Published:Updated:

முதல் பழங்குடிப் பெண், முதல் ஓரினச் சேர்க்கையாளர்... அமெரிக்கத் தேர்தலில் அசத்திய பெண்கள்!

பெண் அரசியல்வாதிகளின் இந்த வெற்றிக்குப் பின்னால், பாலியல் துன்புறுத்தலுக்கும் வன்முறைக்கும் எதிராக எழுந்த மீ-டூ இயக்கமும் ஒரு முக்கியக் காரணம் என்று கருதப்படுகின்றது.

முதல் பழங்குடிப் பெண், முதல் ஓரினச் சேர்க்கையாளர்... அமெரிக்கத் தேர்தலில் அசத்திய பெண்கள்!
முதல் பழங்குடிப் பெண், முதல் ஓரினச் சேர்க்கையாளர்... அமெரிக்கத் தேர்தலில் அசத்திய பெண்கள்!

மெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபையிலுள்ள 435 இடங்களுக்கும், செனட் அவையிலுள்ள 100 இடங்களுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகள் சமீபத்தில், வெளியான நிலையில், இதுவரை அமெரிக்க அரசியல் வரலாறு காணாத அளவில், பெண் அரசியல்வாதிகள் தேர்தல் களத்தில் அசத்தியிருக்கின்றனர். இந்தத் தேர்தலில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி 219 இடங்களில் வெற்றிபெற்று உலகையே ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. இதனால், டொனல்டு டிரம்பின் அரசுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இந்தப் பரபரப்பு செய்திகளுக்கு இடையே, இந்தத் தேர்தலில் பெண் அரசியல்வாதிகள் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டு, வெற்றிபெற்றுள்ளது அமெரிக்க அரசியல் வரலாற்றில் முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. பிரதிநிதிகள் சபையில் வெற்றிபெற்ற 98 பெண்களில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சுமார் 84 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 33 பெண்கள் முதல்முறையாக வெற்றிபெற்றவர்கள்.

மிகவும் இளம் வயதில் வெற்றிபெற்றவர், முதல் ஓரினச்சேர்க்கையாளர், முதல் இஸ்லாமிய பெண்மணி எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது, இந்த இடைத்தேர்தலின் முடிவுகள். 29 வயதான பெண் தலைமைகளான அலேஸாண்ட்ரியா ஒசியோ-கார்டெஸ் (Alexandria Ocasio-Cortez) நியூயார்க்கிலும், ஆப்பே ஃப்ன்கேனோயர் (Abby Finkenauer) ஒவா (Iowa) மாநகரத்திலும் வெற்றிபெற்றுள்ளனர்.

அலேஸாண்ட்ரியா ஒசியோ-கார்டெஸ்

மிசிகனைச் (Michigan) சேர்ந்த ரஷிதா த்லைப் (Rashida Tlaib) என்பவரும், மின்னேசோடாவைச் ( Minnesota) சேர்ந்த இஹாம் ஒமர் (Iham Omar) என்பவரும், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இரண்டு இஸ்லாம் பெண்கள்.

ரஷிதா த்லைப்

அரிசோனாவைச் சேர்ந்த டிப் ஹாலாண்ட் (Deb Haaland) என்பவரும், கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஷரைஸ் டேவிட்ஸ் (Sharice Davids) என்பவரும் அமெரிக்கப் பழங்குடி இனத்திலிருந்து வந்த முதலாமவர்கள். இவர்களில், ஷரைஸ் டேவிட்ஸ் என்பவர் முதல் ஓரினச்சேர்க்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ``70 வருடங்களுக்கு முன்னால், அமெரிக்காவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களிக்கும் உரிமைகூட இல்லாத நிலையில், தற்போது அமெரிக்க அரசியலில் இருவர் வெற்றிபெற்றிருப்பது பெரும் சாதனையாகவே பார்க்கின்றனர் அமெரிக்கர்கள். மச்சசூசெட்ஸ் (Massachusetts) மாகாணத்தைச் சேர்ந்த அயன்னா ப்ரெஸ்லே (Ayanna Pressley) என்பவர் முதல் கறுப்பின காங்கிரஸ்பெண் அரசியல்வாதியானவர். டெக்ஸாஸ் (Texas) மாகாணத்தைச் சேர்ந்த வெரோனிகா எஸ்கோபார் (Veronica Escobar) மற்றும் ஸ்ல்வியா கார்சியா (Sylvia Garcia) ஆகிய இருவரும் முதல் லத்தின அமெரிக்க அரசியல்வாதிகள். குவாம் தீவின் முதல் பெண் கவர்னராக லெள லியோன் கர்ரேரோ (Lou Leon Guerrero) என்பவர் தேர்தேடுக்கப்பட்டுள்ளார். மின்னேசோடாவைச் (Minnesota) சேர்ந்த அங்கே க்ரெக் (Angie Craig) என்பவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்ற முதல் ஓரினச்சேர்க்கை தாய். ரிப்பளிக்கன் கட்சியைச் சேர்ந்த கிம், கலிபோர்னியாவைச் சேர்ந்த முதல் கொரிய அமெரிக்கப் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

ஷரைஸ் டேவிட்ஸ்

பெண் அரசியல்வாதிகளின் இந்த வெற்றிக்குப்  பின்னால், பாலியல் துன்புறுத்தலுக்கும் வன்முறைக்கும் எதிராக எழுந்த மீ-டூ இயக்கமும் ஒரு முக்கியக் காரணம் என்று கருதப்படுகின்றது. சிலர் பிரசாரங்களின்போது, தங்களுக்கு நேர்ந்த #MeToo சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டனர். வேறு சில வேட்பாளர்கள், பிரசார விளம்பரங்களில் தங்கள் குழந்தைகளின் புகைப்படத்தையும், அவர்களுக்குப் பாலூட்டுவது போன்ற புகைப்படங்களும் பிரசார உத்திகளாகப் பயன்படுத்தினர்.

எது எப்படியோ, இந்த இடைத்தேர்தல் முடிவுகள், அமெரிக்கப் பாராளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பை கிட்டத்தட்ட 22 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது என்பது அமெரிக்கா மட்டுமன்றி, உலக நாடுகள் அனைத்தும் கவனிக்கவேண்டிய ஒன்று!