Published:Updated:

கண்ணடித்தார் ட்ரம்ப்... தலையசைத்தார் புதின்... பின்லாந்து சந்திப்பின் சுவாரஸ்யங்கள்!

கண்ணடித்தார் ட்ரம்ப்... தலையசைத்தார் புதின்... பின்லாந்து சந்திப்பின் சுவாரஸ்யங்கள்!
கண்ணடித்தார் ட்ரம்ப்... தலையசைத்தார் புதின்... பின்லாந்து சந்திப்பின் சுவாரஸ்யங்கள்!

புதின் வருகை தாமதமானது. இதனால் சந்திப்பு நிகழும் பிரெஸிடென்ஷியல் பேலஸுக்கு வராமல் ஹோட்டலிலேயே காத்திருந்தார் ட்ரம்ப். புதின் பேலஸில் ட்ரம்பை வரவேற்றார். 

இருவருக்கும் நேரடியாக எந்தப் பகையுமில்லை. ஆனால், இருவரும் ஆளுக்கொரு நபரை ஆதரிப்பார்கள். அவர்கள் அடித்துக் கொள்வார்கள். இப்படி பல கதைகளை படித்திருப்போம். அந்தக் கதைகளுக்கு நிகழ்கால உதாரணம் தேடினால் அமெரிக்கா - ரஷ்யா என்று அர்த்தம் கிடைக்கும். தென்கொரியாவும் வடகொரியாவும் கைகுலுக்கிக் கொண்டன. இந்தியாவும் சீனாவும் வர்த்தகத்தை வலுப்படுத்திவிட்டன. இவ்வளவு ஏன் ஒற்றைப் பட்டனில் அமெரிக்கா க்ளோஸ் என்று கர்ஜித்த வடகொரியாவே, ''எல்லாத்தையும் நிறுத்திடுறேன்'' என்று அமெரிக்காவுடன் இணக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அடுத்து என்ன இந்தத் திரைக்கதையில் அடுத்த காட்சி ட்ரம்ப் -புதின் சந்திப்புதான். அதற்கும் நாள் குறித்தனர் ஜூலை 16-ல் பின்லாந்தில் சந்திப்பதாக அறிவித்தனர். 

தாமதமாக வந்த புதின்:

சிங்கப்பூரில் கிம்மை சந்திக்கும்போதும் சரி, இங்கு புதினை சந்திக்கும்போதும் சரி குறித்த நேரத்துக்கு முன்னதாகவே அந்த இடத்துக்கு வந்துவிடுவது ட்ரம்பின் வழக்கம். இந்த முறையும் ட்ரம்ப் வந்துவிட்டார். ஆனால், புதின் வருகை தாமதமானது. இதனால் சந்திப்பு நிகழும் பிரெஸிடென்ஷியல் பேலஸுக்கு வரமால் ஹோட்டலிலேயே காத்திருந்தார் ட்ரம்ப். 

உலகக் கோப்பைக்கு வாழ்த்து:

ரஷ்யா உலகக் கோப்பையை வெற்றிகரமாக நேற்று நடத்தி முடித்தது. ரஷ்யாவின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாக ட்ரம்ப் புதினிடம் பகிர்ந்துகொண்டார். ``நான் கொஞ்சம்தான் பார்த்தேன். நீங்கள் அழகாக நடத்தியுள்ளீர்கள்'' என்றார்.

மியூச்சுவல் ஃப்ரெண்ட் சீன அதிபர் ஜி!

இருவரின் சந்திப்பின்போது, நாங்கள் நிறைய நல்ல விஷயங்களைப் பேசினோம். வர்த்தகம் தொடங்கி பாதுகாப்பு, அணு ஆயுதம், சீனா மற்றும் எங்களது மியூச்சுவல் ஃப்ரெண்ட் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரைப்பற்றி பேசியுள்ளதாக கூறினார் ட்ரம்ப். 

3 நொடிதான் கைகொடுத்தார்:

ஹெல்ஸின்கியில் உள்ள பிரெஸிடென்ஷியல் பேலஸ் ஹோட்டலில் சந்தித்த இருவரும் வெறும் மூன்று நொடிகள் மட்டுமே கைகொடுத்தனர். கிம் சந்திப்பின்போதுகூட ட்ரம்ப் 13 விநாடிகள் கைகொடுத்தார். இருவரும் சந்திப்பின்போது இறுக்கத்துடனேயே காணப்பட்டனர். பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது கொஞ்சம் விலகியே இருந்தனர். ட்ரம்ப் சூழலை மாற்றுவதற்காகப் புதினை நோக்கி சிரிப்புடன் கண்ணடித்தார். புதினும் சிரிப்போடு தலையசைத்தார். இந்தச் சந்திப்பில் நிருபர்களிடமிருந்து ஒரு கேள்விகூட கேட்க அனுமதிக்கப்படவில்லை. 

உணவு இடைவேளை இல்லை!

இருவரும் சந்தித்து பேசும் நிகழ்வு 2 மணி நேரத்தைத் தாண்டி நடந்துகொண்டிருந்தது. இருவரும் மதிய உணவு இடைவேளையைக்கூட பொருட்படுத்தாமல் 3 மணி நேரம் கலந்தாலோசித்தனர். இரு அதிபர்கள் சந்திப்பில் ஆரம்பம் முதலே நிகழ்ச்சி நிரல் திட்டமிட்டபடி இல்லை. மிகவும் தாமதமாக உணவு அருந்த வந்தனர்.

போராட்டங்கள்:

பின்லாந்தில் இந்தச் சந்திப்பின்போது நிறைய பேர் கூடி ட்ரம்ப்- புதினுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி போராடினர். ''மேக் ஹுமன் ரைட்ஸ் கிரேட் எகெய்ன்'' ''முழு பத்திரிகை சுதந்திரம் உள்ள நாட்டுக்கு ட்ரம்ப்பை வரவேற்கிறோம்'', ''எங்கள் இதயங்களை இதமாக வைத்திருங்கள். எங்களைப் பூமியைச் சூடேற்றாதீர்கள்'' என்று போராட்ட வாசகங்களை ஏந்திப் போராடினர். இவர்களைக் காவல்துறையினர் சந்திப்பு நிகழும் இடத்துக்குள் வரவிடாமல் பார்த்துக்கொண்டனர். 

ட்ரம்ப் பதவியேற்றதற்கு பின்பு, புதினை இரண்டு முறை சந்தித்துள்ளார். ஹம்பர்கில் ஜி7 மாநாட்டில் சந்தித்தபோது இருவரும் ஒன்றாக இரவு உணவின்போது சந்தித்துள்ளனர். இதுதான் இருவரது தனிப்பட்ட சந்திப்பு. இது உலக அளவில் அமைதியை நிலைநாட்டும் விதமாக இருந்தால் மகிழ்ச்சிதான் என்பது பலரது கருத்து. ஆனால், இன்னமும் அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடு சர்ச்சை, சிரியா போர் குறித்த விஷயங்கள் பதிலளிக்கப்படாமலே உள்ளன. இந்தச் சந்திப்புக்குப் பின் இந்த விஷயங்களில் தீர்வை எதிர்பார்க்கலாம் என்பதே இருநாடுகளின் முடிவாக இருக்கும். 

சந்திப்பு சுமுகமாக நடந்தது. இருநாடுகளுக்குமிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும் விதமாக இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

அடுத்த கட்டுரைக்கு