Published:Updated:

அன்று எஃப்.பி.ஐ.. இன்று சி.ஐ.ஏ.. அதிகாரிகளின் பாதுகாப்பில் விளையாடும் ட்ரம்ப்!

``ட்ரம்ப் மிகவும் உண்மையற்றவராக இருக்கிறார். நேர்மையே இல்லாமல் நடந்துகொள்கிறார். அவரின் நெறிமுறைகள் அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியவை."

அன்று எஃப்.பி.ஐ.. இன்று சி.ஐ.ஏ.. அதிகாரிகளின் பாதுகாப்பில் விளையாடும் ட்ரம்ப்!
அன்று எஃப்.பி.ஐ.. இன்று சி.ஐ.ஏ.. அதிகாரிகளின் பாதுகாப்பில் விளையாடும் ட்ரம்ப்!

சி.ஐ.ஏ.வின் முன்னாள் இயக்குநர் ஜான் பிரென்னன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது டொனால்டு ட்ரம்ப் ரஷ்யாவுடன் கூட்டு வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்து வந்தார் ட்ரம்ப். இதுகுறித்து `நியூயார்க் டைம்'ஸில் கட்டுரை எழுதிய ஜான் பிரென்னன் ``பிரசாரத்தின்போது ரஷ்யாவுடன் கூட்டு இல்லையென்று ட்ரம்ப் சொல்வது பெரும் அபத்தம்" என்று சாடினார். மேலும், ஜான் பிரென்னனுக்கான பாதுகாப்பை ட்ரம்ப் திரும்பப் பெற்றுள்ள நிலையில், ``சிறப்பு விசாரணை கமிஷனின் விசாரணையில் தலையிடத்தான் இப்படியொரு காரியத்தை அவர் செய்கிறார்" என்று கூறியுள்ளார் ஜான் பிரென்னன்.

கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதி ஜான் பிரென்னனுக்கு அளித்து வந்த பாதுகாப்பை ட்ரம்ப் திரும்பப் பெற, மறுநாளே (ஆகஸ்ட் 16, 2018) இப்படியொரு கடும் குற்றச்சாட்டினை வைத்துள்ளார் ஜான் பிரென்னன். முன்னாள் அதிபர் ஒபாமா பதவியில் இருந்தபோது சி.ஐ.ஏ. இயக்குநராக இருந்த ஜான் பிரென்னன், கடந்த சில மாதங்களாகவே ட்ரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். `பின்லாந்து நாட்டின் தலைநகர் ஹெல்சின்கியில் நடந்த அமெரிக்க - ரஷ்ய உச்சி மாநாட்டில் 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ரஷ்ய குறுக்கீடு குறித்துக் கேள்வியெழுப்பப்பட்ட போது ரஷ்யாவைப் பாதுகாப்பது போல ட்ரம்ப் பதிலளித்ததெல்லாம் துரோகத்துக்குச் சிறிதும் குறைவில்லாத ஒன்று" என்று விமர்சித்தார் ஜான் பிரென்னன்.

மேலும் இது குறித்து ட்வீட் ஒன்று பதிவிட்ட பிரென்னன் ``வாழ்வுக்குத் தேவையான குறைந்தபட்ச நாகரிகம், நேர்மை, மரியாதை இவற்றில் எதுவுமே இல்லாமல் எப்படி நடந்துகொள்ளமுடியும் என்று உங்களைக் கண்டு வியக்கிறேன். அதிபர் என்றால் என்னவென்று நீங்கள் எப்போதும் புரிந்துகொள்ளமாட்டீர்கள். இது என்னை வதைக்கிறது, நாட்டுக்கு மிகவும் ஆபத்தான நிலை" என்று கூறி ட்ரம்ப்பை தாக்கியிருக்கிறார் பிரென்னன். மேலும், ட்ரம்பின் கொள்கை முடிவுகளையும் தீவிரமாக எதிர்த்துள்ளார் அவர். பாரிஸ் காலநிலை உடன்பாட்டிலிருந்து ட்ரம்ப் வெளியேறியதையும், இரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கியது குறித்தும் கடிந்துகொண்டார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னோடு அவர் கொண்ட கலந்துரையாடலையும் விமர்சித்துள்ளார் பிரென்னன்.

கடந்த ஏப்ரலில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பிரென்னன் அளித்த பேட்டியில் ``ட்ரம்ப் மிகவும் உண்மையற்றவராக இருக்கிறார். நேர்மையே இல்லாமல் நடந்துகொள்கிறார். அவரின் நெறிமுறைகள் அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியவை. ஓர் அமெரிக்க அதிபராக அவர் செய்ய வேண்டிய பொறுப்புகளை அவர் நிறைவு செய்யவில்லை என்றே நான் நினைக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

ட்ரம்ப் ரஷ்யாவுடன் கூட்டு வைத்துள்ளதாகக் கூறி அவர் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது ``ரஷ்ய உள்துறை பாதுகாப்பின் தலைவரான அலெக்ஸாண்டர் போர்ட்னிகோவ், ஆகஸ்ட் 2016ம் வருடம் என்னிடம் தொலைபேசியில் பேசும்போது `ரஷ்யா, அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடுவதில்லை என்று கூறினார்'. அவர் கூறியது அப்பட்டமான பொய் என்பது அப்போதே எனக்குத் தெரியும். அமெரிக்கத் தூதர்களையும், குடிமகன்களையும் மாஸ்கோவில் மரியாதை குறைவாக நடத்துதல், சிரியா போர் நிறுத்த உடன்படிக்கையின் தோல்விகள், கிழக்கு உக்ரைனில் ரஷ்யத் துணை ராணுவப் படையின் தலையீடு போன்ற விவகாரங்களில் பல ஆண்டுகளாக ரஷ்யாவின் நயவஞ்சகத்தை வெளியே தெரியாமல் காத்துவரும் போர்ட்னிகோவின் மறுப்புகள் என்னைச் சோர்வுறச் செய்தன. மேலும், `அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய நாட்டின் குறுக்கீடு பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று. இது ரஷ்யா - அமெரிக்கா இடையேயான உறவைப் பெரிய அளவில் பாதிக்கும்' என்றும் போர்ட்னிகோவ் அவர்களைக் கண்டித்தேன். அவரோ மீண்டும் `இதில் எங்கள் குறுக்கீடு எதுவும் இல்லை' என்று எப்போதும் போல பொறுப்பாக நேர்மையாகப் பேசுவது போல நடித்தார்.

என்னைப் போன்று மேலும் சிலருக்கு அளித்து வரும் பாதுகாப்பைத் திரும்பப் பெறுவதன் மூலம் சிறப்பு விசாரணைக் குழு விசாரணையிலிருந்து அவரைக் காத்துக்கொள்வதற்கான வழிகளை மேற்கொள்கிறார் ட்ரம்ப். இது அரசியல் ரீதியான உந்துதலே தவிர வேறில்லை. இதன் மூலம் இவரிடம் கேள்வி கேட்போரைப் பயமுறுத்தும் வேலைகளைச் செய்கிறார். எது எப்படியோ ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை எந்தத் தங்குதடையுமின்றி நடைபெற வேண்டும். அப்போதுதான் அனைத்து அமெரிக்கர்களுக்கும் உண்மை என்னவென்று தெரியவரும்." என்று ஜான் பிரென்னன் குறிப்பிட்டுள்ளார்.

இவரைப்போலவே முன்னாள் எஃப்.பி.ஐ அதிகாரி ஜேம்ஸ் காமி உட்பட 9 முன்னாள் அதிகாரிகளின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது குறித்து டெமோகிராட்டிக், ரிபப்ளிகன் உள்ளிட்ட இரு கட்சியினரும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். ட்ரம்பின் முந்தைய நடவடிக்கையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், இப்போது புரூஸ் ஓர் என்ற அதிகாரி ஒருவரின் பாதுகாப்பையே திரும்பப் பெற்றுள்ளது ட்ரம்பின் செயல்பாடுகள் மீதான சந்தேகத்தை வலுவாக்கியுள்ளன.

புரூஸ் ஓரின் மனைவி நெல்லி 2016 ம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது ஃபியூஷன் ஜிபிஎஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தவர். முன்னாள் பிரிட்டிஷ் உளவாளி கிறிஸ்டோபர் ஸ்டீல் `ரஷ்யாவுக்கும் ட்ரம்புக்குமான உறவு' என்று எழுதியவற்றைக் கோப்புகளாக வடிவமைத்தது இந்த நிறுவனம்தான்.

தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ட்ரம்ப் தன்னை விமர்சிப்பவர்களை அடக்க முயல்கிறார் என்ற விமர்சனத்துக்குச் செய்தியாளர்களிடம் பதிலளித்த ட்ரம்ப், ``அவர்களை அடக்க முயல்கிறேன் என்றெல்லாம் இல்லை. பலருக்கும் பிரென்னன் யாரென்றே தெரியாது. ஆனால், அவர் வீண் விமர்சனங்களை வைப்பதன் மூலம் தன்னை பிரபலப்படுத்திக் கொள்கிறார். அவரை நான் மதிப்பது கூட இல்லை" என்று காட்டமாகக் கூறியுள்ளார்.