. இருந்தும் நாம் மட்டுமே அதைச் சிறப்பாகச் செய்கிறோம் என்பதை உறுதியாகச் சொல்லுவேன். நாங்கள் இந்தத் துறையில் இருபது வருடங்களாக இருக்கிறோம். எங்கள் ஆலைகள் இருக்கும் இடங்களில் கடந்த பத்து வருடங்களாகக் காற்றின் சுத்தம் மேம்பட்டிருக்கிறது. நிலத்தடி நீரின் தூய்மை மேம்பட்டுள்ளது. நாங்களே பல பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகிக்கின்றோம். சூழல் பாதுகாப்புக்காக, மட்டும் நாங்கள் ரூபாய் 500 கோடி முதலீடு செய்துள்ளோம்.”

கே: ``தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உங்களுக்குச் சாதகமாக செயல்படுவதாகத் தொடக்கத்தில் இருந்தே புகார் வந்ததே?"

ப: ``1980-களின் தொடக்கத்தில் மன்னார் வளைகுடாவுக்கு 15 கிலோமீட்டர் தொலைவில் தூத்துக்குடியில் சிப்காட் ஒன்றை தமிழ்நாடு அரசு நிறுவியது. அது  'சிவப்புப் பிரிவு' தொழிற்சாலைகளுக்காக நிறுவப்பட்டது. நாங்கள் அந்த சிப்காட்டில் தொழிற்சாலை அமைப்பதற்காக, 1994-ல் தமிழக அரசை அணுகியபோது, அவர்கள் எங்களுக்கு அங்கே இடம் அளித்து அனுமதி தந்தார்கள். தொடக்கம் முதலே தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எங்களுக்கான விதிமுறைகளில் துளியும் சமரசமற்றவர்களாகவே இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின்படி சூழலைப் பாதிக்காத கழிவுகளைக்கூட நாங்கள் இரண்டு நாள்களில் அங்கிருந்து அப்புறப்படுத்தி விடுகிறோம். அதுவே, அங்கிருக்கும் மற்ற தொழிற்சாலைகள் எதுவும் அப்படிச் செய்வதில்லை. ஆக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எங்களுக்குச் சாதகமாகச் செயல்படுகிறது என்று சொல்வது அடிப்படை ஆதாரமற்றது..."

---

அடுத்த கட்டுரைக்கு