Published:Updated:

போரில் நசுங்கும் எளிய மக்கள்... அமைதி வேண்டும் அந்த இரு சம்பவங்கள்! #WorldPeaceDay

போரில் நசுங்கும் எளிய மக்கள்... அமைதி வேண்டும் அந்த இரு சம்பவங்கள்! #WorldPeaceDay
போரில் நசுங்கும் எளிய மக்கள்... அமைதி வேண்டும் அந்த இரு சம்பவங்கள்! #WorldPeaceDay

வெறும் செய்தியாக நம்மைக் கடந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு போருக்குப் பிறகும், பல எளிய மக்களின் வாழ்வு சிதைப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை நாம் நினைத்துப்பார்க்க முடியாத துயரம். நாடுகளுக்கிடையே எந்தக் காரணத்துக்காக போர் நடந்தாலும், அதில் பாதிக்கப்படுவது நாட்டின் மக்கள்தாம்.

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலர்கள் சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே... பிள்ளையின் சிறுமுகச் சிரிப்பில்!

- கவிஞர் வைரமுத்து. 

இன்று உலக அமைதி தினம். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ம் தேதி ஐ.நா சபையால் உலக அமைதி தினம் அனுசரிக்கப்படுகிறது. எதன் பொருட்டு இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது எனப் பார்ப்பதற்கு முன், இரண்டு சம்பவங்களைத் தெரிந்துகொள்வோம்.

சம்பவம்-1

10-க்கும் அதிகமான குழந்தைகள் சிரித்துக்கொண்டும் விளையாடியபடியும் பள்ளி வாகனத்தில் பள்ளிக்குச் செல்கிறார்கள். செல்லும் வழியில் ஓரிடத்தில் திடீரென பயங்கரச் சத்தத்துடன் கட்டடங்கள் வெடித்துச் சிதறுகின்றன. குண்டு மழை பொழிகிறது. அந்தப் பள்ளி வாகனம் கண் இமைக்கும் நொடிக்குள் சிதறிவிடுகிறது. அந்த இடத்துக்குப் பெற்றோர்கள் விரைகிறார்கள். சிதறிக் கிடக்கும் பிஞ்சு உடல்களில் எது தங்களின் குழந்தை எனத் தெரியாமல் சிதறிய உடல்களை வாரி எடுத்து மாறி மாறி முத்தம் கொடுத்து ஓலமிடுகிறார்கள்.

சம்பவம்-2

தன் அம்மா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு, நாய்க்குட்டியுடன் அந்தச் சிறுவன் செல்கிறான். அவர்கள் அகதி என்பதால், மக்கள் திரள் நிறைந்த ஒரு பொது மருத்துவமனையில் காத்திருந்து வைத்தியம் பார்க்கிறார்கள். திடீரென அந்த நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்குமான போர் தொடங்கவே எது மருத்துவமனை, எது மலைமுகடு எனத் தெரியாவண்ணம் குண்டுகள் விழத் தொடங்கின. அந்த இடத்தில் கால் ஒடிந்த நாய்க்குட்டி ரத்தம் வழியே அந்தச் சிறுவனின் ஷூவை முகர்ந்துபார்த்து சன்னமான குரலில் முனங்கிக் கிடந்தது.

மேற்கூறிய இரண்டு சம்பவங்களிலும் இறந்துபோனவர்களுக்கு எவ்வித அரசியலோ, போர்த் தளவாடங்கள் குறித்த அறிமுகமோ இல்லை. அவர்கள் சாமானியர்கள். தங்கள்  வாழ்வை அமைதியான முறையில் நிம்மதியுடன் கழிக்க விரும்புபவர்கள். அவர்களின் பொழுதுகளை குண்டுச் சத்தத்துடன் தொடங்கச் செய்தது யார்?

நாடுகளுக்கிடையே அதிகாரத்துக்காகவும் பொருளாதார வளத்துக்காகவும், மதத்தின் பேராலும் போர் நடந்து மக்கள் கொல்லப்படுவது மனிதகுலம் சந்தித்துவரும் பெரும் கேடு. இன்றும் உலகின் பல்வேறு நாடுகளுக்கிடையே ஏதாவது ஒரு காரணத்துக்காக போர் மூண்டுகொண்டே உள்ளது. போரைத் தடுப்பதற்காகவே ஐ.நா சபை அமைதி தினத்தை அனுசரிக்கிறது.

20-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில் மட்டும் தோராயமாக 17 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததாகத் தகவல். இன்றும் சிரியா, இஸ்ரேல், பாலஸ்தீனம், எகிப்து  எனப் பல்வேறு உலக நாடுகளின் பெயர்களை, உள்நாடு மற்றும் வெளிநாடுகளுடன் அவர்கள் செய்யும் போர் நடவடிக்கைகளின் வாயிலாகவே நாம் அறிந்துகொள்கிறோம்.

வெறும் செய்தியாக நம்மைக் கடந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு போருக்குப் பிறகும், பல எளிய மக்களின் வாழ்வு சிதைப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை நாம் நினைத்துப்பார்க்க முடியாத துயரம். நாடுகளுக்கிடையே எந்தக் காரணத்துக்காக போர் நடந்தாலும், அதில் பாதிக்கப்படுவது நாட்டின் மக்கள்தாம். புத்தர், காந்தி, நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா போன்றோரின் சிந்தனைகள் முழுக்க அறவழியைப் போதித்தன. அவர்களின் எண்ணம் முழுக்கவே மனிதர்களின் வாழ்வு அமைதிகொண்டிருக்க, பிரச்னைகளை போர் கண்டு அணுகாமல், அகிம்சைமுறையில் அணுகுவதே மனித வாழ்வின் நீட்சிக்கு வழிவகுக்கும் என்றனர். வன்முறையையே வாழ்க்கைமுறையாகக்கொண்டு பயணிக்கும்போது, அது ஒருபோதும் அமைதியைத் தராது; மனித வாழ்வை சிக்கலுக்குள்தான் அழைத்துச் செல்லும். ஐ.நா சபை நாடுகளுக்கிடையேயான யுத்தங்கள் நீங்கி அமைதி நிலவ, அமைதியை வலியுறுத்திப் போராடிவருபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 

எதன் பொருட்டும் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் ஆபத்து நிகழாவண்ணம் வாழத்தான் உலகில் எல்லோரும் ஆசைப்படுகிறோம். ஆனால், அன்பையும் மனிதத்தையும் போதித்துக்கொண்டே பல தேசங்கள் தம் மக்களை பெரும்போருக்குத் தயார்ப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. இவை முடிவுக்கு வந்து அமைதி நிலவ வேண்டும். குழந்தையின் கள்ளங்கபடமற்ற சிரிப்பைப்போல அனைவரும் தெளிவான மனநிலையை பெறவேண்டும்.

எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே!
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே!

-  கவிஞர் வைரமுத்து

அடுத்த கட்டுரைக்கு