Published:Updated:

தேர்தல் சர்ச்சை, சிரியா போர் இவற்றுக்கெல்லாம் பதில் தருமா ட்ரம்ப் - புதின் சந்திப்பு!

அமெரிக்க அதிபர் ட்ரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பின்லாந்தில் உள்ள ஹெல்ன்ஸ்கியில் வரும் ஜூலை 16ம் தேதி சந்திக்கவுள்ளனர். 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடுகள் இருந்தது என்பது இரண்டு வருடங்களாக ட்ரம்ப்பை சுற்றும் நீங்காத சர்ச்சையாக உள்ளது.

தேர்தல் சர்ச்சை, சிரியா போர் இவற்றுக்கெல்லாம் பதில் தருமா ட்ரம்ப் - புதின் சந்திப்பு!
தேர்தல் சர்ச்சை, சிரியா போர் இவற்றுக்கெல்லாம் பதில் தருமா ட்ரம்ப் - புதின் சந்திப்பு!

2018ம் ஆண்டு சர்வதேச அரசியலுக்கு பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நிறைந்த ஆண்டாக மாறியுள்ளது. எப்போதும் எலியும், பூனையுமாக பார்க்கப்படும் தென்கொரியாவும் , வடகொரியாவும் எல்லையில் கைகுலுக்கிக் கொள்கின்றன. வரலாற்றில் இதுவரை கிடைக்காத காட்சியாக பதவியிலிருக்கும் அமெரிக்க அதிபர், வடகொரிய தலைவர் ஒருவரை மூன்றாவது நாடான சிங்கப்பூரில் சந்திக்கிறார். ட்ரம்ப்-கிம் கைகுலுக்கிய காட்சிகளை உலகம் பார்த்து வியக்கிறது. இந்த நிகழ்வுகள் பற்றி பேசி முடிப்பதற்குள் அடுத்த ஆச்சர்யம் கதவைத் தட்டுகிறது. ஆம்.. அமெரிக்க அதிபர் ட்ரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பின்லாந்தில் உள்ள ஹெல்ஸின்கியில் (Helsinki) வரும் ஜூலை 16ம் தேதி சந்திக்கவுள்ளனர்.

2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடுகள் இருந்தது என்பது இரண்டு வருடங்களாக ட்ரம்ப்பை சுற்றும் நீங்காத சர்ச்சையாக உள்ளது. ட்ரம்பின் பிரசார அதிகாரிகள் எஃப்.பி.ஐ விசாரணையில் ரஷ்ய குறுக்கீடுகள் இருந்ததை உறுதி செய்தததும், ட்ரம்ப் மருமகனான ஜெரார்டு குஷ்னர் மீதான புகார்களும் தேர்தல் சர்ச்சையை இன்றுவரை பரபரப்பாக வைத்துள்ளன. 

இதன் உச்சகட்டமாக மார்ச் 14, 2016 அன்று ஜார்ஜ் பபடோபோலோஸ் (George Papadopoulos) எனும் பிரசார அதிகாரி ஒரு ரஷ்யப் பேராசிரியருடன் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அந்த ரஷ்யப் பேராசிரியருக்கும் ரஷ்யப் பெண்மணி ஒருவருக்கும் தகவல் பரிமாற்றம் இருந்துள்ளது. அந்தப் பெண், ரஷ்ய அதிபரின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்பின் மார்ச் 31-ம் தேதி ட்ரம்ப் மற்றும் புதின் இடையேயான சந்திப்பு ஏற்பாடு செய்வது குறித்துப் பேசியுள்ளார். ரஷ்ய அதிகாரிகள் ட்ரம்புடனான புதினின் சந்திப்புக்கு ஆர்வம் தெரிவித்துள்ளனர் என்பது ஜார்ஜ் பபடோபோலோஸின் இ-மெயில் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், இந்த ரஷ்ய உளவாளிகளைப் பயன்படுத்தி ஹிலரி கிளின்டன் தொடர்பான இ-மெயில்கள் வெளிவந்த விஷயத்திலும் முக்கியப் பங்காற்றியுள்ளார் பபடோபோலோஸ். இதற்கும் ரஷ்ய உளவாளிகள்தான் உதவியுள்ளனர். கிட்டத்தட்ட அமெரிக்கத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் பிரசாரக் குழுவுக்கும் ரஷ்ய அரசுக்கும் இடையே பாலமாக ஜார்ஜ் பபடோபோலோஸ் செயல்பட்டுள்ளார். இதன்பின் நடைபெற்ற விசாரணையில் ''எனக்கு சங்கடமாக உள்ளது. நான் எஃப்.பி.ஐ அதிகாரிகளிடம் பொய் கூறிவிட்டேன். ரஷ்ய அரசுடன் தொடர்பு இருந்தது என்பதை மறைத்துப் பொய் கூறிவிட்டேன்'' என்று வாக்குமூலமும் அளித்துள்ளார். இந்த விஷயங்கள்தான் ரஷ்யா - அமெரிக்கா விஷயத்தில் முக்கிய சர்ச்சையாக மாற்றியது. 

இதுமட்டுமல்லாமல் சிரியாவின் உள்நாட்டு போர் விவகாரத்தில் இருநாடுகளும் எதிரெதிர் நிலைப்பாட்டில் உள்ளன. அணு ஆயுதங்கள் விவகாரம், ரஷ்யாவில் ஆயுத பலத்தை இரண்டு நாடுகளும் சோதித்துப் பார்க்கின்றன. சிரியாவை சோதனைக்கூடமாக அமெரிக்காவும், ரஷ்யாவும் பார்க்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் துவங்கி நாட்டோ கொள்கை, சைபர் பாதுகாப்பு போன்ற பல்வேறு விஷயங்களில் இரண்டு நாடுகளுக்கும் மனக்கசப்பு இருந்துகொண்டே இருக்கிறது.

இவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவேதான் இந்தச் சந்திப்பு நிகழவுள்ளது. ''சந்திப்புகள்தான் நல்ல விஷயங்களுக்கு வழிவகுக்கிறது. அந்தமுறையில் இச்சந்திப்பு பாசிட்டிவான சந்திப்பாக இருக்கும்'' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். ரஷ்ய அதிபரும் ''ட்ரம்பின் வருகை இரு நாடுகளுக்குமிடையே நல்ல உறவுகளை ஏற்படுத்தும்'' என்று கூறியுள்ளார். ட்ரம்ப் பதவியேற்றதற்கு பின்பு புதினை இரண்டு முறை சந்தித்துள்ளார். ஹம்பர்கில் ஜி7 மாநாட்டில் சந்தித்த போது இருவரும் ஒன்றாக இரவு உணவின்போது சந்தித்துள்ளனர். இதுதான் இருவரது தனிப்பட்ட சந்திப்பாக அமையவுள்ளது. 

பல கேள்விகளுக்கு இந்தச் சந்திப்பில் விடை கிடைக்கும் என்றும் உலகம் ஆவலோடு எதிர்பார்த்துள்ளது. ட்ரம்ப்-கிம், ஜின்பிங்-கிம், மோடி-ஜின்பிங், கிம்- மூன் என தலைவர்களின் சந்திப்பு சர்வதேச அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய வரிசையில் ட்ரம்ப் - புதின் சந்திப்பு நிகழும் என்று எதிபார்க்கப்படுகிறது.