Published:Updated:

பனாமா ஊழலில் நவாஸுக்கு தண்டனை... நெக்ஸ்ட் தாவூத் நண்பர், மெஸ்ஸி, மல்லையாவா?

ஜூலை 6ம் தேதி நவாஸ் ஷெரீஃப்புக்கு 10 ஆண்டு சிறையும் 8 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் 65 கோடி ரூபாய்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பனாமா ஊழலில் நவாஸுக்கு தண்டனை... நெக்ஸ்ட் தாவூத் நண்பர், மெஸ்ஸி, மல்லையாவா?
பனாமா ஊழலில் நவாஸுக்கு தண்டனை... நெக்ஸ்ட் தாவூத் நண்பர், மெஸ்ஸி, மல்லையாவா?

சில மாதங்களுக்கு முன் `பனாமா பேப்பர்ஸ்' ஊழல் விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் எனப் பல முன்னணி பிரபலங்களின் பெயர்கள் அதில் இடம்பிடித்தன. `சர்வதேசப் புலனாய்வு பத்திரிகையாளரின் கூட்டமைப்பு' என்ற அமெரிக்க நிறுவனம், 1.15 கோடி பக்கங்கள் கொண்ட ரகசியப் புலனாய்வு ஒன்றைத் தயார் செய்தது. 2016- ம் ஆண்டு ஏப்ரல் 3- ம் தேதி பனாமா நாட்டின் சட்ட நிறுவனமான `மோசெக் பொன்சிகா' மூலம் இந்தப் புலனாய்வு கசிந்தது. `பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் வெளியான இந்தப் புலனாய்வு அவறிக்கையின் மூலம் உலக அளவில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் எனப் பல்வேறு பிரபலங்கள் சட்டத்துக்குப் புறம்பாகக் கணக்கில் வராத   கோடிக்கணக்கான பணத்தை வெளிநாடுகளில் பதுக்கியது தெரிய வந்தது. இந்த விவகாரம் வெளிவந்த சமயத்தில், பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப்புக்கும் இதில் தொடர்பு உள்ளது தெரியவந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக நடந்த வழக்கில் ஜூலை 6ம் தேதி நவாஸ் ஷெரீஃப்புக்கு 10 ஆண்டு சிறையும் 8 மில்லியன் யூரோ(இந்திய மதிப்பில் 65 கோடி ரூபாய்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் சட்டவிரோதமாகப் பணம் பதுக்கிவைத்த இந்த விவகாரத்தில், முன்னாள் பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷெரீஃப்பும் அவரது குடும்பமும் லண்டனில் நான்கு ஆடம்பரக் குடியிருப்புகளை வாங்கியது அம்பலமானது. இந்த வழக்கின் விசாரணையில் நீதிபதி முகமது பஷீரின் அமர்வு, ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை வழங்கியது. மேலும், நவாஸ் ஷெரீஃப்பின் மகள் மர்யம்முக்கு ஏழு ஆண்டுகள் சிறையும் 2 மில்லியன் யூரோ(16 கோடி ரூபாய்) அபராதமும் விதித்துள்ளார்கள். மர்யம்மின் கணவரான முன்னாள் ராணுவக் கேப்டன் சஃப்தாருக்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் குற்றவாளியாகச் சொல்லப்பட்டுள்ள ஷெரீஃப்பின் மகன்கள் ஹசன் மற்றும் ஹுசைன் ஏற்கெனவே தலைமறைவாக உள்ளனர். 

கணக்கில் வராத சொத்துகளைக் குவித்ததற்காக, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நவாஸ் ஷெரீஃப்பை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியது. அதனால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் நவாஸ் ஷெரீஃப். இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தேர்தலில் போட்டியிட நவாஸ் ஷெரீஃப்புக்கு வாழ்நாள் தடை விதித்தது. பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் நிலையில், `பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ்' கட்சியின் லாகூர் தொகுதி வேட்பாளரான மர்யம், தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துள்ளார். 

இந்த நிலையில்,  குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிபதி முகமது பஷீர் கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக இந்த வார ஆரம்பத்தில் லண்டனில் பேட்டியளித்த மர்யம், ``தீர்ப்பு எனக்குச் சாதகமாக வந்தாலும் சரி, எனக்கு எதிராக வந்தாலும் சரி, நான் விரைவில் பாகிஸ்தான் திரும்புவேன் " என்று கூறியிருந்தார். நவாஸ் ஷெரீஃப்பின் மனைவி குல்சூம் நவாஸ், தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்ற மாதத்திலிருந்து லண்டனில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரை, கவனித்துக்கொள்ளும் பொருட்டு வழக்கின் தீர்ப்பை ஏழு நாள்கள் ஒத்திவைக்குமாறு நவாஸ் ஷெரீஃப்பும், அவர் மகள் மர்யமும் கடந்த வியாழக்கிழமை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்கள். ஆனால், அவர்களின் மனுவை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஏற்கெனவே நீதிபதி முகமது பஷீர் செவ்வாய்க்கிழமை அறிவிக்கவிருந்த தீர்ப்பை, வெள்ளிக்கிழமையான நேற்று தள்ளிவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இறுதியாக நேற்று 2.30 மணியளவில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நவாஸ் ஆதரவாளர்களால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டு விடக் கூடாது என இஸ்லாமாபாத் நிர்வாகம் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

`மோசக் பொன்சிகா' குழுமம் மூலம் வெளியான இந்தப் `பனாமா பேப்பர்ஸ்' குற்றச்சாட்டில், இந்தியப் பிரபலங்களான நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் தொழிலதிபர் விஜய் மல்லையா ஆகியோரது பெயர்களும் உள்ளன என்று கூறப்படுகிறது. நிழல் உலக தாதாவான தாவுத் இப்ராஹிமுடன் நெருங்கிய தொடர்புடைய இக்பால் மிர்சியும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார் என்றும், அர்ஜென்டினா கால்பந்து வீரரான  மெஸ்ஸியும், உலகப்புகழ் பெற்ற நடிகர் ஜாக்கிஜானும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. நவாஸ் ஷெரீஃப்பின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளதையடுத்து இதில் தொடர்புடைய பல்வேறு பிரபலங்களும் கலக்கத்தில் உள்ளனர். அடுத்தடுத்து குற்றங்கள் நிரூபிக்கப்படும்போது பல உண்மைகள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.