Published:Updated:

பலரால் பாலியல் வன்முறை... நோபல் விருது பெறவிருக்கும் நாடியா முராத்தின் கலங்க வைக்கும் கதை! #NadiaMurad

பலரால் பாலியல் வன்முறை... நோபல் விருது பெறவிருக்கும் நாடியா முராத்தின் கலங்க வைக்கும் கதை! #NadiaMurad
பலரால் பாலியல் வன்முறை... நோபல் விருது பெறவிருக்கும் நாடியா முராத்தின் கலங்க வைக்கும் கதை! #NadiaMurad

ல உலகத் தலைவர்கள் உரையாற்றி, பல வரலாற்று மனிதர்களின் சிந்தனைகளை உலகம் காணவைத்த அந்த அரங்கத்தில், அன்று ஒரு மெல்லிய பெண்ணின் குரல் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது. அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் அதிர்ச்சியுற்று, திகைத்து, உறைந்து நின்றது உலகம். குரல் மெலிதாக இருந்தாலும், அந்தக் குரலின் கணம் அனைவரின் இதயத்தையும் நொறுக்கியது. மனித வரலாற்றின் மற்றுமொரு அவலத்தைத் துகிலுரித்துக் காட்டியது அந்தக் குரல். 2016-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் அரங்கில் ஒலித்து, தற்போது அமைதிக்கான நோபல் பரிசு வெற்றியாளரான நாடியா முராத் குரல் அது.

ஆசிரியர் கனவுடன் இருந்த அந்த 21 வயது கிராமத்துப் பெண்ணிற்கு, பல நூறு பெண்களுடன் சேர்த்து எங்கே எதற்குக் கொண்டுசெல்லப்படுகிறோம் என்பது தெரியவில்லை. தன் குடும்பத்துக்கு என்ன நேர்ந்தது என்றும் தெரியவில்லை. 2014-ம் ஆண்டு, ஐ,எஸ் அமைப்பு இராக்கில் உள்ள கொச்சா என்னும் கிராமத்தைக் கைப்பற்றி அங்கிருக்கும் சிறுபான்மையின யாசிடி சமூகத்தைச் சேர்ந்த ஆண்களையும், வயது முதிர்ந்த பெண்களையும் கொன்றுவிட்டு, பெண்களை கடத்திச்சென்றனர். அந்தப் பெண்களுள் ஒருவராக அழைத்துச் செல்லப்பட்டார், நாடியா முராத்.

மொசுல் நகரத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவர்கள், பாலியல் அடிமைகளாக்கப்பட்டனர். ``எங்கள் அனைவரையும் ஓர் அறையில் அடைத்துவிட்டார்கள். அங்கே வரும் ஐ.எஸ் அதிகாரிகள், தங்களுக்குத் தேவையான பெண்ணைத் தேர்ந்தெடுப்பார்கள். என்னை முதலில் வாங்கியது ஒரு நீதிபதி. அன்றிரவு நான் இறுக்கமான உடையை உடுத்த வற்புறுத்தப்பட்டேன். என் உடல் முடிகளைச் சவரம் செய்தார்கள். அவன் என்னைத் துடிக்கத் துடிக்கப் பலாத்காரம் செய்தான். தொடர்ந்து பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டேன். ஒழுங்காக வேலை செய்யாவிட்டாலோ, பலாத்காரம் செய்கையில் அழுதாலோ, கண்களை மூடினாலோ, கத்தினாலோ, உதைகளுக்கும் பல்வேறு துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டேன். ஒருமுறை தப்பிக்க முயன்று அகப்பட்டேன். தண்டனையாக, நிர்வாணப்படுத்தி, காவலர்கள் 6  பேரால் மூர்ச்சையாகும் வரை பலாத்காரம் செய்யப்பட்டேன்" என்ற நாடியாவின் ஒவ்வொரு வார்த்தையும் மனித வக்கிரங்களைத் தோலுரித்தது.

பிறகு, நாடியா பல பேரிடம் விற்கப்பட்டார். அனைவரிடமும் இதே கொடுமை. அந்த இடத்தைக் கடக்கும் ஐ.எஸ் அதிகாரி யார் வேண்டுமானாலும் அவரை அனுபவிக்கலாம். ``ஒரு கட்டத்தில் பலாத்காரம் தவிர வேறு எதுவுமே என் நாள்களில் இல்லை. ஒருவர் வாழ்கையில் ஒருமுறைச் சந்திக்கும் மரணத்தை, நான் ஒவ்வொரு நாழிகையும் அனுபவித்தேன். மரணமே இதற்கு மேல்" என்கிற நாடியா முராத்தின் வார்த்தைகள், மனிதன் நிகழ்த்தும் கோரத்தாண்டவத்தின் உச்சத்தை வெட்ட வெளிச்சமிடுகிறது. 

எந்தப் பெண்ணாவது கைப்பேசியுடன் அகப்பட்டால், அவள் 5 நபர்களால் பலாத்காரம் செய்யப்படுவாள். ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டாலும், அனைவர் முன்னிலையும் அந்த உடல் பலாத்காரம் செய்யப்படும். ஓர் இஸ்லாமியக் குடும்பத்தின் உதவியால் அங்கிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பினார் நாடியா. பேசவே அச்சப்படும் இந்தச் சம்பவத்தை, தனக்கு நேர்ந்தவற்றைத் துணிச்சலாக வெளிப்படுத்தி, நீதியை நாட ஆரம்பித்தார் நாடியா. 

தற்போது, உலகம் முழுவதும் கிடைக்கும் மேடைகளில் எல்லாம் தன் கதையைக் கூறுகிறார். தனக்கு நேர்ந்த கொடுமைகளுக்கும் தன் இன மக்களுக்கு நேர்ந்த அநீதிகளுக்கும் நியாயம் கேட்டுப் போராடுகிறார். மேலே சொன்ன அனைத்தையும் இன்னமும் எதிர்நோக்கி இருக்கும் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை மீட்கப் போராடிவருகிறார். `என் கதை ஒன்று மட்டுமே என் ஆயுதம்' என உலகின் அனைத்துத் தலைவர்களையும் சந்தித்து, தன் இன மக்களை விடுவிக்க முயல்கிறார் நாடியா முராத்.

உலக வரலாற்றில் இதுவரை நடந்த அனைத்துப் போர்களின் முடிவிலும், நிர்வாணமாக்கப்பட்ட பெண்ணுடல்கள் வெற்றிக் களிப்பின் அடையாளமாக்கப்படுகிறது. போரின் வெற்றிச் சின்னம் பெண்ணுடல், மதத்திணிப்பின் ஆயுதம் பெண்ணுடல், ஒடுக்குமுறையின் எச்சம் பெண்ணுடல். அரசு, தீவிரவாத இயக்கம் என்ற எந்தப் பாகுபாடும் இருப்பதில்லை. யாசிடி இனப் பெண்களுக்கு நேர்ந்தவை, காமவெறியர்களின் தறிகெட்ட செயலோ, உடலுறவு வேட்கையோ அல்ல. தங்கள் மதத்தைப் பின்பற்றாத எந்த ஒரு பெண்ணும் இதைச் சந்திக்கவேண்டும். தங்கள் மதமல்லாத புனிதமற்றப் பெண்களைப் புனிதப்படுத்தும் செயல் இது என வெளிப்படையாகக் கூறுகிறார்கள். பல காலமாகத் திட்டமிட்டு அட்டவணைப்படுத்தி, தொழில்முறையாக இந்தக் கொடூரத்தை அரங்கேற்றி வருகிறது ஐ.எஸ்.தீவிரவாத இயக்கம்.

மதத்தின் பெயரால் தினம் துகிலுரிக்கப்படும் ஆயிரக்கணக்கான பெண்களின் கதறலுக்கு எந்தக் கடவுளும் வருவதில்லை. நிர்வாணப்படுத்தப்படுவது பெண்கள் மட்டுமல்ல. 2 லட்சம் ஆண்டுகளாக மானுட சமுதாயம் வளர்த்த கோட்பாடுகளும் சித்தாந்தங்களும்தாம். அவர்களின் கதறலுக்கு, வலிக்கு, வேதனைக்கு முன்பு அவை கூனிக் குறுகி அலங்கோலமாகக் காட்சி அளிக்கின்றன.

ஐ.நா சபையில் பேசிய நாடியா முராத்தின் வழக்கறிஞரான அமல் க்ளூனி, ``நான் முதல்முறை ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் முன்பு உரையாற்றுகிறேன். இதற்கு நான் பெருமைப்பட்டிருக்க வேண்டும். மாறாக, வெட்கப்படுகிறேன். ஒரு வழக்கறிஞராக நீதி வாங்கித் தர இயலாமல் வெட்கப்படுகிறேன். போர்க்களத்தில் பெண்ணுடலை விற்கும் உடைமையாகப் பயன்படுத்துவதை எண்ணி வெட்கப்படுகிறேன். அவர்கள் உதவி குரலைக் கேட்டும் கேட்காததுபோல் இருக்கும் நம்மை எண்ணி ஒரு மனுஷியாக வெட்கப்படுகிறேன்" என்று குமுறினார். 

இவை அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் நாம் அனைவருமே வெட்கித் தலைகுனிய வேண்டும். இன்று உலகம் முழுவதிலும் ஒலிக்கும் நாடியா முராத்தின் குரல், மத வெறியால் அழிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் குரல். கடவுளின் முகத்தால் கலைக்கப்பட்ட பல வாழ்வின் குரல். எங்கேனும் நீதி ஒளி தங்கள் மேல் விழாதா எனக் காத்திருக்கும் லட்சக்கணக்கான மக்களின் குரல். நேர்ந்தவற்றை வெளியில் சொல்லுவதற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாதர்களின் குரல். இன்னும் உயிரை மட்டும் மிச்சமாக வைத்து சந்தைப் பொருளாக மாறிவிட்ட வலியின் குரல்.