Published:Updated:

ரோஹிங்கியா கொலைகளைப் பதிவு செய்த பத்திரிகையாளர்களுக்குச் சிறைத் தண்டனை! - நடந்தது என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரோஹிங்கியா கொலைகளைப் பதிவு செய்த பத்திரிகையாளர்களுக்குச் சிறைத் தண்டனை! - நடந்தது என்ன?
ரோஹிங்கியா கொலைகளைப் பதிவு செய்த பத்திரிகையாளர்களுக்குச் சிறைத் தண்டனை! - நடந்தது என்ன?

ரோஹிங்கியா விவகாரத்தில் மௌனமாக இருந்து வந்த ஆங் சாங் சூகி, ``பத்திரிகையாளர்கள் இருவரும் பர்மிய அதிகார ரகசியச் சட்டத்தைப் பற்றிய விவரங்களைத் திருட முயன்றார்கள்; அதனால்தான் இந்தக் கைது நடவடிக்கை" என்று கூறி இருக்கிறார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ழை பெய்து தீர்த்த இருண்ட இரவு அது. ஓர் ஓட்டலில் நடைபெற்றது அந்தச் சந்திப்பு. மாறுவேடத்தில் இருந்த அந்தக் காவல்துறை அதிகாரிகள், யாரையோ சந்திப்பதற்காகக் காத்திருந்தார்கள். அவர்களிடம் தேசத்தைப் பற்றிய முக்கிய ஆவணம் கைவசம் இருந்தது. சிறிது நேரத்தில் அவர்களைச் சந்திக்க இரண்டு நபர்கள், அவர்களின் டேபிள் அருகே வருகிறார்கள். சில நிமிட உரையாடலுக்குப் பிறகு காவல்துறையினர் தங்களிடம் இருந்த ஆவணங்களைத் தருகிறார்கள். ஆவணங்களை வாங்கிக்கொண்டு ஓட்டலை விட்டு வெளியேறியதும் அந்த இரண்டு நபர்களையும் துப்பாக்கியுடன் சூழ்ந்து கொள்கிறது காவல்துறை. மறுநாள் காலை வெளிவந்த மியான்மர் தேசத்துப் பத்திரிகைகளை ‘மியான்மர் தேசத்தின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் வா லோன் மற்றும் க்யாவ் சூ கைது செய்யப்பட்டனர்’ என்கிற செய்தி ஆக்கிரமித்திருந்தது. அவர்களிடம் மியான்மர் நாட்டு அதிகார ரகசியச் சட்டம் குறித்த தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்பட்டது. ஆனால், ரோஹிங்கியா இன மக்கள் படுகொலை தொடர்பான ஆவணங்களைத்தான் பெற்றதாக பத்திரிகையாளர்கள் கூறினார்கள். இந்தச் சம்பவம் நடந்து 265 நாள்கள் கடந்த நிலையில், பத்திரிகையாளர்கள் இருவரின் மீதும் தொடுக்கப்பட்ட வழக்கின் மீதான தீர்ப்பு நேற்று அளிக்கப்பட்டது. தீர்ப்பின்படி, இரண்டு பத்திரிகையாளர்களுக்கும் தலா ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது அந்த நாட்டு நீதிமன்றம். 

மியான்மர் தேசத்தில் 2011-ம் ஆண்டுவரை ராணுவ ஆட்சி இருந்தது. அதையடுத்து 2015-ம் ஆண்டில் நடைபெற்ற முதல் தேர்தலில் 'ஆங் சாங் சூகி-யின்' கட்சிப் பெரும்பான்மையாக வென்றதை அடுத்து அவர் பிரதமருக்கு நிகரான தேசிய ஆலோசகர் பொறுப்பை ஏற்றார். சூகியின் அமைச்சரவையில் ராணுவத்தைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள். சூகி 15 ஆண்டுக்காலம் ராணுவக் காவலில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்தவர். 

மியான்மரின் மேற்குப் பகுதியில் உள்ள ரக்கைன் பிரதேசத்தில் ராணுவத்துக்கும் ரோஹிங்கியா இன மக்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. அதில் ரோஹிங்கியா இன மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல ரோஹிங்கியா இனப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஐக்கிய நாடுகள் சபை இதை இன அழிப்பு என்று குறிப்பிட்டது. சுமார் ஏழு லட்சம் ரோஹிங்கியா மக்கள் பங்களாதேஷுக்கு அகதிகளாகப் புலம் பெயர்ந்தார்கள். இதற்கெல்லாம் ஆதியாக இரண்டு மாணவர்கள் உட்பட பத்துபேரை  மியான்மர் ராணுவம் சுட்டுக் கொன்றனர். அது தொடர்பான செய்திகளை முதன்முதலில் ராய்ட்டர்ஸைச் சேர்ந்த இந்த இரண்டு ஊடகவியலாளர்கள்தான் வெளியிட்டார்கள். இதையடுத்தே அது சர்வதேசப் பிரச்னையாகப் பேசப்பட்டது. அது தொடர்பான மேற்கொண்டு விவரங்களைச் சேகரிக்கப்போன இடத்தில்தான் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதுநாள் வரையில் ரோஹிங்கியா விவகாரத்தில் மௌனமாக இருந்து வந்த ஆங் சாங் சூகி, ``பத்திரிகையாளர்கள் இருவரும் பர்மிய அதிகார ரகசியச் சட்டத்தைப் பற்றிய விவரங்களைத் திருட முயன்றார்கள்; அதனால்தான் இந்தக் கைது நடவடிக்கை" என்று குறிப்பிட்டிருக்கிறார். கடந்த ஏப்ரலில் கைது குறித்த விசாரணையை நடத்திய அந்த நாட்டின் வடக்கு மாகாண நீதிமன்றம், அவர்கள் ரகசியச் சட்டத்தை திருட முற்பட்டதற்கான ஆதாரங்களைக் கோரியுள்ளது. ஆனால், அப்படி காவல்துறை கொடுத்த ஆதாரங்கள் அத்தனையுமே அவர்கள் மீது ஜோடிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் கூறியிருக்கிறார். அவர்கள் கைது செய்யப்பட்டபோது குறிப்பெடுத்த அனைத்து ஆவணங்களும் எரிந்துவிட்டதாக போலீஸார் குறிப்பிட்டிருக்கின்றனர். பத்திரிகையாளர்கள் இருவரும் எப்படிக் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்த வழக்கில், சாட்சியங்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களையே கொடுத்துள்ளனர். பத்திரிகையாளர்கள் இருவரும் எந்தவித ரகசியத்தையும் வெளியிடவில்லை என்று காவல்துறையைச் சேர்ந்த சிலரே குறிப்பிட்டிருக்கின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்ட இடத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததைப் பற்றி ராணுவத்தினரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இப்படியான இக்கட்டான சூழலில்தான் பத்திரிகையாளர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. உண்மை தங்கள் பக்கம் இருப்பதால் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே தாங்களும் இருப்பதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. 

தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த பத்திரிகையாளர் வா லோன், பத்திரிகையாளர்களிடம் சொன்னது இதுதான்.

‘எனக்குப் பயமில்லை... நீதியின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் விடுதலையின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு