அலசல்
Published:Updated:

மோடியை மிரட்டுகிறாரா ட்ரம்ப்?

மோடியை மிரட்டுகிறாரா ட்ரம்ப்?
பிரீமியம் ஸ்டோரி
News
மோடியை மிரட்டுகிறாரா ட்ரம்ப்?

அமெரிக்க வரிகுறைப்பு... பைக்

‘ஒரு புறாவுக்குப் போரா... பெரிய அக்கப்போராக அல்லவா இருக்கிறது” என்பதுபோல இருக்கிறது ஹார்லி டேவிட்சன் விவகாரம். அமெரிக்காவின் மிகப்பழமையான, லைவ்லியான பைக் பிராண்ட் ஹார்லி டேவிட்சன். இந்தியாவில் புல்லட் ஓட்டினால் எப்படி ஒரு கெத்தோ, அதுபோல அமெரிக்காவில் ஹார்லி டேவிட்சன் என்றால் செம கெத்து. அமெரிக்கா முழுக்க பல லட்சம் ஹார்லி டேவிட்சன் பைக் கிளப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு கிளப்பிலும் பல நூறு பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இது மிகப்பெரிய நெட்வொர்க். இந்த நெட்வொர்க் அத்தனையையும் வாக்குகளாகப் பார்ப்பவர் டொனால்டு ட்ரம்ப். அதனால்தான், ஹார்லி டேவிட்சனுக்காக வரிந்துகட்டிக்கொண்டு மோடிக்கு அழுத்தம் கொடுக்கிறார் என்பதே இப்போதைய சர்வதேச சர்ச்சை.

இந்தியாவில் வெளிநாட்டு பைக்குகளின் மீதான மோகம் அதிகரித்துள்ள காலம் இது. அதனால்தான், ஹார்லி டேவிட்சன் இந்தியாவில் கடை விரித்தது. வெளிநாட்டிலிருந்து ஒரு மோட்டார் வாகனத்தை இந்தியாவுக்குள் கொண்டுவர இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று, முழுவதுமாக அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராக இருக்கும் வாகனத்தை அப்படியே இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்பனை செய்வது. இந்த வழியை CBU (completely built unit) என்று சொல்வார்கள். ஆனால், இந்தியாவில் இந்த வழியாக விற்பனைக்கு வந்தால், கிட்டத்தட்ட 190 சதவிகிதம் வரி. அதாவது, அமெரிக்காவில் 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பைக் இந்தியாவில் ஆறு லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வரும். இன்னொரு வழி, CKD (Completely Knocked Down) என்னும் உதிரிபாகங்களாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து, இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்வது. இப்படி, மோட்டார் சைக்கிள்களை அசெம்பிள் செய்து விற்பனை செய்வதற்கான வரி 30 சதவிகிதத்திலிருந்து சமீபத்திய பட்ஜெட்டில் 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மோடியை மிரட்டுகிறாரா ட்ரம்ப்?

ஹார்லி டேவிட்சனின் பல மாடல் பைக்குகள், CKD என்னும் வழியில்தான் இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றன. 2009-ம் ஆண்டு முதல் இந்தியாவுக்குள் விற்பனையை ஆரம்பித்த ஹார்லி டேவிட்சன், கடந்த ஆண்டு பெரும் பிரச்னையில் சிக்கியது. 2017-ல், தான் செலுத்த வேண்டிய 30 சதவிகித சுங்கவரியைச் செலுத்தாமல், வெறும் 10 சதவிகிதம் மட்டுமே வரி செலுத்தியதாக, தாமாகவே வழக்கை எடுத்துக்கொண்டு விசாரிக்க ஆரம்பித்தது மத்திய வருவாய்ப் புலனாய்வு அமைப்பு (Directorate of revenue intelligence (DRI). ஒரு வருடமாக விசாரணை கடுமையாக நடந்து கொண்டிருந்த நிலையில்தான், ‘போதிய ஆதாரம் இல்லை’ என்று விசாரணையைத் திடீரென முடித்துக்கொண்டது. இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த விசாரணை முடிந்த இரண்டாம் நாள் மோடியும், ட்ரம்பும் தொலைபேசியில் பேசியுள்ள னர். இதன் மூலம், ‘அமெரிக்காவின் வலியுறுத்தலின் பெயரில், இந்த விசாரணையை DRI முடித்துக் கொண்டதா?’ என்கிற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் விவகா ரத்துக்கும், ட்ரம்புக்கும் என்ன தொடர்பு?

‘‘ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் மீதான வரி மிகவும் அதிகமாக உள்ளது; குறைத்துக் கொள்ளுங்கள்’’ என்று 2017 பிப்ரவரியில் முதல் முறையாக வெளிப்படையாகவே பேசினார் டொனால்டு ட்ரம்ப். ‘‘இந்தியாவில் எங்களுடைய வாகனங்களுக்கு எந்தவகையான வரி விதிக்கப் படுகிறதோ, அதே அளவுக்கு அமெரிக்காவில் விற்பனையாகும் இந்திய வாகனங்களுக்கு வரிவிதிக்கப்படும்” என்றார் ட்ரம்ப். அதாவது, இதை ரெசிப்ரோக்கல் டேக்ஸ் என்றார். ஆனால், ஹார்லி டேவிட்சன் போல, அமெரிக்காவில் கடை விரித்திருக்கும் எந்த இந்திய கம்பெனிகளும் பெரிதாக இல்லை. பிரேசில், மெக்ஸிகோ போன்ற தென் அமெரிக்க நாடுகளில்தான், இந்திய பைக் தயாரிப்பாளர் கள் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால், ரெசிப்ரோக்கல் வரிவிதிப்பால் இந்தியாவுக்கு எந்த நஷ்டமும் இல்லை. இது முழுக்க முழுக்க ட்ரம்ப் தன் வாக்காளர்களைத் தக்கவைத்துக் கொள்ள செய்யும் அரசியல் நடவடிக்கை. ரிபப்ளிக்கன் கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலும் ஹார்லி டேவிட்சன் கிளப்புகளில் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஹார்லி டேவிட்சனைக் குளிர்விப்பதன் மூலம் தன் வாக்காளர்களைக் குளிர்விக்கலாம் என நினைக்கிறார் அவர். இதில் முழுக்க முழுக்க அரசியல்தான் ஒளிந்திருக்கிறது’’ என்கிறார் வெளிநாட்டிலிருந்து கார், பைக்குகளை இறக்குமதி செய்து விற்பனை செய்துவரும் மோட்டோ-ரெவ் நிறுவனத்தின் பால விஜய். 

பிப்ரவரி மாதம் 14-ம் தேதியன்று அமெரிக்க செய்தியாளர்களிடம் ட்ரம்ப் பேசியபோது, ‘‘இந்தியாவிலிருந்து ஒரு பெரிய மனிதர் போன் செய்து, நாங்கள் பைக்குகளுக்கான சுங்க வரியை 75 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக குறைத்துவிட்டோம் என்று சொன்னார். நீங்கள் ஹார்லி டேவிட்சனாக இருந்தால் இந்தியாவில் 50 முதல் 75 சதவிகிதம் வரி செலுத்தவேண்டும். ஆனால், இந்தியாவில் இருந்து வரும் பேர் என்ன என்றே தெரியாத பைக்குகளுக்குக்கூட நாங்கள் வரி விதிப்பதில்லை என்று நான் அவரிடம் சொன்னேன். இந்த வர்த்தகம் நியாயமற்றது’’ என்றார் ட்ரம்ப்.

அமெரிக்கா, தொடர்ந்து தங்கள் நாட்டுப் பொருள்களுக்கான வரியைக் குறைக்கவேண்டும் என்று வற்புறுத்திவருவதன் தொடர்ச்சிதான், இந்த ஹார்லி டேவிட்சன் விவகாரம் என்கிறார்கள். “இப்போது ஹார்லி, அடுத்ததாக ஃபோர்டு கார்கள் என ஒவ்வொரு தயாரிப்புக்கும் அழுத்தம் வரும். பல ஆண்டுகளாக ஐரோப்பிய யூனியன், Free Trade Agreement போடவேண்டும் என இந்தியாவை வலியுறுத்திவருகிறது. இப்படி இலவச வர்த்தக ஒப்பந்தம் போட்டால் ஜெர்மெனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலிருந்து இந்தியாவில் விற்பனைக்கு வரும் பென்ஸ், பிஎடம்பிள்யூ, டுகாட்டி உள்ளிட்ட கார், பைக்குகளின் விலை பெருமளவில் குறைந்துவிடும். உதாரணத்துக்கு, பென்ஸ் கார்கள் இந்தியாவில் 15 லட்சம் ரூபாய்க்கே விற்பனைக்குக் கிடைக்கும். இந்த கார்கள் குறைந்த விலைக்குக் கிடைக்க ஆரம்பித்தால் டாடா, மஹிந்திரா, பஜாஜ், ராயல் என்ஃபீல்டு உள்ளிட்ட இந்திய கார், பைக் நிறுவனங்கள் பெருமளவில் சரிவைச் சந்திக்கும்’’ என எச்சரிக்கிறார்கள் ஆட்டோமொபைல் வல்லுநர்கள்.

மோடி என்ன செய்யப்போகிறார்?!

- ரஞ்சித் ரூஸோ

செந்தில்&கோ விளக்கம்

‘அ
மைச்சர் நடத்தும் சீக்ரெட் விசாரணை. வேலுமணி பெயரைச் சொல்லி சம்பாதித்தாரா ராஜா?’ என்ற தலைப்பில், 25.2.2018 தேதியிட்ட ஜூ.வி இதழில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ராஜா என்பவர் பற்றியும், செந்தில்&கோ என்ற நிறுவனம் பற்றியும் செய்தி வெளியானது. இந்தச் செய்தி தொடர்பாக செந்தில் & கோ நிர்வாக இயக்குநர் அன்பரசன் நமக்கு அனுப்பிய கடிதத்தில், ‘செந்தில்&கோ நிறுவனத்தில் ராஜா என்பவர் மேற்பார்வையாளராகப் பணிபுரியவில்லை. செந்தில் & கோ நிறுவனத்துக்கும் ராஜா என்பவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.