Published:Updated:

ராஜ மரியாதையா... பாலியல் சித்ரவதையா? - வீட்டு வேலை செய்யும் பெண்களை எப்படி நடத்துகிறது சவுதி

ராஜ மரியாதையா... பாலியல் சித்ரவதையா? - வீட்டு வேலை செய்யும் பெண்களை எப்படி நடத்துகிறது சவுதி
ராஜ மரியாதையா... பாலியல் சித்ரவதையா? - வீட்டு வேலை செய்யும் பெண்களை எப்படி நடத்துகிறது சவுதி

இந்தியாவைச் சேர்ந்த பாபு, சவுதியில் கடந்த 35 ஆண்டுகளாக  `ஆவாத் குதீர் அல் ஷீமாரி’ குடும்பத்தில் வீட்டு வேலை செய்தவர். வயது மூப்பின் காரணமாக வேலையில் இருந்து ஓய்வுபெற்று, சில தினங்களுக்கு முன்னர் இந்தியா திரும்பினார். சவுதியில் அவருக்கு மிகவும் பிரமாண்ட பிரிவுஉபசரிப்பைக் கொடுத்தனுப்பியுள்ளனர், அல் ஷீமாரி குடும்பத்தினர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வரிசையாக நின்று பாபுவை கட்டித்தழுவி நெற்றியில் முத்தமிட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். அவருக்கு, விலையுயர்ந்த பரிசுகளையும் கொடுத்தனுப்பியுள்ளனர். பாபுவுக்கு கொடுக்கப்பட்ட உபசரிப்பு நிகழ்ச்சியை வீடியோவாக எடுத்து, சவுதி பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.


 

சில மணி நேரங்களில் லைக்ஸ் குவிந்தது. நம் கண்ணிலும் அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தென்பட்டன. அல் ஷீமாரி குடும்பத்தினர்  ஒவ்வொருவராக பாபுவை கட்டித்தழுவிய காட்சி, அவர்களோடு பாபு எந்த அளவுக்கு ஒன்றிப்போயுள்ளார் என்பதையும் அவர்களின் அன்பையும் பிரதிபலித்தது.  


 

வளைகுடா நாடுகளுக்கு பணிக்குச் செல்லும் வெளிநாட்டவர்களிடம், அங்குள்ள கலாசாரம், வாழ்க்கை முறை பற்றித் தெரிந்து கொள்வதில் இங்குள்ள மக்களுக்கு ஆர்வம் அதிகம். காரணம், பிற நாடுகளைப்போன்று வளைகுடா நாடுகளின் செய்திகள் ஊடகங்களில் வருவது அறிது. பாபுவுக்குக் கிடைத்த பிரிவு உபசரிப்பு செய்தியைப் பார்த்தபோது, சவுதியில் வீட்டு வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்தது. 

சவுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தமிழர், அம்பாசமுத்திரம் அப்துல் வஹாப்பைத் தொடர்புகொண்டு பேசினோம்.


 

``இந்தியர் ஒருவருக்கு சவுதியில் கொடுக்கப்பட்ட பிரிவு உபசரிப்பு வீடியோவை நானும் பார்த்தேன். மகிழ்ச்சி. சவுதியைப் பொறுத்தவரை பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள், குழந்தைகளைப் பெற்றெடுப்பதோடு சரி, அந்தக் குழந்தைகளை வளர்ப்பது, வீட்டில் வேலைசெய்பவர்கள்தான். சவுதியைப் பொறுத்தவரை வீட்டு வேலை செய்வது என்றால், சமையல் வேலை செய்வது மட்டும் இல்லை. அதையும் தாண்டி ஒருபடி மேலே. வீட்டைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பும் அவர்களுடையதுதான். முக்கியமாக, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது. எனவே, அவர்களை வீட்டு வேலை செய்பவர்கள் என்பதைவிட கார்டியன் என்று சொல்லலாம். சில வீடுகளில், குழந்தைகளுக்கு தாய்ப் பால் கொடுப்பதுகூட, வீட்டில் வேலைசெய்யும் பெண்ணாகத்தான் இருக்கும்.

அப்படி வேலைசெய்பவர்கள் 60 சதவிகிதம் பேர், பாபுவைப் போன்று மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். மீதமுள்ள 40 சதவிகிதம் பேர் மிகவும் மோசமாக நடத்தப்படுவார்கள். இதுபோன்ற பிரச்னைகள் வந்ததால், இப்போதெல்லாம் இந்திய அரசு, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சவுதி வர விசா கொடுப்பது கிடையாது. அப்படி வர வேண்டுமானால், பல்வேறு நிபந்தனைகள் போடப்படும்.  இங்கு வீட்டு வேலை செய்ய வருபர்வர்கள் பெரும்பாலும் இந்தோனேசியா, இலங்கை, இந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை பாலியல் வன்கொடுமைதான். குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வீட்டு வேலைக்குப் பெண்களுக்குதான் முன்னுரிமை. இன்னொரு விஷயம், வயதான பெண்களை வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார்கள். அப்படி வேலை செய்யும் பெண்களில் சிலர், அந்தக் குடும்பத்தின் ஆண்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதுண்டு. 


 

வீட்டு வேலை செய்யும் ஆண்களும் சில பிரச்னைகளைச் சந்திப்பார்கள். என் நண்பர் ஒருவர், இங்கு பெரிய குடும்பம் ஒன்றுக்கு கார் டிரைவாக இருந்தார். அவர் தந்தையின் இறப்புச் செய்தி வந்ததும், கார் உரிமையாளரிடம் விடுமுறை கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நபர்  `அனைவருமே ஒரு நாளைக்குச் சாகத்தானேபோகிறோம். இதெல்லாம் பெரிய விஷயமா’ என்று சொல்லியிருக்கிறார். பின்னர், என் நண்பர் எப்படியோ கெஞ்சி மன்றாடி, விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்கு சென்றார். இவையெல்லாம் அந்த 40 சதவிகிதம் பேர் அனுபவிக்கும் கஷ்டம்
பாபு போன்றவர்களுக்கு குடும்பத்தைப் பிரிந்து வாழும் கஷ்டத்தைத் தவிர, வேறு எந்தவித பிரச்னையும் இருக்காது. 2016-ம் ஆண்டு இப்படியொரு ஒரு வேதனையான சம்பவம் நடந்தது.

சவுதியில் வீட்டு வேலை செய்த இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருவர், வயதாகிவிட்டதால் வேலையில் இருந்து ஓய்வுபெற்று சொந்த ஊருக்கு வந்துவிட்டார்.  அவர், இலங்கைக்கு வந்து சேர்ந்து சில தினங்களில் அவரைப் பிரிந்து வாழமுடியாமல், அவர் வளர்த்த மகன் சவுதியில் இருந்து இலங்கை வந்துவிட்டார். பிறந்ததில் இருந்து தூக்கி வளர்த்தவர் என்பதால்,அந்த இளைஞரால் அந்தப் பெண்மணியை விட்டு இருக்க முடியவில்லை. திடீரென அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து இன்பஅதிர்ச்சிகொடுத்தார். தன் வளர்ப்பு மகனைப் பார்த்ததும் மகிழ்ச்சியில், அந்தப் பெண்மணி திக்குமுக்காடிப்போனார். அந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. இப்படி பல நெகிழ்ச்சியான சம்பவங்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதே சமயம், தன்னை தூக்கி வளர்த்த தாய்க்கே பாலியல் தொல்லை கொடுத்த சவுதி இளைஞர் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கு வசிக்கும் வெளிநாட்டவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு அந்தந்தத் தூதரகம்தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். இந்தியத் தூதரகம் கொஞ்சம் பொறுப்பாக நடந்துகொள்ளும். இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட தூதரகங்கள் மந்தமாக இருப்பார்கள். வீட்டு வேலை செய்ய வரும் வெளிநாட்டவர்கள் பற்றி இவ்வளவுதான் சொல்ல முடியும். இங்கு நடக்கும் வேறு சில விவகாரங்களை எங்களால் வெளிப்படையாகப் பகிர முடியாது” என்று முடித்தார் அப்துல். 
 


 

அப்துல் சொல்வதைவைத்து பார்க்கும்போது, இந்தியாவில் இருந்து வீட்டு வேலைக்கு முன்பு போல ஆட்கள் செல்வதில்லை என்பது தெரிகிறது. ஆனால், இந்தோனேசியா பெண்கள் சவுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கர்ப்பிணிகளாக நாடு திரும்புவதாக ஊடகச் செய்திகள் வெளியாவதைப் பார்க்கமுடிகிறது. கடந்த நவம்பர் 1-ம் தேதி, இந்தோனேசியாவைச் சேர்ந்த துர்சிலாவதி என்னும் இளம்பெண், மெக்கா மாகாணத்தில் மரண தண்டனை பெற்றிருக்கிறார். அவர் செய்த தவறு என்ன தெரியுமா?  தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்த முதலாளியைக் கொன்றது. இதுபோன்ற பல செய்திகளை இந்தோனேசியா ஊடகங்கள் வெளியிட்டுவருகின்றன. ஆனால், அந்நாட்டுத் தூதரகம் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றே தோன்றுகிறது.