Published:Updated:

வளங்கள் இருப்பதாலேயே அழிக்கப்பட்ட வைரம் பாய்ந்த நாடு சியரா லியோன்!

வளங்கள் இருப்பதாலேயே அழிக்கப்பட்ட வைரம் பாய்ந்த நாடு சியரா லியோன்!
வளங்கள் இருப்பதாலேயே அழிக்கப்பட்ட வைரம் பாய்ந்த நாடு சியரா லியோன்!

விவசாயம் செழிப்பாக இருக்கிறது... கனிம வளங்கள் அதிகமாக உள்ளது.. அதற்காக அங்குள்ள மக்களின் வாழ்க்கையை அழிப்பது எந்த விதத்தில் நியாயம். சியரா லியோன்....மேற்கு ஆப்பிரிக்காவின் சிறு நாடு. மழைக்காடுகள், அழகிய கடற்கரைகள், வயல்வெளிகள், தென்னை மரங்கள் என்று அழகான நாடு.

விவசாயம் செழிப்பாக இருக்கிறது... கனிம வளங்கள் அதிகமாக உள்ளது. அதற்காக அங்குள்ள மக்களின் வாழ்க்கையை அழிப்பது எந்த விதத்தில் நியாயம். இந்தக் கேள்வியை சர்வதேச அரங்கில் உரக்கக் கேட்கிறது சியரா லியோன். இது மேற்கு ஆப்பிரிக்காவின் சிறு நாடு. மழைக்காடுகள், அழகிய கடற்கரைகள், வயல்வெளிகள், தென்னை மரங்கள் என்று அழகான நாடு. இவற்றுக்கு அடுத்தபடியாக ஆப்பிரிக்காவுக்கே உரிய பல்வேறு இனக்குழுக்கள் வளர்த்தெடுத்த கலைகள் நிறைந்த நிலம். அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய `ஓடலே முகமூடிகள்', `கொய்ன்டு நடனம்' என்று எங்கும் காணக்கிடைக்காத ஆப்பிரிக்க மண்ணுக்கே உரிய அற்புத கலைப் படைப்புகள்! மீன், காஃபி, கோகோவுக்குப் பெயர் போனது சியரா லியோன். அரிசிதான் அங்கு முக்கிய உணவு. வேக வைத்த அரிசியுடன் விதவிதமான தொடுகறிகள் உண்டு. வறுத்த மீனுடன் கூடிய கடலைக் கறி, உருளைக்கிழங்கு கறி, வெண்டைக்காய் சூப், இவை போக அந்த மண்ணில் விளையக் கூடிய சில கீரைகள் என உணவுப் பண்பாடும் அற்புதம்தான். இவை எல்லாம் தவிர்த்து சியரா லியோன் மண்ணுக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. அவை வைரங்கள்! ஆற்றங்கரையோரமாகச் சிறிதே சிரமப்பட்டு கை விட்டுத் தோண்டினாலே கிடைக்கும் வைரங்கள்! எளிய மக்கள் - கோடிக் கணக்கில் விலைபோகும் ஒரு சரக்கு, இந்த இணை என்னென்னவற்றை விதைக்குமோ அவைதான் சியரா லியோனிலும் விதைக்கப்பட்டது. வருடங்கள் பல ஓடியும் சியரா லியோன் மண்ணில் பதிந்து போன அந்த இரணம் இன்னும் ஆறவில்லை. வைரங்கள் ஈனும் அந்த மண், அது வைரங்கள் தருவதனாலேயே அதன் குடிமக்களை இயல்பான, அமைதியான வாழ்க்கை முறையிலிருந்து தூர விரட்டுகிறது.

வளங்கள் இருப்பதாலேயே அழிக்கப்பட்ட வைரம் பாய்ந்த நாடு சியரா லியோன்!

சமீபத்தில் ராபப்போர்ட் வைர நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்ட்டின் ராபப்போர்ட் `இந்தியாவின் சூரத்துக்கு வந்து ஒவ்வொரு வைரத்தின் உற்பத்தி மூலத்தையும் ஆராய்ந்து பார்த்து வைரங்களை வாங்குவது நுகர்வோரின் கடமை’ என்று கூறியிருக்கிறார். அமெரிக்காவின் மிகப்பெரும் வைர ஏற்றுமதியாளர் இந்தியாதான். வைரத்தின் தரத்தைப் பார்த்தால் போதாதா? அதன் உற்பத்தி மூலத்தை எதற்கு ஆராய வேண்டும்? “விடுமுறை எடுத்துக்கொண்டு சூரத்துக்குப் போய் வாருங்கள். `வைரக் கற்கள் எங்கிருந்து வருகின்றன? சியரா லியோன், காங்கோ, ஜிம்பாப்வே போன்ற சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்து வருகின்றனவா என்று பாருங்கள். சுடப்படுவதற்குத் தயாராய்க் காத்திருக்கும் வாத்துகள் போல் அமர்ந்திருக்காதீர்கள்! இன்னோர் உலக வர்த்தக மையத் தகர்ப்பு வேண்டுமா?” என்று லாஸ் வேகாசில் நடந்த அந்த மாநாட்டில் கேட்டிருக்கிறார் மார்ட்டின்.

இதற்கு இந்தியாவைச் சேர்ந்த வைர முதலாளிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வைரங்களில் அப்படி என்ன பொதிந்திருக்கிறது? "பிளட் டைமண்ட்' என்று அந்த வைரங்களைக் கூறுவார்கள். ஒரு உள்நாட்டுப் போர், தோண்டத் தோண்ட கிடைக்கும் வைரங்கள்! அந்த வைரங்களின் மதிப்புதான் சியரா லியோன் நிலத்துக்குப் பெரும் விலை வைத்தது. விடுதலைக்காக என்று உள்நாட்டுப் போரும் நீண்டு கொண்டே சென்றது. உண்மையில் உள்நாட்டுப் போரில் சிக்கியிருக்கும் நாடுகளில் நிலவும் சூழலை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. சியரா லியோனின் உள்நாட்டுப் போருக்கு எரிபொருளாக இருந்தவை அந்த வைரங்கள்தாம்.

1930களில் முதன்முதலாக சியரா லியோனில் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. தொடந்து சுரங்கத்திற்கான வேலைகள் தொடங்கின. அரசுடன் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் ஆப்பிரிக்க நாடுகளில் பரவலாக சுரங்கப் பணிகளில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த நிறுவனம் ஒன்று சியரா லியோனில் வைர சுரங்கப் பணிகளுக்கான பிரத்தியேக உரிமையைப் பெற்றது. 99 வருடங்களுக்கான ஒப்பந்தம் அது. சியரா லியோன் செலக்ஷன் டிரஸ்ட் என்ற பெயரில் அந்த நிறுவனம் சியரா லியோனில் இயங்கிக்கொண்டிருந்தது. அந்த நிறுவனத்தில்தான் வைர வர்த்தகத்தின் கடவுள் டீ-பியர்ஸ் நிறுவனம் முதலீடு செய்தது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு வரை கூட வைரச் சந்தை மொத்தமும் டீ-பியர்ஸின் கைகளுக்குள் அடங்கியிருந்தது. அதன் பிறகு சந்தையில் போட்டிகள் அதிகரித்த பின்பு, `வைரச் சந்தையின் ஒற்றை ஆள்’ என்ற பெயர் மறைந்தது. ஆனாலும், தற்போது உலகின் மொத்த வைரக்கற்கள் உற்பத்தியில் 35%பங்கு டீ-பியர்ஸுக்குத்தான்.

சியரா லியோனில் புதிதாக வைரச் சுரங்கங்கள் தொடங்கப்படவும், மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக சுரங்கப் பணிகளில் தங்களை ஈடுப்படுத்திக்கொண்டார்கள். உள்நாட்டுப் போர் தொடங்குவதற்கு முன்பு வரையில் கிட்டத்தட்ட 2,50,000 பேர் வைரச் சுரங்கங்களில் வேலை செய்து கொண்டிருந்தனர். பெரிதாக எந்தச் சிக்கலும் இல்லாமல் நாடு அமைதியாகத்தான் இருந்தது. சியரா லியோனின் முதல் பிரதமர் சர் மில்டன் மர்காய் இறந்த பிறகுதான் சூழல் மாறியது. அரசு நிர்வாகம் முழுதும் ஊழல் வசம் சென்றது. டீ-பியர்ஸ் வழங்கும் வரிப்பணம் அனைத்தும் அதிகாரிகளின் வீட்டுக்குப் போனது. அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்கள் வைரங்களை ருசிக்கத் தொடங்கினார்கள். நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பணம் அனைத்தும் அதிபருக்கு வேண்டியவர்களின் வீட்டை நிறைத்தது. ஊழலுக்கு நாட்டின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்கும் சக்தி உண்டல்லவா? சியரா லியோன் கவிழத் தொடங்கியது. நாட்டின் அடிப்படை அத்தியாவசியங்கள் அனைத்தும் நிலை குலைந்து போயின. கல்வி, சுகாதாரத்துறை என அனைத்தும் ஒன்றுமில்லாமல் போயின. ஜனநாயக அமைப்பு சிறிது சிறிதாகச் சரிந்து கொண்டிருந்தது. பொருளாதாரம் அதலபாதாளத்தை எட்டிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் இயல்பாகவே மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்.யூ.எஃப் என்று அழைக்கப்படும் புரட்சிப் படையின் பக்கம் ஈர்க்கப்பட்டார்கள். தங்களையும் அந்தப் படையில் இணைத்துக் கொண்டார்கள். 1984 இல் டீ-பியர்ஸ் நிறுவனம் சியரா லியோனை விட்டு நகர்ந்த பின்பு, கிட்டத்தட்ட சியரா லியோனின் அத்தனை வைரங்களும் கடத்தல் தொழிலுக்குத்தான் பயன்பட்டன. இந்த வைரக் கடத்தலின் பின்னணியில் சில தனியார் நிறுவனங்கள் இருந்தன. இந்தக் காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் எப்படியிருந்தது என்றால் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் தரக் கூட அரசிடம் பணம் இல்லை. ஊழியர்கள் அனைவரும் அரசுக் கட்டடங்களை சேதப்படுத்தி, அடுத்த வேளைக்கான சாப்பாட்டுக்குப் பணம் தேடினர்.

வளங்கள் இருப்பதாலேயே அழிக்கப்பட்ட வைரம் பாய்ந்த நாடு சியரா லியோன்!

இந்த நிலையில்தான் மார்ச் 23,1991 அன்று உள்நாட்டுப் போர் தொடங்கியது. லைபீரியாவில் அப்போது நடந்த புரட்சி சியரா லியோனுக்கும் ஊக்கம் கொடுத்தது. வெறுப்பில் இருந்த மக்கள் ஆர்.யூ.எஃப்-இல் தங்களை இணைத்துக்கொண்டனர். போர் தொடங்கிய ஒரு வருடத்திலேயே ஆற்றுப்படுகை வைரங்கள் நிறைந்த பகுதிகளைத் தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தது ஆர்.யூ.எஃப். `வைரச் சுரங்கங்கள் கையில் இருந்தால் சியரா லியோனே கையில் இருப்பது போன்று’ என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. தொடர்ந்து ஆயுதங்கள் வாங்கவும், போரின் மற்ற செலவுகளுக்காகவும் வைரங்கள் கடத்தப்பட்டன. வைரச் சுரங்கங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி விட்டு அந்தச் சுரங்கங்களை ஆக்கிரமித்துக்கொண்டது ஆர்.யூ.எஃப். வறுமையில் வாடிய மக்களுக்கு வைரங்கள் ஆறுதலாய்த் தெரிந்தன. ஆற்றுப்படுகை ஓரமாக வெறும் கைகளால் கூட தோண்டி வைரங்களைத் தேடத் தொடங்கினர்.

உள்நாட்டுப் போர் தீவிரம் ஆக ஆக, குழந்தைகள் கூட போரில் ஈடுபடுத்தப்பட்டார்கள். மனித உரிமை மீறல்கள், வன்கொடுமைகள் என அனைத்தும் சர்வசாதரணமாக நிகழ்ந்தன. பெண்கள் போராளிகளுக்குப் பாலியல் அடிமைகளாக இருக்கக் கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டனர். வாழவே முடியாத சியரா லியோனை விட்டு மக்கள் தப்பிக்க முயன்று கொண்டிருந்தனர். இதற்கெல்லாம் நடுவில் வைரங்கள் மட்டும் முயற்சிப்பவர்களுக்கெல்லாம் அகப்பட்டுக்கொண்டே இருந்தன. பெரும்பாலான வைரங்கள் அனைத்தும் ஆர்.யூ.எஃப்-விற்கு சென்றன. போர் செலவுகள் அனைத்தையும் வைரங்கள் பார்த்துக்கொண்டன. வைரங்கள் இருக்கும் வரை போர் நிற்காது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. மக்களின் வாழ்வு முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் அமைதிக்கான முயற்சிகள் தொடங்கின.

முதல் `அமைதி’ முயற்சி 1996இல் மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் உந்துதலின் பேரில் சமாதானம் எட்டப்பட்டு ஓர் அரசாங்கமும் ஏற்படுத்தப்பட்டது. ஜானி பால் கொரோமா பிரதமராகப் பதவி ஏற்றுக் கொண்ட பின், போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து நாடெங்கும் கொலைகளும், வன்புணர்வுகளும், கொள்ளைகளும் நிகழ்ந்தன. சர்வதேச அளவில் சியரா லியோனின் நிலை பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில் 1999-இல் லோம் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் ஆர்.யூ.எஃப்-இன் ஃபோடே சங்கோவுக்குத் துணை அதிபர் பதவி வழங்கப்பட்டது. மேலும், போர் நிறுத்த ஒப்புதலுக்காக வைரச் சுரங்கங்களுக்கான மொத்த அதிகாரமும் ஆர்.யூ.எஃப்-விடம் ஒப்படைக்கப்பட்டது. இப்படி முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு சியரா லியோனில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதிப்படை ஆயுதங்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கிய நிலையில் ஆர்.யூ.எஃப் மறுபடி போரைத் தொடங்கியது. ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு உதவ பிரிட்டன் போரில் இறங்கி சியரா லியோன் அரசைக் காத்தது. அதன் பிறகு 2002-இல் போர் முடிவடைந்தது. போரில் கிட்டத்தட்ட 1,20,000 பேர் இறந்து போயிருந்தனர். கிட்டத்தட்ட 4  லட்சம் பேர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தனர்.

வளங்கள் இருப்பதாலேயே அழிக்கப்பட்ட வைரம் பாய்ந்த நாடு சியரா லியோன்!

ஐக்கிய நாடுகள் சபையின் போருக்குப் பிந்தைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதுதான் சியரா லியோன் எந்த அளவு குலைந்திருக்கிறது என்பது தெரிய வந்தது. போருக்கு ஆட்கள் வேண்டும் என்று சிறு குழந்தைகளைப் போர் முனைக்கு வலுகட்டாயமாய் இழுத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்களின் உடல் நேரம் காலம் பாராத வேலைக்குப் பழக வேண்டும் என்று போதைக்கு அடிமைப்படுத்தியிருக்கிறார்கள். சிறுமிகளின் நிலை இன்னும் மோசம். அடுத்த வேளை சாப்பாடு வேண்டுமென்றால் பாலியல் தொழில் செய்தால்தான் உண்டு என்ற நிலை. போர் நடந்த காலகட்டத்தில் பல சிறுமிகள் கர்ப்பமாகவோ அல்லது குழந்தைகளுடனோ இருந்தார்கள். போரால் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு அழைத்து வருவதென்பது அவ்வளவு எளிதான காரியமில்லையே! போராளிகளிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்த பின்பு, அவர்களுக்கு கவுன்சலிங் கொடுத்து போர் மனநிலையிலிருந்து மீட்க வேண்டும். ஏதேனும் தொழில் செய்வதற்குப் பயிற்சி வழங்க வேண்டும். குழந்தைப் போராளிகளை இன்னும் கவனமாக அணுக வேண்டும். நாள் முழுதும் வெடிச் சத்தங்களையே கேட்டுக்கொண்டிருந்து, ரத்தத்தையும் பிணங்களையுமே பார்த்துக்கொண்டிருந்து, போதைக்கு அடிமையான குழந்தைகளை அந்த மனநிலையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கவுன்சிலிங் தேவைப்படும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி முயற்சியின் இரண்டாம் கட்ட நடைவடிக்கை இது. இறுதியாக,  அவர்களை சமூகத்துடன் ஒன்றிணைப்பதுதான். இருப்பதிலேயே கடினமான பணியும் இதுதான்.

வளங்கள் இருப்பதாலேயே அழிக்கப்பட்ட வைரம் பாய்ந்த நாடு சியரா லியோன்!

போர்முனை மனநிலையிலிருந்து விடுப்பட்டு விட்டாலும் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அமைதியாக வாழ்வது என்பது மிகப்பெரும் கேள்விக்குறிதான். இந்த நேரத்தில்தான் சக மனிதர்களால் போர் காலகட்டங்கள் தொடர்ந்து நினைவுப்படுத்தபட்டு அவர்கள் மனமுடைந்து போகிறார்கள், அல்லது `எப்படியும் நம்மால் சாதாரணமாக வாழ முடியாது, சுற்றி உள்ளவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல் வாழ்வதற்கு ஆயுதங்களுடனே வாழ்ந்து விடலாம்’ என்ற முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள். ஏனென்றால், முன்னாள் போராளிகளுக்கு வேலை கிடைப்பதும் மிகக் கடினம். அதனால்தான் `போர் நேரத்தில் செய்த ஏதேனும் சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபட்டு சாப்பாட்டுக்கு வழி பார்க்கலாமா?’ என்று நினைக்கிறார்கள். சியரா லியோனில்தான் வைரங்களுக்குப் பஞ்சம் இல்லையே! வைரங்களுக்கான மதிப்பும் சந்தையில் சின்னது இல்லையே! சியரா லியோனில் வைரக் கடத்தல் பற்றித் தகவல்கள் வெளிவரத் தொடங்கிய போதே கிம்பெர்லே சான்றளிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது `இவை பிளட டைமண்ட் கிடையாது’ என்று வைரங்களுக்கு அரசுச் சான்றளிக்கும் முறை அது. ஆனால், இந்த நடவடிக்கை சுத்தமாகப் பயனளிக்கவில்லை. கிம்பெர்லே சான்றளிக்கும் நாட்டுக்கு வைரங்கள் கடத்தப்பட்டு அங்கிருந்து அவை சந்தைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

தங்களது நிறுவனத்துக்குரிய வைரங்களில் இந்தக் குருதி படிந்து, தங்கள் நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதில் வைர நிறுவனங்கள் வெகு கவனமாகத்தான் இருக்கின்றன. ஆனாலும் ஆப்பிரிக்க தேசங்களில் திரை மறைவு சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. வைரங்களின் உற்பத்தி மூலத்திலிருந்து அவை சந்தைக்கு வரும் வரை அவற்றின் வழிப்பாதையைப் பின்தொடரும் தொழில்நுட்பத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிக்கிறது டீ-பியர்ஸ் நிறுவனம். பிளட் டைமண்டுகளைக் குறித்து மிக எச்சரிக்கையாகத்தான் உலகம் இருக்கிறது. ஏனெனில் சந்தையில் வைரங்களின் மதிப்பு பிரமாண்டமானது அல்லவா? அந்தப் பிரமாண்டத்துக்குச் சற்றும் குறைவில்லாததுதான் சியரா லியோன் மக்களின் வலியும்! உள்நாட்டுப் போரில் அடிபட்டு, எபோலாவால் சரிந்து போன சியரா லியோன் இப்போதுதான் எழுந்து நடக்கத் தொடங்கியிருக்கிறது. வைரத்தின் பக்கங்கள் அனைத்தும் சீக்கிரம் மறைந்து போக வேண்டும். சியரா லியோன் கடற்கரைக் காற்று, மழைக் காடுகள், ஓடலே முகமூடிகள், கொய்ன்டு நடனம் மட்டும் அந்த மக்களின் நினைவில் இருக்கட்டும். மக்கள் வாழ்வுக்குப் பின்தான் எந்த வளமாக இருந்தாலும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்தாலே போதும் சியரா லியோன் போன்ற பல ஊர்கள் வாழும். 

அடுத்த கட்டுரைக்கு